;
Athirady Tamil News

சீனா உருவாக்கும் ‘நிழ‌ற்படை’ !! (கட்டுரை)

0

ஏப்ரல் 21ஆம் திகதி கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு நகரங்களில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை, சக்தி வாய்ந்த பல்வேறு நாடுகள், தமது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளன. சீனாவும் அதற்கு விதிவிலக்கானது அல்ல என்பதை, நிரூபித்திருக்கிறது.

அண்மையில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, கடந்த 14ஆம் திகதி, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

‘ஆசிய நாகரிகங்களின் கலந்துரையாடல்’ மாநாட்டில் பங்கேற்பதற்காகவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தப் பயணத்தை மேற்கொண்டார் என்று கூறப்பட்டாலும், அந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், சீன- இலங்கைத் தலைவர்களின் சந்திப்பு என்றே நம்பப்படுகிறது.

ஆசிய நாகரிகங்களின் கலந்துரையாடல் மாநாட்டில், இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கம்போடிய மன்னர் நொரொடோம் சிஹாமனி, கிரீஸ் ஜனாதிபதி புரோகோபிஸ் போலோபோலஸ், சிங்கப்பூர் ஜனாதிபதி ஹமிலா ஜேக்கப் போன்றவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இவர்களைச் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சந்திக்கவில்லை. சீனப் பிரதமர் லி கெகியாங் தான் சந்தித்திருந்தார். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மாத்திரம், சீன ஜனாதிபதியும் சீனப் பிரதமரும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசியிருந்தனர்.

சீன ஜனாதிபதியுடனான சந்திப்புக்குப் பின்னர், இரண்டு தரப்புகளுக்கும் இடையில் ஓர் உடன்பாடும் கையெழுத்திடப்பட்டது. இரண்டு நாடுகளுக்கும் இடையில், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.

எனினும், இந்த உடன்பாட்டின் உள்ளடக்கம், இரண்டு நாடுகளாலும் இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை. இந்தநிலையில் தான், சீன – இலங்கை பாதுகாப்பு உடன்பாடு குறித்தும், சீனாவின் தலையீடுகள் தொடர்பாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர், மேற்குலக புலனாய்வு அமைப்புகளின் பிரசன்னம் அதிகரித்திருப்பது குறித்து, கரிசனை கொண்டுள்ள சீனாவும் அதற்கேற்றவாறு மாற்று வியூகங்களை வகுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உடன்பாட்டின் மூலம், சீனப் புலனாய்வாளர்களின் பிரசன்னம் இலங்கையில் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று, இப்போது அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள், கவலை எழுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இலங்கையில் இணைய வழியில் முன்னெடுக்கப்படுகின்ற பொய்ப் பிரசாரங்கள், வதந்திகளைக் கட்டுப்படுத்துவதற்கு, உதவிகளை வழங்க, ஜனாதிபதியின் சீனப் பயணத்தின் போது, சீன ஜனாதிபதி இணங்கியிருந்தார். இதற்குத் தேவையான கருவிகளுடன், நிபுணர்கள் குழு ஒன்றை விரைவில், கொழும்புக்கு அனுப்புவதாகவும் சீன ஜனாதிபதி உறுதி அளித்திருந்தார்.

அதைவிட, கொழும்பு நகரிலும், ஹம்பாந்தோட்டைத் துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம் உட்பட முக்கியமான இடங்களில், உயர் தொழில்நுட்பக் கண்காணிப்புச் செயல்முறை ஒன்றை உருவாக்கவும் இணக்கம் காணப்பட்டது. இந்த இணக்கப்பாடுகள், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ள நிலையில் தான், சீனா பற்றிய பல்வேறு செய்திகள் உலாவத் தொடங்கின.

அவ்வாறான செய்திகளில் ஒன்று தான், சீனாவின் முதலீட்டில், இலங்கையில் மேற்கொள்ளப்படும் ‘திட்டப்பணிப் பகுதி’களின் (project sides) பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, தமது நாட்டைச் சேர்ந்த 750 பேரை, சீனா பணியில் அமர்த்தப் போகிறது என்ற செய்தியாகும்.

சிங்கள வாரஇதழ் ஒன்று, இந்தச் செய்தியை வெளியிட்டிருந்த அதேவேளை, தமது திட்டப்பணிப் பகுதிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று சீனாவும் இந்தியாவும் இலங்கை அரசாங்கத்திடம் கோரியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

பொதுஜன பெரமுனவின் தலைவரான பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், “இலங்கையின் பாதுகாப்பு மீது, வெளிநாடுகள் நம்பிக்கையிழந்து விட்டன” என்றும், “அதனால்தான், சீனா, இந்தியா போன்ற நாடுகள், தாம் முன்னெடுக்கும் திட்டப்பணிப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காகத் தமது படையினரை நிறுத்த முனைகின்றன” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம், ஷங்ரி-லா விடுதி ஆகியவற்றின் பாதுகாப்புக்கு, சீனா தமது படையினரை நிறுத்தவும், திருகோணமலை எண்ணெய்க் களஞ்சியங்களைப் பாதுகாக்க, இந்தியா தனது படையினரை நிறுத்தவும் அனுமதி கோரியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் அதை மறுத்திருந்தது. இலங்கையில், தமது படையினரை நிறுத்துவதற்கு எந்த உடன்பாடும், கையெழுத்திடப்படவில்லை என்றும் கூறியது.போலிச் செய்திகளைப் பரப்புவதைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த சீனாவே, இப்போது, இலங்கையில், தமது நாட்டின் பிரசன்னம் தொடர்பாக வெளியாகும் செய்திகளைத் தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாமல் திணறுகிறது.

“வெளிநாடுகளில் படையினரை நிறுத்துகின்றதும் ஏனைய நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்கின்றதுமான எண்ணம், சீனாவுக்குக் கிடையாது. இதுபற்றி, சீனாவின் கொள்கை மாற்றப்படவில்லை” என்று சீனத் தூதரகப் பேச்சாளர் கூறியிருந்தாலும், சீனா பற்றித் தொடர்ந்தும், பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டு தான் இருக்கின்றன.

இலங்கையில், தனது திட்டப்பணிகளில், தனது நாட்டவர்களைப் பாதுகாப்புப் பணிகளில் சீனா ஈடுபடுத்தவுள்ளது என்ற செய்தியின் உண்மைத்தன்மை, இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆனால், அதுபற்றிய செய்திகள் நாளுக்கு நாள், புதியபுதிய வடிவங்களில் வந்து கொண்டிருக்கின்றன.

மேற்குலகம் மற்றும் இந்தியாவின் தலையீடுகள் குறித்து, சீனா கவலை கொண்டிருந்த நிலையில், இப்போது சீனாவும் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முனைகிறதா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.இந்தநிலையில் தான், பீஜிங்கில் பாதுகாப்பு உடன்பாடு கையெழுத்திடப்பட்ட இரண்டு வாரங்களிலேயே, அதைச் செயற்படுத்துவதில், சீனா மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தினர், பொலிஸாரை உள்ளடக்கிய முதலாவது அணி, இந்த வாரம் பீஜிங் சென்று பயிற்சிகளைப் பெறவுள்ளது. இந்தப் பயிற்சிகளின் முக்கிய நோக்கம், சீனாவால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கான, பாதுகாப்பை உறுதிப்படுத்துவது ஆகும்.

ஏன், சீனாவின் திட்டப்பணிப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கான திறன், இலங்கைப் படைகள், பொலிஸாரிடம் இல்லையா என்ற கேள்வி எழலாம்.நிச்சயமாக அதற்கான தகுதியை, இலங்கைப் படையினர் கொண்டிருக்கின்றனர்.விடுதலைப் புலிகளின் காலத்தில் கேந்திர நிலைகளைப் பாதுகாப்பதில், இலங்கைப் படையினர் திறமையாகவே செயற்பட்டிருந்தனர். விடுதலைப் புலிகளைப் போன்ற உத்திகளையோ, கருவிகளையோ பயன்படுத்தும் ஆற்றல் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு இல்லாத நிலையில், அவர்களைக் கையாளுவது ஒன்றும் படையினருக்குக் கடினமானதல்ல.

கடந்த மாதம், இலங்கையில் நெருக்கடிநிலை ஏற்பட்டபோது, இந்தியா ‘என்எஸ்ஜி’ எனப்படும் தனது தேசியக் காவற்படையை அனுப்பத் தயார்படுத்தியிருந்தது. எனினும், இலங்கை அரசிடம் இருந்து, எந்த கோரிக்கையும் விடுக்கப்படாததால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது,
அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவும் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நிலைமைகளைக் கையாளும் முழுத் திறனையும் இலங்கைப் படையினர் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருந்தனர். இலங்கைப் படையினருக்கு, இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, போன்ற பல நாடுகள், ஆண்டு தோறும், பல்வேறு திட்டங்களின் கீழ், பயிற்சிகளை அளித்து வருகின்றன. அவற்றில் இருந்து, இப்போது சீனா கொடுக்கவிருக்கின்ற பயிற்சிகள் வேறுபட்டன.

இதுகுறித்துச் சீனத் தூதரகப் பேச்சாளர் ஒருவர், கொழும்பு நாளிதழ் ஒன்றுக்குத் தகவல் வெளியிட்ட போது, “இலங்கைப் படையினர், பொலிஸாரின் ஆற்றலைக் கட்டியெழுப்பும் உதவிகளையும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கருவிகளையும் சீனா வழங்கும். நாங்கள் இராணுவத்தினரை இங்கு அனுப்பப் போவதில்லை. அதற்குப் பதிலாக, இலங்கைப் படையினரின் ஆற்றலைக் கட்டியெழுப்பவுள்ளோம். எமது பாதுகாப்பை, அவர்கள் மேற்கொள்வார்கள் என்று நம்புகிறோம். எனவே, எமது படையினரை இங்கு அனுப்ப வேண்டிய தேவை இல்லை” என்று கூறியிருந்தார்.

தனது படைகளை அனுப்பிப் பாதுகாக்க முயன்றால், சிக்கல்கள் எழும் என்பதால் தான், இலங்கைப் படையினருக்குப் பயிற்சி அளிக்க, சீனா முனைந்திருக்கிறது.

சீனாவின் இந்த நிகழ்ச்சி நிரல், அதன் ஏனைய போட்டி நாடுகளுக்குச் சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவும் அமெரிக்காவும் கூட, தமக்கான பாதுகாப்புக்காக, இதுபோன்ற வழியைக் கையாள முனைந்தால், ஒவ்வொரு நாடும், தமது ‘நிழற்படைகளை’ இலங்கையில் கொண்டிருக்கும் நிலை உருவாகும். அது, இலங்கையின் படைக் கட்டமைப்புகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்தவும், பாதுகாப்பு ரீதியான சிக்கல்களையும் ஏற்படுத்தும்.

சீனாவுடனான இரகசிய உடன்பாட்டின் இரகசியம் வெளிப்படுத்தப்படாத நிலையில், இதுபோன்ற சர்ச்சைக்குரிய இன்னும் பல பூதங்கள், அடுத்தடுத்து வெளியே வரக் கூடும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + 17 =

*