;
Athirady Tamil News

லயன்கள் அடிக்கடி தீப்பிடிப்பது ஏன்? சதியா.. மதியின்மையா.. !! (கட்டுரை)

0

மலையகத்தில் திடீர் திடீரென்று திடுக்கிடச் செய்யும் அனர்த்தங்கள் இரண்டு அடிக்கடி இடம்பெறுவதுண்டு. ஒன்று இயற்கை நியதி. அடுத்தது செயற்கையின் சதி. முன்னையது மண்சரிவு அபாயம். பின்னையது தீயினால் நிகழும் அநியாயம்.

இந்திய வம்சாவளித் தமிழர்கள் இங்கு அழைத்து வரப்பட்டபோது இவர்களுக்கு இருப்பிடங்களாக ஆரம்பத்தில் தற்காலிக குடிசைகளே அமைக்கப்பட்டன. குதிரைத் தொழுவங்களிலும் குடியேற்றங்கள் நிகழ்ந்தன. பின்னர் இதனை ஒட்டியே லயவரிசைக் காம்பிராக்கள் உருவாக்கம் பெற்றன. அவ்வப்போது இந்த லயங்கள் பழுதுபார்க்கப்பட்டன. கூரைகள் திருத்தப்பட்டு கூரைத் தகடுகள் மாற்றப்பட்டன. மலைப் பிரதேசங்கள் என்பதால் எந்நேரமும் காற்றின் தாக்கம் எதிர்நோக்க வேண்டி வந்தது.

எனினும் கால நீடிப்பு காரணமாக இந்த லயக்காம்பிராக்கள் சிதிலமடைய ஆரம்பித்தன. கூரைகள் இற்றுப்போயின. காற்றின் வீச்சிலிருந்து கூரையைப் பாதுகாக்க மரக்குற்றிகள் ஏற்றப்பட வேண்டி இருந்தது. பாவித்த டயர்களும் கூரைமேல் குந்தின. தொழிலாளர்கள் இருட்டிய பிறகே வேலை முடிந்து திரும்பியதால் வெந்நீர் வைத்தே குளித்தாக வேண்டியிருந்தது. இதற்காக அண்டாக்கள் அரை பெரல்கள் பயன்படுத்தப்பட்டன. கவ்வாத்துக் காலங்களில் தேயிலை மிலாறுகளை சேமித்து வைத்து வெந்நீர் வைப்பதற்காக வீட்டு வாசலிலோ லயத்துக்குப் பின்னாலோ அடுப்புகள் வைத்துக் கொளுத்தோ கொளுத்து என்று கொளுத்துவார்கள்.

இஸ்தோப்பில், நடுக்காம்பிராவில், குசினியிலும் என குப்பிலாம்புகள் கார்பனீரொக்சைட்டைக் கக்கிக்கொண்டிருக்கும். இட நெருக்கடியால் வீடு முழுவதும் தாறுமாறாக தட்டுமுட்டுச் சாமான்கள். மரத்தடிகளாலும் படங்கு சாக்கினாலும் தற்காலிக மறைப்புகள். அடுப்புக்கு நேராக அட்டல். அது தாங்கும் அளவுக்கு விறகுகள். அப்பொழுதும் காற்று வீசவே செய்தது. ஆனால் லயம் பற்றியெரிந்து பாழாய்ப்போன சங்கதிகள் கேட்பது அபூர்வம்.

லாந்தர்கள், சிம்னி விளக்குள், பெட்ரோல் மெக்ஸ் லைட்டுக்கள் என்று சிலர் பாவிக்கவும் ஆரம்பித்தார்கள். இப்படி தீக்கான பயன்பாடு பல்வேறு வடிவங்களில் வரலாற்றோடு வலம் வந்தது. அப்பொழுதெல்லாம் ஆர்த்தெழுந்த அந்தத் தீச்சுடர் பட்டதையெல்லாம் பதம் பார்த்தது இல்லை. மண்சரிவு இயற்கையின் விதி இதைத் தவிர்ப்பதற்கு இடம் பெயர்வது ஒன்றுதான் மாற்றுவழி. ஆனால் தீ அனர்த்ததுக்கு மாற்றிடம் போகமுடியாது.

அப்படியானால் பெருந்தோட்டப் பிரதேசங்களில் தீயின் திருவிளையாடல்கள் தீராத் தொல்லையாகி வருவதற்கு திட்டமிட்ட சதியேதும் இருக்கிறதா? என்ற சந்தேகம் எழத்தானே செய்யும்? பல தோட்டங்களில் அடிக்கடி பற்றி எரியும் தீ, லயங்களை பொசுக்கி வருகின்றன. 2019ஜனவரி மாதத்தில் டிக்கோயா போடைஸ் தோட்டத்து லயம் ஒன்று எரிந்துபோனது. குடியிருப்புகள் முற்றாக கரிக்காடானது. பாடுபட்டு சேர்த்து வைத்த பயன்பொருட்கள் சேதமடைந்தன. அதே ஜனவரியில் பொகவந்தலாவை ரொப்கில் தோட்டம் வானக்காட்டுப் பிரிவு லயம் எரிந்தது. இதில் 14குடும்பங்களைச் சேர்ந்த 42பேர் நடுத்தெருவுக்கு வந்தனர்.

தலவாக்கலை கூம்வூட் தோட்டம், டிக்கோயா வனராஜா தோட்டம், பூண்டுலோயா கைப்புக்கலை தோட்டம், கொத்மலை ரம்பொட தோட்டம், கலஹா தெல்தோட்டை தோட்டம் என்று தீ தீராக்கோபங்கொண்டு கொழுந்து விட்டு எரிய லயக்காம்பிராக்கள் கருங்கோலம் கொண்டன. உடைமை இழப்புகள் உளவியல் ரீதியிலான பாதிப்புகள் செய்திகளாயின.

கடந்த மே மாதம் இப்படியொரு இழப்பு தலவாக்கலை ஹொலிரூட் தோட்ட லயமொன்றுக்கும் எற்பட்டது. 24வீடுகளைக் கொண்ட லயவரிசை தீக்கு இரையாகியது. 100பேர்வரை ஏதிலிகளாயினர். கடந்த வாரம் டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திரிகாமம் தோட்டத்தில் இரவு 9மணியாளவில் பற்றிய தீயால் பதறிய குடும்பங்கள் 09. அங்கத்தினர் தொகை 49. சில வீடுகள் முற்றாக தீயினால் விழுங்கப்பட்டும் சில வீடுகள் பாதியும் மீதியுமாக காணப்படுவதாக ஊடகங்கள் உறுதிப்படுத்துகின்றன. இப்படியான தீ அனர்த்தங்களால் வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தளபாடங்கள் என்று எற்படும் இழப்பு அநேகம்.

இறுதியாக லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் காலை வேளையில் எற்பட்ட தீ விபத்தினால் ஒரு வீடு முற்றாக எரியுண்டு போயுள்ளது. அதிர்ஷ்டவசமாக இவ்வாறான தீ விபத்துகளினால் உயிரிழப்புகள் மட்டும் ஏற்படாமல் இருக்கின்றன. இவ்வாறான தீ விபத்துகள் பெருந்தோட்டப் பகுதிகளில் மட்டும் அடிக்கடி இடம்பெறுவதன் பின்னணிதான் என்ன?.

வரிசைக் குடியிருப்புகளால் ஒரு வீட்டில் பற்றும் தீப்பொறி பல காம்பிராக்களை பதம் பார்த்து விடுகின்றன என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இந்தக் காம்பிராக்களின் கூரைகள் பலமற்றுப் போய்விட்டன. சுவர்கள் சின்ன சலசலப்புக்கும் கழன்று விழும் நிலைமை. இடவசதி இன்மையால் நெருக்கடி. அதிகளவு அங்கத்தவர்கள் ஒரே வீட்டில் அடைபடும் அவலம். இது நீண்டகால வரலாற்று தகவல்கள்தான். ஆனால் அந்த நீண்டகாலம் இப்படி அடிக்கடி தீ விபத்தைக் கண்டதில்லை. பாதுகாப்பில்லாத குப்பி லாம்புகளுடன் குடும்பங்கள் மகிழ்ச்சியோடுதான் வாழ்ந்தன.

இப்பொழுது பல தோட்டங்களுக்கு மின்சார வசதி கிடைத்துள்ளது. இன்னும் பல தோட்டங்கள் மண்ணெண்ணெய் விளக்கை நம்பியே வாழ்கின்றன. ஆனால் அந்த இடங்களைவிட மின்சார வசதி வாய்க்கப்பெற்றுள்ள இடங்களில் தான் அதிகமாக தீ அனர்த்தங்கள் நிகழ்வதாக ஆய்வொன்று கூறுகின்றது. தரமற்ற மின்சார இணைப்பும் முறையற்ற வகையில் தமது தேவைக்கேற்ப எற்படுத்திக்கொள்ளும் தற்காலிக இணைப்புகளும் பாதுகாப்பாற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது என்பதே உண்மை.

தவிர பெருந்தோட்டப் பகுதிகளில் லயங்களுக்கு பொருத்தப்படும் பிரதான மின்சார வயர் தொடர்புகள் அபாயகரமாக கையாளப்படுவது கண்கூடு. கூரைகளைத் தொட்டுச் செல்லும் வகையில் குறைந்த உயரத்தில் இந்த இணைப்புகள் செல்கின்றன. தவிர குறுக்கு நெருக்குமாக ஊடறுத்துச் செல்லும் நிலையில் இந்த வயர் இணைப்புகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மின்சார ஒழுக்கினாலோ வேறு ஏதாவது எதிர்பாராத காரணத்தினாலோ சடுதியாக பற்றும் தீ வேகமாக பரவ வீட்டுக்குள் இருக்கும் அடர்த்தியான பொருட்கள் பெரிதும் உதவுகின்றன. இடவசதி இல்லாமையினாலேயே இந்த நெருக்கடி. இதனால் அவதானிகள் குறிப்பிடுவது போல முறையற்ற மின் இணைப்புகள், விறகு வைக்கும் கொட்டில்கள், விறகு காயவைக்கும் அட்டல்கள், தீ கட்டுக்கடங்காமல் படர உதவவே செய்கின்றன. தவிர தோட்டப்பிரதேசங்களுக்கான போக்குவரத்துப் பாதைகள் சீரற்றுக் காணப்படுவதால் தீயணைப்பு வாகனங்களின் பயன்பாட்டுக்கு வழி இல்லாமல் போகின்றது. அநேகமான தோட்ட லயங்களுக்கு வாகனங்கள் செல்ல பாதையே இல்லை என்பது கவனிப்புக்கு உரியது.

தீ அனர்த்தங்களைத் தவிர்க்க வேண்டுமானால் இந்த லய முறைமையிலான வீடுகள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். ஆனால் இது நீண்டகால வேலைத் திட்டம். அது அவசியமான தேவை என்றாலும் கூட முற்றாக நிறைவடைய காலம் எடுக்கும். அதுவரை இந்த லயத்து வாழ்க்கையை அநுபவிக்க வேண்டியது தவிர்க்கமுடியாததே. எனவே இந்த தீ விபத்துக்கான காரணங்களாக நாம் இரண்டு விடயங்களையிட்டு அவதானம் செலுத்துவதே இருக்கும் ஒரேவழி.

முறையற்ற மின் இணைப்புகளை அகற்றுவது இதில் முக்கியமானது. இலகுவில் தீப்பரவக்கூடிய வகையில் பாவனைப்பொருட்களை குவித்து வைப்பது கூடாது. பாவனையிலுள்ள போதும் மின்சாரம் தடைப்பட்டு மீள் வழங்கப்படும்போதும் (கூடிய மின் பாய்ச்சு ஏற்படலாம்) எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மின்சாரமே பெருந்தோட்டங்களில் பெரிய அபாயமாக மாறிவிடமால் கண்காணிப்பதில் மின்சார சபைக்கும் பொறுப்பு இருக்கவே செய்கின்றது. ஏனெனில் பெருந்தோட்ட மக்கள் பல்வேறு நிலைகளிலும் பாதிப்புக்குள்ளாகி இருப்பவர்கள் வாழ்விட வாழ்வாதார ரீதியில் பரிபாதாபத்துக்குரியவர்கள். பெரும்பாடுபட்டே இவர்கள் வீடுகளைப் புனரமைத்துக்கொண்டுள்ளார்கள். பொருட்களைக் கொள்வனவு செய்கிறார்கள். இதுவரை பெருந்தோட்டப் பகுதிகளில் இடம்பெற்ற தீ விபத்துக்களால் உடைமைகளுடன் மாணவர்களின் புத்தகங்கள், கல்விச் சான்றிதழ்கள், பணம், அடையாள அட்டைகளும் இழக்கப்படுவதால் அசெளகரியங்களுக்கு ஆளாக வேண்டியுள்ளது. எனவே பெருந்தோட்ட மக்கள் மின்சார பாவனை குறித்து எப்பொழுதும் நிதானமும் அவதானமும் கொண்டிருக்க வேண்டியது அவசியம். அல்லாவிடில் அடிக்கடி தீ அனர்த்தம் சம்பந்தமான அவலச் செய்திகள் வரவே செய்யும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − ten =

*