;
Athirady Tamil News

ஆயிரம் ரூபா கதைகள் இன்னும் எத்தனை காலங்களுக்கு? (கட்டுரை)

0

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கூட்டு ஒப்பந்தம் எழுதப்படும் காலங்களிலும் வருடந்தோறும் தொழிற்சங்க அங்கத்துவ படிவம் பெறுகின்ற போதும் பிரதேச சபை, மாகாண சபை , பாராளுமன்றத் தேர்தல் காலங்களில் மட்டுமே தொழிலாளியின் கண்களில் வெறுங் காகிதங்களாக சம்பள உயர்வு காணப்படும். அந்த நேரத்தில் படகோட்டிகளாக தலைவர்கள் ஓடங்களைச் செலுத்திப் போவார்கள். திடீரென பார்த்தால் கம்பனிகளின் பயணக்கப்பலில் தாவி ஏறிக்கொண்டு தொழிலாளர்களைப்பார்த்து நீந்திக் கரையேறுங்கள் என்று கூவுவார்கள் , கொக்கரிப்பார்கள்.

இந்த காட்சிகள் ஐந்து வருடங்களில் இரு தடவைகள் இடம்பெறும். அதன் பிறகு தான் தேர்தல்கள் வந்து விடுமே. அதற்கும் ஏதாவது மிச்சம் வைத்திருக்க வேண்டுமல்லவா?

இம்முறை இருபெரும் கட்சிகளின் வேட்பாளர்களான புதிய ஜனநாயக முன்னணியின் சஜித் பிரேமதாஸவும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷவும் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைக் கொண்டு வருவோம் என மேடைகளில் முழங்கி வாக்குறுதி அளித்து வருகின்றார்கள். அதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரிக்கும் கோத்தாபய ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். இதன்படி ஒரு தொழிலாளி 26 வேலை நாட்களுக்கு 1000 ரூபா படி 26 ஆயிரம் ரூபாவை சம்பளமாக பெறுவார் என வாய்மொழி வசனங்கள். தெரிவிக்கப்படுகின்றன. இதே வேளை, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான நவீன் திசாநாயக்கா ஒரு சந்தர்ப்பத்தில் தொழிலாளி ஒருவருக்கு மேலதிகமாக மாதமொன்றுக்கு 50 ரூபாவை வழங்கினாலே கம்பனிகள் நசிந்து, முறிந்துவிடும் எனக் கூறியதையும் இங்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவுடன் கொழும்பு, கண்டி, பதுளை, நுவரெலியா மாவட்டங்களிலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவான தமிழ்த் தலைவர்கள் அனைவரும் இணைந்து ஆதரிக்கும் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் ஆயிரத்து ஐநூறு ரூபா வேதனம் தருவதாக மேடையில் பேசியுள்ளார். அதன்படி 26 வேலை நாட்களுக்கு 39 ஆயிரம் ரூபா வரை ஒரு தொழிலாளிக்கு சம்பளம் கிடைக்க வேண்டும். ஆனால் தேர்தலின் பின் நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை ஆராய்ந்து பார்த்தால் புதிய ஜனாதிபதியாக யார் வந்தாலும் தொழிலாளர் சம்பள உயர்வை எள்ளளவும் உயர்த்த முடியாத நிலைமையே காணப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடன் புதிய ஜனாதிபதியோ அல்லது சபாநாயகரோ ஒரு பொதுத் தேர்தலை உடனே அறிவிப்பார்.

ஜனாதிபதித் தேர்தல் செலவு எழுநூறு கோடியுடன் புதிய பாராளுமன்ற செலவு ஆயிரம் கோடியும் சேர்த்து ஆயிரத்து எழுநூறு கோடி- ரூபா கணக்குக் காட்டப்படும். தேர்தல் திணைக்களம் தயாரிக்கும் செலவுப் பொதி தோட்டத் தொழிலாளியின் சம்பள உயர்வுக்கு சம்மட்டி அடியாக விழும். எனவே இவர்கள் கூறும் சம்பளத்தைப்பெற புதிய அமைச்சரவை, புதிய வரவு – செலவுத் திட்டம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகும். அதன்படி சம்பள உயர்வுக்கு தடையாக இருந்தது தொண்டமான் எனவும் திகாம்பரம் எனவும் பழி சுமக்க இருபக்க தலைவர்களும் இருப்பதால் கோத்தாபயவும், சஜித் பிரேமதாஸவும் தங்கள் முன்னாள் ஜனாதிபதி குடும்ப வாரிசுகள் என சர்வதேசத்தில் காலூன்றி புகழ் பெறுவார்கள்.

அவர்களுக்கு இந்தியா, சீனா, அமெரிக்கா, நோர்வே போன்ற நாடுகள் பல்லாக்கு கொடுத்து மரியாதை செய்யும். அதனை இராஜதந்திரம் அல்லது அரசியல் நாகரீகம் எனவும் தொலைக்காட்சிகள் நேரடிக் காட்சிகளாக காட்டும். எனவே ஏமாற்றத்தை தாங்கி பழக்கப்பட்ட உழைக்கும் வர்க்கம் அடிவயிற்றில் விழும் அடிகளையும் நெஞ்சில் விழும் உதைகளையும் தாங்கிக் கொண்டு- தமது சம்பளக் கோரிக்கைகளை யார் நிறைவேற்றுவார் என தமது பிரதிநிதிகளையும் புதிய ஜனாதிபதியையும் மாறி மாறி கழுத்து சுளுக்கு ஏற்படும் வரை பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். இந்நாட்டில் நீதி அமைச்சின் கீழ் நீதிமன்றங்கள் இயங்குகின்றன. நீதிபதி ஒருவர் ஒரு இலட்சம் ரூபா வரை சம்பளமாக பெறுகிறார், சுகாதார அமைச்சின் கீழ் வைத்திய சேவை நடைபெறுகின்றது.

வைத்திய சேவை நிபுணர்கள் ஒரு இலட்சம் ரூபா வரை சம்பளம் பெறுகிறார்கள். அத்துடன் ஒரு நாளில் வைத்திய நிபுணர்கள் ஐம்பதாயிரம் முதல் ஒரு இலட்சம் வரை பிரத்தியேக கிளினிக் வருகைகள் மூலம் வருமானத்தை தேடிக் கொள்கிறார்கள்.

இதனை கரையோர கம்பனிகளும் ஆன்மிக தலைவர்களும் நன்கு அறிவார்கள். அவ்வாறு வருமானம் பெறுபவர்களை மல்யுத்தம் ஒன்றுக்கு அழைக்கும் வலிமை இவர்களுக்கில்லை.

ஆனால் கல்லிலும், முள்ளிலும் அடிபட்டு மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் பசியால் உழைக்கும் தொழிலாளி தட்டுப்பாத்திரத்தில் ஏதாவது விழுமா ? என கேட்கும் ஜனநாயக குரல்வளையை மட்டும் நெறித்துவிட பலரும் தயாராகவே உள்ளனர். அவர்களை தமது கைகளுக்குள் கொண்டு வரும் கம்பனிகளோ சர்வதேச கூலிகளுக்கு எவ்வளவு சம்பளம் ? உலக அடிமைகளுக்கு எவ்வளவு கூலி ? என புள்ளி விபரம் பேசி தொழிலாளர் சம்பளக் கோரிக்கையை இல்லாமலாக்கி விடுவர்.

பல சந்தர்ப்பங்களில் பணப்பெட்டிகளும், கார் சாவிகளும், விமானப்பயணங்களும் தொழிலாளர் சம்பள உயர்வைத் தடுத்து விட்டன என்பதை தொழிலாளி தெரிந்துக் கொள்ள ஆரம்பித்துள்ளமை முக்கியம் அல்ல. தனது வாக்கு ஆயுதத்தை சரியான திசையில் காட்டி தமது சம்பளக் கோரிக்கையை வலியுறுத்துவதே இங்கு முக்கியம்.

கூலி, வேலையாள் என்ற பதங்கள் நீக்கப்பட்டு தொழிலாளி என்ற பதம் எழுதப்பட்டது போல் நாள் சம்பளம் என்பதை விட்டு மாத சம்பளம் என்ற பதம் 2020 இல் தோட்டங்களில் வழங்கப்படும் ஒரு நாளை உருவாக்க புதிய சக்திகள் குரல் கொடுக்க வேண்டும். புகையிரத தொழிலாளர்கள், கமத்தொழில் தொழிலாளர்கள் என அரசாங்க தொழிலாளர்கள் காணப்படுகின்றனர். அவர்களுக்கு அரசு மாத சம்பளம் வழங்குகிறது. அவர்களுக்கு ஓய்வூதியமும் கிடைக்கிறது. அதற்கிடையில் விவசாய ஓய்வூதியம், மீனவர் ஓய்வூதியம் என தெற்காசியாவிலும் சர்வதேசத்திலும் குரல்கள் ஒலிக்கின்றன.அதே போல் தோட்டத் தொழிலாளிக்கு மாத சம்பளமும் ஓய்வூதியமும் சர்வதேச நியதிகளுக்கு புறம்பானவை அல்ல என்பதை தொழிற்சங்கங்களிடம் சம்பளம் வாங்கும் சட்டத்தரணிகளும் கொழும்பு நீதி மன்றங்களில் சட்டம் பேசும் மலையக சட்டத்தரணிகளும் தாம் பிறந்த மண்ணுக்காக வாதிட்டு உரிமையைப் பெற்றுத்தர வேண்டும். தேர்தல் கால கோரிக்கைகள் இப்படித்தான் இருக்க வேண்டும்.

தோட்டத் தொழிலாளிக்கு அடிப்படை சம்பளமாக 13, 200 ரூபா பெற்றுக் கொள்ள முடியும். இது இரு ஜனாதிபதி வேட்பாளர்களும் கூறி வரும் சம்பளத்திலும் அரைவாசியாகும். அத்துடன் ஞாயிறு தினங்களில் விசேடபடியாக ஆயிரம் ரூபாவை ஒன்றரை நாள் சம்பளமாக பெற முடியும். 13 , 200 + 4000= -17, 200 ரூபா. இவற்றைவிட பெண் தொழிலாளர்கள் 18 கிலோவுக்கு மேல் பறிக்கும் கொழுந்து மாதமொன்றுக்கு சராசரி 100 கிலோ. 4000 / = எனவே ஒரு குடும்பம் மாதம் ஒன்றில் 38 , 000 = சம்பளமாக பெறமுடியும் இவ்வாறு ஒரு மாதச் சம்பளமே வரவு செலவு திட்ட சம்பள உயர்வு, ஊக்கப்படி உயர்வு, கஷ்டப்பகுதி படி, வாழ்க்கைச் செலவு படி என பல சம்பள முறைமைகளை எதிர்காலத்தில் கேட்டுப் பெற வழிவகுக்கும். இந்த விடயங்களை பேசவும் செயற்படுத்தவும் வேற்றுக் கிரகத்திலிருந்து எவரும் வரப்போவதில்லை. தொழிலாளர்களின் சம்பளத்தை அவர்களைத் தவிர வேறு யாரோ தீர்மானிக்கும் நிலைமை இல்லாது போகும் காலத்தில் தான் இவர்களுக்கு இவ்விடயத்தில் விடிவு பிறக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × three =

*