;
Athirady Tamil News

கடந்து வந்த பாதை!! (கட்டுரை)

0

இலங்கை அரசியலில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளில் ஆறாவது ஜனாதிபதியாக 2015ஆம் ஆண்டு பதவியேற்ற மைத்ரிபால சிறிசேனவின் பயணமும் அணுகுமுறைகளும் அதுவரை காலமும் பதவிவகித்த ஜனாதிபதிகளின் உத்திகளில் இருந்து எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை ஆராய்ந்து பார்ப்பதற்கு இது ஒரு தகுந்த காலமாகும்.

தமது பதவிக்காலத்தின் இறுதி சில தினங்களை கழித்துக்கொண்டிருக்கும் மைத்ரிபால சிறிசேன இதுவரை காலமும் இந்த நாட்டில் அப்பதவியை நோக்கி வந்த எவருமே கொண்டிராத பின்னணியை கொண்டிருக்கின்றது. பாடசாலை கல்விக்குள் மட்டுப்படுத்தப்பட்ட கல்வித் தகைமையையும் ஆங்கிலத்தில் போதுமான பரீட்சயமற்ற குடும்பப் பின்னணியையும் கொண்டிருக்கும் மைத்ரிக்கு சுமார் ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக அவர் பெற்ற செயற்பாட்டு ரீதியிலான அடிமட்ட அரசியல் அனுபவங்களே அவரை அப்பதவியை நோக்கி கொண்டு வந்தது.

நமது நாட்டு மக்களின் மனோநிலைக்கமைய ஆங்கில புலமையற்றது என்ற விடயம் பெரிதுபடுத்திப் பார்க்கப்பட்ட போதிலும் ரஷ்யா, ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் அரச தலைவர்கள் எல்லாவிதமான இராஜதந்திர உறவுகளையும் தத்தமது மொழிகளிலேயே மேற்கொண்டு வருகின்றமையும் மொழித் தேவைகளுக்காக பயிற்சிபெற்ற பன்மொழித் திறமைசாலிகளை உபயோகப்படுத்திக் கொள்வதுமே குறிப்பாக மேற்குறிப்பிட்ட நாடுகளினதும் உலக நாடுகளினதும் அரச தலைவர்கள் தமக்கு பரீட்சயமற்ற மொழிகளை கையாளும் கலையாகியிருந்து வருகின்றது. துரதிஷ்டவசமாக இதனை அறிந்தும் அறியாததுபோல் பசாங்கு செய்யும் படித்தறிந்த பலர் கூட படிக்காத பாமர மக்களை விட மிகுந்த கீழ்த்தரமாகவும் மிக இழிவான முறையிலும் மைத்ரியின் ஆங்கில மொழி பரீட்சயமின்மையை ஏளனம் செய்துவந்த விதமானது, அவர்களை தமது அறியாமையால் வெக்கித் தலைகுனிய வைத்திருக்கின்றது.

இந்த நாட்டில் இதுவரை காலமும் நிறைவேற்ற அதிகார ஜனாதிபதி பதவியை வகித்து வந்த டி.பி.விஜேதுங்கவைத் தவிர்ந்த ஆண், பெண் வித்தியாசமின்றி அனைத்து ஜனாதிபதிகளும் தமது பதவிக்காலத்தில் தமது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்தார்கள். பாதாள உலக கோஷ்டியினருடன் தொடர்புகளை வைத்திருந்தார்கள். அதைக்கொண்டு தமக்கு சகிக்காதவர்களை துன்புறுத்தினார்கள், மனித படுகொலைகளை மேற்கொண்டார்கள், பொதுச் சொத்துக்களை கொள்ளையடித்தார்கள் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவர்கள் பதவி வகித்த காலங்களிலேயே சுமத்தப்பட்டு வந்திருக்கின்றன. அதனுடன் ஒப்பிடுகையில் மைத்ரிபால சிறிசேன அவ்வாறான எந்தவித குற்றச்சாட்டுக்களுக்கும் ஆளாகாது இருந்திருக்கின்றார் என்பதை மறுப்பதற்கில்லை. மறுபுறத்தில் அவரது அந்த நன்னடத்தையானது இலங்கை அரசியலுக்கு ஒரு புதிய அனுபவத்தையும் அத்தியாயத்தையும் பெற்றுக்கொடுத்திருக்கின்றது.

இதுவரை காலமும் இந்த நாட்டை ஆண்ட ஜனாதிபதிகளில் ஜே.ஆர்.ஜயவர்தனவை தவிர்ந்த ஏனைய அனைத்து ஜனாதிபதிகளும் ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகை ஆகிய இரண்டையுமே தமது உத்தியோகபூர்வ இல்லங்களாக உபயோகப்படுத்தி வந்திருக்கின்றார்கள். சமகாலத்தில் இந்த இரு வாசஸ்தலங்களையும் உபயோகப்படுத்தியதில் சந்திரிக்கா அம்மையார் மற்றும் மஹிந்த ராஜபக்‘ ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தமது பதவிக்காலத்தில் தாமே உருவாக்கிக்கொண்ட ‘சுசரித’வை தமது வதிவிடமாக கொண்டிருந்த அதேவேளை, மைத்ரிபால சிறிசேன மஹகமசேக்கர வீதியில் அமைந்திருக்கும் இல்லத்தையே தமது உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்தி வந்திருக்கின்றார்.

கோட்டை ஜனாதிபதி மாளிகையின் ஒரு மாதகால மின்சாரக் கட்டணமே 20 இலட்ச ரூபாவை தாண்டிச் செல்வதால் ஒட்டுமொத்த பராமரிப்புச் செலவு பல கோடிகளைத் தாண்டிச் செல்லும் என்பதனாலேயே மைத்ரி ஜனாதிபதி மாளிகைக்கு பதிலாக மஹகமசேக்கர மாவத்தை இல்லத்தை தமது உத்தியோகபூர்வ வதிவிடமாக தேர்ந்தெடுத்தார். நாட்டைப் பொறுத்தவரையில் அது ஒரு நல்ல முன்மாதிரியாகும்.

இலங்கையின் அரசியல் யாப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்கான அசாமான்ய அதிகாரங்களை பிரான்ஸ், ஜேர்மன், அமெரிக்கா ஆகிய நாட்டு ஜனாதிபதிகளின் உச்சகட்ட அதிகாரங்களை உள்வாங்கி, உருவாக்கிய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன உலகில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத அளவு அதிகாரங்களைக்கொண்ட ஜனாதிபதிப் பதவியை இந்த நாட்டில் ஸ்தாபித்ததோடு மேற்குறிப்பிட்ட நாடுகள் உள்ளிட்ட எந்தவொரு நாட்டினதும் ஜனாதிபதிக்கு தமது பதவிக்காலம் முடிந்த ஓய்வு காலத்தில் கிடைக்கப்பெறாத அசாமான்ய சலுகைகளையும் ஓய்வுபெற்ற ஜனாதிபதிக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற சட்ட திட்டங்களை நிறைவேற்றி வைத்துவிட்டே சென்றிருக்கின்றார்.

தனிப்பட்ட ரீதியில் தமது பதவிக்காலம் முழுவதிலும் ஓய்வு பெற்றது முதல் இறுதி மூச்சு வரையிலும் ஓட் பிலேசில் அமைந்திருந்த தனக்கே சொந்தமான சாதாரண வீட்டில் அவர் குடியிருந்த போதிலும் அவரையடுத்து வந்த அனைத்து ஜனாதிபதிகளும் தமது ஓய்வு காலத்தின் பின்னரான காலத்தை கழிப்பதற்கு பூரண அரச செலவிலான புனரமைப்பு, பராமரிப்பு, பாதுகாப்பு, வீட்டு மற்றும் அலுவலக பணிகளுக்கான ஆளணிகள், பெறுமதிமிக்க வாகனங்கள் உள்ளிட்ட சகல வசதிகளையும் பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள். முன்னாள் ஜனாதிபதிகளில் அகால மரணத்தை தழுவிய ரணசிங்க பிரேமதாசவின் பாரியார் அன்று முதல் இன்று வரையும் அவரையடுத்து வந்த டி.பி.விஜேதுங்க மற்றும் அவரது புதல்வியுடன் இறுதி மூச்சு வரையிலும் அதையடுத்து வந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கும் கொழும்பு 07 இல் அமைந்திருக்கும் அதிசொகுசு அரச இல்லங்கள் ஒதுக்கிக்கொடுக்கப்பட்டிருக்கின்றன.

அந்த அடிப்படையிலேயே தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தமது பதவிக்காலத்தில் தமது விருப்பு, வெறுப்புகளுக்கேற்ப உருவாக்கிக்கொண்ட மஹகமசேக்கர வீதியில் அமைந்திருக்கும் இல்லத்திலேயே ஓய்வுபெற்றதன் பின்னரும் வசிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டிருக்கின்றார். அதற்கமைய அவருக்கும் அவரது பாரியாருக்கும் அவர்களது வாழ்நாள் முழுவதும் அந்த இல்லத்தில் வசிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெற்றிருக்கின்றது. ஆயினும் அந்த அரச இல்லத்தினை மைத்ரிபால சிறிசேனவிற்கோ, அவரது பாரியாருக்கோ உயில் எழுதி சொந்தமாக கொடுக்கவில்லை என்பது மிக முக்கியமான விடயமாகும். ஆயினும் உண்மையை திரித்துப்பேசும் சில சமூக ஊடகங்கள் மைத்ரிபால சிறிசேன வசித்து வந்த வீட்டை தனக்கு சொந்தமாக்கி கொண்டார் என்ற போலிப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

தமது பதவிக்காலத்தில் சாதாரண பொதுமக்களை எந்நேரத்திலும் சந்தித்து, அவர்களது பிரச்சினைகளை சிநேகபூர்வமாக கேட்டறிந்து, அதற்கான பரிகாரங்களை உடனுக்குடன் பெற்றுக்கொடுப்பதிலும் ஒரு புதிய நடைமுறையை பின்பற்றி வந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள், தான் விடைபெறும் வேளையிலும் பதவியேற்கும் ஜனாதிபதியை மனமகிழ்வுடன் வரவேற்று அவரை வாழ்த்தி விடைபெறக்கூடிய மனநிலையில் இருந்து வருகின்றமையும் புதிய ஜனாதிபதியாக பதவியேற்பவர் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகின்றபோது அந்த அலுவலகம் புதுப்பொலிவுடன் திகழ வேண்டும் என்ற எண்ணத்துடன் அதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்ற விதமும் பாராட்டத்தக்க விடயங்களாகும். இதன் மூலம் இதுவரை காலமும் இந்த நாட்டில் இருந்து வந்த புதிய ஜனாதிபதி பதவியேற்றபின் பழைய ஜனாதிபதி தலைமறைவாகிவிடும் சம்பிரதாயத்தை மாற்றியமைத்து வரலாறு படைப்பதற்கான வாய்ப்பு இன்னமும் மைத்ரியிடம் இருந்தே வருகின்றது.

ஒரு சாதாரண மனிதன் என்ற வகையில் அவரது ஆட்சிக் காலத்தின்போது அவர் தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ மேற்கொண்ட செயல்களையும் பேசிய வார்த்தைகளையும் திரித்தும் ஏளனப்படுத்தியும் வந்த சமூக ஊடகங்கள் அவர் பதவியிலிருந்து ஓய்வுபெறும் இந்நேரத்திலாவது இந்த நாட்டின் ஆறாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்த மைத்ரிபால சிறிசேனவின் குறை, நிறைகளை உரிய முறையில் சீர்திருத்திப்பார்த்து மக்களுக்கு அறிய கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 1 =

*