;
Athirady Tamil News

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சவுதிக்கெதிரான வெளிவிவகார காய் நகர்வுகள்!! (கட்டுரை)

0

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது படைகளின் பெரும்பகுதியை யேமனில் இருந்து திரும்பப் பெறுவதற்கான முடிவு மத்திய கிழக்கு புவிசார் அரசியலின் திரை மறைவிலுள்ள கடினமான யதார்த்தங்கள் குறித்து ஒரு கவனத்தை ஈர்க்கிறது.

ஈரானுடனான ஒரு அமெரிக்க இராணுவ மோதலுக்கான சாத்தியக்கூறுக்கு ஐக்கிய அரபு எமிரேட் தயாராகி வருவதற்கான ஒரு முன் நடவடிக்கையாக இது கணிக்கப்படுகின்ற அதேவேளை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா ஆகியவையே அமெரிக்க – ஈரான் யுத்தமொன்று ஏற்படுமாயின் அப்பிராந்திய – அல்லது ஒரு நீண்டகால நிழல் யுத்தத்துக்கான பிரதான போர்க்களங்களாக அமையும் என்பதை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகம் உணர்ந்ததன் பிரதிபலிப்பாகவே குறித்த பின்வாங்கல் பார்க்கப்படவேண்டியதாகின்றது.

எது எவ்வாறாயினும், குறித்த பின்வாங்கல், யேமனை நோக்கிய சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தனிப்பட்ட – மாறுபட்ட அணுகுமுறைகளில் நீண்டகால நுட்பமான வேறுபாடுகளை பிரதிபலிக்கிறது என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்கமுடியாது. இந்நிலையில் இப்பத்தி யேமனில் எவ்வாறாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதியின் வெளிவிவகார கொள்கைகைகளில் இருந்து விலகி நிற்கின்றது, அதற்கான காரணங்கள் பற்றி ஆராய்கின்றது.

யேமெனிய யுத்தத்தின் போது கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கையைப் பற்றிய பெருகிய மனித உரிமை விமர்சனங்கள் தொடர்பான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நீண்டகால அக்கறையையும், ட்ரம்ப் நிர்வாகத்தின் கேள்விகேட்காத சவுதிக்கான ஆதரவு என்பனவும், குறித்த பின்வாங்கலுக்கு அடிப்படை காரணங்களாக அமைந்துள்ளது.

குறித்த பின்வாங்கல், ஈரானைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான ஒரு இராணுவ மூலோபாய நடவடிக்கை மட்டுமன்று. மாறாக, இது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஏற்கனவே, லிபிய உள்நாட்டுப் போரில் துணைக்குழுத்தலைவர் மார்ஷல் கலீஃபா பெல்காசிம் ஹப்தாருக்கான ஆதரவை வழங்கியிருந்தமை, சூடான் இராணுவத்திற்கு ஆதரவை வழங்குதல், எகிப்திய ஜெனரலாக மாற்றப்பட்ட ஜனாதிபதி அப்தெல் பத்தா அல் சிசி போன்ற எதேச்சதிகாரர்களுக்கு ஆதரவளித்தல் போன்ற பிறகுழுக்களுக்கு ஆதரவளித்தல் மூலம் அரசியல் இஸ்லாத்தை முறியடிப்பதற்குமான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கொள்கையை மீள வலியுத்தும் செயல்பாடாகும். குறித்த கொள்கையானது, சவுதிய அரசியல்-இஸ்லாம் கொள்கைக்கு நேரடியான முரண்பாடானது என்பது முதலில் குறிப்பிடத்தக்கது.

இரண்டாவதாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது துருப்புக்களில் பெரும்பகுதியை யேமனின் முக்கிய பகுதிகளிலிருந்து திரும்பப் பெறுகின்றது என்றாலும், அது எமிராட்டி பயிற்சி பெற்ற உள்ளூர் படைகளை யேமனில் தங்கவிட்டே வெளியேறுகிறது. குறித்த இவ்விராணுவ பின்வாங்கலும், தங்கவைத்தலும், தொடர்ச்சியாக மூலோபாய இராணுவ மற்றும் உளவு நடவடிக்கைகளுக்கும் அவசியம் என்பதை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உணர்ந்துள்ளமையின் வெளிப்பாடே ஆகும்.

இது நீண்டகால சவுதியின் மூலோபாய கட்டுப்பாட்டில் உள்ள யேமனிய பிராந்தியத்தில் தன்னை ஒரு போட்டிக்கான செயல்பாட்டு வீரராக களமிறக்குவதற்கான ஒரு நீண்டகால செயல்பாடாக பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதன் பிரகாரமே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் யேமனில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக அல்-முக்கல்லா தளத்தை பராமரிப்பதுடன், யேமனில் இருந்து முழுத்துருப்புக்களையும் முற்றுமுழுதாக திரும்பப் பெறுதல் 100 சதவீதம் பொருத்தமானது அல்ல எனவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாவதாக, சவுதிய இளவரசர் முகமது பின் சல்மானின் கொள்கைகள் – குறிப்பாக, உள்நாட்டு விமர்சகர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் யேமன் யுத்தத்தில் சவூதி புரிந்த யுத்த குற்றங்கள் என்பவற்றின் அடிப்படையில், இஸ்லாமியத்தின் ஐந்து தூண்களில் ஒன்றான மக்காவிற்கான யாத்திரையை புறக்கணிக்குமாறு இஸ்லாமிய அறிஞர்கள் வெளிப்படையாக கோரிக்கை விடுத்திருந்தமை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு தனது இராணுவ கொள்கைகளை மீள வரையறுக்கும் அல்லது திருத்தியமைக்க கூடிய சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.

குறிப்பாக, இராணுவத்தை குறித்த நிலைமையில் யேமனில் இருந்து வெளியேற்றுதல்,உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றை நான்கு ஆண்டுகளுக்கும் மேலான யுத்தத்தின் மூலம் தூண்டிவிட்டதற்கான பொறுப்பை சவூதி அரேபியாவை ஏற்கச்செய்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராணுவம் யேமனில் நடைபெற்ற மோதலில் யுத்தக்குற்றங்கள் புரிந்தமைக்கு சான்றுகள் இருக்கின்ற போதிலும், எமிராட்டி விமானப்படையை விட சவுதியால் பெரும்பாலும் மேற்கொள்ளப்பட்ட பொதுமக்கள் இலக்குகளின் மீதான குண்டுவீச்சுக்கள் சவூதி தொடர்பாக ஏற்கனவே கேள்விக்குறியில் இருந்த மனித உரிமைகள் தொடர்பான மீறல்களை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலை சவூதி அரேபியாவை சர்வதேச மட்டத்தில் தனிமைப்படுத்தும் எனவும், அத்தனிமைப்படுத்தல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அதன் இராணுவ மூலோபாய நலன்களுக்கு அனுகூலமாகவே அமையும் எனவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கணிக்கின்றது.

நான்காவதாக, ஈரானின் அரசியல் இஸ்லாம் கொள்கைக்கு மாறான கொள்கையை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கொண்டிருந்தாலும், அது ஒரு போதும் ஈரானுடன் ஒரு நேரடியான யுத்தத்துக்கு செல்வதை விரும்பவில்லை. இதற்கான காரணம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொடர்ச்சியாக ஒரு நடுநிலையாளர் போக்கை பராமரிக்க எண்ணுதல், அதன் மூலமாக சவுதியின் வீழ்ந்துகொண்டிருக்கும் பிராந்திய வல்லரசாக தன்னை நிலை நிறுத்துதல் –

குறித்த நிலை நிறுத்துதலின் போதும் சவுதியுடன் முரண்பாட்டை பேணாதிருத்தலின் வழியிலேயே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஈரான் தொடர்பில் மறைமுகமான காய் நகர்த்தல்களை மேற்கொள்கின்றது. அதன் ஒரு பகுதியாகவே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியாவைப் போலல்லாமல், அண்மைய வாரங்களில் ஓமான் வளைகுடாவில் இராணுவ தளபாடங்கள் மீதான தாக்குதல்களுக்கு ஈரானைக் குறை கூறுவதைத் தவிர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 2 =

*