;
Athirady Tamil News

தமிழர் அரசியல்: கிழக்கில் பிரதிநிதித்துவம் பறிபோகும் அபாயம்!! (கட்டுரை)

0

தமிழ்த் தாயக உரிமைப் போரும் அதன் மதிப்பும், அதன் பின்புலத்தில் காணப்படும் தமிழ்த்தேசிய அரசியல் போக்கும், என்றுமில்லாத அளவுக்குத் தமிழ் மக்களிடையே அதிக காழ்ப்புணர்வையும் தமது எதிர்கால இருப்பு தொடர்பான அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலைமைகள், வடக்கு, கிழக்குத் தமிழர் தொடர்பான பொருளாதாரத்தையும் பண்பாட்டையும், வரலாற்றையும், கல்வியையும், அபிவிருத்தியையும், தொழிற்றுறையையும், கலைத் துறையையும் மிக மோசமானளவு பின்னடைவுத் தளத்துக்குக் கொண்டுசென்று கொண்டிருக்கின்றன.

காலத்துக்கு காலம், செயற்றிறனற்ற கொள்கைப் பரப்புரைகள் மூலமும் வாய்ச் சவாடல்கள் மூலமும் அரசியல் ஏமாற்று வித்தைகளைக் காட்டி, வாக்குப் பெற்று, சுயநல அரசியல் நடத்தும் நபர்களாக, தமிழ் அரசியல் பிரதிநிதிகளில் அநேகர் உருவாகிவந்துள்ளார்கள். இவர்கள், தமிழ்த் தேசிய அரசியலை, இலக்கற்ற பயணமாக மாற்றியுள்ளதோடு, அரசியல் அனாதைகளாகத் தமிழ் மக்களையும் பயணிக்க வைப்பதற்கான சூனியப்பாதை ஒன்றையும் தோற்றுவித்துள்ளமையை, நாம் தெட்டத் தௌிவாக அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இந்த வகையில், ‘வடக்கின் அரசியல்’ என்பது, நிலச் சுவாந்தார் குடிப்பரம்பலுக்குரிய ஒன்றாக மாறிக்கொண்டிருக்கும் நிலை உருவாகியுள்ளது. கொள்கைப் பிடிப்பற்ற இந்த அரசியல் தலைமைகள், சாதியம், பிரதேசவாதம், கட்சிபேதம், சுயநல அரசியல் போன்ற கீழ்த்தரமான அரசியல் அணுகுமுறைகளை முன்னெடுக்கத் துணிந்து, தனிநபர்கள் மீது சேற்றை வாரிப் பூசும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன் விளைவு, அரசியல் நாகரிகமற்ற பேச்சுகளும் வசைபாடல்களும், தமிழ் அரசியலில் மிக மோசமான முறையில் வளர்ந்துவிட்டன. இந்த மேற்கிளம்புகை என்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான சேறு பூசல்களாக, அதிகளவிலும் அதன் தலைமை மீதான வன்மமிக்க சொற் தாக்குதல்களாகவும் வௌப்படுத்தப்படுகின்றன.

இந்தப் பகைப்புலமானது, தமிழ்த் தேசிய அரசியலில் என்றுமில்லாத தாக்கத்தை வெளிக்காட்டியுள்ளது எனலாம். இந்த வெடிப்புகள், குறுகிய தனிநபர் அரசியல் நோக்கங்களுக்குத் தீனி போடுவதாகவும் புதிய கட்சிகளின் உருவாக்கத்தை ஊக்குவிப்பனவாகவும் அமைந்துள்ளன.
இதன் விளைவு, வடபுலத் தமிழ் அரசியல் தலைமைகளாகத் தம்மைத் தாமே பிரகடனப்படுத்தும் வகிபாகங்கள், மிக அண்மைக் காலமாக உருவெடுத்துள்ளன. இந்தப் பிரசவிப்புகளின் எதிரொலி, சிங்களப் பேரினவாத அரசியலுக்கு, ஏதோ ஒரு வகையில் உற்சாகத்தை ஊட்டி உள்ளன.

இதன் பயனாகச் சிங்களப் பேரினவாத கட்சி அரசியலால், இந்தத் தமிழ் அரசியல் கட்சிகளின் உப்புச்சப்பற்ற அணுகுமுறைகள் ஆசீர்வாதங்களுடன் ஊக்குவிக்கப்படுவதோடு, பிறிதொரு வகையில், சிறுபான்மைச் சமூகங்களின் அபிலாஷைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் பேரினவாதத்தின் திட்டத்துக்கும் உரம் போடப்பட்டுள்ளது.

ஏனெனில், உரிமைக்காகப் போராடும் சிறுபான்மை இனங்கள், ஒன்றுபட்டுச் செயற்படுவதென்பது, பேரினவாதத்துக்கு வேப்பங்காய் கச்சலாகும். எனவேதான், இன்று சிறுபான்மைத் தமிழ், முஸ்லிம் உறவுகளை, இனவாதக் கண்கொண்டு பார்க்கத் தூண்டி, அவற்றுக்கு இடையேயுள்ள அந்நியோன்னிய உறவுகளைச் சிதைத்துத் தித்திப்புக் கொள்கின்றன.
இதன் பின்புலமே, ஏப்ரல் 21 தாக்குதலின் பின், சிங்களக் கட்சிகள், தமிழ் மக்கள் மட்டில் காட்டும் அக்கறையும் முஸ்லிம்கள், முஸ்லிம் மக்கள் மீது காட்டும் காழ்ப்புணர்ச்சியும் எனலாம். ஏனெனில், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டக் காலத்தில், முஸ்லிம் மக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்திய சிங்கள இனவாதம் என்பது, இன்று முஸ்லிம் மக்களுக்கு எதிராகத் தமிழ் மக்களைப் பயன்படுத்த முனைவது, இவ்விரு இனங்களும் ஒன்றுபட்டால், சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் பலமும் பேரம்பேசும் சக்தியும் சிங்களப் ​பேரினவாத அரசியலில் தாக்கங்களை ஏற்படுத்தி, தமது அரசியல் இருப்புக்கான பலத்துக்குச் சவாலாக அமைந்துவிடும் என்ற அச்ச உணர்வினால் ஆகும்.

இந்தக் காரணங்களால்தான், பேரினவாதத்தின் நுண்ணிய அரசியல் அணுகுமுறையாக, இலங்கைச் சிறுபான்மைச் சமூகங்களை மோதவிட்டு, சிங்கள இனவாத அரசியலைத் திறம்பட முன்னெடுப்பதாகும்.

இந்த மோசமான சதி வலைக்குள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அது தவிர்ந்த, அதனை விமர்சிக்கும் தமிழர் உரிமை தொடர்பாக எந்தவிதக் கொள்கையும் வேலைத் திட்டமும் இல்லாமல், ‘நமக்கு ஒரு பதவி போதும்’ என்ற உறுதியுடன் எல்லோரையும் துரோகிகளாக விமர்சித்துக் கொண்டு, கிளறினால் நாற்றமெடுக்கும் அரசியல் நடத்தும் தமிழ் உதிரிகளும் காணப்படுகினறனர்.

பலம் படைத்த சக்திகளாகத் தம்மைத் தாமே பிரகடனப்படுத்திக்கொண்டு கூட்டு முன்னணி அமைப்பதும் பின்னர், தமிழ் மக்களிடம் தம்மை மன்னிக்கும்படி வேண்டுகோள் விடுப்பதும், பேரினவாதக் கட்சிகளுக்கு எந்தவிதக் குறையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பேரம்பேசும் திட்டமும் சக்தியும் இன்றி, தமிழர் போராட்டத்தையும் அபிலாஷைகளையும் கொச்சைப்படுத்தும் வகையில், ஊடகங்களுக்கு ஐந்து பேர் கூடி அறிக்கை விடுவதும், ஊடக மாநாடு நடத்துவதும் இனவாத ஆர்ப்பாட்டம் நடத்துவதும் கேலிக்கூத்துகளாகவே மக்கள் பார்க்கின்றார்கள்.

மற்றவர்களை விமர்சிக்கும் தமிழ் தலைவர்கள், தங்களைத் தாங்கள் சுய மதிப்பீடு செய்து, தங்கள் வேலைத் திட்டங்களையும் கொள்கைகளையும் மக்கள் முன் இறக்கி வைக்காமல், பத்திரிகை மாநாடு வைப்பதால், மக்கள் ஆதரவு தமக்கு உண்டு என எண்ணும் அற்ப அரசியல்வாதிகள் குறித்து, தமிழ் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளமையையும் அவதானிக்க முடிகின்றது.

இந்த வகையில், வடபுலத் தமிழ் அரசியல் சக்திகள், அரசியல் நிலைமைகளையும் தமது சுயநல அரசியலையும் மூலதனமாக வைத்து, கிழக்கு அரசியலை நோக்குவதென்பது, தமிழ் அரசியல் பலத்தைச் சிதைப்பதாகவே அமையும். ஏனெனில், கிழக்கின் அரசியல் நிலைமை என்பது, வடபுல அரசியல் நிலைமைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. அங்கு, எந்த கட்சியில் நின்றாலும் அவர் தமிழராகவே இருப்பார்; எந்த அளவுக்குச் சிதறுப்பட்டாலும் தமிழராகவேதான் இருப்பார்.

ஆனால், கிழக்கில் இந்த நிலைமை என்பது நூறு சதவீதம் இல்லை. இங்கே, மூன்று பெரும் இனத்தவர்களும் ஏறக்குறைய, விகிதாசார ரீதியில் மிக நெருக்கமாக உள்ளனர். இந்நிலையில், வடக்கின் அரசியல் கட்சிகளின் உருவாக்கமானது, கிழக்கிலே தமது அரசியல் வேலைகளைப் புரிந்துணர்வற்ற முறையில் நடத்திக்கொள்ள முனைவது, கடை திறப்பது, தமிழர் வாக்குகளைச் சிதறடிக்கும் ஒரு செயற்பாடே அன்றி வேறெதுவும் இல்லை. மாறாக, கட்சிகளுக்குத் தேசிய ரீதியில் வாக்குச் சேகரிக்கும் பணியாக இருக்குமே தவிர, பிரதிநிதித்துவத்தை ஒருபோதும் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை. அத்துடன், தமிழர் வாக்குகளைச் சிதறடித்து, அதன் மூலம் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யும் வகையிலான ஒரு பொது வேலைத்திட்டத்துக்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இதனால், இவை பேரினவாதக் காட்சிகளுக்கும் ஏனைய சிறுபான்மையினக் கட்சிகளுக்கும் தங்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்பையும் வசதியையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக அமையும் எனலாம்.

மேலும், கிழக்கில் பேரினவாதக் கட்சிகளின் பிரதிநிதிகளாகச் செயற்படுபவர்கள், அந்தக் கட்சிகளில் இருந்து ஒரு பிரதிநிதியாகத் தமிழ்த் தரப்பில் தெரிவாவதென்பது, ஒரு முயற்கொம்பே ஆகும்.

காரணம், தமிழர் போராட்ட அரசியலில், கடந்த 30 ஆண்டுகளில் உயிரிழப்புகளைச் சந்தித்த அளவுக்கு, பொருளாதார அபிவிருத்தி இன்மை, தொழில்வாய்ப்பு இழப்புகள் போன்றவை, இன்றும் நெஞ்சைவிட்டு நீங்காதவை. அவர்களுக்குப் பேரினவாதம் மீதுள்ள இயல்பான கோபம், அக்கட்சிகளின் சார்பாக, எந்த வேட்பாளர் போட்டியிட்டாலும் அவர்களைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதுதான் நிதர்சனம்.

இது, தமிழரின் வரலாற்று ரீதியான ஒவ்வொரு தேர்தலிலும், கிழக்கில் கற்றுக்கொடுத்த பாடம். எனவே, பேரினவாதக் கட்சிகளில் தேர்தலில் போட்டியிடுவது என்பது, பெரும்பான்மைக் கட்சிகளில் போட்டியிடும் ஏனைய சிறுபான்மைச் சமூகத்தவர் பிரதிநிதியாகத் தெரிவாவதற்கே வித்திடும்.

எனவே, இந்த நிலைமைகளில் இருந்து, கிழக்குத் தமிழர் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், கிழக்கின் அரசியல் நிலைவரத்தைப் புரிந்துகொண்டு, போட்டித் தவிர்ப்பு, புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ஒரே கட்சியில் அனைத்துத் தரப்பினரும் போட்டியிட வேண்டும்.

இல்லையேல், கிழக்கு, கிழக்கின் தமிழர் பிரதிநிதித்துவம் பறிபோவதோடு, தமிழ்த் தேசிய அரசியல் பிரதிநிதித்துவத்திலும் அது தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இழப்பதா, காப்பதா என்பது, தமிழர் உரிமை பற்றிப் பேசும் அனைத்துத் தமிழ் அரசியல் சுயலாபவாதிகளும் கட்சிகளும் புரிந்துகொள்ளவேண்டும்.

சிந்தித்துக் கொள்கை வகுத்துத் திட்டமிட்டுச் செயற்பட, இத்தலைமைகள் முன்வர வேண்டும்.இதுவே, சிறுபான்மைத் தமிழ் மக்களை காக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − three =

*