;
Athirady Tamil News

தி.மு.கவுக்கு எதிராக ரஜினியைக் களமிறக்க பா.ஜ.க வியூகம் !! (கட்டுரை)

0

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர், மான்ய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக ஆரம்பிக்கும் நேரத்தில், அ.தி.மு.கவுக்குள் பூகம்பம் உருவாகி இருக்கிறது.

மத்தியில், பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில், கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில், பா.ஜ.க இந்தமுறை இல்லை. ஆனாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்ற காரணத்தால், ‘அடையாள நிமித்தமாக’க் கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றுக்கும், ஓர் அமைச்சர் பதவியை, மத்திய அமைச்சரவையில் வழங்க பா.ஜ.க முன் வந்தது.

இந்த அடையாள அங்கிகாரத்தைப் பெற, பீஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் மறுத்து விட்டார். “என் கட்சிக்கு இருக்கும் 16 எம்.பிக்களுக்கு ஏற்றாற்போல், அமைச்சர் பதவிகள் கொடுத்தால், அமைச்சரவையில் பங்கேற்பேன். இல்லையென்றால், எங்களுக்கு வேண்டாம். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடருவோம்” என்று அறிவித்து விட்டு, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பங்கேற்காமல், பாட்னா திரும்பி விட்டார்.

ஆனால், அ.தி.மு.கவைப் பொறுத்தவரை, ஒரேயொரு நாடாளுமன்றத் தொகுதி மட்டுமே கிடைத்தது. ஆகவே, பா.ஜ.க அளித்த ‘அடையாள அங்கிகாரத்தை’ ஏற்கத் தயாராக இருந்தது. பா.ஜ.கவுடன் மோதல் போக்கிலும் செல்வதற்கு, அ.தி.மு.க தயாராக இல்லை.

ஆனால், அ.தி.மு.கவுக்குள் கொடிகட்டிப் பறந்த குழப்பம், “யாருக்கு அமைச்சர் பதவி” என்பதுதான். ஓரிடத்தில் வெற்றி பெற்றது அ.தி.மு.க என்றாலும், அந்த ஓரிடம், துணை முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கே சென்றது.

தமிழகத்தில் அடித்த, தி.மு.க ஆதரவு அலை, மோடி எதிர்ப்பு அலை ஆகிய ‘சுனாமி’களில் தப்பிப் பிழைத்தவர் ரவீந்திரநாத் குமார் மட்டுமே. அதுவும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும், தந்தை பெரியாரின் பேரனுமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனைத் தோற்கடித்தார். ஆகவே, ஓ. பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை, தன் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்று விரும்பியதில் தவறு இல்லை.

ஆனால், இதற்கு எதிர்ப்பு, அ.தி.மு.கவுக்குள் இருந்துதான் கிளம்பியது. இராஜ்ய சபை உறுப்பினர் வைத்தியலிங்கம், தனக்கு அந்த அமைச்சர் பதவி வேண்டும் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்தார்.

பா.ஜ.கவுக்கு ஏற்கெனவே நெருக்கமான ஓ. பன்னீர் செல்வம், தன் மகனையும் பா.ஜ.க அமைச்சரவையில் சேர்த்து விட்டால், டெல்லி அதிகாரம் அனைத்தும், ஓ. பன்னீர்செல்வத்தின் கைக்குப் போய்விடும். மாநிலத்தில் முதலமைச்சராக இருக்கும் பழனிசாமிக்கு, இது தீராத தலைவலியை, இன்னும் இரண்டு வருடங்களுக்கு கொடுத்து விடும் என்று பழனிசாமியின் ஆதரவாளர்கள் கருதினார்கள். முதலமைச்சர் பழனிசாமியும் கூடக் கருதினார். விளைவு, ஓ. பன்னீர் செல்வத்தின் மகனுக்கு, மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்பதை விட, பிரதமர் மோடி அமைச்சரவையில், அ.தி.மு.க இடம்பெறுவதற்கே தவறி விட்டது.

இனியொரு முறை, அ.தி.மு.கவுக்கு அந்த வாய்ப்பை பா.ஜ.க அளிக்குமா? அப்படி முன்வந்தாலும் இராஜ்ய சபை பதவி ஒன்றை அ.தி.மு.கவின் பிரதிநிதிக்கு அளிக்க, பா.ஜ.க விரும்புமா என்பதெல்லாம் அடுத்து வரும் சுவாரஸ்யமான காட்சிகளாக இருக்கும்.

காட்சிகள் நாளை வரும். ஆனால், கட்சிக்குள் சண்டை இப்போதே வந்து விட்டது. குறிப்பாக, ஓ. பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள், தன் மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்ற வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் இருக்கின்றன.

நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்ற இடைத் தேர்தலிலும் வெற்றி பெற்ற அ.தி.மு.க உறுப்பினர்கள், இதுவரை ‘ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ்’ (எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம்) தலைமையில், ஜெயலலிதா நினைவிடத்துக்குச் செல்லவில்லை. மாறாக, தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கருணாநிதி நினைவாலயத்துக்குச் சென்று திரும்பி விட்டார்கள். ஆனால், ஓ.பி.எஸ் தனியாகத் தன் மகனை மட்டும் அழைத்துக் கொண்டு, ஜெயலலிதா நினைவாலயத்தில் மரியாதை செலுத்தி விட்டு வந்து விட்டார்.

இப்தார் நிகழ்ச்சியில் ஈ.பி.எஸ் கலந்து கொள்ளவில்லை. அதற்குப் பதில், ஓ.பி.எஸ் மட்டுமே கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு முன்கூட்டியே, அரங்குக்கு வந்து விட்ட ஓ.பி.எஸ், அங்கிருந்த அறையில் அமர்ந்திருந்ததாகவும் அந்த அறைக்குள் அ.தி.மு.க இராஜ்ய சபை உறுப்பினர் வைத்தியலிங்கம் நுழைந்தவுடன், ஓ.பி.எஸ் வௌியேறிச் சென்றுவிட்டார்.

மத்திய அமைச்சர் பதவிக்குப் போட்டியிட்ட வைத்தியலிங்கமும், ஓ.பி.எஸ்ஸும் பேசிக் கொள்வது கூட இல்லை என்று, அ.தி.மு.க வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. அது மட்டுமல்ல, ‘கணக்குப் பரிசோதகர்’ குருமூர்த்தியை, ஓ. பன்னீர்செல்வம் சந்தித்தது பரபரப்பாகி விட்டது. ஏனென்றால், ஓ.பி.எஸ்.ஸின் முதலமைச்சர் பதவியை, சசிகலா பறித்தவுடன், ஜெயலலிதா சமாதியில் ‘தர்ம யுத்தம்’ நடத்த, இவர்தான் ஆலோசனை வழங்கியிருந்தார். ஆகவே, இரண்டாவது தர்மயுத்தத்துக்கு ஓ.பி.எஸ் தயாராகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அனைத்துக்கும் முத்தாய்ப்பு வைத்தாற்போல், காயிதே மில்லத் 124 ஆவது பிறந்த தினத்தன்று, முதலமைச்சர் ஈ.பி.எஸ்.ஸும், துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்.ஸும் மலரஞ்சலி செலுத்தி, மரியாதை செய்வார்கள் என்று அ.தி.மு.கவின் அதிகார பூர்வ பத்திரிக்கை செய்தி வெளியிட்டது; விளம்பரமும் வெளிவந்தது. ஆனால், அங்கும் ஓ.பி.எஸ் மட்டுமே போனார். ஈ.பி.எஸ் வராததற்கு பல்வலி என்று காரணம் சொல்லப்பட்டது. என்றாலும், இருவருக்கும் திரைமறைவில் பனிப்போர் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதையே, இந்த நிகழ்வுகள் எல்லாம் பறை சாற்றுகின்றன. இந்தப் பனிப்போரின் முடிவு எப்படிப் போகும்?

சட்டமன்றத்தில் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி 109 சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்துடன் இருக்கிறது. அ.தி.மு.கவோ 123 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் இருக்கிறது. தினகரன் தனியாக இருக்கிறார். ‘வசந்த் அன்ட் கோ’ வசந்தகுமார், காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிவிட்டதால், தன் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்திருக்கிறார்.

ஆகவே, இப்போது 234 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில், அ.தி.மு.கவுக்கு இருக்கும் 123 பேர் ஆதரவில், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் உட்பட, ஏழு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், அ.தி.மு.கவின் நிச்சயமான ஆதரவுக் கணக்கில் இல்லை என்ற நிலை தொடர்கின்றது. இந்த ஏழு பேரும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தாலோ, தி.மு.க கொடுத்துள்ள பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கைத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தாலோ எந்தப் பக்கம் நின்று வாக்களிப்பார்கள் என்பது, புரியாத புதிராகவே இருக்கிறது. இது போன்ற நேரத்தில், ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் பனிப்போர், அ.தி.மு.க ஆட்சிக்கு ஆபத்தை உருவாக்கும் விதத்தில் அமைந்து விடலாம்.

“ஒன்றரை வருடம் கழித்து, தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி” என்று, கலைஞர் கருணாநிதியின் 96ஆவது பிறந்த நாளில், ஸ்டாலின் உரையாற்றி இருக்கிறார். அதன் அர்த்தம் என்னவென்றால், இந்த ஒன்றரை வருடத்தில், ஆட்சியை கவிழ்க்கப் போவதில்லை என்பதுதான்.

“தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சி இருக்கும் வரை, நான் தனிக்கட்சி தொடங்கப் போவதில்லை” என்பதுதான், ரஜினியின் திரைமறைவு வியூகம். நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் படுதோல்வி அடைந்த பா.ஜ.க, ரஜினியை வைத்து, தி.மு.கவை சட்டமன்றத் தேர்தலில் ‘ஒருகை’ பார்த்து விடுவோம் என்று நினைத்தால், இப்போதைக்கு உடனடியாகச் சட்டமன்றத் தேர்தலுக்கு வித்திடுவதே பா.ஜ.கவின் இராஜதந்திர முயற்சியாக இருக்க முடியும்.

அப்படியொரு நிலை வந்தால், ஒரு வருடம் குடியரசுத் தலைவர் ஆட்சி; அந்த காலகட்டத்தில், ரஜினி கட்சி தொடங்குவார். அதன் பிறகு வரும் சட்டமன்றத் தேர்தலில், தி.மு.கவை எதிர்கொள்ள, ரஜினியைக் களம் இறக்குவது என்பதுதான், பா.ஜ.கவுக்குச் சாதகமான செயற்றிட்டமாக இருக்க முடியும் என்று டெல்லியில் உள்ள மூத்த பா.ஜ.க தலைவர்கள் நம்புகிறார்கள்.

அப்படியொரு நம்பிக்கையிருக்கும் சூழலில், ஓ.பி.எஸ்.ஸுடனான பனிப்போர், அ.தி.மு.க என்ற கட்சியை, இன்னொரு பிளவைச் சந்திக்க வைத்து விடும்.

ஆகவேதான், பா.ஜ.க தனியாக வந்தாலும் சரி, ரஜினியும் ஓ.பி.எஸ்ஸும் என்று ஓரணி வழியாக வந்தாலும் சரி, அதனை எதிர்கொள்ள, இப்போதே தி.மு.க தயாராகி விட்டது போல்தான் தெரிகிறது.

‘தமிழ்நாட்டில் இந்தி மொழி கட்டாயம்’ என்ற கஸ்தூரி ரங்கன் குழுவின் அறிக்கைக்கு கிளம்பிய எதிர்ப்பை, தி.மு.கவுக்குச் சாதகமாக்க, இப்போதே போராட்டக் களத்தை அறிவித்து விட்டது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகும், பா.ஜ.கவின் மீதான தாக்குதலை, தி.மு.க மேலும் கூர் தீட்டுகிறது.

‘மொழிப்போர்’ களம் பற்றித் தெரிந்த பா.ஜ.க, அவசர அவசரமாக, இந்தி கட்டாயம் என்ற வார்த்தையை அறிக்கையிலிருந்து நீக்கியிருக்கிறது. ஆனால், தி.மு.கவுக்கு எதிராக ரஜினியை களமிறக்கும் திட்டத்துக்கு பணிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

அ.தி.மு.கவுக்கு அமைச்சர் பதவி வழங்க முன்வந்ததில், தொடங்கிய வியூகம், ரஜினி அரசியல் பிரவேசத்தில் முடிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + seventeen =

*