;
Athirady Tamil News

அநுர குமாரவுக்கான வாக்குகள் யாரைத் தோற்கடிக்கப் போகின்றன? (கட்டுரை)

0

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான “தேசிய மக்கள் சக்தி”யின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார திஸாநாயக்க அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, காலி முகத்திடல் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருக்க ஒரு நாயகனைப் போல, அநுர குமார மேடையேறினார். கிராமத்தில் பிறந்து, வளர்ந்து, அரசியலுக்கு வந்த ஒருவராகத் தன்னை அடையாளப்படுத்திப் பேசிய அவர், “புதிய பாதையைத் தெரிவு செய்வதற்கு நாட்டு மக்கள் முன்வர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில், மூன்றாவது அணி வேட்பாளர்களாக அடையாளப்படுத்தப்பட்ட நபர்கள் அவ்வப்போது போட்டியிட்டிருக்கிறார்கள். குறிப்பாக, ஜே.வி.பியின் ஸ்தாபகத் தலைவரான ரோஹண விஜயவீர, 1982 ஜனாதிபதித் தேர்தலிலும் நந்தன குணதிலக்க 1999 ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட்டிருக்கிறார்கள். அப்போது அவர்கள் பெற்ற வாக்குகள், சராசரியாக நான்கு வீதமாகும். அந்த வாக்குகள் தேர்தல் முடிவுகளில், குறிப்பாக வெற்றி, தோல்விகளில் எந்தவிதத் தாக்கத்தையும் செலுத்தவில்லை. கிட்டத்தட்ட உதிரி வாக்குகளாகவே மாறின.

தற்போதும் மூன்றாவது அணி குறித்தும் வேட்பாளர் குறித்தும் பேசப்படுகின்றது. குறிப்பாக, கொழும்பு லிபரல்வாதிகளும் தமிழ்த் தேசியச் சூழலில் சிவில் சமூகத்தின் மேய்ப்பர்களாகக் காட்டிக் கொள்பவர்களும் அது தொடர்பில் அதிகம் உரையாடுகிறார்கள்.

கோட்டாபய ராஜபக்‌ஷ எதிர் சஜிதா, ரணிலா, கருவா அல்லது இன்னொருவரா என்ற விடை கிடைக்காத நிலையில் அநுர குமார, மூன்றாவது அணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்டார்.

பிரதான (கட்சிகளின்) எதிர் வேட்பாளர்கள் குறித்த உரையாடல் களம் முழுவதுமாக விரியாத புள்ளியில், அநுர குமார உரையாடல் களத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.

ஜே.வி.பியின் கடந்த கால முகத்துக்கும் அநுர குமார தலைமையேற்றதன் பின்னரான முகத்துக்கும் சொல்லிக்கொள்ளும் படியான சில வேறுபாடுகள் உள்ளன. சிறிமா காலத்து மூடிய பொருளாதாரக் கொள்கைகளை ஒத்த பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டிருந்த ஜே.வி.பி, தற்போது அப்பிள் அலைபேசிகளைப் பகிரங்கமாகப் பயன்படுத்தும் அளவுக்கு வந்திருக்கின்றது.

அதுபோல, கடந்த காலத்தில் வெளிப்படுத்தி வந்த இனவாத முகத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கின்றது. (ராஜபக்‌ஷர்களின் போர் வெற்றிக் கோசத்துக்கு முன்னால், தென் இலங்கையில், அவர்களைத் தாண்டி யார் ஒருவராலும் இனவாதம் பேச முடியாது, பேசினாலும் அது எடுபடாது என்ற புள்ளியில் ஜே.வி.பி இன்றைய நிலையை எடுக்க வேண்டி வந்திருக்கின்றது என்ற உண்மையையும் மக்கள் சேர்த்தே வாசிக்க வேண்டும்)
பேரணிகளையும் கூட்டங்களையும் நேர்த்தியாகவும் பிரமாண்டமாகவும் நடத்துவதில் ஜே.வி.பியை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது.

காலி முகத்திடலில் கடந்த இரண்டு வருடங்களுக்குள் மூன்று முக்கிய அரசியல் கூட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றன. கொழும்பை முடக்கும் நோக்கத்துடன் ராஜபக்‌ஷக்கள் நடத்திய கூட்டம் ஒன்று, இன்னொன்று மைத்திரியின் சதிப்புரட்சிக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய கூட்டமொன்று. இந்த இரு கூட்டங்களிலும் யார் அதிகமானவர்களைக் கூட்டினார்கள் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், கடந்த ஞாயிற்றுக் கிழமை ஜே.வி.பியின் (தேசிய மக்கள் சக்தியின்) கூட்டத்தில் காணப்பட்ட நேர்த்தி எந்தவொரு கூட்டத்திலும் இருக்கவில்லை. அண்மைக்காலத்தில் அதிகமானவர்கள் திரண்ட கூட்டமாக அதனைச் சொல்கிறார்கள்.

பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் முதல் தொழிற்சங்கங்கள் வரையில் தனக்கிருக்கும் பரவலான கட்டமைப்புகளைக் கொண்டு ஜே.வி.பி, இதனைச் சாதித்துக் காட்டியது.
ஆனால், இவ்வளவு கூட்டத்தைக் கூட்டத் தெரிந்த ஜே.வி.பியால், தேர்தல்களில் தனித்து நின்று அதிகமான வாக்குகளைப் பெற முடிவதில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ,அவர்கள் பெற்றது 543,000 வாக்குகள். இது, மொத்த வாக்குகளில் சுமார் ஐந்து வீதமானவை.

அநுர குமாரவை மூன்றாவது அணி வேட்பாளராக அல்லது மாற்றத்தின் முகமாக பரவலாக முன்னிறுத்தினாலும், அவரால் 600,000 வாக்குகளை சிலவேளை பெற முடியும். ஜனாதிபதித் தேர்தலில் ஆறு இலட்சம் வாக்குகள் என்பது, தாக்கம் செலுத்தக் கூடிய ஒன்றாகத்தான் இருக்கும்.

ஆனால், அந்தத் தாக்கம் கொழும்பு லிபரல்வாதிகளும் தமிழ்ச் சிவில் சமூகத்தின் மேய்ப்பர்களும் கூறும் வகையிலான ஒன்றாக இருக்குமா என்கிற கேள்விக்குறி எழுகின்றது.

அதாவது, பிரதான கட்சிகளின் வேட்பாளர்களை நிராகரித்துக் கொண்டு, அதே நேரம் 50 சதவீதமான வாக்குகளைப் பிரதான வேட்பாளர்கள் பெறாத பட்சத்தில், அநுர குமாரவுக்கு வாக்களிப்பவர்கள் போடும் இரண்டாவது (விருப்பு) வாக்கைக் கொண்டு, ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சூழல் உருவாகும்.

அது, அந்த ஜனாதிபதி மீதான அழுத்தமாக இருக்கும். அது சர்வதேசத்துக்கு வரப்போகிற ஜனாதிபதி முழுமையான அங்கிகாரம் பெற்றவர் இல்லை என்கிற செய்தியைச் சொல்லும் என்பது, இந்த இரண்டு தரப்பும் முன்வைக்கும் யோசனை கருத்துருவாக்கம்.

கொழும்பு லிபரல்வாதிகளுக்கு என்றொரு முகம் உண்டு. தங்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் தரப்பு ஆட்சியிலிருக்கும் போது, அவர்களைக் குறித்து விமர்சனங்களை பெரியளவில் முன்வைக்காது. ஆட்சியாளர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட தரப்புகள் குரல் எழுப்பினாலும், அதனைக் கண்டுகொள்ளாது.

ஆனால், தனக்கு உவப்பில்லாத ஆட்சியாளர்கள் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களைக் கொண்டு அரசியல் நடத்துவார்கள். ரணில் அரசாங்கம் தமிழ்- முஸ்லிம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பில் கொழும்பு லிபரல்வாதிகள் அக்கறை கொள்ள மாட்டார்கள். அழுத்தம் வழங்கும் வகையிலான கேள்விகளையும் எழுப்பமாட்டார்கள்; கிட்டத்தட்ட உறக்க நிலையில் இருப்பார்கள்.

ஆனால், ஏதாவது தேர்தல் காலம் வந்ததும், தங்களை கருத்துருவாக்கிகளாக முன்னிறுத்தத் தலைப்படுவார்கள். அநுர குமாரவை முன்வைத்து தற்போது அவர்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் உரையாடலும் அவ்வாறான கபடத்தனத்தைக் கொண்டதுதான்.

தமிழ்ச் சிவில் சமூகத்தின் மேய்ப்பர்கள், வழக்கமாக முன்வைக்கும் தேர்தல் புறக்கணிப்புக் கோசத்திலிருந்து இம்முறை இறங்கி வந்திருக்கிறார்கள். அதன்போக்கிலேயே, மூன்றாவது அணி வேட்பாளர் குறித்துப் பேசத்தலைப்பட்டிருக்கிறார்கள்.

இந்த மேய்ப்பர்களுக்கும் சாதாரண தமிழ் மக்களின் மனங்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி உண்டு. இவர்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, தேர்தல்களில் மக்கள் வாக்களித்தது இல்லை.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும் கூட்டங்களை நடத்தி, தேர்தலைப் புறக்கணிக்கக் கோரிய இந்த மேய்ப்பர்கள், தங்களின் குரல்கள் எடுபடவில்லை என்று தெரிந்ததும், தேர்தலுக்குச் சில நாள்களுக்கு முன்னர், “மக்கள் தங்களின் விருப்பதுக்கு ஏற்ப செயற்படலாம்” என்று அறிக்கைவிட்டுக் குழப்பினர்.

தற்போதும், மூன்றாவது அணி வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பில் உரையாடலை ஆரம்பித்துவிட்டு, இறுதி முடிவு மாற்றத்துக்குரியது என்றும் குழப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஜனாதிபதித் தேர்தல்களில், பிரதான வேட்பாளர்களைக் குறிவைத்தே மக்கள் வாக்களித்து வந்திருக்கிறார்கள். இரண்டாவது நபர் குறித்து சிந்தித்து வாக்களிக்கும் பழக்கம் இல்லை. அப்படியான நிலையில், மக்களிடம் 50 சதவீதத்துக்கும் அதிகமாக பிரதான வேட்பாளர் ஒருவர் பெற முடியாது போனால், வாக்குச் சீட்டுகளின் இரண்டாவது புள்ளி (விருப்பு வாக்கு) கருத்தில் கொள்ளப்படும் என்கிற விடயத்தை எடுத்துக்கூறி, அதனைத் தெளிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு. அப்படியான கட்டத்தில், பிரதான கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மாற்றாக மூன்றாவது அணி வேட்பாளராக அநுர குமாரவுக்கு வாக்களிக்கக் கோருவது, யாரோ ஒருவரை வெளிப்படையாகத் தோற்கடிப்பதற்கு ஒப்பானது.

ஜே.வி.பியின் வாக்கு வங்கி என்பது, நகரங்களைச் சுற்றியிருப்பது. அது, கிராமங்களில் பெரியளவுக்கு வாக்குகளைப் பெறுவதில்லை. அப்படியான நிலையில், ஜே.வி.பி, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் பெறப்போகும் வாக்குகளையே பறிக்கப் போகின்றது. அப்படியானால், அது, கோட்டாவின் வெற்றியை இலகுபடுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான ஒரு கட்டமாகவே கருதப்படும்.

அதுபோலவே, தமிழ் மக்களை மூன்றாவது அணி வேட்பாளருக்கு, அதாவது அநுர குமாரவுக்கு வாக்களிக்கக் கோருவதும், கோட்டாவின் வெற்றியை இலகுபடுத்துவதற்கு ஒப்பானது.
இவற்றையெல்லாம் விடுத்து இன்னொரு முக்கியமான விடயத்தை அநுர குமார குறித்து உரையாடிக் கொண்டிருக்கும் தமிழ்ச் சிவில் சமூகத்தின் மேய்ப்பர்களும் கட்சியினரும் கருத்தில் கொள்கிறார்கள் இல்லை.

அதாவது, அனைத்து மேடைகளிலும் நாட்டு மக்கள் அனைவரும் சமமானவர்கள், சமத்துவமும் சமாதானமுமே இரு கண்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் ஜே.வி.பி, ஏன் அரசமைப்பின் பௌத்தத்துக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளமை குறித்து எங்குமே பேசுவதில்லை? அது, சமத்துவத்துக்கு எதிரானது இல்லையா? இங்கு எல்லோரும் பசுந்தோல் போர்த்திய புலிகளாகவே இருக்கிறார்கள். அதற்கு அநுர குமாரவும் விதிவிலக்கானவர் அல்ல.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × three =

*