;
Athirady Tamil News

தமிழ் மக்களின் தேர்தல் பேரம் தோற்றது யாரால்? (கட்டுரை)

0

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது தொடர்பிலான உத்தியோகபூர்வமான அறிவித்தலை, இன்னும் சில தினங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிடும்.

அதற்கு முன்னதாக, ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பொன்றை இரா. சம்பந்தன் தலைமையிலான குழு நடத்தவுள்ளது. இந்தக் குழுவில் பொது இணக்கப்பாட்டில் கையெழுத்திட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளின் அனைத்துத் தலைவர்களும் பங்கெடுப்பார்கள் என்று தெரிகிறது.

பொது இணக்கப்பாட்டின் கீழ் தமிழ்த் தேசியக் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட 13 அம்சக் கோரிக்கைகளையும், நாட்டைப் பிரிப்பதற்கான சூத்திரமாகத் தென் இலங்கையில் பிரசாரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. குறித்த கோரிக்கைகளோடு வரும் கூட்டமைப்போடு பேசப்போவதில்லை என்று ராஜபக்‌ஷ சகோதரர்கள் அறிவித்து விட்டார்கள்.

அப்படியான நிலையில், ரணிலும் சம்பந்தனும் நடத்தப்போகும் பேச்சுவார்த்தை என்பது சம்பிரதாயபூர்வமான ஒன்றாகவே இருக்கப் போகின்றது. அங்கு கனதியான விடயங்கள் தொடர்பில் உரையாடப்படுவதற்கோ, தீர்மானங்களை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகளோ இல்லை.

ஏனெனில், எந்தவொரு தருணத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியோடு கூட்டமைப்பு தேர்தல் கால ஒப்பந்தமொன்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இல்லை. அது, தேர்தல் வெற்றி, தோல்விகளில் பாரிய தாக்கத்தைச் செலுத்திவிடும் என்கிற பயம் சம்பந்தனுக்கு உண்டு.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியை ஆதரிப்பது தொடர்பில் கூட்டமைப்போடு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுக் கொள்ளலாம் என்று சந்திரிகா குமாரதுங்க முன்மொழிந்த போதிலும், சம்பந்தன் அதனை நிராகரித்திருந்தார். “அது அவசியமற்றது; அந்த ஒப்பந்தம் தென் இலங்கை மக்களிடம் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும்” என்றார். அதுதான், ‘இதயங்களுக்கு இடையிலான ஒப்பந்தம்’ மேலெழுவதற்குக் காரணமானது.

இம்முறை இதயங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் என்கிற வார்த்தையைச் சம்பந்தனோ, அவரது சிஷ்யப்பிள்ளைகளோ உச்சரிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஏனெனில், சஜித் தொடர்பில் எந்தவிதமான நல்லபிப்பிராயங்களும் அவர்களிடம் இல்லை. இறுதிக்கால மைத்திரியின் இன்னொரு வடிவமாகவே சஜித்தை சம்பந்தனும், அவரது சிஷ்யர்களும் நோக்குகிறார்கள். அவர்கள், ரணில், மங்கள சமரவீர உள்ளிட்டவர்களை முன்னிறுத்தியே விடயங்களை நகர்த்த விரும்புகிறார்கள்.

பிரதான கட்சியொன்றின் ஜனாதிபதி வேட்பாளர் என்கிற எந்தவித மரியாதையையும் சஜித் தொடர்பில் கூட்டமைப்பின் அதிகாரபீடம் கொண்டிருக்கவில்லை. ஆனால், வேறு தெரிவுகள் இல்லை என்கிற நிலையில், சஜித்தை ஆதரிப்பது தொடர்பிலான நிலைப்பாட்டுக்கு வரவேண்டியிருக்கிறது.

தேர்தல் புறக்கணிப்பின் ஏக வாரிசுகளான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்த்த அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் சஜித்தை ஆதரிப்பது தொடர்பிலான நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டன. அது, கோட்டாபய ராஜபக்‌ஷ என்கிற அச்சுறுத்தலுக்கு எதிரானது மாத்திரமல்ல; தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளின் போக்கிலுமானது.

யார் ஆதரித்தாலும், ஆதரிக்கவில்லை என்றாலும், கோட்டாவுக்கு எதிராகத் தமிழ் மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள் என்கிற நிலையில், அந்த நிலைப்பாட்டை எதிர்த்து நிற்பது, எதிர்காலத்தில் பெரும் நெருக்கடியை வழங்கும் என்பது கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும்.

அப்படியானால், பொது இணக்கப்பாடும் 13 அம்சக் கோரிக்கைகளும் வெற்றுக் காகிதத்துக்கு ஒப்பான ஒன்றாகவா இந்தத் தேர்தல் முழுவதுமாக இருக்கப் போகின்றது என்ற கேள்வி எழுந்தால், தவிர்க்க முடியாமல் ‘ஆம்’ என்பதே பதிலாக இருக்கப் போகின்றது.

உண்மையிலேயே அது ஆரோக்கியமான பதில் அல்ல; அது, ஒரு வகையில் தமிழ்த் தேசிய அரசியலின் தடுமாற்றத்தின் வெளிப்படுதான். ஆனால், பொது இணக்கப்பாட்டுக்காக உழைத்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களுக்கோ, அவர்களை வழிநடத்திய பல்கலைக்கழக கல்வியாளர்களுக்கோ கூட, அடுத்து என்ன செய்வது என்பது தொடர்பில் எந்தவிதமான தெளிவும் இல்லை.

தமிழ்த் தேசிய அரசியலோ, சிவில் சமூக சூழலோ எந்தவிதமான எதிர்காலத் திட்டமிடல்களும் சிந்தனைகளும் இன்றியே செயற்பட்டு வருகின்றன. இதனால், நிகழ்வுகளுக்கு ஏற்ப பிரதிபலிப்பது என்கிற ஒற்றை விடயத்தைத் தாண்டி, ஆக்கபூர்வமான நகர்வுகள் என்பது சொல்லிக் கொள்ளும்படியாக நிகழ்வதில்லை.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியை ஆதரிப்பது தொடர்பிலான நிலைப்பாட்டை தமிழ் மக்கள் எடுக்கும் போது, ஜனநாயக இடைவெளி என்கிற விடயம் பிரதானமாக முன்வைக்கப்பட்டது. அந்தவெளி, அரசியல், சிவில், சமூக அரங்கை மீள்கட்டுமானம் செய்வதற்கான கட்டமாக உணரப்பட்டது.

ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளில், அதற்கான முனைப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தோன்றினாலும், தமிழ் மக்கள் பேரவை போல முட்டுச்சந்தில் முட்டிக்கொள்ளும் கட்டங்களையே கண்டிருக்கின்றது.

அரசியல் ஆய்வாளர்களின் மொழியில் சொல்வதானால், ‘வழிவரைபடம்’ என்கிற ஒன்று இந்தத் தரப்புகளிடம் இருந்ததே இல்லை. இதில், என்ன பரிதாபம் என்றால், பேரவை உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புகள் அத்தனையிலும், அந்த அரசியல் ஆய்வாளர்கள் முக்கியமான சிந்தனையாளர்களாக முன்னிறுத்தப்பட்டதுதான்.

பேரவை, சிவில் சமூக இயக்கங்களின் வழியையே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களும் பின்பற்றின. வழி வரைபடம் குறித்து உரையாடும் தரப்பினரே, வழி வரைபடம் இன்றிப் பயணிக்கும் போது, பல்கலைக்கழக மாணவர்களிடம் வழி வரைபடம் கோருவது நியாயமானதில்லை. ஏனெனில், வழி வரைபடத் தரப்பினரில் அதிகமானோர், அந்த மாணவர்களின் விரிவுரையாளர்களாகவும் இருக்கிறார்கள்.

தமிழ்த் தேசிய அரசியல் என்பது, மக்களை அடிப்படையாகக் கொண்டது. அந்த அடிப்படைகளில் நின்றுதான் கட்சிகள் செயற்பட வேண்டும். ஆனால், இன்றைக்கு தமிழ்த் தேசிய அரசியல் என்பது, கட்சிகளை பிரதானப்படுத்தி, மக்களை இரண்டாம் கட்டத்துக்கு நகர்த்தி இருக்கின்றது. அது, ஒரு கட்டத்துக்கு அப்பால், கட்சிகளின் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப மக்களை வளைத்தெடுக்கும் வேலைகளைச் செய்ய வைக்கின்றது.

இவ்வாறான நிலையைத் தடுத்து, மக்களே பிரதான தரப்பினர் என்கிற நிலையைப் பேணுவதற்குத்தான், கல்விச் சமூகத்தினதும், சிவில் சமூகத்தினதும், ஊடகங்களினதும், மதத் தலைவர்களினதும் பங்களிப்பு அவசியமாகின்றது.

ஏனெனில், எப்போதுமே, மக்களிடம் பொதுவான தரப்பாக, இந்தத் தரப்புகளால் இலகுவாகத் தாக்கங்களை ஏற்படுத்த முடியும். அந்தத் தாக்கங்கள், அரசியல் கட்சிகளை நேர் வழிப்படுத்த உதவும். ஆனால், கடந்த காலத்தில் நிகழ்ந்து முடிந்திருப்பது உணர்த்துவது, அரசியல் கட்சிகளுக்கு எந்தவகையிலும் சளைக்காத அவலநிலையொன்றை இந்தத் தரப்புகள் பேணியிருக்கின்றன என்பதைத்தான். அதுதான், இந்தத் தரப்புகள் மீதும், மக்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதற்குக் காரணமாகும்.

நான்கரை ஆண்டுகளாகக் கிடைத்த வெளியைச் சரியாகக் கையாளாது விட்டு, தமிழ்த் தேசிய அரசியலைப் புதுப்பிக்காமல் விட்டுவிட்டு, இறுதி நேரத்தில் ஒப்பந்தங்களைப் போடுவதால் யாருக்கு என்ன இலாபம்?

இறுதி நேரத்தில் காணப்பட்ட இணக்கப்பாடு போன்றதொரு நிலைப்பாட்டை, ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்னரேயே கண்டிருந்தால்கூட, அதனை நோக்கி தென் இலங்கையையும் சர்வதேசத்தையும் குறிப்பிட்டளவு கையாண்டிருக்க முடியும்.

அவை, தேர்தல் இனவாத பிரசாரங்களுக்கு தற்போது தென் இலங்கையால் கையாளப்படுவதைக் காட்டிலும் ஏதோவொரு விதத்தில் தாக்கம் செலுத்தியிருக்கும். ஆனால், அதற்கான வாய்ப்புகள் திட்டமிட்டுக் கலைக்கப்பட்டுவிட்டதோ என்று சிந்திக்க வேண்டியிருக்கின்றது.

மாற்று அரசியலோ, மாற்றுத் தலைமையோ அரசியலில் ஆரோக்கியமான ஒன்று. ஆனால், அது, மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அதன் போக்கில் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

மாறாக, குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள்ளோ, வார இறுதி நாள்களின் சந்திப்புகளிலோ மாத்திரம் தீர்மானிக்கப்படக்கூடாது. அவ்வாறான சூழலை தமிழ்த் தேசிய அரசியல், சிவில் சமூகத் தரப்புகள் பேணியதாலேயே தேர்தல்களைப் பேரம் பேசும் கட்டங்களுக்கு அப்பால் நின்று அணுக வேண்டிய அவலநிலை தொடர்வதற்கு காரணம்.

இதற்கான பொறுப்பை, அரசியல் கட்சிகள் மாத்திரமல்ல, அரசியல் பேசிய அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான், இனியாவது, தவறுகளை உணர்ந்து அடுத்த கட்டங்களை நோக்கி இயங்க உதவும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + nineteen =

*