;
Athirady Tamil News

ஜனாதிபதித் தேர்தல்: தமிழ்த் தலைமைகளின் தெரிவு என்ன? (கட்டுரை)

0

இப்போது எல்லோர் மத்தியிலும் உள்ள கேள்வி யாதெனில், தமிழ்த் தலைமைகள் என்று தம்மைச் சொல்லிக் கொள்வோர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிக்கப் போகிறார்கள் என்பதேயாகும். சிலர் ஏற்கெனவே வாய்திறந்துள்ளனர்; சிலர் திறக்கவுள்ளனர்; சிலர் இப்போதே பகிஸ்கரிப்பு என்ற கோஷத்தைத் தொடங்கியுள்ளனர். வேடங்கள் மெதுமெதுவாக் தானே கலையும். எனவே, பொறுத்திருந்து பார்க்க வேண்டியதுதான்.

தமிழ் அரசியல் தலைமைகளின் வரலாற்றைப் பார்த்தால், அது என்றுமே தமிழ் மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை என்பது புலனாகும். தமிழ் மக்களின் ஒற்றுமையைப் பேசியே, புதிய கட்சிகள் உருவாக்கமும் கட்சித் தாவல்களும் நடந்துள்ளன. தமிழ்த் தேசியக் கட்சிகளின் சண்டைகள், குடும்பச் சண்டைகள் போல நடந்துள்ளன; நடக்கின்றன. கட்சிகள் உருவாக முன்பு, சில குடும்பங்களே தமிழ்மக்களின் சார்பாகப் பேசும் அதிகாரத்தைக் கொண்டிருந்தன.

பிரபுத்துவக் குடும்பத் தலைவர்கள் போல, தலைவராகத் தன்னைக் காட்டிய ஜி.ஜி.பொன்னம்பலத்தின் செல்வாக்கு, 1948இல் அவருடைய அடிசறுக்கலை மீறி, 1956 வரை நிலைத்தது. அதன்பின், தமிழ்க் காங்கிரஸ் ஒரு கட்சியாக முக்கியமிழந்தது. தமிழரசுக் கட்சியின் தோற்றத்தின் வழி, அது முன்வைத்த சமஷ்டிக் கோரிக்கை, வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழரை விட, வேறெவரையும் கருதாததால் முஸ்லிம்களையும் மலையகத் தமிழரையும் நீண்டகாலமாகத் தெற்கில் வாழ்ந்து வந்த தமிழரையும் அதன் குடையின் கீழ்க் கொண்டு வரத் தவறியது.

1956இன் தேர்தல் வெற்றி, தமிழரசுக் கட்சியின் அரசியல் நோக்கை மழுங்க வைத்தது. அரசியல் பேரங்களுக்கு, ஆசன வலிமை தேவைப்பட்டது. ஆசனங்களை வெல்லப் பலவாறான சமரசங்கள் தேவைப்பட்டன. சமூகத்தில் மேல் நிலையிலுள்ளோரை மகிழ்விக்க, சில விடயங்களைப் பேசுவது தவிர்க்கப்பட்டது. தொழிலாளர்களின் பிரச்சினைகளில், முதலாளிகளின் தரப்பில் நிற்க நேர்ந்தது. சாதி ஒடுக்குமுறையைக் கண்டுங்காணாமல் விடவும் பழைமைவாத ஆணாதிக்கத்தைப் பேணவும் நேர்ந்தது.

இவை 1950களில் தமிழரசுக் கட்சி பற்றிச் சமூகத்தின் கீழ் மட்டங்களிலும் இளைஞர்கள் நடுவிலும் இருந்த எதிர்பார்ப்புகளைக் கலைத்தன. 1961 சத்தியாக்கிரகம் தமிழரசுக் கட்சிக்கும் மக்களுக்கும் இருந்த பலவீனமான நெருக்கத்தை மேலும் பலவீனமாக்கியது. மக்களை அணிதிரட்ட இயலாத தமிழரசுக் கட்சி, அதற்கு முன்பிருந்த தமிழ்க் காங்கிரஸ் போல, உயர்சாதி, உயர்வர்க்க மேட்டுக்குடிகளின் கட்சியாகியது.

அரசியல் ஆராய்வும் வேலைத்திட்டமும் இல்லாமலே, தமிழ்த் தேசிய அரசியல் நகர்ந்தது. 1983 ஜூலை வன்முறை தமிழ்த் தலைமைகளினி இயலாமையைக் காட்டிய பின்பு, வலுப்பெற்ற இளைஞர் இயக்கங்களிடம் பழைய தலைமைகளின் கோளாறுகள் அப்படியே இருந்தன. எனவேதான், எளிதாகவே ஏறத்தாழ எல்லா இயக்கங்களும் இந்தியாவின் சூத்திரப்பாவைகளாயின. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தின் தோல்வியின் பின், இன்னமும் ஒரு தெளிவான அரசியல் மார்க்கத்தை வகுக்க ஒரு தலைமைக்கும் இயலவில்லை.

அன்று முதல் இன்றுவரை, தமிழ்த் தேசிய அரசியல் எந்தப் பூனைக்கு மணிக்கட்டும் என்று தீர்மானிக்கும் போட்டியில், தன்னை அலைக்கழிக்கிறதே ஒழிய, எந்தத் திட்டம் தமிழரின் பிரச்சினையைத் தீர்க்கும் என ஆராய ஆயத்தமில்லை.

இதற்குச் சிறந்த உதாரணம், வடமாகாண சபையின் நடத்தையாகும். பொன்னம்பலம் இராமநாதன், ஜி.ஜி.பொன்னம்பலம், எஸ்.ஜே. வி. செல்வநாயகம், அமிர்தலிங்கம், வே.பிரபாகரன் என்று ஒவ்வொரு பெயரையும் காட்டி, அவர்களின் நிகரற்ற தலைமையே தமிழரை உய்விக்கும் என்று கூறப்பட்டது. ஆளல்ல, அரசியல் பாதையே முக்கியமென்று, தமிழ்த் தேசியம் அறியாது. எனவேதான், ‘எல்லோரும் ஏறி இறங்கிய குதிரைமேல், சக்கடத்தாரும் ஏறிச் சறுக்கி விழுந்தாராம்’ என்றவாறு, அரசியல் அனுபவமேயற்ற சி.வி.விக்னேஸ்வரனும் வடமாகாண சபை முதலமைச்சராகி மாகாண சபையை ஒரு நாடக அரங்காக்கினார்.

இதன் தொடர்ச்சியாகவே, இப்போது எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. இன்னோர் அவல நாடகத்துக்கான ஏற்பாடுகளையே தமிழ்த்தலைமைகள் எனத் தம்மை அழைப்போர் செய்கிறார்கள் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 18 =

*