;
Athirady Tamil News

ஓர் அஸ்தமனத்தின் உதயம்? (கட்டுரை)

0

போருக்குப் பின்னரான, இன்றைய தமிழ்த் தேசிய அரசியலின் அண்மைக்கால செல்நெறியானது, என்றுமில்லாத அளவு ஓர் இக்கட்டான சூழலுக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. காரணம், ஐந்து கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகளும் அதன் பின்னரான அரசியல் சூழலும் ஆகும்.

தமிழ் மக்களின் அரசியல் கட்சித் தலைமைகளை ஒன்றிணைத்து முன்வைத்துள்ள 13 அம்சக் கோரிக்கைகளின் உள்ளடக்கமானது, சிங்களத் தேசியவாதிகளிடத்தில் எந்த அளவுக்குச் சாதகமான வகிபாகத்தைப் பெறும் என்பது, கடந்த கால அனுபவங்களில் இருந்து ஊகித்தறியக் கூடியதே. எதிர்பார்த்தது போலவே, சிங்களத் தேசியவாதிகளின் பரப்புரைகளும் கருத்துகளும் கண்ணோட்டங்களும் அமைந்துள்ளன.

தமிழரது உரிமைகள் தொடர்பான அடிப்படை விடயங்களுடன் அமைந்த, மேற்படி கோரிக்கைகள், சிங்கள அரசியல்வாதிகளால் எத்தகைய முரண்நிலையில் நோக்கப்படுகின்றன என்பது, தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதல்ல; ஆனால், அதற்குமப்பால் இந்த 13 அம்சக் கோரிக்கைகளைத் தயாரித்தவர்கள், அத்தகைய கோரிக்கைகள் தொடர்பான கருத்தாடல்களைப் புரிந்துதான் தயாரித்தார்களா, செயற்பட்டார்களா என்பதை விளங்கிக் கொள்ளமுடியவில்லை.

ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தமிழ்த் தலைமைகள், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் ​தொடர்பாகப் புரிந்து கொண்டுதான் கைச்சாத்திட்டனவா, இத்தகைய கோரிக்கைகளின் விபரீதங்கள் எத்தகையானவையாக அமைந்து விடும் என்ற ஊகங்களைப் புரிந்து கொண்டனவா என்பது, இன்று வௌிக்கிளம்பியுள்ள மிகப் பெரிய வினாவாகும்.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில், விடுதலைப் புலிகள் மிகவும் பலமுள்ள சக்தியாகத் திகழ்ந்த வேளை, எமக்கென்று ஒரு நிலப்பகுதி, அரசியற் கட்டமைப்பு, ஆயுத பலம் எல்லாம், பேரம் பேசும் பலத்தை, அன்றைய காலத்தில் தமிழருக்குக் கொடுத்திருந்தது.

ஆனால், அத்தகைய பலம்பொருந்திய சூழலில், தமிழ்த் தரப்பால் பேச்சுவார்த்தை மேசையில் விடுக்கப்பட்ட மேற்படி 13 அம்சங்களை அடியொற்றிய கோரிக்கைகளில் சிலவற்றைக் கூட, விடுதலைப் புலிகளால் வெற்றி பெற முடியவில்லை.

அத்தகைய சூழலில், தற்காப்பு அரசியலை மேற்கொண்ட சிங்களத் தேசம், சமஷ்டி அடிப்படையில் பேசுவதற்கு தயார் எனக் கூறிய போதும், பின்னர் அதை நிராகரித்து, இழுத்தடிப்புச் செய்துகொண்டு, மாவிலாறில் யுத்தத்தைத் தொடங்கி, தொடர் வெற்றிகளைப் பெற்று, புலிகளின் ஆயுதப் போராட்டத்தை மௌனிக்கச் செய்த பின்னர், ‘13 பிளஸ்’ அதிகாரத்தைத் தருவதாகச் சாக்குப் போக்குக் காட்டியது.

மேலும், சர்வதேச அழுத்தங்களின் பெயரால் முன்னெடுக்கப்பட்ட இடைக்கால அறிக்கைச் செயற்பாடுகளும் கிடப்பில் போடப்பட்டன. இத்தகைய சூழல் தோன்றும் முன்பே, ஜே.வி.பியால் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டன.

இத்தகைய சூழ்நிலைகள் அனைத்தையும் தமிழ்த் தரப்புகள் புரிந்துகொண்டிருந்தும் கூட, சிங்கள அரசாங்கத்தின் நீண்டகால இழுத்தடிப்புளை அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டிருந்தும் கூட, பல்கலைக்கழக மாணவர் சமூகமும், ஐந்து தமிழ்க் கட்சிகளும் ‘பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பது போல்’ செயற்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் கையறு நிலையில் இருக்கும்போது, அவர்களின் இருப்புக்கு பொருத்தமற்றதும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதும் என்றுமே நிறைவேற்றப்பட முடியாத கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டமை ஏன் என்ற கேள்வி எழுகின்றது.

இத்தகைய அணுமுைறை, தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியை, ஆட்சியாளர்கள் முற்றாக நிராகரிக்க வேண்டிய சூழ்நிலையையும் தமிழ்த் தரப்பைத் தட்டிக்கழித்துக் காலம் தாழ்த்தும் சூழ்நிலையையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது எனலாம்.

மேலும், சிங்கள ஆட்சியாளர்கள், தமிழ்த் தரப்புகளுடன் ஒப்பந்தத்தையோ, பேச்சுவார்த்தையையோ நடத்தினால், தாய் நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்கள் ஆகவும் நாட்டை பிரிப்பதற்கு சதி செய்பவர்களாகவுமே சிங்களப் பேரினவாதிகளால் சிங்கள மக்களுக்குக் காண்பிக்கப்படுவார்கள்.

எனவேதான், இத்தகைய சிக்கலில் இருந்து தப்பித்துக் கொள்ளவே, சிங்களத் தலைமைகள் தமிழ்த் தரப்புடன் பேசுவதற்கு மறுத்தும் வருகின்றார்கள்.

இத்தகைய பின்புலத்தில், கோட்டாபய, ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் பொதுஜன பெரமுன, “தமிழர்களுடன் பேசத் தயாரில்லை” என வெளிப்படையாகத் தெரிவித்திருக்கின்றது.

இத்தகைய மறுப்பு, தமிழரைப் பொறுத்தவரையில் எதிர்பார்த்த ஒரு விடயமாக இருந்தாலும் கூட, தமிழ்க் கட்சிகளின் நிலை, எதிர்கால அரசியலில் மிக மோசமான பின்னடைவுக்கு இட்டுச் செல்வதற்கு வழிவகுப்பதுடன், செல்லாக் காசாகவும் கருதுவதற்கு ஏதுவாக இருக்கும்.

ஏனெனில், மஹிந்தவைச் சார்ந்து நிற்கும் சிங்கள மக்கள், தமிழர் தீர்வு தொடர்பாக மஹிந்த எதுவும் செய்யமாட்டார்; நாட்டைப் பிரிக்க மாட்டார் என நம்புவதுடன், தமிழருக்கு எதையும் அவர் கொடுக்கத் தயாரில்லை என்பதையும் உணர்வார்கள்.

இந்நிலையில், தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி, பல்கலைக்கழக மாணவர்களின் துணையுடன் 13 அம்சக் கோரிக்கைகளில் கையெழுத்திட்ட கட்சிகள், நிறைவேற்ற முடியாத 13 அம்ச கோரிக்கைகளாலும் தமது பேரம் பேசும் சக்தியை இழந்துள்ளனர்.

ஏனெனில், ஏற்றுக்கொள்ளப்படாததும் நிறைவேற்றப்படாததுமான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத விடத்து, மாற்றுத் திட்டம் என்ன? அவை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் எவை? போன்ற தௌிவுபடுத்தல்கள் எவையுமே, இன்று தமிழ் மக்கள் முன் வைக்கப்படவில்லை.

இத்தகைய சூழலில், தமிழ்த் தரப்பு தனது நியாயங்களைத் தேர்தலில் பேரம் பேசும் கோரிக்கைகளாக முன் வைத்ததில் தவறில்லை. ஆனால், அவை எந்தளவுக்குத் தற்காலச் சூழ்நிலையில் சிங்கள ஆட்சியாளர்களால் பரிசீலிக்கப்படும், ஏற்றுக்கொள்ளப்படும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல், இது தயாரிக்கப்பட்டதா?

தமிழ் அரசியல் தலைமைகளைச் சிக்கலுக்குள் சிக்கவைக்க இது தயாரிக்கப்பட்டதா?
தமிழ்த் தலைமைகள் மீது முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளத் தயாரிக்கப்பட்டதா? என்ற பல்வேறு வினாக்கள் தமிழ் மக்களிடமிருந்து எழுந்துள்ளன.

ஏனெனில், நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகத் தமிழ்த் தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ள 13 கோரிக்கைகள் தொடர்பாக, சிங்கள ஆட்சியாளர்கள் கருத்தில் கொள்ளாதவிடத்து, மாற்று நடவடிக்கையாகத் தேர்தலைப் பகிஷ்கரிப்பதா? சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பதா? மக்களைத் தமது விருப்பத்தின் பேரில், சுயாதீனமாக வாக்களிக்க விட்டுவிடுவதா? போன்ற வினாக்கள் உள்ளன.

ஆனால், தற்போதைய சூழலில் 60 சதவீதத்துக்கு மேற்பட்ட விடயங்களை ஏற்றுக்கொண்டுள்ளதால், மக்கள் சக்தி வேட்பாளருக்கு (ஜே.வி.பி) ஆதரவு தெரிவிப்பதா?

ஏற்கெனவே, ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரை ஆதரிக்கவும் அதன் சார்பாகச் செயற்படவும் வியூகம் வகுக்கப்பட்ட போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர் நோக்கிய விமர்சனங்களைப் புறந்தள்ளவும் எதிர்கால அரசியல் களநிலைவரம் குறித்தும் அடைந்துள்ள அச்சநிலை காரணமாகவும் தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் சூழ்நிலைகளை பயன்படுத்துதல் என்ற நோக்கத்தில், இது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை நிராகரிப்பது என்பது தற்போதைய சூழலில், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களை ஓர் ஆபத்தான, சிக்கல் மிகுந்த இக்கட்டான கட்டத்துக்கு இட்டுச் செல்லும்.

ஏனெனில், ஜனாதிபதிப் பதவி என்பது நாட்டின் பலம் பொருந்திய அதிகாரத்தை நிர்வகிக்கும் தனி மனித சக்தி. எனவே, அதற்கு ஆதரவு வழங்காத சூழல் என்பது, எதிர்காலத்தில் தமிழர்கள் பழிவாங்கப்படும், அவர்கள் தம் அபிவிருத்திகளையும் தொழில் வாய்ப்புகளையும் அபிலாசைகளையும் அடைந்து கொள்வதற்கு எதிரான சூழ்நிலைகளாக அமைந்துவிடலாம்.

அதேபோல், வெல்லமுடியாத வேட்பாளரை ஆதரிப்பது என்பது, ‘முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது’ போன்றது. அது தேர்தல்த் தெரிவின் முடிவுகளை மறுதலையாக மாற்றி விடலாம். ‘செல்லாக்காசு’ அரசியலில் தமிழர் தரப்பைக் கொண்டுசென்று நிறுத்தி விடலாம்.

இவற்றைவிட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்களிடமே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதைச் சுயாதீனமாக முடிவெடுக்கும் படி கூறினால், தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எதிர்காலத்தில் ஒதுக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

ஏனெனில், தமிழ் மக்களை வழிப்படுத்த வேண்டிய அரசியல் தலைமைகள், தங்கள் சுயலாப அரசியல் காய்நகர்த்தல்கள் காரணமாக, இத்தகைய முடிவுகளையும் வழிப்படுத்தல்களையும் எடுக்க முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இது அரசியல் சாணக்கியமல்ல.

எனவே, மக்களுக்குப் பொருத்தமான தலைமைத்துவத்தைத் தமிழ் அரசியல் தலைமைகளால் வழங்க முடியாது விடின், இப்போது அரசியலில் இருப்பவர்கள் ஒதுங்கி வழி விட்டு, இளம் தலைமுறை புதிய முகங்களுக்கு வழி விட வேண்டும்; இல்லையேல், இத்தேர்தலுடன் தமிழ்த் தேசிய உரிமை அரசியலின் அஸ்தமனம் ஆரம்பமாகிவிடும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − 1 =

*