;
Athirady Tamil News

எதிர்மறை நிலையை உருவாக்கிய கூட்டமைப்பினரின் இராசதந்திர நடவடிக்கை!! (கட்டுரை)

0

இந்த கட்டுரையை எழுத முதல் ஒரு கதையை சொல்ல வேண்டும், ஒரு குளிர்கால இரவில் சில குரங்குகள் சேர்ந்து தீ மூட்டி குளிர்காயலாம் என முடிவெடுத்து விறகு கட்டைகளை பொறுக்கி அடுக்கிய பின் நெருப்புக்கு எங்கே போவது என யோசித்த வேளை அவ்விடத்தில் பறந்த வந்த மின்மினி பூச்சியை பிடித்து விறகு கட்டைகளுக்கு இடையில் செருகி சுற்றியிருந்து குரங்குகள் தீ உருவாக்க வாயால் காற்று ஊதத் தொடங்கியது.

குரங்குகளின் முட்டாள்தனமான செய்கையை அவதானித்த பறவை ஒன்று அக்குரங்குகளின் கோமாளித்தனத்தை அவதானித்து அவைகளின் அருகில் சென்று நண்பர்களே நீங்கள் என்னதான பிரியாசைப்பட்டாலும், வாயால் காற்றை ஊதினாலும் மின்மினி பூச்சியிலிருந்து நெருப்பு வரவே வராது வீண் வேலையை விட்டு விடுங்கள் என்று புத்திமதி கூறியது, பறவையின் புத்திமதியை அலட்சியம் செய்த குரங்குகள் தொடர்ந்து மின்மினி பூச்சியிலிருந்து தீயை உண்டுபண்ண முயற்சி செய்து கொண்டிருந்தன. குரங்குகளின் முட்டாள்தனத்தை எண்ணி பரிதாபப்பட்ட பறவை திரும்பத் திரும்ப குரங்குகளுக்கு புத்திமதி கூறியது இதனால் ஆத்திரமுற்ற குரங்குகள் பாய்து பறவையை பிடித்து ஒரே அடியாக தரையில் அடித்து கொன்று விட்டு தங்கள் பணியை தொடர்ந்து முன்னெடுத்தன.

இலங்கை நாட்டில் ஏழுhவது நிறைவேற்று ஜனாதிபதியை தேர்தெடுக்கும் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளதுடன் பெரும்பான்மை பலத்துடன் 52.25 வீதமான வாக்குகளை பெற்று கோட்டாபே ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார். இது இலங்கையின் வரலாற்று வெற்றியாக பார்க்கப்படுகின்றது. கோட்டபாயவின் இவ்வெற்றிக்கு பல காரணங்கள் ஆராயப்பட்டாலும் இலங்கையில் பல தசாப்தங்களாக புரையோடிப்போயுள்ள இன முரண்பாடு எவ்வகையான பங்களிப்பை செய்துள்ளது என்பது ஆராயப்படவேண்டிய ஒரு முக்கிய பக்கமாக இருக்கின்றது.

புலிகளால் உருவாக்கப்பட்டது கூட்டமைப்பு என்ற விம்பம் சிங்கள மக்களிடம் என்றுமே மனதில் ஆளப்பதிய வைக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பு புலிகளால் உருவாக்கப்பட்டது என்பதால் தமிழ் மக்கள் கண்மூடித்தனமாக தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்பதும் கூட்டமைப்பினரின் நம்பிக்கை, அந்த நம்பிக்கையை தமிழ் மக்கள் காப்பாற்றியிருக்கிறார்கள்.
ஆனால் புலிகளை மையமாக வைத்து இலங்கையில் அரசியல் வெற்றி தீர்மானிக்கப்படுகின்றது. இலங்கை ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட வேளையில் ஐக்கிய தேசியகட்சியின் சார்பில் அன்னச்சின்னத்தில் போட்டியிட்ட பிரதான வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு அமைச்சர்களான ரிசாட் பதியூதீன் மற்றும் ரவூப் கக்கீம் ஆகியோர் ஆதரவை வழங்கியிருந்தனர்.

அரசியல் வறுமையில் தவித்துக்கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அறிவிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தமான நிலைமை ஏற்பட்டிருந்தது. ஆனால் சஜித் பிரமதாசவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பதே தமிழரசுக்கட்சியின் உறுதியான நிலைப்பாடாக இருந்தது.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று அதில் குளிர்காய தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக இருப்பதாக காட்டிக் கொள்ள வேண்டும். கடந்த 60 வருட காலமாக இலங்கை அரசால் அல்லது சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத தீர்வுகளை தமிழர்களுக்கு முன்னால் வைத்து ஆதரவு கேட்பதும் தமிழ் மக்கள் ஆதரவு வழங்குவதும், சிங்களம் அதை மறுப்பதும், தமிழ் மக்கள் தமிழ் தேசியத்திற்கு வாக்களிப்பதும் தமிழ் தேசியம் தமிழரை கைவிடுவதும் தமிழ் மக்கள் முஸ்லிம் சிங்கள அமைச்சர்களிடம் கையேந்துவதும் வழமையாக நடைபெறும் விடயங்களாகும்.

புலிகளால் ஒருவாக்கப்பட்ட கூட்டமைப்பினர் பல அரசியல் ஆளுமையை கொண்டவர்கள் என்பது மாற்றுக் கருத்து இல்லை இவர்கள் தங்கள் கல்வியையும் ஆளுமையையும் பாவித்து அப்பாவி தமிழர்களை ஏமாற்றும் நடவடிக்கையில் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் அதே நேரம் விலகிச் சென்ற தமிழர் தலைமைகளை உள்வாங்கி, தமிழர் தரப்பு ‘கோரிக்கை’ எனும் தீ மூட்ட விறகுகள் தேவைப்பட்டது. அந்த விறகாகப் பாவிக்கப்பட்டவர்கள் தான் பல்கலைக்கழக மாணவர்கள்.

தேர்தல் கூட்டு என பெயரிட்டு ஒன்று கூடிய ஐந்து தமிழ் கட்சியின் தலைமைகள் அனைத்தும் தங்கள் கூட்டை நினைத்து தாங்களே தங்களுக்குள் மெச்சிக் கொண்டன. தேர்தல் கூட்டுக்குள் புது இரத்தம் பாய்ச்சப்பட்டது. தேர்தல் கூட்டுக்குள்ளிருந்து 13 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய பொதி ஒன்று இலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முன் வைக்கப்பட்டது.
தமிழ் மக்கள் சார்பாக தமிழர் தரப்பு தலைமைகளால் முன்வைக்கப்பட்ட 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பான நோக்கத்தில் குற்றங்காண இடமில்லாத போதும் இந்த கோரிக்கைகள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்பட போவதில்லை என தெரிந்தே தமிழர் தலைமைகளால் 13 அம்சக் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா என பல இடங்களிலிருந்து தமிழ் தலைமைகளின் வெற்று உணர்ச்சி அரசியல் அனல் பறக்க ஊடக அறிக்கைகளாக வெளிவரத் தொடங்கியது.

தமிழ் தலைமைகளின் 13 அம்சக் கோரிக்கைகள் தென்னிலங்கையில் பாரிய எதிர்ப்பலையை உருவாக்கியது வழமை போன்று, தமிழீழத்தை விடவும் இந்த 13 அம்சக் கோரிக்கை அபாயகரமானது சிங்களவர்கள் கடலுக்குள் சென்று விழ வேண்டியதுதான் என்ற கோசங்களுடன் பத்திரிகைகளில் சிங்களத் தலைவர்களின் அறிக்கைகள் வெளிவரத் தொடங்கியது.
தேர்தல் கூட்டு கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகளை உடனடியாகவே பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரும் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திய கோட்டபாய ராஜபக்ச தமிழரின் வாக்கு எனக்கு தேவையில்லை என அறிக்கை விட்டார்.

தமிழர் தரப்பு தலைமைகளால் முன்வைக்கப்படும் நிபந்தனைகள் காரணமாக அப்பாவி தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் கடும் துன்பங்களை அனுபவிக்கின்றார்கள். அரசியல் கைதிகள் தொடர்பாக விடப்படும் அறிக்கைகள் காரணமாக அவர்கள் தொடர்ந்தம் விடுதலை செய்யப்படாமல் தடுத்து வைக்கப்டுகிறார்கள், சிங்கள தீவிரவாத இனவாத அமைப்பொன்று விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது போர்க்குற்ற விசாரணையை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளது. இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள ஆயிரக்கணக்கான போராளிகள் மீண்டும் சிறையிலடைக்க கூடிய வாய்ப்புக்கள் உள்ளதுடன் எதிர்காலத்தில் அது நடைபெறாது என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. காரணம் முஸ்லிம் பயங்கரவாதிகளால் மட்டக்களப்பில் கடமையிலிருந்த இரண்டு பொலிசார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரே சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தேர்தல் கூட்டு கட்சிகளின் ஆலோசனையை பெறாமல் தமிழரசு கட்சியானது தான்தோன்றி தனமாக ஜனாதிபதி தேர்தலுக்கு 15 நாட்கள் முன்பாக வடக்கு கிழக்கிற்கு அதிகாரங்களை அதிகரித்து தருவதாக வாக்குறுதி வழங்கிய சஜித்துக்கு ஆதரவை வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில் வெறுப்புற்ற இதர நான்கு தமிழ் கட்சிகளும் தனிதனியாக தங்கள் நிலைப்பாட்டை அறிவித்து பிரிந்து சென்றிந்தனர்.

மைத்திரி 2015 இல் தமிழ் மக்களின் திரண்ட வாக்கு பலத்தோடு மகிந்தவை வீழ்த்தியதும், நான் தமிழர்களால் தோற்கடிக்கப்பட்டேன் என அம்பாந்தோட்டையில் மகிந்த புலம்பியதும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சஜித்துக்கான ஆதரவு கோசமும் சிங்கள மக்களின் முற்று முழுதான வாக்கை கோட்டாபே ராஜபக்சவுக்கு பெற்றுக் கொடுத்துள்ளது.
தமிழர் தரப்பு தலைமைகள் தங்கள் அறுவது வருடகால அரசியல் தோல்வியை ஒப்புக்கொண்டு அத்தோல்விக்கு என்ன காரணம் என்பதை சுயபரிசோதனை செய்துகொண்டு திருத்தியமைக்க முன்வரவேண்டும் இல்லாவிட்டால் மின்மினி பூச்சியை நெருப்பு என நினைத்து தொடர்ந்தும் ஊதிக்கொண்டிருக்க வேண்டிய அவல நிலையே ஏற்படும்

-வன்னியத்தேவன்-

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + 16 =

*