;
Athirady Tamil News

கோட்டாபயவின் எதிர்காலம் !! (கட்டுரை)

0

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், மஹிந்த ராஜபக்‌ஷ எவ்வாறு நெருக்கடியான சூழ்நிலையை எதிர்நோக்கியிருந்தாரோ, அதே நிலைமையில்தான், அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்‌ஷ, இன்று இருந்துகொண்டிருக்கிறார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகக் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவு செய்யப்பட்டு விட்டாலும் அவரது வேட்புமனு சார்பாகத் தேர்தல் திணைக்களத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டு விட்டாலும், அவரால் இந்தத் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது, இந்தப் பத்தி எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் நேரம்வரை, உறுதியாகத் தெரியாத நிலையிலேயே உள்ளது.

கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு இரட்டைக் குடியுரிமைச் சான்றிதழ் பெறப்பட்டது சட்டவிரோதம் என்றும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள கடவுச்சீட்டும் தேசிய அடையாள அட்டையும் செல்லுபடியற்றவை எனவும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மனுவே இதற்குக் காரணமாகும்.

கோட்டாபய ராஜபக்‌ஷவின் இலங்கைக் குடியுரிமையை அங்கிகரிக்கக் கூடாதென, உள்நாட்டு விவகார அமைச்சருக்கு உத்தரவிடக் கோரி, காமினி வியாங்கொட, பேராசிரியர் சந்தரகுப்த தெனுவர ஆகியோரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு, புதன்கிழமையும் நேற்றும், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்தப் பத்தி எழுதப்பட்டுக் கொண்டிருந்தபோது, இந்த மனு மீதான விசாரணை நடந்துகொண்டிருந்தது, இந்த முக்கியத்துவமிக்க வழக்கின் தீர்ப்பு, இன்றே (04) வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கு, மிகக் கச்சிதமாக திட்டமிட்டு தொடரப்பட்ட ஒன்று என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

கோட்டாபய ராஜபக்‌ஷவுக்காக, பொதுஜன பெரமுனவினால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு இன்னும் மூன்று நாள்களே இருக்கின்ற நிலையில்தான், இந்த வழக்கின் தீர்ப்பு வரப்போகிறது.

இந்தத் தீர்ப்பு பாதகமாக அமைந்தால், கோட்டாபய ராஜபக்‌ஷவால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது. அது ஒரு பிரச்சினை. அவருக்குப் பதிலாக இன்னொரு வேட்பாளரை முன்னிறுத்த வேண்டும். அது வேறொரு பிரச்சினை.

அவ்வாறு, வேறொரு வேட்பாளரைத் தெரிவுசெய்து, இணக்கப்பாட்டை எட்டுவதற்கும் காலஅவகாசம் தேவை.

ஏற்கெனவே தாமரை மொட்டுச் சின்னத்தில் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்காகக் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுவிட்ட நிலையில், வேறொருவருக்காக அதே சின்னத்தில் கட்டுப்பணம் செலுத்த முடியுமா என்பது, புதிதாக முளைக்கக்கூடிய பிரச்சினை.

இப்படி அடுக்கடுக்கான சிக்கல்கள், நெருக்கடிகளுக்கு, மஹிந்த அணியைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது இந்த வழக்கு.

2004ஆம் ஆண்டில் பிரதமராகப் பதவியேற்றிருந்த மஹிந்த ராஜபக்‌ஷ, 2005 ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வந்தார். அவருக்குப் பின்னால், அப்போது ஹெல உறுமயவும் ஜே.வி.பியும் ஒன்றிணைந்திருந்தன.

அந்தச் சூழலில், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக, ஐ.தே.கவின் கபீர் ஹாசிம், ஒரு முறைப்பாட்டைச் செய்திருந்தார்.

2004 டிசெம்பரில் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவை அடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு, பெருமளவில் வெளிநாட்டு உதவிகள் கிடைத்தன. அப்போது பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷ, ‘ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை’ என்ற பெயரில் ஓர் உதவி நிதியத்தை ஆரம்பித்திருந்தார்.

அந்த நிதியத்துக்குச் சேர்க்கப்பட்ட 83 மில்லியன் ரூபாய் நிதியை, மஹிந்த ராஜபக்‌ஷ, தனது சொந்த வங்கிக் கணக்குக்கு மாற்றினார் என்பதே குற்றச்சாட்டாகும்.

அதுபற்றி, குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து, நீதிமன்றத்தில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.

அந்த வழக்கு அப்போது, உயர் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசராக இருந்த சரத் என். சில்வா முன்னிலையிலேயே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அவர் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து, மஹிந்த ராஜபக்‌ஷவைக் காப்பாற்றியிருந்தார். அந்த வழக்கில், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராகத் தீர்ப்பு வெளியாகியிருந்தால், அவரால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியாது. ராஜபக்‌ஷ குடும்பத்தினர், அரசியலில் தலையெடுத்திருக்கவும் முடியாது.

அந்த வழக்குக்குத் தீர்ப்பளித்த பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவுக்கும் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும், பின்னர் முரண்பாடு ஏற்பட்டது. அப்போது அவர், மஹிந்த ராஜபக்‌ஷவைத் தானே காப்பாற்றியதாகவும் கூறியிருந்தார்.

2015 ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிரான பிரசாரங்களையும் அவர் மேற்கொண்டிருந்தார்.

அதற்கு முன்னர், அவர் ஒரு மேடையில் உரையாற்றிய போது, 2005இல் ஒரு வழக்கில் தீர்ப்பளிக்கும் போது தவறு செய்துவிட்டதாகவும் அதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் பகிரங்கமாகவே கூறியிருந்தார். அவர் குறிப்பிட்டது, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிரான ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை வழக்கு என்றே கருதப்பட்டது.

அந்தத் தீர்ப்பு தவறானதென்று ஒப்புக்கொண்ட சரத் என். சில்வா, இன்று மீண்டும் மஹிந்த ராஜபக்‌ஷவின் பக்கம் நிற்கிறார். எனவே, இப்போது வேறொரு கதையைக்கூட அவரால் கூறமுடியும்.

எது எவ்வாறாயினும், அப்போது மஹிந்த ராஜபக்‌ஷவை, அந்தத் தீர்ப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்தவர் சரத் என். சில்வாதான். அன்று அவர் அந்தத் தீர்ப்பை அளிக்காமல் விட்டிருந்தால், இலங்கைத் தீவின் அரசியல், வேறொரு பரிமாணத்தை எட்டியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அப்போது மஹிந்த ராஜபக்‌ஷ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்கொண்டது போன்ற சிக்கலை, இப்போது கோட்டாபய ராஜபக்‌ஷ எதிர்கொண்டிருக்கிறார்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில், பல தில்லுமுல்லுகள் இடம்பெற்றிருந்தாலும், அவற்றுக்கான ஆதாரங்களை அவர்கள் விட்டு வைத்திருக்கவில்லை. அதனால்தான், தற்போதைய அரசாங்கத்தினால் ஒரு வழக்கில்கூட ராஜபக்‌ஷவினருக்கு எதிரான தீர்ப்பைப் பெறமுடியவில்லை.

ஆனால், மிகமுக்கியமான கோட்டாபய ராஜபக்‌ஷவின் இரட்டைக் குடியுரிமை விடயத்தில், அந்தளவுக்கு அவர்கள் திறமையாகச் செயற்படவில்லை என்பதே உண்மை.

இரட்டைக் குடியுரிமையை வழங்கும் அதிகாரம், சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு இருக்கும்போது, மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற மூன்றாவது நாள், அமைச்சரவையோ செயலாளர்களோ நியமிக்கப்படாத நிலையில், கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கும் ஆவணத்தில் தானே கையெழுத்துப் போட்டிருக்கிறார்.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி என்பதால், அதற்கான அதிகாரம் உள்ளது என்று நியாயமும் சொல்லப்படுகிறது.

ஆனால், எதற்காக அவர்கள் இந்தளவுக்கு அவசரப்பட்டனர் என்ற கேள்வி உள்ளது.
கோட்டாபய ராஜபக்‌ஷவின் இரட்டைக் குடியுரிமை குறித்த ஆவணங்களோ அதற்கான பதிவுகளோ, குடிவரவுக் குடியகல்வுத் திணைக்களத்திலோ, பாதுகாப்பு அமைச்சிலோ இல்லை.

பொறுமையாகவும் தடயங்களை விடாமலும் இதனைக் கையாண்டிருந்தால், ராஜபக்‌ஷவினருக்கு இந்த நிலை ஏறபட்டிருக்காது. அவசரமும் நிறைவேற்று அதிகாரம் கைக்கு வந்துவிட்டதால் ஏற்பட்ட நிதானம் இழப்புமே, இவ்வாறான முடிவை எடுக்கத் தூண்டியிருக்கிறது.

அது, 14 ஆண்டுகளுக்குப் பின்னர்தான், கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குப் பிரச்சினையாக வந்திருக்கிறது.

இந்த வழக்கில், கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைக்குமா என்பதும் சந்தேகந்தான்.

ஏனென்றால், இந்த வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் யசந்த கோத்தாகொடவும் நீதியரசர் அர்ஜுன ஒபேசேகரவும் விசாரிப்பதற்கு, கோட்டாபய ராஜபக்‌ஷ தரப்பிலிருந்து எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை, நீதியரசர்கள் குழு நிராகரித்திருந்தது.

தமக்குச் சாதகமான தீர்ப்பை அளிக்கமாட்டார்கள் என்று நம்பியதால்தான், இந்த இரண்டு நீதியரசர்கள் மீதும் நம்பிக்கை வைக்க, கோட்டாபய ராஜபக்‌ஷ தரப்பினர் தயங்கியிருந்தனர்.
ஆனால், அவர்கள் அளிக்கப்போகும் தீர்ப்புதான், கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகிறது.

இந்த வழக்கை, ஐ.தே.கவே நன்கு திட்டமிட்டுத் தாக்கல் செய்திருக்கிறது என்பது, பொதுஜன பெரமுனவின் குற்றச்சாட்டு. அதில் சந்தேகம் கொள்ள வேண்டியதும் இல்லை. இந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குச் சாதகமாக அமைந்தால், அது ஐ.தே.க தரப்பின் வியூகங்களுக்கு அடியாகவே அமையும். அதேவேளை, கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிரான வழக்குகள் எல்லாமே பொய்யானது, அரசியல் நோக்கம் கொண்டவை என்றே பொதுஜன பெரமுனவினர் கூறி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராகத் தீர்ப்பு அளிக்கப்பட்டால், அது, ஒட்டுமொத்த வழக்குகளையும் அவருக்கு எதிராகத் திருப்பும். ஏனென்றால், மோசடி நடந்துள்ளதென்று தீர்ப்பு அளிக்கப்பட்டால், அவர்கள் தரப்பின் நம்பகத்தன்மை முற்றாகவே அடிபட்டுப் போய்விடும்.

எனவேதான், இது கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வாழ்வா – சாவா என்ற தீர்ப்பாகப் பார்க்கப்படுகிறது. 2005இல் சரத் என் சில்வா மூலம் மஹிந்த ராஜபக்‌ஷ காப்பாற்றப்பட்டது போன்ற சூழலில் இன்றைய நீதித்துறை இல்லை.

இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்‌ஷவை இந்த வழக்கில் இருந்து காப்பாற்ற, இன்னொரு சரத் என். சில்வா வருவாரா?

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three − three =

*