;
Athirady Tamil News

தமிழ் சமூகத்தின் எதிர்கால சுபீட்சம்!! (கட்டுரை)

0

பல வருடங்களாக இருள் சூழ்ந்திருந்த வடக்கு வானில் மீண்டும் ஒளி எழுவதற்கான வாய்ப்பு கடந்த 18ஆம் திகதி உதயமானது. உள்நாட்டு போர் காரணமாக இழக்க நேர்ந்த பலாலி விமான தளத்தை சூழ்ந்த பாரியளவிலான நிலங்கள் மீளக் கிடைக்கப்பெற்றிருக்கும் பின்னணியில் இதுவரை காலமும் அரச படையினரின் ஆதிக்கத்திற்கு உள்ளாகியிருந்த பலாலி விமான நிலையம் மீண்டும் முழுமையாக சிவில் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்திருக்கின்றது. அத்தோடு இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம் என்ற நிலைக்கு பலாலி விமான நிலையம் தரம் உயர்த்தப்பட்டிருக்கின்றது.

தமிழ் மக்களினது முழுமையான பங்களிப்பில் உருவாக்கப்பட்ட நல்லாட்சியினால் தமிழ் மக்களுக்கு கிடைக்கப்பெற்ற மேலுமொரு நற்பலனாகவே பலாலி விமான நிலையத்தின் இத்தரமுயர்த்தல் அமைகின்றது. நாட்டின் தலைவர் என்ற வகையிலும் முப்படைகளின் தளபதி என்ற வகையிலும் ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேனவின் அனுமதியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அங்கீகாரமும் கிடைக்கப்பெற்று, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க எடுத்துக்கொண்ட பிரத்தியேக முயற்சிக்கும் கடின உழைப்புக்கும் கிடைக்கப்பெற்ற அமைச்சரவை அங்கீகாரத்திற்கமையவே பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்கும் கனவு இன்று நனவாக்கப்பட்டிருக்கின்றது.

இதனாலேயே இவ்விமான நிலைய திறப்பு விழாவின்போது உரையாற்றிய பிரதமர், அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கிரிக்கெட் உலக கோப்பையை இலங்கைக்கு கொண்டு வந்ததிலும் இலங்கையில் மூன்றாவது சர்வதேச விமான நிலையத்தை உருவாக்கியதன் மூலமும் உலக சாதனை படைத்திருப்பதாக புகழாரம் சூட்டினார். அந்தவகையில் அமைச்சர் அர்ஜூனவின் இந்த முயற்சியானது, வடபுல தமிழ் மக்களினது மாத்திரமன்றி ஒட்டுமொத்த உலகவாழ் தமிழ் மக்களினதும் பாராட்டுதலை பெறவேண்டிய ஒரு விடயமாகுமென்பதை மறுப்பதற்கில்லை.

இதனை யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமென அழைப்பதன் காரணமாக இவ்விமான நிலையம் அமைந்திருக்கும் பலாலி என்ற இடத்தின் பெயர் இருட்டடிப்பு செய்யப்படுவதாக ஆதங்கப்படும் சிலர் இந்த முயற்சிக்கு தமது எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றனர். கொழும்பு தலைநகரத்தில் அமைந்திருக்கும் விமான நிலையத்தை அது அமையப்பெற்றிருக்கும் கட்டுநாயக்க என்ற இடத்தின் பெயரைக்கொண்டு அழைக்கும் அதேவேளை, தெற்கே ஹம்பாந்தோட்டையில் அமைந்திருக்கும் விமான நிலையத்தை அதை அமைக்கப்பட்டிருக்கும் மத்தளை பிரதேசத்தை பெயராகக்கொண்டு அழைக்கப்படுவதையும் சுட்டிக்காட்டும் மேற்குறிப்பிட்ட குழுவினர், பலாலியில் அமைக்கப்பட்டிருக்கும் விமான நிலையத்தை யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் என அழைப்பதன் மூலம் வேண்டுமென்றே பலாலி என்ற இடத்தின் பாரம்பரிய பெயர் வேண்டுமென்றே இருட்டடிப்புச் செய்யப்படுகின்றது என்ற வாதத்தை முன்வைக்கின்றனர்.

அவர்களின் இவ் ஆதங்கம் தர்க்க ரீதியாக இருந்த போதிலும் யதார்த்தத்துடன் ஒப்பிட்டு பார்க்கின்றபோது உலகம் அறியாத பலாலி எனும் பெயரைவிட தமிழ் மக்களின் தாயகம் என பல தசாப்தங்களாக உலகளாவிய ரீதியில் பரப்புரை செய்யப்பட்டிருக்கும் யாழ்ப்பாணம் எனும் பெயர் சர்வதேச விமான நிலையத்துடன் இணையும்போது அது மேலதிக கவனத்தை ஈர்ப்பதுடன், உலக மக்களுக்கு பரீட்சயமான ஒரு இடமாகவும் அமைகின்றது என்பதை மறுப்பதற்கில்லை. அந்த வகையில் தற்போதைய தமிழ் சமூகம் பெயரா, பிள்ளையா என்ற வாதத்தில் தொடங்கி பிள்ளையை இழப்பதைவிட கிடைக்கப்பெற்றிருக்கும் பிள்ளையை பேரும் புகழும் பெற்ற ஒருவனாக வளர்த்தெடுப்பதற்கான வழியை தேர்ந்தெடுப்பதே தமிழ் சமூகத்திற்கு செய்யும் நற்பணியாக அமையும்.

அந்த வகையில் மூன்று கட்டங்களாக அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டிருக்கும் யாழ்ப்பாண விமான நிலையத்தின் அபிவிருத்தியினை துரிதப்படுத்துவதற்கும் அதன்மூலம் யாழ்ப்பாண விமான நிலையத்தை தமிழ் சமூகத்தின் விமோசனத்திற்காக கிடைக்கப்பெற்ற ஒரு வரப்பிரசாதமாக மாற்றியமைக்க வேண்டுமென்பதுமே சாதாரண தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இந்த எதிர்பார்ப்பினை புரிந்துகொண்டு தமிழ் மக்களின் எதிர்காலத்தை வண்ணம்பெறச் செய்யும் ஒரு அரிய வாய்ப்பாக யாழ் விமான நிலையத்தை தரம் உயர்த்துவதற்கு கிடைத்திருக்கும் இந்த அரிய வாய்ப்பினை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பற்றி முழுமையாக கவனம் செலுத்தப்பட வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கின்றது.

துறைமுகம், விமான நிலையம் ஆகியன ஒரு நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் எத்தகைய வகிபாகத்தை வகிக்கின்றது என்பதை புரிந்துகொள்வதற்கு சிங்கப்பூரே மிகச் சிறந்த முன்னுதாரணமாக விளங்குகின்்றது. அதிலும் குறிப்பாக வடபுல தமிழ் மக்களின் அறிவு, ஆற்றல், நேர்மையான உழைப்பு ஆகியவற்றினால் இன்று உலக தரத்தில் உயர்ந்து நிற்கும் சிங்கப்பூரின் கடந்தகால அனுபவத்தையும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகத்தின் பங்களிப்பையும் பெற்று, குறிப்பாக வட மாகாணத்தையும் பொதுவாக நாட்டையும் சமூக பொருளாதார ரீதியில் துரித அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதற்கு யாழ்ப்பாண சர்வதேச துறைமுகத்தை பயன்படுத்திக் கொள்வதற்கான நேர்மையான வழிகாட்டலை தமிழ் அரசியல் தலைமைத்துவங்களால் பெற்றுக்கொடுக்க முடியுமாயின் மூன்று தசாப்தகால யுத்தத்தினால் பொருளாதார ரீதியில் மிகுந்த பின்னடைவை சந்தித்திருக்கும் வடபுலத்தை திட்டமிட்டு முன்னேற்றுவதற்கு இதுவொரு சிறந்த வாய்ப்பாகும். இதுவரை காலமும் தமக்கு கிடைக்கப்பெற்ற மிகச் சிறந்த வாய்ப்புக்களை,

அதாவது சந்திரிக்கா அம்மையாரின் அரசியல் அதிகார பகிர்வு, ரணில் விக்கிரமசிங்க ஆட்சி காலத்தில் கிடைக்கப்பெற்ற சமாதான உடன்படிக்கை, மைத்ரி ஆட்சியின் கீழ் கிடைக்கப்பெற்ற வடக்கை வளர்த்தெடுப்பதற்கான அரிய வாய்ப்புக்கள் ஆகியவற்றை கைநழுவ விட்டிருப்பதைபோன்றே இவ்வாய்ப்பினையும் தமிழ் அரசியல் தலைமைத்துவம் கைநழுவ விடுமாயின் அது தமிழ் சமூகத்திற்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

ஆகையால் தமிழ் அரசியல் தலைமைத்துவத்துடன் இணைந்து தமிழ் சமூகமும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் தமக்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்பாக கருதி செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாக இருக்கின்றது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் வடபுல சமூகத்திற்கு மீள கிடைக்கப்பெற்றிருக்கும் மைலிட்டி துறைமுகம், வடமராட்சி குடிநீர்த்திட்டம், பருத்தித்துறை மீன்பிடி துறைமுக அபிவிருத்தித்திட்டம், விவசாய மற்றும் குடியிருப்பு நில விடுவிப்பு ஆகியவற்றுடன் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தையும் ஒன்றிணைத்து அதன் ஒட்டுமொத்த பலனை பெற்றுக்கொள்வதற்கான எதிர்கால திட்டங்களை வகுத்து அதனடிப்படையில் எதிர்வரும் தேர்தலில் தான் சார்ந்த சமூகத்திற்கு உச்சக்கட்ட நலன்களை பெற்றுக்கொடுக்கக்கூடிய தரப்பை தேர்ந்தெடுத்து அவ்வெற்றியின் பங்காளியாகி செயற்படுவதற்கு திடசங்கற்பம் கொள்ள வேண்டியது தமிழ் அரசியல் சமூகத்தின் தலையாய கடமையாகும்.

அதற்கான வாய்ப்பாக தமிழ் சமூகம் இத்தேர்தலை பயன்படுத்திக்கொள்ளும் என்பதே தமிழ் சமூகத்தின் தற்போதைய நம்பிக்கையாக இருக்கின்றது. அதனை சரியாக சாதிப்பதன் மூலமே 2015ஆம் ஆண்டு உருவாக்கிக்கொண்ட தமிழ் சமூகத்திற்கு சாதகமான தன்மையை தொடர முடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + nineteen =

*