;
Athirady Tamil News

மரண தண்டனையை நேர்மையாக எதிர்ப்பவர்கள் எத்தனை பேர்? (கட்டுரை)

0

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம், குண்டைக் கட்டிக் கொண்டு தாக்குதலுக்குத் தான் போகாமல், மற்றவர்களை ஏவி, உயிர்த்த ஞாயிற்றுக்கிழமையன்று நூற்றுக் கணக்கானவர்களை கொன்று குவித்தான் என்று வைத்துக் கொள்வோம். பின்னர், அவன் கைது செய்யப்பட்டான் என்றும் வைத்துக் கொள்வோம். இந்தப் படுபாதகச் செயலுக்காக, சஹ்ரானுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமா, இல்லையா?

2015ஆம் ஆண்டு, புங்குடுதீவில் வித்தியா என்ற மாணவியைக் கூட்டு வல்லுறவுக்கு உள்ளாக்கி, கொலை செய்தவர்கள் விடயத்தில், மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமா, இல்லையா?

அதே ஆண்டு, கொட்டதெனியாவையில் சேயா சதெவ்மி என்ற ஐந்து வயதுச் சிறுமியையும் அதேபோல் கொலை செய்தவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமா, இல்லையா?

இவ்வாறு, பொதுவாக இல்லாது, குறிப்பிட்ட சம்பவங்களைப் பற்றி, நாம் கேள்வி எழுப்பினால், இன்று மரண தண்டனையை எதிர்ப்போரில் எத்தனை பேர், அதே நிலைப்பாட்டில் இருப்பார்கள்?

அதேவேளை, தமது எதிரிக்கு மரண தண்டனை வழங்குவதை எதிர்ப்போர், எத்தனை பேர் உலகில் இருப்பார்கள் என்று பார்த்தால், விசித்திரமான உண்மைகள் வெளிவரும். பிரச்சினை தம்முடையதாக இல்லாத வரை, தத்துவார்த்தமானதாகவே தீர்வு இருக்கும் என்பார்கள். அதுவே, மரண தண்டனை விடயத்திலும் உண்மை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மரண தண்டனையை நிறைவேற்ற முன்வந்ததை அடுத்து, பலர் அதனை எதிர்த்துக் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், அவர்களில் பெரும்பாலானவர்கள், இந்த விடயத்தில் நேர்மையானவர்கள் என்று கூற முடியாது.

ஏனெனில், அவர்கள் சட்டபூர்வமான மரண தண்டனையை எதிர்த்த போதிலும், சட்ட விரோதமாகத் தமது எதிரிகளைக் கொன்றவர்களாவர்; அல்லது, தமது எதிரிகளின் மரணத்தை ஆதரித்தவர்கள்; அல்லது, தமது எதிரிகளின் மரணத்துக்கான நியாயம் வழங்குவதை எதிர்த்தவர்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியை எடுத்துக் கொண்டால், அக்கட்சியின் ஆட்சிக் காலத்தில், அதாவது 1980களில் வடபகுதியில் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் காணாமல் போனார்கள். அதே கட்சியின் ஆட்சிக் காலத்தில், அதாவது 1988-89ஆம் ஆண்டு காலத்தில், நாட்டின் தென்பகுதியில் சுமார் 60,000 பேர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. காணாமல் போதல் என்பது, என்ன என்பது சகலரும் அறிந்த விடயம். இவை, சட்டத்துக்கு அப்பாற்பட்ட மரண தண்டனைகளேயாகும்.

அக்காலத்தில், அக்கட்சியின் அனுசரணையில் ‘பிரா’, ‘சிரா’, ‘பச்சைப் புலி’ போன்ற பெயர்களில், பல ஆயுதக் குழுக்கள் உருவாக்கப்பட்டு இருந்தன. அக்குழுக்களும் ஆயுதப் படைகளுடன் இணைந்து, அவ்வாறு ஆட்களைக் கடத்திக் கொன்றதாகப் பரவலாக நம்பப்படுகிறது.

இதனை, அந்த ஆட்சியாளர்கள் மட்டுமல்லாது, சாதாரண ஐ.தே.ககாரர்களும் அனுமதித்தார்கள். நாளை, அக்கட்சியின் ஆட்சியின் கீழ், நாட்டில் மற்றொரு கிளர்ச்சி ஏற்பட்டால், அதேபோல் ஆட்கள் ஆயிரக்கணக்கில் காணாமற்போக மாட்டார்கள் என்பதற்கு, எந்தவித உத்தரவாமும் இல்லை.

ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் காலத்திலும், அதாவது 1995, 1996 காலத்தில் ‘ரிவிரெஸ’, ‘சத்ஜய’ ஆகிய இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்றன. அக்காலத்திலும், வட பகுதியில் பெருமளவில் இளைஞர்கள் காணாமல் போனார்கள். அதனை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காரர்களும் இடதுசாரிக் கட்சிக்காரர்களும் பெரும்பான்மை சமூகத்தினரும் நியாயப்படுதினார்கள். இவையும் மரண தண்டனைகளே.

மஹிந்தவின் ஆட்சிக் காலத்தைப் பற்றிக் கூறத் தேவையில்லை. அக்காலத்திலேயே போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. போர் முடிவடைந்ததன் பின்னர், நூற்றுக்கணக்கான புலி உறுப்பினர்களும் தலைவர்களும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. அவர்கள் திரும்பி வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

1977ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கைப் பிரகடனத்தில், மரண தண்டனை இரத்துச் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அக்கட்சி அதன் பின்னரான தமது இரண்டாவது கிளர்ச்சியின் போது, எவ்வாறு நடந்து கொண்டது என்பது இரகசியமல்ல. தமக்கு எதிரானவர்கள் என்று சந்தேகித்தவர்களையும் அக்கட்சியினர் கொலை செய்தனர்.

புலிகள், தமக்கு எதிரானவர்கள், மாற்றுக் கருத்துடையவர்கள் போன்றோரைப் படுகொலை செய்தமை சகலரும் அறிந்த விடயம். தற்போது, ஜனநாயக அரசியலில் ஈடுபட்டு இருக்கும், ஏனைய பல தமிழ்க் கட்சிகளும் ஊடகங்களும் அக்கொலைகளை நியாயப்படுத்தின. இவையும் மரண தண்டனைகள் தான்.

இன்று, மரண தண்டனையை எதிர்க்கும் தொண்டர் அமைப்புகளின் நிலைமையும் அதுவே. உதாரணமாக, 1989ஆம் ஆண்டு, மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் ரோஹண விஜேவீர கைது செய்யப்பட்டு, இராணுவத்தினரால் கொழும்பு கனத்தை மயானத்தில் வைத்து, கொலை செய்யப்பட்ட போது, இந்நாட்டுத் தன்னார்வ அமைப்புகள் மட்டுமன்றி, உலக மனித உரிமை அமைப்புகளும் அதனை எதிர்த்துக் குரல் எழுப்பவில்லை. அவர் கொம்யூனிஸ்ட்வாதி என்பது அதற்குக் காரணமாக இருக்கலாம்.

குருநாகலில் சர்ச்சைக்குரிய மருத்துவர் ஷாபி சிஹாப்தீனைக் கல்லெறிந்து கொலை செய்ய வேண்டும் எனப் பெண்கள் கூறுவதாகவும் தாம் அவ்வாறு கூறாவிட்டாலும், நடைபெற வேண்டியது அதுதான் என்றும் சில நாள்களுக்கு முன்னர், அஸ்கிரிய பீடாதிபதி வரகாகொட ஞானரத்ன தேரர் கூறியிருந்தார். இதுவும் மரண தண்டனையை ஆதரிப்பதாகும்.

ஆனால், நாட்டில் எத்தனை பேர், அதனை விமர்சித்தார்கள்? எத்தனை பேர், உண்மையிலேயே அக்கூற்றை ஆதரித்தார்கள் என்பது, எல்லாவற்றையும் விட முக்கியமானதாகும். மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டுள்ள ஏனைய நாடுகளின் நிலைமையும் இதுவே.

அல் கைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன், அமெரிக்கப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு, நிராயுதபாணியாக இருக்கும் போதே, சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர் பயங்கரவாதி என்பதும், பல ஆயிரம் பேரது மரணத்துக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர் என்பதும் உண்மைதான். மரண தண்டனை விதிக்கப்பட வேண்டியவராகவும் இருக்கலாம்.

ஆனால், சட்டபூர்வமான மரண தண்டனையை எதிர்ப்பவர்களில் எத்தனை பேர், அந்தக் கொலையை எதிர்த்துக் குரல் எழுப்பினார்கள்?

குறைந்தது, உலக மனித உரிமை அமைப்புகளாவது அதனை மனித உரிமை மீறல் என்று கூறவில்லை. கூறியிருந்தால், வெறும் பெயருக்குத் தான்.

இதுதான் உலக நிலைமை.

குற்றமற்றவர்களும் மரண தண்டனைக்கு உள்ளாகலாம்

தமது இருப்புக்காக, சரச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுத்தும், சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தும் வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த புதன்கிழமை (26) அவ்வாறான மற்றொரு கருத்தைத் தெரிவித்து இருந்தார்.

“மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில், நான்கு பேரது தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணங்களில் நான் கையெழுத்திட்டு விட்டேன்” என்று, ஊடக நிறுவனங்களின் அதிபர்களையும் ஊடக ஆசிரியர்களையும் சந்தித்துக் கூறியிருந்தார்.

ஒருவகையில், இது புதிய விடயமல்ல என்றும் கூறலாம். ஏனெனில், 1976ஆம் ஆண்டு முதல், இலங்கையில் நீதிமன்றங்களால் விதிக்கப்பட்டாலும், நிறைவேற்றல் இடைநிறுத்தப்பட்டு இருக்கும் மரண தண்டனையைத் தாம் நிறைவேற்றப் போவதாக, ஜனாதிபதி இதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்து இருந்தார்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில், குற்றவாளிகளாகக் காணப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும், சிறைச்சாலைகளில் இருந்து, போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவோருக்கான மரண தண்டனையைத் தாம் நிறைவேற்றப் போவதாக, அவர் அன்று தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர், போதைப்பொருள் தொடர்பாக, குற்றஞ்சாட்டப்பட்ட ஆயிரக் கணக்கானவர்களைக் கொலை செய்ததாகக் கூறப்பட்டும் பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி எடுவாடோ டுட்டர்டேயைப் பாராட்டிய ஜனாதிபதி மைத்திரிபால, அந்நாட்டுக்குச் சென்றும் டுட்டர்டேயைப் பாராட்டினார்.

அதன் பின்னர்தான், திடீரெனக் கடந்த புதன்கிழமை, நான்கு பேரது மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணங்களில் தாம் கையெழுத்திட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

தாம் மரண தண்டனையை நிறைவேற்றப் போவதாக, ஜனாதிபதி முன்னர் அறிவித்த போதும், அதற்கு உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் இருந்து பலர் எதிர்ப்புத் தெரிவித்து இருந்தனர். ஆனால், இப்போது ஜனாதிபதி நால்வரது மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ள நிலையில், அந்த எதிர்ப்பு பல மடங்கு அதிகாரித்துள்ளது. ஐ.நா சபையும் இம்முறை எதிர்ப்புத் தெரிவித்து இருந்தது.

எனவே, தாம் ஐ.நா செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டெரெஸ் உடன் தொலைபேசியில் கலந்துரையாடி, என்ன அடிப்படையில் தாம் இந்த முடிவை எடுத்தோம் என்பதை விளக்கியதாக, கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் ஐ.நா செயலாளர் நாயகம், அதற்கு என்ன பதிலளித்தார் என்பதை, ஜனாதிபதி வெளியிட்டு இருக்கவில்லை.

ஜனாதிபதியின் முடிவுக்கு எதிராக, கடந்த வாரமே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்குப் புறம்பாக, மேலும் 10 அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குகளும் நேற்று முன்தினம் ஜனாதிபதியின் இந்த முடிவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இப்போது பலர், மரண தண்டனையை விமர்சித்து ஊடகங்களில் கட்டுரைகளை எழுதி வருகிறார்கள். அவற்றில் இரண்டு காரணங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. முதலாவதாக, மரண தண்டனையால், குற்றங்கள் குறைவதில்லை என்பதாகும். இரண்டாவதாக, உண்மையான குற்றவாளிகளுக்குப் பதிலாக, மற்றவர்கள் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்படும் அபாயம் இருக்கிறது என்பதாகும்.

மரண தண்டனையால், குற்றங்கள் குறைவதில்லை என்பது சர்ச்சைக்குரிய வாதமாகும். புள்ளிவிவரங்களின் படி, சிலர் அவ்வாறு வாதிட்டாலும் சில உதாரணங்கள் மூலம், அதற்கு மாறாகவும் வாதிட முடிகிறது. ஈரான், சவூதிஅரேபியா போன்ற நாடுகளில், வல்லுறவு தொடர்பான சம்பவங்களைப் பற்றிய செய்திகளை அவ்வளவாக அறிய முடிவதில்லை. அந்நாடுகளில், அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதே இல்லை என, எவராலும் உத்தரவாதமளித்துக் கூற முடியாது தான். ஆனாலும், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இடம்பெறுவதைப் போல், அச்சம்பவங்கள் அந்நாடுகளில, குறிப்பாக, ஈரானில் இடம்பெறுவதாக இருந்தால், மேற்குலக ஊடகங்கள் அதனை வெளியிடாமல் இருக்கப் போவதில்லை.

தமிழீழ விடுதலை புலிகள் வடபகுதியில் தமது ஆட்சியை நிறுவியிருந்த காலத்தில், அங்கு கொலை, கொள்ளை, கலப்படம், பாலியல் தொடர்பான குற்றங்கள் மிகவும் குறைந்திருந்தமை சகலரும் அறிந்த விடயமாகும். அதனை எடுத்துரைக்க முற்பட்ட போதே, அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கடந்த வருடம், பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டார்.

அங்கு மக்கள், அப்போது அறிவுபூர்வமாக அக்குற்றங்களில் ஈடுபடாமல் இருந்தார்கள் என்று எவரும் வாதிட முடியாது. மரண தண்டனை உள்ளிட்ட புலிகளின் கடுமையான தண்டனைகளின் காரணமாகவே அங்கு, அப்போது அவ்வாறான குற்றங்கள் குறைந்திருந்தன. எனவே, புலிகளின் ஆட்சி வீழ்ச்சியடைந்த உடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் போலவே இப்போது வடக்கிலும் குற்றச் செயல்கள் அதிகமாக இடம்பெறுகின்றன.

மறுபுறத்தில், மரண தண்டனையையே மக்கள் பொருட்படுத்தாமல் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக இருந்தால், அவர்கள் ஏனைய தண்டனைகளைப் பொருட்படுத்துவார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

அதாவது, மரண தண்டனையால் குற்றச் செயல்கள் குறைவதில்லை என்று வாதிடுவதாக இருந்தால், ஏனைய தண்டனைகள் மூலமும் குற்றச் செயல்கள் குறைவதில்லை என்றும் எனவே, எந்தக் குற்றச் செயல்களுக்கும் எவ்வித தண்டனையும் வழங்குவதில் அர்த்தமில்லை என்றும் வாதிட முடியும்.

இது ஒரு புறம். மறுபுறத்தில், தண்டனை என்பது ஒருவரைத் திருத்துவதற்கான பொறிமுறையேயன்றி பழி வாங்கலல்ல. உலகில், முதலாவது தண்டனைக் கோவையை வரைந்த ஹம்முராபி என்பவர், ‘ஒருவர் மற்றொருவரின் பல்லை உடைத்தால், பல்லை உடைத்தவரின் பல்லையும் உடைக்க வேண்டும்’ என்றும் ‘கண்ணைப் பிடுங்கினால், கண்ணைப் பிடுங்கியவனின் கண்ணையும் பிடுங்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டாராம். ஆனால், தற்போதைய நாகரிக உலகம், அந்த முறையில் தண்டனை வழங்குவதை ஏற்றுக் கொள்வதில்லை.

தண்டனை என்பது, மனிதனைத் திருத்துவதற்கான பொறிமுறையாக இருக்க வேண்டும் என்பதே தற்போது உலகம் ஏற்றுக் கொள்ளும் வாதமாகும். அந்தவகையில் மரண தண்டனையால் எவரையும் திருத்த முடியாது. ஏனெனில், திருந்த எந்தவொரு குற்றவாளியும் உயிருடன் இருக்கப் போவதில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு நாட்டில் ஊழல் மலிந்த பொலிஸ் துறையும் நீதித் துறையும் இருந்தால், உண்மையான குற்றவாளிகள் ஒரு புறமிருக்க, குற்றமிழைக்காதவர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படும் அபாயம் இருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 2 =

*