களமிறங்கும் இந்தியா!!! (கட்டுரை)

ஈஸ்டர் ஞாயிறன்று இலங்கையில் தொடர் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு, ஐந்து வாரங்களுக்குப் பின்னர், இந்தியாவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் இரண்டு அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று கொழும்புக்கு வந்துள்ளது.
இந்தியாவின் என்.ஐ.ஏ எனப்படும், தேசிய புலனாய்வு முகவரகத்தின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலோக் மிட்டல் தலைமையிலான குழுவே, கடந்த செவ்வாயன்று இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டது, ஒரு வாரத்தில் இந்தக் குழு புதுடெல்லிக்குத் திரும்பும் என்றும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
ஏப்ரல் 21ஆம் திகதி, இலங்கையில் பல்வேறு இடங்களில் நடந்த குண்டுத் தாக்குதல்களை அடுத்து, இதுபற்றி விசாரணைகளை மேற்கொள்வதற்காக, கொழும்பு வருவதற்கு உள்துறை அமைச்சின் அனுமதியை கோரியிருந்தது என்.ஐ.ஏ.
ஆனால், தாக்குதல் நடந்து ஐந்து வாரங்களுக்கு பின்னரே, அதற்கான அனுமதி அதிகாரபூர்வமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இலங்கை அரசாங்கத்திடம் இருந்து கிடைத்த அனுமதியைத் தொடர்ந்தே, என்.ஐ.ஏ அதிகாரிகள் குழு கொழும்பு வந்திருக்கிறது. இது ஆச்சரியமான ஒரு விடயம்.
அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளின் புலனாய்வுப் பிரிவுகள், குண்டுவெடிப்புகள் நடந்த 48 மணித்தியாலங்களுக்குள்ளாகவே கொழும்பில் வந்து குதித்து விட்டன. இந்தியா மாத்திரம், இந்தளவு நாட்களும் தனது புலனாய்வுப் பிரிவை அனுப்பி வைக்காமல் இருந்திருக்குமா என்பது சந்தேகத்துக்குரியது தான்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த ஓரிரு நாட்களுக்குப் பின்னர், கொழும்பு செல்வதற்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சிடம் அனுமதி கோரியிருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் புதுடெல்லி ஊடகங்களிடம் கூறியிருந்தனர்.
அதைவிட, றோ மற்றும் ஐ.பி ஆகிய புலனாய்வுப் பிரிவுகளின் அதிகாரிகள் குழுவொன்று கொழும்பு சென்றிருப்பதாகவும் கூட, இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
எனினும், இந்தியா அதிகாரபூர்வமாக அதனை உறுதிப்படுத்தியிருக்கவில்லை. இப்போது தான், அதிகாரபூர்வமாக இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அவ்வாறாயின் அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக, மூன்று தடவைகள் முன்னெச்சரிக்கைகளைக் கொடுத்திருந்தது இந்தியா. அந்த முன்னெச்சரிக்கைகளை கொடுத்தது, என்.ஐ.ஏ தான்.
மிகத்துல்லியமான தகவல்களுடன் அந்த புலனாய்வு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது. அதில் கூறப்பட்டிருந்தது போலவே, விடுதிகளும், தேவாலயங்களும் தான் இலக்கு வைக்கப்பட்டிருந்தன. அதே நபர்கள் தான் தாக்குதல்களிலும் ஈடுபட்டிருந்தனர்.
இந்தளவு துல்லியமான புலனாய்வுத் தகவல்களைக் கொடுத்த இந்தியா, ஐந்து வாரங்களாக தனது புலனாய்வு அமைப்புகளை கொழும்புக்கு அனுப்பாமல் இருந்தது என்பது நம்பத்தகுந்த கதையாக இல்லை என்கின்றனர் சிலர்.
இலங்கை அரசாங்கத்தின் விசாரணைகளுக்கு உதவும் நோக்கில், இந்தியா தனது புலனாய்வு குழுக்களை இரகசியமாக அனுப்பியிருக்கக் கூடும். இந்தியாவில் தேர்தல்கள் நடந்து கொண்டிருந்த காரணத்தினாலும், இலங்கையில் விரைவில் தேர்தல்கள் நடக்கவுள்ள சூழலைக் கருத்தில் கொண்டும், இந்த விடயத்தை அடக்கி வாசிக்க இந்தியா முற்பட்டிருக்கலாம்.
ஏனென்றால், கடந்த 2014ஆம் ஆண்டு கொழும்பில் இருந்த இந்தியாவின் ‘றோ’ புலனாய்வு அமைப்பின் அதிகாரியான இளங்கோ என்பவர், தேவையின்றி உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக, அப்போதைய பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக் ஷ குற்றம்சாட்டியிருந்தார்.
அதுபற்றி அவர் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலிடமும் முறையிட்டிருந்தார். இரு நாடுகளுக்கும் இடையில் நடந்த இழுபறிகளுக்குப் பின்னர், ‘றோ’ அதிகாரி இளங்கோ புதுடெல்லிக்கு திருப்பி அழைக்கப்பட்டார்.
எனினும், ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதில் ‘றோ’ அமைப்பு முக்கிய பங்காற்றியது என்று பின்னர் மஹிந்த, பசில், கோத்தாபய உள்ளிட்ட ராஜ பக் ஷ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்தச் சூழலில் விசாரணைக்கு உதவும் நோக்கில் புலனாய்வு குழுக்களை அனுப்பும் போது தேவையற்ற பிரச்சினைகள் வரலாம் என்று ஒதுங்கியிருந்திருக்கலாம்.
ஆனாலும் அது அதிகாரபூர்வமானதாக இருந்திருக்கலாமே தவிர, அதிகாரபூர்வமற்ற புலனாய்வுக் குழுக்கள் வந்து விசாரணைகளில் பங்கேற்றிருக்கும். ஏனென்றால், இந்த விவகாரம் இலங்கைக்கான அச்சுறுத்தல் மாத்திரமல்ல.
இந்தியாவுக்கும், உலகத்துக்குமான அச்சுறுத்தலும் கூட. அப்படி இருக்கும் போது, இந்தியா தனது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டாவது, இந்த விசாரணைகளில் பங்கேற்றிருக்க வாய்ப்புகள் உள்ளன.
இப்போது, இந்திய பாராளுமன்றத் தேர்தல்கள் முடிந்து விட்டன. மீண்டும் பா.ஜ.க அரசாங்கம் பதவிக்கு வந்திருக்கிறது. மிகவும் வலுவான தலைவராக நரேந்திர மோடி உருவெடுத்திருக்கிறார். இந்த நிலையில், இந்தியா தனது பிராந்திய வல்லாதிக்கத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு, தேவையான எல்லாவற்றையும் செய்யக் கூடிய நிலையில் இருக்கிறது,
அதன் முதற்கட்டமாகத் தான், என்ஐஏ அதிகாரிகளின் குழு கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. ஐந்து வாரங்கள் கழித்து கொழும்பு வந்துள்ள இந்தக் குழு விசாரணைகளுக்கு எந்த வகையில் உதவப் போகிறது என்ற கேள்வி உள்ளது.
ஆனால், என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவின் இலங்கை வருகையானது, ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், பங்கேற்பதற்காகவோ, அந்த விசாரணைகளுக்கு உதவுவதற்காகவே அல்ல என்று புதுடெல்லி தகவல்கள் கூறுகின்றன.
இந்தியாவின் இலக்கு, இலங்கையில் ஐ.எஸ் அமைப்பின் தொடர்புகள் மற்றும் அதன் வேர்கள், ஆழம் பற்றி அறிந்து கொள்வது தான். ஐ.எஸ் அமைப்பு தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்புகள் கொண்டிருக்கின்ற தகவல்களைப் பெற்றுக் கொள்வது தான் என்.ஐ.ஏ அதிகாரிகளின் நோக்கம்.
21/4 தாக்குதல்களுக்குப் பின்னர், ஐ.எஸ் அமைப்பு, இந்தியாவை தமது ஒரு மாகாணமாகப் பிரகடனம் செய்திருந்தது. இந்தியாவில் ஒரு அங்குல நிலத்தைக் கூட கொண்டிராத அந்த அமைப்பு, இந்தியாவை தனது மாகாணமாகப் பிரகடனம் செய்த விடயம், கேலிக்குரிய ஒன்றாகவே பார்க்கப்பட்டது.
ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரையில் அது பாரிய அச்சுறுத்தலுக்கான ஒரு முன்னோடியான விடயமாகவே கருதுகிறது. ஐ.எஸ் அமைப்பு மத்திய கிழக்கில் தோற்கடிக்கப்பட்டாலும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக, மாத்திரமன்றி இலங்கை வழியாகவும் இந்தியாவுக்குள் நுழைகின்ற சாத்தியங்களை மறுப்பதற்கில்லை.
அதற்குத் தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளை இந்தியா கவனித்துக் கொண்டிருக்கிறது. அந்த முன்னேற்பாட்டுத் திட்டத்தின் ஒரு கட்டமாகத் தான், இந்திய புலனாய்வு அதிகாரிகளின் குழு கொழும்பு வந்திருக்கிறது.
தென்னிந்தியாவில் இந்தியாவுக்கு இரண்டு இடங்களில் ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தல்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்த சந்தேகங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தமிழகத்தின் கோயமுத்தூர். இன்னொன்று கேரளா.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உலகெங்கும் பரந்து வாழ்கிறார்கள். அங்கு முஸ்லிம்களும் அதிகம் வசிக்கின்றனர். கேரள முஸ்லிம்கள் 21 பேர், இலங்கை வழியாக சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ் அமைப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அவர்கள் நாடு திரும்பி கேரளாவில் தாக்குதல்களை நடத்தும் வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது. அதனைத் தடுப்பதற்கான முன்னாயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கேரள பொலிஸ், இதுபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளக் கூடிய சிறப்புப் படை ஒன்றையும் உருவாக்கியிருக்கிறது.
அதுபோலவே, கோயமுத்தூரில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய சிலர் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கும், தற்கொலை குண்டுத் தாக்குதல்களை ஒருங்கிணைத்த சஹ்ரான் ஹாசிமுக்கும் தொடர்புகள் இருப்பதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன.
சஹ்ரான் இந்தியாவுக்கு வந்து சென்றதாக இலங்கை அதிகாரிகள் கூறிய கருத்தை இந்தியா மறுத்திருந்தாலும், அதன் உண்மைத்தன்மையை அறிய இந்தியா விரும்புகிறது.
இந்த இரண்டு விடயங்களை உள்ளடக்கியதாக, இலங்கை மற்றும் இந்தியாவில் ஐ.எஸ் அமைப்பின் செயற்பாடுகள், தொடர்புகள் குறித்த தகவல்களை அறிந்து கொள்வதே, இந்திய புலனாய்வு அதிகாரிகளின் கொழும்பு பயணத்தின் முக்கிய நோக்கம்.
கடந்த 26ஆம் திகதி இந்திய ஊடகங்களில் பரபரப்பாக ஒரு செய்தி வெளியாகியது. இலங்கையில் இருந்து படகு ஒன்றில் 15 ஐ.எஸ் தீவிரவாதிகள் இலட்சதீவு நோக்கிப் புறப்பட்டுள்ளனர் என்று புலனாய்வு அறிக்கைகள் கிடைத்துள்ளன என்றும், இதையடுத்து, கேரள மாநில கரையோரப் பகுதிகளிலும், இலட்ச தீவிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.
இந்த செய்தியை இந்திய அதிகாரிகள் அதிகாரபூர்வமாக வெளியிடாவிடினும், இந்திய கடற்படை, கடலோரக் காவல்படை, கேரளா, இலட்சதீவு பொலிஸ் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் உசார்படுத்தப்பட்டன. கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளூர் அதிகாரிகள் எச்சரிக்கை செய்யப்பட்டனர்.
இதுபோன்ற புலனாய்வு எச்சரிக்கைககள் விடுக்கப்படுவது வழக்கமானது தான். நாளொன்றுக்கு இந்தியா முழுவதும், 10 தொடக்கம் 15 வரையான புலனாய்வு எச்சரிக்கைகளை இந்திய புலனாய்வு அமைப்புகள் வழங்குகின்றன.
ஆனால், 15 ஐ.எஸ் அமைப்பினர் என்று – எண்ணிக்கை குறிப்பிட்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது தான், இந்திய பாதுகாப்புத் தரப்பு உதாசீனப்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்தியிருந்தது.
அதைவிட, இந்த எச்சரிக்கை 23ஆம் திகதியே இலங்கை அதிகாரிகளால் வழங்கப்பட்டது என்றே இந்திய அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர்.
எனினும், இந்திய ஊடகங்களில் இந்தச் செய்தி வெளியான பின்னர், கருத்து வெளியிட்ட இலங்கை கடற்படைப் பேச்சாளர் லெப். இசுரு சூரியபண்டார, தமக்கு எந்த தகவலோ புலனாய்வு அறிக்கையோ இந்தியாவிடம் இருந்து கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார்.
இதுபற்றி இந்தியாவிடம் விசாரித்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். யாரையும் இலங்கையில் இருந்து தப்பிக்க கடற்படை விடவில்லை என்றும் அவர் உறுதியாக கூறியிருந்தார்.
இந்திய அதிகாரிகளோ இலங்கை அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த புலனாய்வுத் தகவல் என்கிறார்கள். இலங்கை அதிகாரிகளோ, தமக்கு எதுவும் தெரியாது என்கிறார்கள்.
ஆக மொத்தத்தில், உண்மையில் இந்தப் புலனாய்வுத் தகவல்கள் எங்கிருந்து வழங்கப்பட்டன என்று தெரியாது. இந்த புலனாய்வு எச்சரிக்கைகளின் பின்னணியில் தான் – அது பரபரப்பாக வெளியாகிய 48 மணி நேரத்துக்குள் தான், இந்திய புலனாய்வு அதிகாரிகள் குழுவின் கொழும்புக்கான பயணம் பற்றிய தகவல்கள் கசிந்திருக்கின்றன.
இந்தியாவுக்கு ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தல் உள்ளது என்பதைக் காட்டுவதற்கான ஒரு அறிவிப்பாகவும் இது இருக்கக் கூடும்.
எவ்வாறாயினும், இப்போதைய நிலையில் இந்தியா ஐ.எஸ் அமைப்பின் ஊடுருவல்களை இலங்கை வழியாகவும் எதிர்பார்க்கின்ற – எதிர்பார்க்க வேண்டிய நிலைக்கு உள்ளாகியிருக்கிறது.
இலங்கைக் கடற்படையைப் பலப்படுத்துவதன் மூலம், இந்தியா தனது பாதுகாப்பை வலுப்படுத்திக் கொள்ள திட்டமிட்டது. அதற்காகத் தான், இந்தியா பல ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை இலங்கைக்கு கொடுத்திருந்தது.
ஆனாலும், அவற்றின் மூலம், இந்தியாவின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்ப வைத்திருக்கிறது, ஐ.எஸ் அமைப்பின் ஊடுருவல்கள் பற்றிய தகவல்.