;
Athirady Tamil News

‘மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா’ !! (கட்டுரை)

0

ஸ்ரீ லங்காவின் எட்டாவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலில், தத்தமது தரப்புகளின் தேர்தல் வெற்றியை ஈட்டிக் கொள்வதற்கான கொள்கைப் பிரகடனங்களைத் தேர்தல் விஞ்ஞாபனங்களாக, ஏட்டிக்குப் போட்டியாக வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஸ்ரீ

இத்தகைய சூழலில், தமிழ்த் தேசிய அரசியலில் 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பான மாற்றுத் தீர்வு முன்மொழிவொன்றை, புதிய ஜனநாயக முன்னணி, கடந்த வார இறுதியில் வெளியிட்டிருந்தது.

இதில், ‘பிளவுபடாத ஒன்றுபட்ட நாட்டுக்குள், ஒற்றையாட்சி முறையில் மாகாணங்களுக்கான உச்ச வரம்பிலான அதிகாரப்பகிர்வு, காணி, அபிவிருத்தி, நிதி, தொழில்வாய்ப்பு’ போன்ற பல்வேறு அம்சங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

இத்தகைய அம்சங்கள், தமிழ்த் தரப்பைப் பொறுத்தவரையில், அவர்கள் முன்வைத்த 13 அம்சக் கோரிக்கைகளை, இக்கட்சியும் நிராகரித்துள்ளதாக வெளிப்படையாக நோக்கப்பட்டாலும், அதன் உள்ளார்ந்த அம்சங்களை நுணுகி ஆராய்ந்தால், ஆரோக்கியமான அம்சங்கள் பல உள்ளடங்கி இருப்பதை அவதானிக்கலாம்.

இது ஒரு புறமிருக்க, தமிழர் அரசியலில் மனத்தளவு புரிதல் ஒப்பந்தம், இரகசிய ஒப்பந்தம் என ஒப்பந்தங்கள் செய்யப்பட்டும் கூட, எத்தகைய தீர்வுகளையும் தமிழ் அரசியல்வாதிகளால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.

இவ்வாறானதொரு நிலையில், ஜனாதிபதியின் ஆட்சிக் காலம் நிறைவுறும் தறுவாயில், நல்லாட்சி பிளவுபட்டு, மீண்டும் இரண்டு அணிகளாக, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சூழலில், சுதந்திரக் கட்சி தனது முகவரியை இழந்து தவிக்கிறது.

எனினும், சந்திரிகாவின் வருகையும் புதிய ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கான ஆதரவு அறிவிப்பும் மொட்டு அணியினரைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியைப் பொறுத்தவரையில், பலம்பொருந்திய தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகளுடன் தனது பலத்தைப் பெருக்கிக் கொண்டுள்ளது. இச்சூழலில், சுதந்திரக் கட்சி, சந்திரிகாவின் பலம், இன்னொரு பலமாகச் சேர்ந்துள்ளது.

ஆனால், மொட்டுக் கட்சியைப் பொறுத்தவரையில், அவர்களிடம் இனவாதமே உள்ளது; இனவாதக் கட்சிகளின் கூட்டாகக் காணப்படுகின்றது என்றே சொல்லலாம். பிரசார மேடைகளை விட, ‘வீடு தோறும் விளம்பரம்’ என்பது, இனவாத விளம்பரமாகப் பிரசாரமாகவே அமைகிறது.

சிங்களப் பிரதேசங்களில், நாட்டைத் தமிழருக்குக் கொடுக்கப் போகிறார்கள் என்றும், முஸ்லிம் பிரதேசங்களில், தமிழரால் ஆபத்து வரலாம்; வராமல் இருக்க ஆதரிக்க வேண்டும் என்றும் தமிழர் பிரதேசங்களில், முஸ்லிம்களால் ஆபத்து வராமல் இருக்க, தமிழர்கள் தமக்கே வாக்களிக்க வேண்டுமென்றும், எழுத்தில் உத்தரவாதம் இல்லாவிட்டாலும், ‘அண்ணன் கோட்டா, சொல்வதைச் செய்வார்கள்; செய்வதையே சொல்வார்’ என்றும் பிரசாரமாக அரங்கேறுகிறது. ஆயினும், இத்தகைய இனவாத பிரசாரங்களை யார் முன்னெடுக்கிறார்கள் என்றால், மொட்டுடன் கூட்டு வைத்துள்ள, மக்கள் ஆதரவற்ற உதிரிக் கட்சிகள்தான்.

கிழக்கைப் பொறுத்தவரையில், மொட்டுவை ஆதரிக்கும்படி, 13 தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டாகத் தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்நாடகத்தில், வியாழேந்திரன், முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இருவருக்குமே ஓரளவு மக்கள் செல்வாக்குண்டு.

ஏனைய கட்சிகளைப் பொறுத்தவரையில், அக்கட்சித் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடுகின்ற போது பெற்ற வாக்குகள், 100க்கும் குறைவானவையே. இத்தகைய சூழலில், இவர்கள் எல்லோரும் தங்கள் அரசியல் இருப்புக்காக, முஸ்லிம் இனவாதத்தைக் கையில் எடுத்திருப்பது, ஆரோக்கியமானது அல்ல.

ஒவ்வோர் இனமும், அது சார்ந்த விடயத்தில் தனது சமூகத்துக்காகக் குரல் கொடுப்பதும் உழைப்பதும் தவறில்லை; அதையே முஸ்லிம் சமூகம் செய்கிறது.

ஆனால், தமிழ்ச் சமூகத்தின் அரசியல் வங்குரோத்துத்தனம், தமிழ் சமூகம் சிந்தனையற்றதாகவே இருக்கிறது. மொத்தத்தில், பாதிப்படையும் போதெல்லாம், தமது இயலாமையை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் ஓர் ஆயுதமாக, இனவாதத்தை முன்னெடுத்திருப்பது பொருத்தமற்றது.

குறிப்பாக, இந்த உதிரிக் கட்சிகள், இத்தகைய முனைப்புகளை முன்னெடுப்பது, தேசிய அரசியலிலும் இரு சமூகங்களிலும் முரண்பாட்டைத் தோற்றுவிக்கக் காரணமாக உள்ளது. இச்சூழல் தவிர்க்கப்பட வேண்டியது என்பது, தமிழ் மக்களின் பெரும் எதிர்பார்ப்பாகும்.

இது இவ்வாறிருக்க, தமிழர் தீர்வு தொடர்பாக, புதிய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக நோக்குகையில், ஜனாதிபதித் தேர்தலில் வெளிப்படையாக எவருடனும் தான் ஒப்பந்தம் செய்யப் போவதில்லை என்றும் தாய்நாட்டைத் தான் காட்டிக் கொடுக்கப் போவதில்லை என்றும் தனது கட்சி சார்பாகச் சகல இனங்களையும் சமத்துவமாக நடத்துகிறேன் எனவும் சம அந்தஸ்து வழங்குவேன் எனவும் அரசியல் மேடைகளில் கருத்துக் கூறிவரும் சஜித், தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில், தமிழர் தரப்புக்கு எத்தகைய தீர்வை முன்வைக்கப் போகிறேன் என்பதைத் தாமாக முன்வந்து தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில், ஆட்சி மாற்றங்களின் போது, காலத்துக்கு காலம் தமிழர் தரப்பு பிரச்சினை தொடர்பாக, ஆள் மாறிமாறிக் குற்றம் சுமத்தும் சூழல் இன்றும் தோன்றியுள்ளது. ஆனால், இம்முறை இத்தகைய சூழலின் வீரியம் குறைந்துள்ளது.

ஏனெனில், எவருடனும் ஒப்பந்தம் செய்யத் தயாரில்லை எனக் கூறி ஒப்பந்தம் இன்றி சஜித் முன்வைத்துள்ள தமிழருக்கான அரசியல் தீர்வு திட்டமும், ஏனைய கல்வி, பொருளாதார, காணி, கைதிகள் விடுவிப்பு, அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் தொடர்பாகவும் இனவாதக் கட்சிகள் கடந்த காலங்களில் கூறிவருவதுபோல், ஒப்பந்தம் செய்ததாகவோ காட்டிக் கொடுத்ததாகவோ கூற முடியாது. அவ்வாறு கூறினாலும், இவை தேர்தல் பிரசார மேடைகளில் எடுபடாச் சூழல் ஒன்றைத் தோற்றுவித்துள்ளது

மேலும், இன்றைய அரசியலில் மாறிவரும் உலக ஒழுங்குக்கு ஏற்ற யதார்த்தமான, அரசியல் சூழலைப் புரிந்துகொண்டு கிடைக்கக்கூடியதைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். அதற்கான ஜனநாயக சூழலை, இந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் கோடிட்டுக் காட்டுகிறது.

இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில், போட்டியிடும் 35 வேட்பாளர்களில் குறிப்பாக ஜே.வி.பி, மார்க்சிஸ்ட் கட்சி, ஐ.தே.க ஆகிய மூன்று கட்சிகளே தமிழர் பிரச்சினை தொடர்பாகப் பேசியுள்ளனர்.

இதில் ஜே.வி.பி, மார்க்சிஸ்ட் கட்சி இரண்டும் ஆட்சியை பிடிக்கப் போவதில்லை. ஆனால், ஆட்சியைப் பிடிக்கக்கூடிய போட்டிக்குரிய கட்சியாக ஐ.தே.க கட்சியே உள்ளது. இந்தவகையில், கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழர் தேசிய அரசியல் தொடர்பாகப் பேசுவதற்கான ஒரு களத்தை ஏற்படுத்தித்தந்துள்ளது; இதனைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வது புத்திசாலித்தனமானது. இதைவிடுத்து, “இவை சரிப்பட்டு வராது” என முடிந்த முடிவாகத் தேர்தலைப் பகிஷ்கரிப்பது, நிராகரிப்பது என்பதும் ஜனநாயகப் பாதையை தவிர்த்து, சர்வாதிகாரக் கதவைத் திறந்து விட வாய்ப்பை ஏற்படுத்துவதாகவே அமையும்.

இந்தவகையில், தமிழ்த் தேசியக் கட்சிகள் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் பழைய கதைகளைத் திரும்பத் திரும்பக் கூறாமல், மாறிவரும் உலக ஒழுங்கு முறைக்கு ஏற்ப, பிராந்திய அரசியல், சர்வதேச அரசியல் சூழ்நிலைக்கு, துலங்கும் வகையில், நடைமுறைச் சாத்தியமான ஒரு தீர்வு நோக்கி நகர வேண்டும். இல்லையேல் ‘மூர்க்கனும் முதலையும் கொண்டது விடாது’ எனத் தற்போதைய அரசியல் நிலைமைகளை நிராகரிப்பது என்பதும் பகிஷ்கரிப்பது என்பதும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

அத்தகைய அரசியல் முடிவுகளுக்குத் தமிழ் கட்சிகள் யாராவது தமது சுட்டுவிரலை நீட்டுவார்களாக இருந்தால், பிழையானதோர் அரசியல் வழிப்படுத்தலுக்காக எதிர்காலத்தில் அவர்கள் பதில் சொல்ல வேண்டி ஏற்படும்.

இன்றைய அரசியல் சூழல் என்பது, இரு போட்டிக் கட்சிகளுக்கு ஆதரவளிக்கா விட்டால், எதிர்காலத்தில் இவ்விரு கட்சிகளாலும் தமிழர் புறக்கணிக்கப்படுவதற்குரிய சாத்தியப்பாடுகள் உண்டு.

அதேவேளை, தமிழ் அரசியலில் ஐ.தே.க கட்சியை ஆதரிக்க முடியாது எனக் கருத்துத் தெரிவிக்க முனையும் காட்சிகளும் தேர்தலைப் பகிஷ்கரிக்கச் சொல்லும் கட்சிகளும் கோட்டாவை ஆதரிக்கும் கட்சிகள், ஏதோ ஒரு மாற்று அணியில் தப்பிப் பிழைத்து, அரசியல் நடத்தினாலும், இந்த இரு கட்சிகளின் பக்கமும் நிற்காமல், தமிழ் அரசியலை ஐ.தே.க கட்சியின் வெற்றியின் பின், மொட்டுக் கட்சியின் வெற்றியின் பின், ஏதாவது அரசியல் நடத்துவது என்ற நிலையே ஏற்படும்.

ஐ.தே.க கட்சி வென்றால் வடக்கு, கிழக்கில் கூட்டமைப்பு பெருத்த செல்வாக்குடன் திகழும்; மக்கள் ஆதரவு வலுப்பெறும். ஆனால், மொட்டு வென்றால் ஈ.பி.டி.பியின் கை ஓங்கும். இத்தகைய சூழலில் சீ.வி.விக்னேஸ்வரனின் கட்சியும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியும் தனது அரசியல் பலத்தை மேலும் மேலும் இழக்கும். ஆட்சி, அதிகாரம் அற்று தொடர் தோல்விகளால் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டிய ஒரு சூழ்நிலைக்குச் செல்லும். தமிழ் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில், இத்தேர்தல் தமது அரசியல் பலத்தை நிரூபிக்கும் அதேவேளை, தங்கள் வாக்குப் பலத்தை, தங்கள் கட்சிக்குள் உறுதிப்படுத்துவதோடு எதிர்கால அரசியல் தளத்தைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாக அமையும்.

எனவே, தவறான முடிவுகளால் தமிழ் அரசியல் மீண்டும் ஓர் இருண்ட யுகத்துக்குச் செல்லாதிருக்க தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு, ஒருமித்த முடிவாக ஜனநாயகத்தைப் பாதுகாப்பதுடன் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுக்கான சாணக்கிய தளத்தை அமைக்க முன்வர வேண்டும். இல்லையேல், தமிழர் தாம் விரும்பியவர்களுக்கு வாக்களிக்கும்படி வழிப்படுத்துவது என்பது, நமது அரசியலில் இவர்கள், தளம் இயலாமையின் வெளிப்பாடாகவே அமையும்.

எனவே, இத்தகையதொரு வரட்டுத்தனமான முடிவுகளை, எந்தக் கட்சியும் விரும்பாது. அவ்வாறு வருமாக இருந்தால் வழிப்படுத்த முடியாத தலைமைத்துவம் உள்ள கட்சிகளாக இவற்றை தமிழ் மக்கள் கருதி இவர்களைத் தமிழ் அரசியலில் இருந்தே நிராகரிப்பர். இது இவர்களுக்கு ஒரு வகையில் வாழ்வா? சாவா என்ற போராட்டம் தான். இந்த அரசியல் யதார்த்தத்துக்குக் காலம் பதில் சொல்லும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 1 =

*