படுகுழிக்குள் தள்ளும் அரசியல் கட்சிகள்!! (கட்டுரை)

ரிஷாத் பதியுதீன் கடந்த ஆண்டு ஒக்டோபர் ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஒத்துழைக்காததை பழிவாங்கும் வகையிலும், தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்க்கும் இலக்குடனும் தான், தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியைக் கவிழ்க்க முனைகிறது பொதுஜன முன்னணி.
ஜே.வி.பி.யும் கூட அதே இலக்கில் தான் செயற்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்கத் தவறி விட்டதாக குற்றம்சாட்டி, அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பித்திருக்கிறது ஜே.வி.பி.
ஈஸ்டர் ஞாயிறு பேரிடியில் இருந்து மீளமுடியாமல் – அந்த அனர்த்தங்களின் ஒரு மாத நினைவுகளில் நாட்டுமக்கள் மூழ்கியிருந்த நிலையில், அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள்.
நாட்டு மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் உள்ள மிகப்பெரிய இடைவெளியை காண்பிக்க இந்த ஒரு உதாரணமே போதும்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை மஹிந்த அணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சமர்ப்பித்திருந்த நிலையில், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு எதிராக இன்னொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையை, மே 21ஆம் திகதி சபாநாயகரிடம் கையளித்திருக்கிறது ஜே.வி.பி.
இப்போது, இந்த இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைப் பற்றித் தான் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, ஏப்ரல் 21 தாக்குதல்களுக்குப் பின்னர் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து, அதனை மீட்பதற்கான வழிமுறைகள் பற்றி யாரும் பேசவேயில்லை. சிந்திப்பதாகவே தெரியவில்லை.
இந்த தாக்குதல்களால் இலங்கையின் கடன் திருப்பிச் செலுத்தும் ஆற்றல் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறது சர்வதேச நாணய நிதியம். எதிர்பார்க்கப்பட்ட வருமானம், பொருளாதார வளர்ச்சி என்பன கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
வரவு–செலவுத் திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட 3.5 வீதம் தொடக்கம் 4 வீதம் வரையான பொருளாதார வளர்ச்சி கிடைக்காது, 3 வீத வளர்ச்சியைத் தான் எதிர்பார்க்க முடியும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குள் அரசாங்கமும் நாட்டு மக்களும் தள்ளப்படப் போகின்றனர்.
இப்படிப்பட்டதொரு நிலையில், அடுத்து வரும் வாரங்கள், மாதங்கள், வருடங்கள் கடுமையானவையாகவே இருக்கப் போகின்ற சூழலில், கொழும்பில் அரசியல்வாதிகள் அதிகாரத்துக்காக ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதையே காணமுடிகிறது.
கடந்த 06ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்பட்ட போதும், மாணவர்கள் வருகை குறைவாக இருந்த நிலையில், 13ஆம் திகதி குண்டுவெடிக்கப் போகிறதா, – விஷவாயு தாக்குதல் நடத்தப்படுமா என்றெல்லாம் பீதியைக் கிளப்பும் கேள்விகளை எழுப்பியவர் எதிர்க்கட்சித் தலைவர்.
பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் பாடசாலைகளைத் திறக்க வேண்டாம் என்று அவரும் பௌத்த, கத்தோலிக்க மதகுருக்கள் பலரும் கோரியிருந்தனர். ஆனால் இராணுவமும், பொலிஸாரும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.
அவர்கள் கூறியது போன்று எந்த அச்சுறுத்தலும் இருக்கவில்லை.
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் தான் நடந்திருந்தன. வேறெந்த பாதுகாப்பு முன்னேற்றங்களும் குறித்த காலத்தில் நிகழவில்லை.
இப்போது மஹிந்த ராஜபக் ஷ பாடசாலை களுக்கு சென்று மாணவர்களை வரவேற்கிறார்., ஊக்கமளிக்கிறார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பேரக் குழந்தைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கிறார்.
இதுபோன்ற படங்களை வெளியிட்டு நம்பிக்கையூட்ட வேண்டிய நிலை வந்திருக்கிறது. பாடசாலைகள் மே 6ஆம் திகதி திறக்கப்பட்ட போது – மாணவர்களை அனுப்ப பெற்றோர் தயங்கியமைக்கு முக்கியமான காரணம் அரசியல்வாதிகள், அதிகாரிகள் தான். அவர்கள் தமது பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பவில்லை. அதுபோதாதென்று, ஏனையவர்களையும் அவர்கள் குழப்பிக் கொண்டிருந்தனர்.
இப்போது, பாடசாலைக்கு வாருங்கள் என்று ஜனாதிபதி தொடக்கம், பிரதமர், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர், இராணுவத் தளபதி, பொலிஸ் அதிகாரிகள் என்று எல்லோரும் கை நீட்டி வரவேற்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்தநிலை ஏற்பட்டமைக்கு அரசியல்வாதிகளுக்கு கணிசமான பொறுப்பு இருக்கிறது. அவர்கள் குட்டையைக் குழப்பி நலன் தேட முற்பட்டனர். நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் எல்லாமே அதன் அடிப்படை தான்.
இந்த விடயத்தில் எல்லா கட்சிகளுமே பொது நலன், நாட்டு நலன் என்பதற்கு அப்பால் கட்சி நலன்களையே முன்னிறுத்தி செயற்படுகின்றன.
தமது அரசாங்கம் கவிழ்ந்து போய்விடக் கூடாது என்பதற்காகவே, அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் காப்பாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறது ஐ.தே.க.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில், ரிஷாத் பதியுதீன் பதவி விலக வேண்டியதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே கூறியிருக்கிறார்.
ரிஷாத் மீது வெறும் குற்றச்சாட்டுகளை கூறுவதற்கு பதிலாக, தெரிவுக்குழுவொன்றை அமைத்து, விசாரணை செய்து தவறு செய்திருந்தால் நீக்கலாம் (11ஆம் பக்கம் பார்க்க)
படுகுழிக்குள்…. (தொடர்ச்சி)
என்றொரு யோசனையை சமர்ப்பித்து, பாராளுமன்றத்தில் தெரிவுக்குழுவையும் அமைத்திருக்கிறது ஐ.தே.க.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட, ரிஷாத் பதியுதீனிடம் பதவி விலகுமாறு கேட்கவோ அல்லது அவரைப் பதவிநீக்கம் செய்யவோ முனையவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இன்னமும் ரிஷாத் பதியுதீன் விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. மதில் மேல் பூனையாகத் தான் இருந்து கொண்டிருக்கிறது.
ஆனாலும், இந்த நேரத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை விட, நாட்டை மீண்டும் வழமைக்குக் கொண்டு வருவது தான் முக்கியமானது என்ற- ஒரு பொறுப்பு வாய்ந்த கருத்தை அந்தக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
மஹிந்த ராஜபக் ஷவின் நிழல் தலைமையின் கீழ் உள்ள பொதுஜன முன்னணியினது இலக்கு, ஆட்சிக் கவிழ்ப்பு தான். ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றினால், அவரது கட்சியின் 5 உறுப்பினர்களும், அரசாங்கத்துக்கு அளிக்கும் ஆதரவை விலக்கிக் கொள்ளுவார்கள், அதனால் அரசாங்கம் கவிழ்ந்து விடும் என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் ரோகித அபேகுணவர்த்தன.
ரிஷாத் பதியுதீன் கடந்த ஆண்டு ஒக்டோபர் ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஒத்துழைக்காததை பழிவாங்கும் வகையிலும், தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்க்கும் இலக்குடனும் தான், தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியைக் கவிழ்க்க முனைகிறது பொதுஜன முன்னணி
ஜே.வி.பி.யும் கூட அதே இலக்கில் தான் செயற்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்கத் தவறி விட்டதாக குற்றம்சாட்டி, அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பித்திருக்கிறது ஜே.வி.பி.
தற்போதைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி விட்டு, அடுத்த அரசாங்கத்தை மக்கள் முடிவு செய்யட்டும் என்று ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசநாயக்க தெரிவித்திருக்கிறார்.
தற்போதைய சூழ்நிலையில், தேர்தல் என்பது எந்தளவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தக் கூடியது என்பது பற்றியோ, ஆட்சிக்கவிழ்ப்பினால் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றியே பொதுஜன முன்னணியோ ஜே.வி.பி.யோ சிந்திப்பதாகத் தெரியவில்லை.
ஏற்கனவே பாதுகாப்பு நெருக்கடிகளால் மக்கள் பீதியில் உள்ளனர். பொருளாதாரம் சரிந்து போய்க் கிடக்கிறது. பீதியில் இருந்து மக்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதும், பொருளாதார சிக்கலில் இருந்து மீள்வதற்கான வழிகளைத் தேடுவதும் உடனடிப் பிரச்சினைகளாக இருக்கின்றன.
இப்படிப்பட்டதொரு நிலையில் ஆட்சி கவிழ்க்கப்பட்டு தேர்தலுக்குள் தள்ளப்படும் போது, நிலைமைகள் இன்னும் மோசமடையும். குழப்பங்கள் மேலோங்கும். அதனை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கே வாய்ப்பாக மாறும்.
கட்டுநாயக்க விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதோ, மத்திய வங்கி மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட போதோ, அநுராதபுர விமானப்படைத் தளத்தில் பேரழிவுகள் ஏற்படுத்தப்பட்ட போதோ, யாரும் அப்போதைய அரசாங்கங்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரவில்லை.
21/4 குண்டுத் தாக்குதல்களை தடுக்கத் தவறிய அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அதிலும் கூடுதல் பொறுப்பு ஜனாதிபதிக்கே உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அப்படிப்பட்ட நிலையில், ஆட்சிக்கவிழ்ப்பு ஒன்று நிகழ்ந்து விட்டால் அதற்குப் பின்னரும் கூட தேர்தல்கள் நடத்தப்படும் வரை, தற்போதைய ஜனாதிபதியின் கீழ் ஒரு காபந்து அரசு தான் பதவியில் இருக்கப் போகிறது.
எப்படியாயினும், வரும் நவம்பர், டிசம்பருக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்குப் பின்னர், பாராளுமன்றத் தேர்தல் சில மாதங்களுக்குப் பின்னர் நடத்தப்படும்.
தற்போதைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை என்றால் அந்த தேர்தல்களில் மக்கள் அதற்கான தண்டனையை கொடுத்தே தீருவார்கள்.
ஆனாலும். அதற்குள்ளாகவே ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்துக்கு வந்து விட வேண்டும் என்ற அவசரமே எல்லா தரப்புகளிடமும் உள்ளது.
அந்தளவு வேகத்தில் அதிகாரத்துக்கு வந்து யாரும் எதையும் கிழித்து விடப் போவதில்லை.
ஏனென்றால், போருக்குப் பின்னர் மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தினால் மிகப்பெரிய வேகத்தில் நாட்டை மீளக் கட்டியெழப்ப முடியவில்லை. கடன் சுமை தான் அதிகரித்தது.
இப்போது, அந்தக் கடன் சுமையை மேலும் மோசமாக்கும், நிலையைத் தான் எதிர்க்கட்சிகள் செய்து கொண்டிருக்கின்றன.
நாட்டின் வேகமாக இயல்பு நிலையை ஏற்படுத்தி, பொருளாதார நிலையை சாதகமான நிலைக்கு மாற்றியமைப்பதே முதன்மையான சிக்கல். முக்கியமான பிரச்சினை.
அதனை நோக்கி இயங்காமல் நம்பிக்கையில்லாப் பிரேரணைகளின் மீது நம்பிக்கை வைத்துக் கொண்டு – அதிகாரத்துக்காக ஏங்கும் அரசியல்கட்சிகளின் இலக்கு, நாட்டை படுகுழிக்குள் தள்ளுவதை தவிர வேறொன்றுமில்லை.