;
Athirady Tamil News

‘சாபக்கேடுகள்’ !! (கட்டுரை)

0

ஆடத் தெரியாதவர்களின் மேடை, எப்படி சோபை இழந்து போகுமோ அதுபோல, இலங்கை அரசியலும் களையிழந்து போயிருக்கின்றது.

நாட்டியமே தெரியாதவர்கள் மேடையில் நின்று கொண்டு, தமது ஆட்டம் பிழைத்ததற்கான காரணங்கள் பற்றி, பார்வையாளர்களான மக்களுக்கு வியாக்கியானம் கொடுக்க முனைகின்றனர். ஒவ்வொரு ஐந்து வருடத்துக்கு ஒரு தடவையும் இது நடப்பதுதான்.

இந்த நிலைமையில்தான், அண்மையில் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளைச் சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “அரசமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 19ஆவது திருத்தம், இந்த நாட்டுக்குச் சாபக்கேடாகும். நாட்டில் ஸ்திரமற்ற நிலைமை ஏற்பட்டுள்ளமைக்கு, இதுவே காரணமாகும். அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்குள், அதனை இரத்துச் செய்வதே, நாட்டுக்கு நன்மை பயக்கும்” என்று தெரிவித்துள்ளார். அத்துடன், 18ஆவது திருத்தம் பற்றியும் கருத்தொன்றை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதியும் பிரதமரும் அவர்களோடு இருந்த அரசியல்வாதிகளுமே, 19ஆவது திருத்தம் வேண்டும் என்று சொன்னார்கள். நாம் ஆட்சிக்கு வந்தால், நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் விதத்திலான திருத்தமொன்றை, அரசமைப்பில் கொண்டுவருவோம் என்று வாக்குறுதியளித்து, மக்கள் ஆணையைக் கோரி நின்றனர்.

அதைவிடுத்து, குறிப்பிட்ட பிரிவு மக்களைத் தவிர, சாதாரண, கீழ் – நடுத்தரம், அடிமட்ட மக்களுக்கு 19உம் தெரியாது, 18உம் என்னவென்று தெரியாது.

19ஆவது திருத்தத்தைக் கொண்டு வரும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமே, நாம் வாக்களிப்போம் என்று, இலங்கையில் உள்ள எந்தச் சாதாரண மக்களும் ஒற்றைக்காலில் நிற்கவில்லை. ஆட்சி அதிகாரத்தை வேண்டி நின்றவர்கள்தான், 19ஆவது திருத்தம், இனவாத ஒழிப்பு, அரசமைப்பு மறுசீரமைப்பு, இனப் பிரச்சினைக்குத் தீர்வு போன்ற சுவையான பொருள்களைக் காட்டி, மக்களுக்கு ஆசையூட்டினீர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. இப்போது அவர்களே அதை விமர்சிக்கின்றார்கள் என்பதை என்னவென்று சொல்வது?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில், ஜனாதிபதி ஒருவர் மூன்றாவது தடவை ஜனாதிபதியாகப் போட்டியிடுவதற்குச் சட்ட ஏற்பாட்டை வழங்கும் 18ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது.

அப்போது அமைச்சராக இருந்து, அதற்குச் சார்பாக வாக்களித்த மைத்திரிபால சிறிசேனவே, 2015ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவை எதிர்த்துக் களமிறங்கியிருந்தார் என்பதை விட, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியால் பொது வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

ஒரு முற்போக்குத்தனமான, இனவாதத்துக்கு இடமளிக்காத அரசாங்கமாக இது அமையும் என்று மக்கள் நம்பினர். கூட்டு அல்லது தேசிய அரசாங்கம் என்பது, இலங்கை அரசியலில் பல முன்மாதிரியான அபூர்வங்களை நிகழ்த்திக் காட்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

ஆனால், கிட்டத்தட்ட ஐந்து வருட நிறைவை எட்டிக் கொண்டிருக்கின்ற நிலையிலும் கூட, மக்களின் குறிப்பாக முஸ்லிம், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை, இந்த அரசாங்கம் எள்ளளவும் நிறைவேற்றவில்லை என்றே சொல்ல வேண்டியிருக்கின்றது.

‘கூட்டாகச் சேர்ந்து கோழியும் மேய்க்கக்கூடாது’ என்று கிராமப் புறங்களில் சொல்வார்கள். தனிக் காட்டு ராஜாவாக, சர்வபலமும் கொண்ட ஒருவராக இருந்த மஹிந்தவாலேயே, சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்தும் ஸ்திரமான ஆட்சியைக் கொண்டு செல்ல முடியாதிருந்த போது, கூட்டாக ஆட்சி செய்யும் இன்றைய ஆட்சியாளர்களால், பெரிதாக எதையும் சாதிக்க முடியாது என்ற அனுமானங்கள் அப்போதே வெளியாகாமல் இல்லை; இன்று பெருமளவுக்கு அதுதான் நிதர்சனமாகி இருக்கின்றது.

இலங்கையில் நடைமுறையில் இருந்த நிறைவேற்று அதிகாரமானது, கட்டற்ற அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்கியிருந்தது. இது, தான்தோன்றித்தனமான சர்வாதிகாரத்தின் சாயல்களைக் கொண்ட அதிகாரங்களைக் கொடுத்திருந்தது. அன்றேல், தமக்குக் கிடைத்த அதிகாரங்களைப் பொதுவாக ஜனாதிபதிகள் அவ்விதமே பயன்படுத்தினர்.

எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலுப்பெறலாயிற்று. இதனைத்தான் 2015ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி சந்தைப்படுத்தியது எனலாம்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மூலம், சிறுபான்மை மக்களுக்கு, அதிலும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு நிறைய நல்ல விடயங்களைச் செய்திருக்க முடியும். ஆனால், விரல்விட்டு எண்ணக்கூடிய சமயங்களில் மாத்திரமே, நிறைவேற்றதிகாரம் முஸ்லிம்களுக்கு உதவியது; தமிழர்களுக்கும் இவ்வாறுதான். எனவேதான், இதை நீக்க வேண்டும் என்ற கருத்தியலைப் பரப்புவது இலகுவாக இருந்தது.

உண்மையில், நிறைவேற்று அதிகாரம் என்பது, சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஒரு கவசத்தைப் போன்றது. குறிப்பாக, முஸ்லிம்களுக்குச் சாதகமானது இந்த முறைமைதான் என்ற கருத்தும் உள்ளது. இக்கருத்தை, ஓரிரு முஸ்லிம் அரசியல்வாதிகள் அப்போதே கூறினார்கள்.

மேலோட்டமாகக் நோக்கினால், முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினை, நெருக்கடி வருகின்ற போது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி நினைத்தால், மற்ற எல்லாத் தரப்பையும் கணக்கிலெடுக்காமல், முஸ்லிம்களுக்குச் சாதகமான ஒரு நடவடிக்கையை எடுக்க முடியும்.

நாடாளுமன்றத்தின் பெரும்பான்மைக்கான, அங்கிகாரத்துக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை. (ஆனால், துரதிர்ஷ்டவசமாக நிறைவேற்றதிகாரம், அந்த அளவுக்கு, முஸ்லிம்களுக்குச் சார்பாகப் பயன்படுத்தப்படவில்லை என்பது வேறுகதை).

இலங்கையில் முஸ்லிம்கள், இரண்டாவது சிறுபான்மையினராக வாழ்கின்ற காரணத்தால், நிஜத்தில் நாடாளுமன்றப் பெரும்பான்மை என்பது, சிங்கள சமூகத்தின் பக்கமே இருக்கும். இப்படியான சூழலில், நிறைவேற்றதிகாரம் நீக்கப்பட்டால், நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்க வேண்டும். அவ்வாறான ஓர் இக்காட்டான நிலையில், அதிகாரமுள்ள சிங்கள அரசியல்வாதிகள், முஸ்லிம்களுக்குச் சார்பாக நிற்க மாட்டார்கள். ஆனால், நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஒருவர் பதவியில் இருந்தால், அவர் மனம் இரங்கினால், அவ்விடயத்தில் தற்றுணிபுள்ள தீர்மானங்களை எடுக்கலாம். எனவேதான், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையே, முஸ்லிம்களுக்கு அவசியம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

எது எவ்வாறிருப்பினும், மஹிந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் ஏற்பட்ட ஒருவகையான வெறுப்பும், அதிகாரங்களைப் பகிர்வது பற்றிய கருத்தியலின் பெருக்கமும் நிறைவேற்றதிகாரத்தை நீக்குவதான தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு இசைவான மனநிலைக்குச் சிறுபான்மையினரை தள்ளியிருந்தது எனலாம்.

இந்தப் பின்னணியில், 19ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்ட போது, ஐக்கிய தேசியக் கட்சி, அதை ஒரு பெரிய சாதனைபோல, தலையில் வைத்துக் கொண்டாடிய சமகாலத்தில், இன்று இத்தனை விமர்சனங்களை முன்வைக்கின்ற ஜனாதிபதி கூட, “19ஆவது திருத்தம் வேண்டாம்” என்று நேரிடையாகச் சொல்லியதாக ஞாபகமில்லை.

மாறாக, மைத்திரி தரப்புக்கூட, அவரை ஒரு முன்மாதிரியான ஜனாதிபதியாகவே காட்ட முயற்சித்தது. அது உண்மையும்தான். ஏனெனில், அதிகாரத்தில் இருக்கும் போதே, தனது அதிகாரத்தைக் குறைப்பதற்கு முன்வருவது என்பது சாதாரண விடயம் அல்ல.

ஆனால், அதே ஜனாதிபதிதான் அண்மையில், 19ஆவது திருத்தம் நாட்டுக்கு ஒரு சாபக்கேடு என்ற கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு, தான் கூறுவதற்கான காரணங்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விவரித்துள்ளார்.

எனவே, 19இனை ஆதரித்தவரே இன்று அதனை நீக்க வேண்டும் என்று கூறுகின்றார் என்றால், அதிகாரம் பகிரப்பட்டமையால், ஏதோ ஓர் அடிப்படையில், அவர் கையறுநிலைக்கு ஆளாகி இருக்க வேண்டும். அல்லது, அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக, அவர் அவ்வாறு கூறலாம் எனக் கருத இடமுள்ளது.

ஆனால், ஜனாதிபதியே 19இல் பிழை காண்கின்றார் என்றால், 19இனை ஆதரிக்க வைக்கப்பட்ட மக்கள், எவ்வாறான மனோநிலைக்கு ஆட்படுவார்கள் என்ற கேள்வி எழுகின்றது.

ஜனாதிபதி சொல்வது போல, 19ஆவது திருத்தம் சாபக்கேடாக இருக்கலாம்; அதை அவர் இப்போதே உணர்ந்தும் இருக்கலாம்; அதனடிப்படையில் அதைத் திருத்துவதற்கான முயற்சிகளும் சிலவேளைகளில் மேற்கொள்ளப்படலாம் என்று, ஒருபேச்சுக்கு வைத்துக் கொள்வோம்.

ஆனால், இந்த நாட்டின் பின்னடைவுக்கு அரசமைப்பின் 19ஆவது திருத்தம் மட்டுமே காரணமல்ல; அதேபோன்று, இந்த நாட்டில் இவ்வாறான திருத்தங்கள், சட்ட ஏற்பாடுகள் மாத்திரமே, சாபக்கேடுகள் என்று சொல்வதற்கும் இல்லை.
இலங்கை மக்கள், இன்று எதிர்நோக்கியுள்ள சாபக்கேடுகளின் பட்டியல், மிக நீளமானது.

அதிகாரத்தைக் கைப்பற்றும் போது, மைத்திரிபால சிறிசேனவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இருந்த ஒருமித்த அரசியல் நிலைப்பாடு, பின்னர் இல்லாமல் போனது சாபக்கேடாகும்.

இலங்கை அரசியல் நிலைவரம், இரு கட்சிகளின் அதிகார மோதலாகி, பின்னர் மஹிந்த தரப்பையும் உள்ளடக்கிய முக்கோண இழுபறியாக மாறியமை, ஒரு சாபக்கேடாகும்.

இனவாதத்தை வைத்து அரசியல் செய்கின்ற அரசியல்வாதிகள், இந்த நாட்டுக்குச் சாபக் கேடாகும்.

முஸ்லிம்களைக் குறிவைத்து, இனவெறுப்புப் பேச்சுகளைப் பேசும் துறவிகள், இனஐக்கியத்தின் சாபக்கேடாகும்.

சிறுபான்மையினர் மீது, இனவன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்ற போது, சட்டத்தை ஓரவஞ்சனையுடன் நடைமுறைப்படுத்துகின்ற பொறுப்பு வாய்ந்தவர்கள், நமக்குச் சாபக்கேடாகும்.

ஆளத் தெரியாத ஆட்சியாளர்களும் இன்னும் பட்டறியாத வாக்காளர்களும் நமது நாட்டின் சாபக்கேடன்றி வேறொன்றுமில்லை.

இந்தக் களநிலையைப் பயன்படுத்திக் கொண்டு, பலவிதமான ‘சஹ்ரான்கள்’ ஊடாக, உள்நாட்டில் கால்பதிக்கும் பயங்கரவாத, ஆதிக்க சக்திகள், ஒட்டுமொத்த இலங்கையருக்கும் சாபக்கேடாகும்.

நிதி மோசடிக் காரர்கள், அரசியல் கொந்தராத்துக் காரர்கள், ஆட்களைக் கடத்தி காணாமலாக்குவோர், படுகொலைகளை மேற்கொள்வோர், போதைப்பொருள் வியாபாரிகள், வெளிநாட்டுச் சக்திகளின் நிகழ்ச்சி நிரல்களுக்காகச் செயற்படும் அமைப்புகள், முக்கியஸ்தர்கள், ஓர் இனத்துக்கும் மதத்துக்கும் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமெனக் கருதுகின்ற தேசப்பற்றாளர்கள் எல்லாம், இலங்கைத் தேசத்தின் சாபக்கேடுகளன்றி வேறொன்றுமில்லை.

எனவே, அரசமைப்பைத் திருத்துவதோ, தற்போது இருக்கின்ற ஓரிரு திருத்தத்தை நீக்குவதோ, இந்த நாட்டின் சாபக்கேடுகளில் இருந்து, மக்கள் மீள்வதற்கு வழிவகுக்கப் போவதில்லை என்பதை, ஆட்சியாளர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மாறாக, மேற்சொன்ன எல்லாப் பரப்புகளிலும் வியாபித்துள்ள சாபக்கேடுகளில் இருந்து, விடுதலை பெற வேண்டுமாயின், பொறுப்புவாய்ந்த தரப்பினர் அனைவரும் தமது தவறுகளை உணர்ந்து, தம்மைத்தாமே திருத்த வேண்டும். அதேபோன்று, நாடகப் பாங்கான அரசியலையும் அரசியல் நாடகங்களையும் முடிவுக்கு கொண்டு வருவதும் நல்லது.

ஆட்டுவிக்கும் இனவாதம்

மனிதர்கள் மத்தியில் இன உணர்வுகள் வேறுபடும் அளவுகளில் இருக்கலாம். தன் இனத்தின் நலனை மற்ற இனங்களின் நலன்களுக்கு முரணானதாகக் காணவும் காட்டவும் முனையும் போதும் தன் இனத்தின் இயல்புகளை, இன்னோர் இனத்தினதும் மேலான ஒன்றாகக் காட்ட முனையும் போதும் இன உணர்வு இனவாதமாகிறது.

இது மற்ற இனங்கள் பற்றிய இழிவான மதிப்பீடு, கலாசார வேறுபாடுகளை, ஏற்ற தாழ்வுகளாகத் தரம் பிரித்தல், பிரச்சினைகளை இனமொன்றின் கண்ணோட்டத்தில் மட்டுமே தனிமைப்படுத்திக் காண முனைதல் போன்று, தன்னை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்திக் கொள்கிறது.

இன உணர்வு இனவாதமாகும்போது, முரண்பாடுகள் பகைமைத் தன்மை கொள்ள ஆரம்பிக்கின்றன. பகைமை உணர்வுகள் வளர்ந்து, எல்லை மீறப்படும்போது, இனவாதம் இன வெறியாகிறது.

இனவாதமும் இனவெறியும் தொற்று நோய்களைப் போல் பரவுகின்றன. ஓர் இனத்தின் இனவாதமும் இனவெறியும் மற்ற இனங்களிடையே இனவாதத்தையும் இனவெறியையும் தூண்டி வளர்த்து, அதன் மூலம் தம்மையும் வளர்த்துக் கொள்கின்றன.

இன உணர்வு இன்றைய சமுதாயத்தின் தனிமனிதனுக்கு, ஓர் ஆதாரமாகவே தோன்றினாலும், அது உண்மையில் அவனுடைய பலவீனம். அந்த இன உணர்வை, மனிதர்களை வேற்றுமைப்படுத்தவும் ஒடுக்கப்பட்டவர்களை ஒன்றுபடாமல் தடுக்கவும் பயன்படுத்துவதில் பிற்போக்குச் சக்திகள் மிகவும் கவனம் செலுத்தி வந்துள்ளன. அறியாமையும் தெளிவீனங்களும் இன உணர்வுகளை உக்கிரப்படுத்த உதவும் சாதனங்கள். இனவாதப் பொய்களையும் அரைகுறை உண்மைகளையும் நம்பிப் பழகிவிட்ட மனங்களுக்கு, உண்மை உடனடியாகப் புலனாகாது. அதற்காக நாம் சோர்ந்துவிட அவசியம் இல்லை. இனவாதச் சேற்றால் கலங்குண்ட மனங்களைத் தெளிய வைக்கும் கடமை நம்முன் உள்ளது. இன வாதத்தை ஒழிப்பது என்பது பல முனைப்போராட்டம். அதற்கு மற்ற இனத்தவரைப் புரிந்து கொள்ளவும் உள்ளபடியே மனிதர்களாக ஏற்றுக் கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

இலங்கை மக்கள் அனுபவிக்கின்ற சாபக்கேடுகளில், அரசியலை ஆட்டுவிக்கும் இனவாதமும், இனவாதத்தை மூலதனமாகக் கொண்ட அரசியலும் மிகப் பாரதூரமான சாபக்கேடுகளாகும்.

இன்று நவீன அநகாரிக தர்மபாலக்களும், பண்டாரநாயக்காக்களும், முஸ்லிம் அல்லாத சஹ்ரான்களும் பௌத்த காவலர்களாகவும் தேசப்பற்றாளர்களாகவும் போலி முகமூடிகளை அணிந்து கொண்டு வீதிக்கு வந்திருக்கின்றனர்.

முன்னதாக அளுத்கம, திகண கலவரங்களின் போது, பௌத்த துறவிகள் சிலர் எவ்வாறான வகிபாகத்தைக் கொண்டிருந்தார்கள் என்பது பட்டவர்த்தனமானது.

இந்நிலையில், முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவி விலக வேண்டும் என்று, ரத்தன தேரர் உண்ணாவிரதம் இருந்தமையால் ஏற்பட்ட விளைவுகளையும் தமிழர்களுக்கு நேசக்கரம் நீட்டுவதன் மூலம், முஸ்லிம்களை அடக்க நினைக்கின்ற துறவிகளின் செயற்பாடுகளால் ஏற்பட்ட நிலைவரங்களையும் மறந்து விடவில்லை.

இப்படியிருக்க, நாளை மறுதினம் 7ஆம் திகதியும் கண்டியில் ‘சிங்ஹலெ மகா சமுளுவ’ என்ற பெயரில், மாபெரும் கூட்டமொன்றை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களைப் போல, இந்தக் கூட்டத்தின் பின்தொடராகவும் கண்டியின் சுற்றயல் பகுதிகளில் அல்லது வேறெங்கும் முஸ்லிம்கள் குறைவாக வாழ்கின்ற பிரதேசங்களில் அட்டூழியங்கள் நிகழ்த்தப்படலாம் என்ற அச்சம் மேலெழுந்துள்ளது.
ஆனால், இந்த வினாடி வரையும், பௌத்த துறவிகள் ஒருசிலரின் கடும்போக்கான செயற்பாடுகளை, முக்கிய பௌத்த பீடங்கள் கண்டித்ததைக் காண முடியவில்லை.

அதேபோன்று, கடும்போக்குச் சக்திகள் மற்றும் இனத்துவேஷக் கருத்துகளைக் கூறும் துறவிகளுக்கு எதிராக, அரசாங்கமும் நடவடிக்கை எடுத்தமாதிரித் தெரியவில்லை.

முஸ்லிம்கள், ஓர் இனவெறுப்புக் கருத்துகளை வெளியிடும்போது, கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் சட்டம், மேற்சொன்ன கடும்போக்குத் துறவிகளின் உரைகளுக்கு எதிராக, நடவடிக்கை எடுப்பதற்குப் பின்வாங்குகின்றது. இவ்வாறு, பொறுப்பு வாய்ந்தவர்கள் பின்வாங்குகின்றமை, அவர்களுக்கு ஊக்கமருந்தாக அமைந்துள்ளது.

இதுதான், இன்று நாட்டைப் பீடித்துள்ள மிக மோசமான சாபக்கேடு என்பதை, விளங்கிக் கொள்ளாதவரை, இனநல்லிணக்கம் கனவாகவே இருக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + 9 =

*