;
Athirady Tamil News

தமிழ்ச் சமூகம் யாரை ஆதரிப்பது? (கட்டுரை)

0

இந்தக் கேள்வியே இப்பொழுது பலரிடத்திலும் உள்ளது. ஏனென்றால் நிறுத்தப்படும் வேட்பாளர்களும் சரி, அவர்களை முன்னிறுத்தும் ஐ.தே.க, சிறிலங்கா சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுன மற்றும் ஜே.வி.பி போன்ற கட்சிகளும் சரி சிறுபான்மையினச் சமூகத்தின் மீதும் அவற்றின் உரிமைகளின் மீதும் அக்கறை கொண்டதாக இல்லை. ஆகவேதான் யாரை ஆதரிப்பது? எந்த அடிப்படையில் ஆதரிப்பது? எந்த உத்தரவாதத்தின்படி ஆதரிப்பது? என்ற கேள்விகள் பலமாக எழுந்துள்ளன.

“சிறுபான்மையினச் சமூகங்கள் – குறிப்பாகத் தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதே நல்லது” என யாழ் நகரத்தில் உள்ள “படிப்பகம்” புத்தக மையத்தில் நடந்த கலந்துரையாடலின்போது முன்பு விடுதலை இயக்கமொன்றில் போராளியாகச் செயற்பட்ட ஒருவர் கருத்துரைத்திருந்தார்.

“கடந்த கால அனுபவங்களையும் நிகழ்கால அவதானங்களையும் வைத்துப் பார்க்கும்போது நம்பிக்கையைத் தரக்கூடிய அளவுக்கு முன்மொழியப்படும் வேட்பாளர்களுமில்லை. வேட்பாளர்களை முன்னிறுத்தும் கட்சிகளுமில்லை. இப்படியான சூழலில் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையின் பின்னெழுந்து யாரோ ஒருவரைத் தெரிவு செய்யலாம் என்று இயலாமைப்பட்டிருப்பதை விட எவரையுமே தெரிவு செய்யாமல் விடுவது சிறப்பு. அதன்வழியாக எங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தலாம். நம்பிக்கையீனத்தைச் சொல்லலாம். சர்வதேச சமூகத்துக்கு எங்களுடைய நியாயத்தையும் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்துவதற்கு இந்தத் தேர்தல் புறக்கணிப்பு பொருத்தமாக இருக்கும்” என்றார் மேலும் அவர்.

ஏறக்குறைய இத்தகைய நிலைப்பாட்டை ஒத்ததாகத் தமிழர்களில் ஒருசாரார் உள்ளனர் என்பது உண்மை. ஆனால் இது எந்தளவுக்குச் சரியானது? முன்னரும் பல சந்தர்ப்பங்களில் இந்த மாதிரித் தேர்தற் பகிஸ்கரிப்புகளில் தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர். அவை உண்டாக்கிய அரசியல் பெறுமானங்கள் என்ன? அவற்றினால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? இத்தகைய புறக்கணிப்பு அல்லது பகிஸ்கரிப்பை சர்வதேச சமூகம் எப்படி நோக்கும்? என்பதையெல்லாம் இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் மதிப்பிட வேண்டும்.

என்னதான் நெருக்கடிகள் இருந்தாலும் அரசியல் தீர்மானங்களை எழுந்தமானமாகவும் ஒற்றைப்படையாகவும் உணர்ச்சிகரமாகவும் எடுப்பது நல்லதல்ல. அப்படி எடுக்கப்படும் தீர்மானங்கள் பின்னர் நீண்ட காலப்பாதிப்பை ஏற்படுத்தி விடுவதுண்டு. அப்படியான பாதிப்பை நாம் கடந்த காலத்தில் பெற்றுமிருக்கிறோம்.

ஆனால் சிறுபான்மையினச் சமூகத்தினரிடத்திலே இத்தகைய நிராகரிப்பு உணர்வெழுவதற்கான வலுவான காரணங்கள் உள்ளன என்பதையும் நாம் மறுக்கவில்லை. அதன் நியாயங்களும் மறுக்கப்பட முடியாதவை. இருந்தாலும் தேர்தல் என்ற அரசியல் நடவடிக்கையை நாம் எதிர்கொண்டே ஆக வேண்டும். அது ஜனநாயக வழியிலான பங்கேற்புக்கு அடிப்படையானது என்பதால். புறக்கணிப்பு என்பது நம்மைத் தனிமைப்படுத்தும். களத்திலிருந்து நாமாகவே வெளியேறுவதாக அமையும். பங்கேற்புக்கு இடமற்றுப்போகும்.

எனவே, என்னதான் நம்பிக்கையீனங்கள், ஏற்கமுடியாமைகள் முன்னெழுந்தாலும் அவற்றைக் கடந்து நாம் தேர்தலில் பங்கேற்றே ஆக வேண்டும். நமக்கு விருப்பமில்லாத வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டாலும் அவர்களை எதிர்கொண்டே தீர வேண்டும். ஏறக்குறைய இது ஒரு நெருக்கடி நிலையே.

அரசியலில் எப்போதும் இனிய சந்தர்ப்பங்களே அமையும் என்று எதிர்பார்க்க முடியாது. மகாத்மாக்களும் புனிதர்களும்தான் போட்டியாளர்களாகவும் தலைவர்களாவும் நமக்கு முன்னேயிருப்பார்கள் என்றில்லை. கண்ணியமான அரசியல் நடத்தைகளே நிகழ்ந்தேறும் என்பதற்கும் எந்த உத்தரவாதங்களுமில்லை. நமக்கு உவப்பானவர்களே தேர்தற் களத்தில் நிற்பார்கள் என்றும் சொல்ல முடியாது. யதார்த்தத்தில் எப்போதும் எதிர்நிலைச் சக்திகளே நமக்கு முன்னே எழுந்து நிற்கின்றன. ஆகவே தவிர்க்க முடியாமல் நாம் அவற்றை எதிர்கொண்டே தீர வேண்டியிருக்கிறது. ஆக நமது திறனெல்லாம் அவற்றை எப்படிக் கையாளப்போகிறோம் என்பதிலேயே உள்ளது.

இராஜதந்திரமாக, மதிநுட்பமாக, தந்திரோபாயமாக, சாணக்கியமாக, ஆளுமையாக, ஆற்றலைக் கொண்டதாக என.

இந்தப் புரிதலோடு நாம் செயற்பட முன்வந்தால் எந்தப் பெரிய எதிர்நிலைச் சக்தியையும் நாம் நமக்குச் சாதகமாகக் கையாள முடியும். காட்டில் முயலையும் சிறு விலங்குகளையும் மட்டும்தான் நாம் வேட்டையாட முடியும் என்றில்லை. நம்மை விட வலுக்கூடிய, அபாயங்களை உண்டாக்கக் கூடிய விலங்குகளைக் கூட மனிதர்கள் வேட்டையாடலாம். கடலிலும் அப்படித்தான். அப்படி வேட்டையாடித்தான் மனித சமூகம் செயற்பட்டு வந்திருக்கிறது. இங்கே தேவைப்படுவது அவற்றுக்கான உபாயங்களேயாகும்.

தற்போது நமக்கு முன் வரவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் நாம் எவரையும், எந்தச் சக்தியையும் எந்தக் கட்சியையும் எதிர்கொள்ள முடியும். அதற்கான தந்திரோபாயங்களின் அடிப்படையில். அதற்கான தெளிவோடு. அதற்கான புரிதல்களோடு. அது சஜித் பிரேமதாசவாக இருந்தாலென்ன? கோத்தாபாய ராஜபக்ஸவாக இருந்தாலென்ன? அல்லது வேறு எந்தப் பேயோ பிசாசாகவோ இருந்தாலென்ன?

எளிய விசயம், எந்த அடிப்படையில் இந்த விடயத்தைக் கையாளப்போகிறோம் என்பதாகும்.

தமிழ் மக்கள் அல்லது தமிழ்பேசும் சிறுபான்மையினச் சமூகத்தினர் தங்களுடைய பிரச்சினைகளின் அல்லது விடயங்களின் அடிப்படையில் (Issue Based) தமது நிலைப்பாட்டை முன்னிறுத்தி ஆதரவை வழங்க முடியும். இந்த விடயங்களின் அடிப்படையிலான (Issue Based) ஆதரவை நாம் இரண்டாக வகுத்துக் கொள்ளலாம். ஒன்று உடனடியான, அவசரகதியில் மேற்கொள்ள வேண்டிய வேலைகள். இரண்டாவது, கால எல்லையின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள். இதை மையப்படுத்தி எமது நிபந்தனையை விதிக்கலாம். இதற்கான உத்தரவாதத்தைக் கோரலாம். இந்த உத்தரவாதம் தேர்தலுக்குப் பிறகு, அதிகாரத்தில் ஏறிய பிறகு கைவிடப்படலாம் என்றால், தரப்படும் உத்தரவாதத்துக்கே உத்தரவாதம் கோர முடியும். அதெப்படி, உத்தரவாதத்துக்கு உத்தரவாதத்தைப் பெறுவது? என்று நீங்கள் கேட்கக் கூடும்.

தற்போதைய அரசியல் சாசனத்தின்படியும் அரசியல் யதார்த்தத்தின்படியும் இதற்கான வழிகளும் அடிப்படைகளும் தாராளமாகவே உள்ளன. எப்படியென்றால், எந்த வேட்பாளரும் ஜனாதிபதித் தேர்தலில் மட்டும் வெற்றிபெற்றால் போதாது. வெற்றிபெறும் ஜனாதிபதியானவர் நிம்மதியாகவும் நிறைவாகவும் அதிகாரத்தைக் கையாள வேண்டுமென்றால், ஆட்சி பரிபாலனத்தை இழுபறிகளில்லாமல் மேற்கொள்ள வேண்டுமென்றால் அவருக்கு இசைவான – சார்பான பாராளுமன்றம் அமைய வேண்டும். இல்லையென்றால் தற்போதைய மைத்திரி – ரணில் இழுபறி போலவே தொடர்ந்துமிருக்கும்.

ஆகவே பாராளுமன்றத் தேர்தலின் வெற்றியும் இதனோடு இணைந்தே உள்ளது. இந்த நல்வாய்ப்பை நாம் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்தவர் ஆதரவைப் பெற்றுக்கொண்டு கல்தா காட்டினால் பாராளுமன்றத் தேர்தலில் அவருக்கு அல்லது அவர் சார்பானவர்களுக்கு நாம் நெருக்கடியை ஏற்படுத்தலாம். கல்தா காட்டலாம். இப்படி ஏராளம் வழிமுறைகள் நமக்குண்டு. வாய்ப்புகள் இருக்கின்றன. இதை நோக்கியே நாம் சிந்திக்க வேண்டும்.

எதற்குள்ளும் காணப்படும் இடைவெளிகளைத் தேடுவதே நமது பலத்தைக் கண்டடைவதற்கான வழி. எதையும் எதிர்மறையாகப் பார்க்க விழைந்தால் அது பலவீனமாகவே இருக்கும்.

சரி, இதெல்லாம் இருக்கட்டும். இப்பொழுது முதலில் நடக்கப்போவது ஜனாதிபதித் தேர்தலா மாகாணசபைத் தேர்தலா என்ற கேள்வியை எழுப்பி விட்டிருக்கிறார் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய. அவர் இப்படியொரு கேள்வியை எழுப்பியதில் தவறும் இல்லை என்றே படுகிறது.

ஏனென்றால் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்றே தெரியாத நிலையில் கட்சிகளும் நாடும் இருக்கும்போது அவர்தான் என்ன செய்வார்? வேட்பாளரையே தெரிவு செய்ய முடியாதிருக்கும் போது எப்படி ஜனாதிபதியைத் தெரிவு செய்வது?.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 7 =

*