;
Athirady Tamil News

அதிகாரத்தை கைப்பற்ற வியூகங்கள்!! (கட்டுரை)

0

ஜனாதிபதித் தேர்தலுக்கான காலம் நெருங்க நெருங்க பெருங்கட்சிகள் அதற்கான தந்திரோபாயங்களை வகுக்கத் தொடங்கியுள்ளன. இதன்படி ஐக்கிய தேசியக் கட்சி தன்னுடைய அடையாளத்தோடு நேரில் களத்தில் இறங்காமல் புதிய தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் இறங்குவதற்கு முயற்சிக்கிறது. இதைப் போலவே சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் கவர்ச்சிகரமான வேறொரு பெயரைத் தேடிக் கொண்டிருக்கிறது. இன்னொரு போட்டித்தரப்பான பொதுஜன பெரமுன பத்துக் கட்சிகளைச் சேர்த்து வைத்துக் கொண்டு புதிய அணியாகத் தன்னைத் தயார்படுத்த முனைகிறது.

இதற்கிடையில் கட்சித் தாவல்களுக்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எந்தப் பக்கத்தில் வெற்றிக்கான அடையாளங்கள் தெரிகிறதோ அதை நோக்கிய தாவல்கள் நிகழக் கூடும். இப்போது சு.கவிலிருந்து மூன்று முக்கிய உறுப்பினர்கள் புதிய தேசிய ஜனநாயக முன்னணியின் பக்கம் பாயவுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இதேவேளை 16கட்சிகள் தங்களுக்கு ஆதரவாக உள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகிறார். அத்தோடு தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் ஆதரவு தமக்கே கிடைக்கும் என்றும் கூறுகிறார் ராஜித சேனாரத்ன.

புதிய தேசிய ஜனநாயக முன்னணியில் 16கட்சிகள் என்றால் தங்களிடம் 26க்கு மேலிருக்கும் என்று சவால் விடுகிறார் முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுனவின் செல்வாக்கு மிக்க பிரதிநிதியுமாகிய மகிந்தானந்த அழுத்கமகே.

பொதுஜன பெரமுன கோத்தாபய ராஜபக்ஷவைக் களமிறக்கினால் தோல்வி நிச்சயம் என்று அடித்துச் சொல்கிறார் ராஜித சேனாரத்ன. இதற்கு அவர் சொல்லும் காரணம், கோத்தாபயவுக்கு சிறுபான்மைச் சமூகத்தினரின் வாக்குகள் கிடைக்காது என்பதேயாகும். ஆனால் அரசியலில் எதுவும் நடக்கலாம். ஐ.தே.க அரசாங்கத்தின் குறைபாடுகளும் அதிருப்திகளும் கோத்தபாயவுக்கு வாய்ப்பைக் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தேர்தல் அரசியலில் கொள்கை, கோட்பாடு என்பதற்கு அப்பால் அவ்வப்போதைய கள நிலைவரமும் முந்திய ஆட்சித்தரப்பின் மீதான கோபங்களுமே மக்களை வழிநடத்துவதுண்டு. இதனால்தான் பிரித்தானியாவில் பொரிஸ் ஜோன்கனும், அமெரிக்காவில் ட்ரம்பும், இந்தியாவில் மோடியும் வெல்லக் கூடியதாக இருந்தது. இவர்களைப் பற்றி உள்நாட்டிலும் வெளியுலகிலும் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் கொஞ்சமல்லவே.

ஆனாலும் இந்த நாடுகளில் இவர்கள் எப்படி வெற்றியடைந்தனர்? இவ்வாறான ஒரு அரசியற் போக்கு உலகளாவிய ரீதியில் வளர்ச்சியடைந்து வரும் நிலையில்தான் நாம் கோத்தாபயவின் அரசியலுக்கான ஆதரவுத் தளம் எவ்வாறானதாக அமையும் என்று பார்க்க வேண்டும். ஆனால், கோத்தாபய தேர்தலில் போட்டியிடுவரா இல்லையா என்பது இன்னும் உறுதியாகத் தெரிவிக்கப்படவில்லை.

ராஜபக்ஷக்கள் தேர்தலில் இறங்கினால் சு.கவும் பொதுஜன பெரமுனவும் பிளவுண்டு போகக் கூடிய வாய்ப்புண்டு என்பது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நம்பிக்கை.

ஐ.தே.கவில் சஜித்தை விட வேறு ஆட்கள் யாரையாவது களமிறக்கிப் பார்க்கட்டும் என சவால் விடுகிறார் நாமல் ராஜபக்ஷ.

சஜித் தன்னுடைய தந்தை பிரேமதாசவைப் போல நடந்து கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கிறார் மகிந்த ராஜபக்ஷ.

இப்படியே படு சுவாரஷ்யமாக ஆரம்பித்துள்ளது ஐ.தே.க, சு.க மற்றும் பொது ஜன பெரமுன என்ற முத்தரப்புகளுக்கிடையிலான விவகாரம்.

இது இப்படியிருக்க, நான்காவது தரப்பொன்றை இந்தச் சந்தர்ப்பத்தில் களமிறக்குவதற்கான முயற்சியில் வேறு அணிகள் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. ஜே.வி.பி உள்ளிட்ட ஏனைய பல சிறிய மற்றும் இடைநிலைக் கட்சிகள் இந்த முயற்சியில் இறங்கியிருக்கின்றன.

இவ்வாறு அரசியற் களம் மெல்ல மெல்லச் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மக்களின் மத்தியிலும் அரசியற் கட்சிகளின் மத்தியிலும் யார் வேட்பாளர்? யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற கணக்குப் பார்ப்புகள் ஆரம்பமாகியுள்ளது.

சரி, தெற்கிலே இப்படியான நிைலவரம் உள்ளது என்றால், வடக்குக் கிழக்கை மையப்படுத்திய தமிழ், முஸ்லிம் கட்சிகளும் மலையகத் தரப்புகளும் என்ன செய்யப் போகின்றன? யாரை ஆதரிக்கவுள்ளன? எந்தத் தரப்பில் நம்பிக்கை வைக்கவுள்ளன? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்தக் கேள்விகளுக்கான விடையைக் காண்பது இந்தத் தரப்புகளுக்கு மிகக் கடினம். ஏனெனில் எந்தத் தரப்புமே சிறுபான்மைத் தேசிய இனங்களின் நலனிலும் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டவையாகக் கடந்த காலத்தில் தம்மை நிரூபிக்கவில்லை. ஆகையினால் வெளிப்படையாகவும் உடனடியாகவும் இவரைத்தான் ஆதரிக்கப் போகிறோம் என்று சொல்வதற்கு இவற்றுக்கு இயலாது. இதனால்தான் தற்போது உருவாக்கப்படும் கூட்டணி பற்றியோ ஜனாதிபதி வேட்பாளர் பற்றியோ எதையுமே அறுதியிட்டுச் சொல்ல முடியாது என்று மனோ கணேசனும் ஹக்கீமும் அமைதி காக்கின்றனர்.

ஆனாலும் சிறுபான்மைத் தேசிய இனங்களைச் சேர்ந்த சில கட்சிகள் தமது ஆதரவைப் பெருங்கட்சிகளுக்கு வழங்கத்தான் போகின்றன. இதை இப்பொழுது வெளிப்படுத்தாமல் இவை இருந்தாலும் தேர்தல் அறிவிப்பு வரும்போது ஏதாவது சில காரணங்களைச் சொல்லித் தாங்கள் ஆதரிப்பதற்கு எடுத்த நிலைப்பாட்டினை நியாயப்படுத்தவே செய்யும்.

அப்படியென்றால் தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் நான்காவது தரப்பாகக் களமிறங்கவுள்ள தரப்புக்கு ஆதரவளிக்கலாமே என்று மக்கள் கேட்கலாம். மக்கள் இப்படிக் கேட்பதும் சிந்திப்பதும் வரவேற்கத்தக்கது. ஆனால், கட்சிகளின் நலன் சார்ந்த சிந்தனை முறையில் இதெல்லாம் வரவே வராது. அவை எப்படியாவது சாக்குப்போக்குகளைச் சொல்லி பெருங்கட்சிகளின் நிழலில் ஒட்டிக்கொள்ள – ஒதுங்கிக் கொள்ளத்தான் போகின்றன.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் நான்கு கட்சிகள் போட்டியிடுவது நடைமுறைச் சாத்தியமற்றது. தேர்தல் விதிமுறைப்படி (தேர்தல் சட்டத்தின்) இரண்டு கட்சிகளுக்கிடையிலான போட்டியே சாத்தியமானது. அப்படியென்றால்தான் 51வீதத்துக்கு அதிகமான வாக்குகளை வெற்றி பெறக் கூடியவர் பெற முடியும். அதாவது வெற்றி பெற வேண்டியவர் 51வீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறைக்கு ஏற்புடையதாகும். இரண்டு மேலான போட்டியாளர்கள் வந்தால் வாக்குகள் பிரிந்து வீதத்தில் குறைவேற்படும். அது விதிமுறைக்கு மாறானதாக இருக்குமே என்று சிலர் கேட்கின்றனர்.

ஆனால், இதைப்பற்றித் தேர்தல் விதிமுறை விரிவாக குறிப்பிட்டுள்ளது என்பதை விளக்குகிறார் ஆய்வாளர் வை.எல். எஸ். ஹமீட். அவர் குறிப்பிடுவதன்படி, “இந்த விடயம் அரசியலமைப்புச் சட்டம் சரத்து 94இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்பிரகாரம், இரண்டு வேட்பாளர்கள் மட்டும் போட்டியிடும்போது நாம் அதில் ஒருவருக்கு மட்டும் வாக்களிப்போம். இருவருக்கும் வாக்களித்தால் அது செல்லுபடியாது.

அந்த இருவரில் 50வீதத்துக்கும் மேல் பெற்றவர் வெற்றியடைவார்.

இருவர் போட்டியிடும் போது இரண்டு சாத்தியப்பாடுகளே உண்டு. ஒன்று இருவரும் 50வீதத்தைப் பெறுவது…அவ்வாறு பெற்றால் திருவுளச்சீட்டுக் குலுக்கப்பட்டு ஒருவர் தேர்வு செய்யப்படுவார்.

அடுத்தது யாரோ ஒருவர் 50வீதத்துக்கு மேல் பெறுவார். அவர் வெற்றியடைவார். இதுவே இதுவரையான நடைமுறை. மூன்றாவது சாத்தியம் இல்லை என்றிருந்தது. இதை வைத்தே எல்லோரும் ஐம்பது வீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற வேண்டும் என்கிறார்கள்.

இதுவரையில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் இறுதியில் பிரதான போட்டியாளர்களில் ஒருவருக்கே ஆதரவைத் தெரிவிப்பார்கள். ஏனையவர்கள் நெருக்கடியான போட்டியை உருவாக்கும் நிலைக்குரிய வாக்குகளைப் பெறுவதில்லை. எனவே யதார்த்தத்தில் இருமுனைப் போட்டியே இதுவரை நிலவியது. இந்த நிலையிற்தான் 50வீதத்திற்கு மேல் ஒருவர் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்படுவது.

மூவர் சமனிலையைக் கொள்ளும் போட்டியாளரெனில் அல்லது பலமான போட்டியாளர்கள் என்றால், சிலவேளை ஒருவர் 50வீத வாக்குகளைப் பெறுவதற்கு வாய்ப்பில்லாமல் போகலாம். அதேநேரம் மூவர் போட்டியிடும் போது ஒருவர் இரு வாக்குகளை அளிக்கலாம். யாரும் 50வீதம் பெறாத போது இரண்டாவது வாக்கு எண்ணப்படும். இரண்டு வாக்குகளை அளிக்கும் போது முதலாவது வாக்கை 1என்றும் இரண்டாவது வாக்கை 2என்றும் குறிப்பிடலாம்.

உதாரணமாக A,B,C என்ற மூன்று சற்றுப் பலமான வேட்பாளர்கள் போட்டியிட்டு, அவர்கள் பெற்ற வாக்குகள் கீழ்வருமாறு அமைந்தால்…

A – 45%

B – 40%

C – 15%

முதலாவதாக C போட்டியிலிருந்து நீக்கப்படுவார். முதலாவது மற்றும் இரண்டாவது வாக்குகளைப் பெற்ற A யும் B யும் போட்டியில் தொடர்ந்தும் இருப்பர்.

இப்பொழுது போட்டியிலிருந்து நீக்கப்பட்ட C யின் வாக்குச் சீட்டுகள் மறுபடியும் எடுக்கப்பட்டு அவற்றில் A அல்லது B இற்கு யாராவது தமது வாக்கை அளித்திருக்கின்றனரா எனப் பார்க்கப்பட்டு, அவ்வாறு உரியவரான A அல்லது B யின் வாக்குகளுடன் கூட்டப்படும்.

அதன் பின்னர் அவ்விருவருள் யாருடைய வாக்குகள் அதிகமோ அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அவருடைய வாக்குகள் 50%ஐத் தாண்ட வேண்டுமென்ற கட்டாயமில்லை.உதாரணமாக இரண்டாவது வாக்குகளையும் கூட்டியதன் பிறகு A யின் மொத்த வாக்குகள் 47%, B யின் வாக்குகள் 45%என்றால் A வெற்றி பெற்றவராவார்.

சிலவேளை B யின் வாக்குகள் 48%மானால் B யே வெற்றி பெற்றவராவார்.

இங்கே கவனிக்க வேண்டியது, முதலாவது வாக்கில் A அதிகம் பெற்ற போதும் இரண்டாவது வாக்கைக் கூட்டும் போது B யினுடைய வாக்கு அதிகரித்தால் அவர் தெரிவு செய்யப்படுவார் என்பதை ஆகும்.

மூன்றுக்கு மேற்பட்ட பலமான வேட்பாளர்கள் களத்திலிருந்தால் A,B,C,D ஆகிய வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இப்பொழுது ஒருவருக்கு மூன்று வாக்குகள் இருக்கின்றன. மூன்று பேருக்கு மேல் எத்தனை பேர் போட்டியிட்டாலும் ஒருவருக்கு ஆகக் கூடியது மூன்று வாக்குகள்தான் உண்டு என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இப்பொழுது A 40%, B35%, C10%, D5%எனக் கொள்வோம்.

இப்படி அமைந்தால் C யும் D யும் போட்டியிலிருந்து நீக்கப்படுவார்கள். அதன்பின்னர் C,D ஆகியோரின் வாக்குச் சீட்டுகளில் A,B ஆகியோருக்கு இரண்டாவது வாக்குகள் இருந்தால் அவை கூட்டப்படும்.

அதன் பின்னர் இவர்களுக்கு இரண்டாவது வாக்கை அளித்தவர்கள் யாராவது மூன்றாவது வாக்கை அளித்திருக்கிறார்களா என்று பார்க்கப்படும். உதாரணமாக D யிற்கு முதலாவது வாக்கை அளித்த ஒருவர் தனது இரண்டாவது வாக்கை C இற்கும் மூன்றாவது வாக்கை A யிற்கும் அளித்திருக்கலாம்.

இப்பொழுது C இற்கு அளித்த இரண்டாவது வாக்கு கணக்கில் கொள்ளப்படாது. ஏனெனில் C இப்பொழுது போட்டியில் இல்லை. எனவே அவர் A அல்லது B யிற்கு மூன்றாவது வாக்கை அளித்திருக்கிறாரா என்று பார்க்கப்படும்.

சிலவேளை இந்த D இற்கு அல்லது C இற்கு தனது முதலாவது வாக்கை அளித்த ஒருவர் தனது இரண்டாவது வாக்கை A இற்கும் மூன்றாவது வாக்கை B இற்கும் அளிக்கிறார் எனக் கொள்வோம். இவரது இரண்டாவது வாக்குத்தான் கணக்கில் கொள்ளப்படும். மூன்றாவது வாக்கு கணக்கிற் கொள்ளப்படாது.

இப்பொழுது A யும் B யும் பெற்ற இரண்டாம் மூன்றாம் வாக்குகள் கூட்டப்பட்டு அதிகூடிய வாக்கைப் பெற்றவர் வெற்றி பெற்றவராக பிரகடனப்படுத்தப்படுவார். அவர் 50%ஐத் தாண்ட வேண்டுமென்றில்லை.

எனவே புரிந்து கொள்ள வேண்டியவை…

முதலாவது கணக்கெடுப்பில் ஒருவர் 50%ஐத்தாண்டிவிட்டால் அவர்தான் வெற்றியாளர்.

அவ்வாறு யாரும் 50%ஐத் தாண்டாவிட்டால் போட்டியில் இருந்து வெளியேறியவர்களின் வாக்காளர்களின் A அல்லது B இற்கு அளிக்கப்பட்ட இரண்டாம் மூன்றாம் வாக்குகள் கூட்டப்படும். அவ்வாறு கூட்டப்படும் போது 50%என்கின்ற ஒரு விடயம் இல்லை.

இரண்டாம் மூன்றாம் வாக்குகள் கட்டாயமாக அளிக்கப்பட வேண்டுமென்பதில்லை. சிலவேளை ஒருவரும் இரண்டாம் மூன்றாம் வாக்குகளைப் பாவிக்கவில்லை; என்றால் முதலாவது வாக்கில் கூடுதலாகப் பெற்றவர் வெற்றி பெறுவார். 50%ஐத் தாண்ட வேண்டுமென்பதில்லை.

இருவரும் சமமான வாக்குகள் பெற்றால் திருவுளச்சீட்டு குலுக்கப்படும்.

ஆகவே இத்தகையதொரு சூழலில்தான் இப்போழுது ஜனாதிபதித் தேர்தலை நாடு எதிர்கொள்ளவுள்ளது. இதற்கிடையில் ஏராளமான காட்சிகளை நாம் காணலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − 2 =

*