;
Athirady Tamil News

பொது உடன்பாடு ஆவணம் தயாரிப்பில் என்ன நடந்தது? (கட்டுரை)

0

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் பேரம் பேசுவதற்கு தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து தயாரித்த பொது உடன்பாட்டு ஆவணம் தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பில் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலங்கைத்தீவில் கடந்த ஏழு தசாப்தங்களாக தமிழ் மக்கள் தொடர்ச்சியாக அடக்குமுறைகளிற்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாகிவந்த நிலையிலேயே இன்று ஒட்டு மொத்தமாக எமது பூர்வீகரீதியான தாயகத்தின் இனப்பரம்பல் முற்று முழுதாக மாற்றியமைக்கப்பட்டு வருகின்றது.

கிழக்கில் தொடங்கிய பௌத்த சிங்கள மயமாக்கல் இன்று வடக்கிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாம் அவற்றை தடுத்து நிறுத்த முடியாதவர்களாக கையறு நிலையிலேயே இருக்கின்றோம்.

ஈழத்தமிழர்களாகிய நாம் எமக்குள் பல்வேறு கட்சிகளாக பிளவுபட்டு எமது பேரம் பேசும் பலத்தை இழந்துவிட்ட நிலையை இலங்கையில் காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வரும் தலைவர்கள் தமக்கு சாதகமாக கையாண்டு வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்களையும் பௌத்த மயமாக்கல்களையும் அரங்கேற்றி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது தமிழ் மக்களினது உடனடியாக தீர்வு காணப்பட வேண்டிய விடயங்களான அரசியல் கைதிகள் விடுதலை, பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கம், இராணுவ வெளியேற்றம், மீள்குடியமர்வு, காணி விடுவிப்பு, காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தல், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுத்தல், காணாமற்போனவர்களின் விவகாரத்திற்கு தீர்வு காணுதல், முதலான விடயங்களிற்கு கூட எம்மால் தீர்வுகாண முடியாத துர்ப்பாக்கிய நிலையினை எமது அரசியல் தலைவர்கள் உணர்ந்து கொண்டிருந்தால் இத்தகைய பொது உடன்பாட்டு முயற்சி ஒன்றினை நாம் மேற்கொண்டு பேரம் பேசும் பலத்தினை அதிகரிக்க வேண்டும் என்கின்ற தேவையும் எண்ணமும் எமக்கு ஏற்பட்டிருக்காது.

தமிழ் தேசிய பரப்பில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தலில் ஒருமித்த முடிவொன்றினை எடுப்பதன் மூலமாக நாம் இழந்த பேரம் பேசும் பலத்தினை மீளப் பெற்றுக்கொள்வதன் மூலமாகவே நாம் எமது அரசியல் வேணாவாக்களை வென்றெடுக்க சாத்தியமான வழிகளில் முன்னகர முடியும்.

இன்றைய சூழலில் பேச்சுக்கான கதவுகள் திறக்கப்பட வேண்டுமாயின் எமது பேரம்பேசும் பலத்தை மீண்டும் பெற்றுக்காள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாடுடைய கட்சிகள் ஒருமித்து முடிவெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவை என்பதனை உணர்ந்து கொண்டதனாலேயே நாம் இத்தகைய முயற்சியில் கட்சிகளினை கலந்துரையாடுவதற்கு அழைத்திருந்தோம்.

இந்த அடிப்படையில் தொடங்கப்பட்ட கலந்துரையாடலின் ஆரம்பத்திலேயே ஓர் பொதுவான இணக்கப்பாடு எட்டப்பட்டது. அதாவது அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் ஒன்றினை தயாரித்து அதனை முன்வைத்து பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவது என்பது ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதன் பேரிலேயே தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன் கலந்துரையாடல்களில் பங்குகொண்ட கட்சிகளினால் முன்மொழியப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையிலேயே இவ் ஆவணத்தயாரிப்பு இடம்பெற்றது.

தமிழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் செம்மையான வகையில் தயாரிக்கப்படுவதில் தமது முழுமையான ஒத்துழைப்பினை பங்குபற்றிய அனைத்து கட்சிகளும் மனப்பூர்வமாக இணைந்து மேற்கொண்டிருந்தார்கள். இப்பொது உடன்பாட்டு ஆவணத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி, இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ ஆகிய அனைத்து கட்சிகளும் முழுமையாக ஏற்றுக்கொண்ட போதும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய யாப்புருவாக்கத்தின் இடைக்கால அறிக்கை ஒற்றையாட்சியை முன்னிலைப்படுத்துவதாக அமைவதால் அதனை நிராகரிக்க வேண்டும் என்பதனையும் குறித்த ஆவணத்தில் உள்வாங்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பிரேரித்த வேளையில் அவ்விடயம் தொடர்பாக கட்சிகள் அனைத்தினாலும் ஒன்றிற்கு ஒன்று முரணான வாதங்கள் முன்வைக்கப்பட்டு நீண்ட நேர வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றும் ஓர் முடிவு எட்டப்படாத நிலையிலேயே நான்காவது கலந்துரையாடல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல் மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அனைத்து கட்சிகளையும் இணங்க வைத்து பொது உடன்பாட்டை கைச்சாத்திடும் நோக்குடன் 14-10-2019 அன்று மதியம் 1.30இற்கு ஆரம்பமான கலந்துரையாடலின் போது இடைக்கால அறிக்கையினை நிராகிக்க வேண்டும் என்பதனை ஆவணத்தில் உள்ளடக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் உறுதியாக இருந்த நிலையில் தமிழரசுக்கட்சி, புளொட் என்பன அதனை ஆவணத்தில் உள்ளடக்க கூடாது என்றும் இலங்கை அரசுக்கு சர்வதேசத்திற்கு வழங்கிய உறுதிமொழியின் பேரிலேயே அரசியலமைப்பு உருவாக்க முயற்சி இடம்பெறுகின்றது. அதனை நாம் குழப்பி விடக்கூடாது என்றனர்.

அதேவேளை ரெலோ தரப்பினர் கருத்து தெரிவிக்கும் போது, தாம் அவ் இடைக்கால வரைபு வந்த போதே அதனை எதிர்த்தவர்கள் என்றும் இன்றைய நிலையில் அதனை ஆவணத்தில் உள்வாங்கி தமிழ் அரசுக்கட்சியினருக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதனை தவிர்க்க வேண்டுமென்றும் தாம் ஒன்றாக பயணிப்பவர்கள் என்பதால் இவ்விடயத்தில் தமிழ் அரசுக்கட்சியுடன் இணைந்து இவ் ஆவணத்தில் இடைக்கால அறிக்கை நிராகரிப்பதை உள்ளடக்க தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் தாம் இடைக்கால அறிக்கையினை வெளிப்படையாக நிராகரித்துள்ள போதும், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் கைவிடப்பட்ட நிலையிலும் இவ் ஆவணத்தில் ஒற்றையாட்சி நிராகரிப்பு என்ற வாசகம் இருப்பதன் அடிப்படையிலும் இடைக்கால அறிக்கை பற்றி இவ்ஆவணத்தில் உள்ளடக்க வேண்டிய தேவை இல்லை எனவும் வாதிட்டனர்.

ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியினர் இவ்வாதங்களுடன் உடன்பட மறுத்து அதற்கான நியாயப்பாடுகளினையும் வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக இந்த அரசியலமைப்பு உருவாக்க முயற்சி தொடர வாய்ப்புள்ளமையை ஜனாதிபதி வேட்பாளர்களின் கருத்துக்களை குறிப்பிட்டு முன்வைத்தார்கள். அதனால் ஒற்றையாட்சி இடைக்கால வரைபு நிராகரிக்க வேண்டும் எனும் தமது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கவில்லை.

இந்நிலையில் விவாதம் நீண்டு கொண்டு செல்வதாலும் இதனை ஓர் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனும் நோக்கிலும் அடிக்குறிப்பிலேனும் இடைக்கால அறிக்கை நிராகரிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிரேரித்தது என குறிப்பிடலாம் என சிவில் சமூக தரப்பினரால் ஓர் கருத்து முன்வைக்கப்பட்டது. அதனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக்கொண்ட போதும் ஏனைய கட்சிகள், அடிக்குறிப்பினை இடுவது எம்முள் இணக்கப்பாடு இல்லை என்பதனை தெளிவாக காட்டுமென்பதுடன் பொது ஆவணம் பலவீனமடையும் எனக் கூறி அதனை அடியோடு மறுத்துவிட்டனர்.

ஏற்கனவே நாம் எமது நிலைப்பாட்டினை கோரிக்கையாக புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறையை நிராகரித்து, தமிழர் தேசத்தினை அங்கீகரித்து, அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்பதனையும், தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதனையும் அங்கீகரித்து, சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் இலங்கையின் தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என தெளிவாக தீர்வுத்திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட நிலையிலும் இடைக்கால அறிக்கையை நிராகரித்தல் என்பது இவ் ஆவணத்தில் தேவையற்றதென வாதிட்டனர்.

இந்நிலையில் இறுதியாக இடைக்கால அறிக்கை நிராகரித்தல் வேண்டும் என்ற விடயத்தை ஆவணத்தில் உள்ளடக்காது விடுவது என்பதுடன் இது தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி உட்பட கட்சிகள் வெளிப்படுத்திய கருத்துக்களையும் நிலைப்பாடுகளையும் நாம் ஊடக அறிக்கை ஒன்றின் மூலமாக பகிரங்கப்படுத்துவதென்றும் அனைவரும் இதனை ஏற்றுக்கொண்டு கையொப்பமிட வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் தரப்பால் வலியுறுத்தப்பட்ட போதும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியினர் கையொப்பமிட மறுத்தனர்.

தொடந்தும் சிவில் சமூகத்தினர் சார்பில் பங்கு கொண்ட மதகுருமார்கள் மேற்கொண்ட சமரச முயற்சிகள் வெற்றி அளிக்காத நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இப் பொது உடன்பாட்டில் கையொப்பமிட மறுத்ததுடன் தமது கவலையினையும் பதிவு செய்து வெளியேறிச் சென்றனர்.

இந்நிலையில் கையொப்பமிட்ட ஐந்து கட்சியினருடனும் தொடர்ந்து கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு ஐந்து கட்சித் தலைவர்களும் அடங்கிய குழுவினர் இவ் ஆவணத்தை முன்வைத்து மூன்று பிரதான வேட்பாளர்களுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபடுவதென்றும் அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நகர்வுகளினை தீர்மானிப்பதென்றும் முடிவெடுக்கப்பட்டது.

தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும் என்று இம் முயற்சியில் இறங்கிய நாம், ஐந்து கட்சிகள் உடன்பட்டு வந்த நிலையில் அவர்களிடம் இவ் பொது ஆவணத்தை ஒப்படைத்து இதனடிப்படையில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு தெரிவித்ததோடு அவர்கள் அரசியல் தலைவர்கள் என்ற வகையிலும் நாம் பொறுப்பு வாய்ந்த மாணவர்களாய் ஒன்றிணைக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டவர்கள் என்ற வகையிலும் இவ் விடயத்தினை அவர்களிடமே ஒப்படைத்து விலகிக் கொண்ட நிலையில் கலந்துரையாடல்களின் முன்னேற்றங்களின் அடிப்படையில் அரசியல் கட்சி தலைவர்களே தொடர்ச்சியாக இவ் விடயத்தினை கையாள்வார்கள்.

தேர்தல் தொடர்பான ஒருமித்த நிலைப்பாடு ஒன்றினை எடுக்கும் எமது முயற்சி மக்கள் முன் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இந்த நிலைப்பாட்டில் இருந்து மாறுவார்கள் எனில் மக்கள் இவ் விடயத்தில் சரியான முடிவினை எடுக்கும் வகையில் அவ் நகர்வுகளினை தொடர்ந்தும் அவதானித்த வண்ணம் இருத்தல் வேண்டும் – என்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 7 =

*