;
Athirady Tamil News

மீண்டும் கைக்கு வருமா அம்­பாந்­தோட்டை ? (கட்டுரை)

0

கோத்­தா­பய ராஜபக்ஷ கூறி­யி­ருப்­பது போல, அம்­பாந்­தோட்டை துறை­முக குத்­தகை உடன்­பாட்டை மீளாய்வு செய்ய சீனா இணங்­குமா என்­பதே முக்­கி­ய­மான கேள்வி.

இது இரண்டு நாடுகள் செய்து கொண்ட ஓர் உடன்­பாடு.

இந்த உடன்­பாட்டை மீறு­வது அல்­லது இரத்துச் செய்­வது, திருத்தம் செய்­வது என்று எதை­யுமே ஒரு­த­லைப்­பட்­ச­மாக செய்து விட முடி­யாது. இரண்டு நாடு­க­ளி­னதும் இணக்­கப்­பாட்­டுடன் தான் அதனைச் செய்­தாக வேண்டும்

கடந்த வியா­ழக்­கி­ழமை, தனது முத­லா­வது வெளி­நாட்டுப் பய­ணத்தை புது­டெல்­லிக்கு மேற்­கொள்­வ­தற்கு முன்னர், தனது முத­லா­வது வெளி­நாட்டு ஊடகச் செவ்­வி­யையும், இந்­திய ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வ­ருக்கே கொடுத்­தி­ருந்தார் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ.

இந்­தி­யாவின் பாது­காப்­புத்­துறை ஆய்­வாளர் மற்றும் ஊட­க­வி­ய­லா­ள­ரான நிதின் ஏ கோகலே, Bharat Shakti.in மற்றும் SNI ஆகி­ய­வற்றின் தலைமை ஆசி­ரி­ய­ரா­கவும் இருக்­கிறார். அவ­ருக்கே கோத்­தா­பய ராஜ பக் ஷ தனது முத­லா­வது தனிப்­பட்ட செவ்­வியை வழங்­கி­யி­ருந்தார்.

இந்தச் செவ்வி வெளி­யா­கிய பின்னர் தான், அவ­ரது புது­டெல்லி பயணம் இடம்­பெற்­றது.

எனவே, புது­டெல்­லியை சங்­க­டப்­ப­டுத்தக் கூடிய, அல்­லது சர்ச்­சையை உரு­வாக்கக் கூடிய எந்­த­வொரு விட­யத்­தையும் அவர் இதில் கூற­மாட்டார் என்­பது ஏலவே தெரிந்த விடயம் தான்.

ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னர் பாணந்­துறை, கெர­வ­லப்­பிட்­டிய போன்ற பகு­தி­களில் தமிழ் மொழி­யி­லான வீதி பெயர்ப் பல­கைகள், உடைத்து சேதப்­ப­டுத்­தப்­பட்ட சம்­ப­வங்­களின் பின்னால், கோத்­தா­பய ராஜபக் ஷவின் இந்­திய பய­ணத்தை குழப்ப விரும்பும் சக்­திகள் இருப்­ப­தாக பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ கூறி­ய­தாக செய்­திகள் வெளி­யா­கின.

எங்கோ சில இடங்­களில் நடந்த சம்­ப­வங்­க­ளையே புது­டெல்லி பய­ணத்தின் போது எதி­ரொ­லிக்கக் கூடும் என்ற கருத்து ராஜபக் ஷவி­ன­ரி­டத்தில் இருக்­கின்ற சூழலில், இந்­தி­யா­வுக்கு குழப்­பத்தை ஏற்­ப­டுத்தக் கூடிய விதத்தில் எந்த தக­வல்­க­ளையும் கோத்­தா­பய ராஜபக் ஷ இப்­போ­தைக்கு வெளி­யி­ட­மாட்டார் என்று எதிர்­பார்க்கக் கூடி­யது தான்.

இந்­தி­யாவின் நலன்கள், பாது­காப்­புக்கு விரோ­த­மான எதையும் நாங்கள் செய்­ய­மாட்டோம் என்று அவர் நிதின் ஏ கோக­லே­வுக்கு அளித்த செவ்­வியில் உறு­தி­யாக கூறி­யி­ருப்­பது, புது­டெல்லிப் பய­ணத்தை இலக்கு வைத்துத் தான் என்­பது பல­ரதும் கருத்து.

ஆனால்,கோத்­தா­பய ராஜபக் ஷ இந்த உறு­தியை இப்­போ­தல்ல, 2014ஆம் ஆண்­டி­லேயே இந்­தி­யா­வுக்கு கொடுத்தார். சீன நீர்­மூழ்கி கொழும்பில் தரித்துச் சென்ற விவ­காரம் புது­டெல்­லிக்கு கடும் கோபத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த நிலையில், இந்­தி­யாவின் தேசிய பாது­காப்பு ஆலோ­ச­க­ரான அஜித் டோவ­லிடம், அவர் இந்த வாக்­கு­று­தியைக் கொடுத்தார்.

ஆனால், அஜித் டோவல் தங்­களை நம்­ப­வில்லை என்று பின்­னாட்­களில் ஓரிரு செவ்­வி­களில் கோத்­தா­பய ராஜபக் ஷ குறிப்­பிட்­டி­ருந்தார்.

இந்­தி­யா­வுக்கு எதி­ராக இலங்­கையின் நிலத்­தையோ, நீர்ப்­ப­ரப்­பையோ வான்­ப­ரப்­பையோ பயன்­ப­டுத்த வேறெந்த நாட்­டுக்கும் அனு­ம­திக்­க­மாட்டோம் என்று அப்­போது கொடுத்த வாக்­கு­று­தியின் மறு வடிவம் தான் இப்­போது. கொடுக்­கப்­பட்­டி­ருக்­கின்ற வாக்­கு­றுதி.

2014ஆம் ஆண்டு பாது­காப்புச் செய­ல­ராக இருந்­த­போது, கோத்­தா­பய ராஜபக் ஷ கொடுத்த வாக்­கு­று­தியை, அப்­போது நம்­பாத இந்­திய பாது­காப்புச் செயலர் அஜித் டோவல் இப்­போது நம்­பு­வாரா என்­பது ஒரு புறத்தில் இருக்­கட்டும்.

நிதின் ஏ கோக­லே­வுக்கு அளித்­துள்ள செவ்­வியில் கோத்­தா­பய ராஜபக் ஷ, அம்­பாந்­தோட்டை துறை­முகம் சீனா­வுக்கு வழங்­கப்­பட்­டது தவ­றா­னது என்றும், அந்த உடன்­பாட்டில் திருத்­தங்­களைச் செய்­வது குறித்து சீனா­வுடன் பேசப் போவ­தா­கவும் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

புது­டெல்லிப் பய­ணத்தை அடுத்து, மிகக் குறு­கிய காலத்­தி­லேயே அவர் சீனா­வுக்குப் பயணம் மேற்­கொள்­ள­வுள்ளார். அவ­ருக்கு சீன ஜனா­தி­ப­தி­யி­ட ­மி­ருந்து அதற்­கான அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்­தியப் பய­ணத்­துக்கு முன்­ன­தாக, அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வுக்கு கொடுத்­தது தவறு என்று கூறி­யி­ருப்­பதும், புது­டெல்­லியை சமா­தா­னப்­ப­டுத்­து­வ­தற்­கான கருத்து என்று நினைப்­பதும் தவறு.

ஏனென்றால், அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வுக்கு நீண்­ட­கால குத்­த­கைக்கு கொடுப்­ப­தற்கு ராஜபக் ஷவினர் தொடர்ந்து எதிர்ப்­பையே வெளி­யிட்டு வந்­தனர்.

அம்­பாந்­தோட்டை துறை­முக உடன்­பாட்டை மீளாய்வு செய்­வ­தற்கு, சீனா­விடம் கோருவோம் என்று மஹிந்த ராஜபக் ஷவும், கோத்­தா­பய ராஜபக் ஷவும் முன்­னரே கூறி­யி­ருக்­கி­றார்கள்.

எனவே, இது இந்­தி­யாவை வசப்­ப­டுத்­து­வ­தற்­கான கருத்­துக்கள் இல்லை என்று உறு­தி­யா­கவே கூறலாம்.

அதே­வேளை, கோத்­தா­பய ராஜ பக் ஷ கூறி­யி­ருப்­பது போல, அம்­பாந்­தோட்டை துறை­முக குத்­தகை உடன்­பாட்டை மீளாய்வு செய்ய சீனா இணங்­குமா என்­பதே முக்­கி­ய­மான கேள்வி.

இது இரண்டு நாடுகள் செய்து கொண்ட ஒரு உடன்­பாடு. இந்த உடன்­பாட்டை மீறு­வது. அல்­லது இரத்துச் செய்­வது, திருத்தம் செய்­வது என்று எதை­யுமே, ஒரு­த­லை­பட்­ச­மாக செய்து விட முடி­யாது. இரண்டு நாடு­க­ளி­னதும் இணக்­கப்­பாட்­டுடன் தான் அதனைச் செய்­தாக வேண்டும்.

இவ்­வா­றான நிலையில், சீனாவும் இணங்கி வந்தால் தான், ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ எதிர்­பார்ப்­பது போல, அம்­பாந்­தோட்டை துறை­முக உடன்­பாட்டில் திருத்­தத்தை செய்ய முடியும்.

அம்­பாந்­தோட்டை துறை­முகம் கேந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது என்றும், அதனை சீனா­வுக்கு விட்டுக் கொடுத்­தது தவறு என்றும் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்ற கோத்­தா­பய ராஜபக் ஷ, தன் மீது குற்­றச்­சாட்­டுகள் விழக் கூடாது என்­ப­திலும் கவ­ன­மா­கவே இருந்தார்.

அவர் பாது­காப்புச் செய­ல­ராக இருந்­த­போது தான், காலி­மு­கத்­தி­டலில் இரா­ணுவத் தலை­மை­யக காணி ஷங்­ரிலா நிறு­வ­னத்­துக்கு விற்­கப்­பட்­டது.

தாங்கள் எந்த சொத்­தையும், வெளி­நா­டு­க­ளுக்கு விற்­க­வில்லை என்றும், கோத்­தா­பய ராஜபக் ஷ தான் வெளி­நா­டு­க­ளுக்கு பெறு­ம­தி­யான- கேந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த நிலங்­களை விற்றார் என்றும் தேர்தல் காலத்தில், அவ­ருக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுகள் கூறப்­பட்­டன.

அதனை மனதில் வைத்தே, அவர், நிலங்­களை விற்­பது, விடு­தி­களை அமைப்­ப­தற்கு இட­ம­ளிப்­பது என்­பன பிரச்­சி­னை­யில்லை என்­பது போலவும், அம்­பாந்­தோட்டை துறை­முகம் போன்ற கேந்­திர நிலை­களை விட்டுக் கொடுக்க முடி­யாது என்றும் கூறி­யி­ருக்­கிறார்.

இதன் மூலம் அவர் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை மீட்­டெ­டுக்கும் உறு­திப்­பாட்டில் இருக்­கிறார் என்­பது போன்ற தோற்­றப்­பாடு ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

அவ்­வா­றாயின், மஹிந்த – கோத்தா தரப்பு சீனாவைச் சார்ந்­தது இல்­லையா- சீன நலன்­களைப் பாது­காக்கப் போவ­தில்­லையா என்ற கேள்வி வரு­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் சீனா­வுடன் கொண்­டி­ருந்த உற­வுகள் முற்­றிலும் பொரு­ளா­தார நலன் சார்ந்­ததே என்றும், ஆனால், ஊட­கங்­களும் விமர்­ச­கர்­களும் தான் மஹிந்த அர­சாங்­கத்தை சீன சார்பு நிலைக்குள் தள்ளி விட்­ட­தா­கவும், கோத்­தா­பய ராஜபக் ஷ கூறி­யி­ருக்­கிறார்.

இவ்­வா­றான ஒரு குழப்ப நிலையில் இருந்து கொண்டு கோத்­தா­பய ராஜபக் ஷ அம்­பாந்­தோட்டை துறை­முக உடன்­பாட்டை மீளாய்வு செய்ய முனையும் போது, சீனா அதனை எவ்­வாறு கையாள முனையக் கூடும் என்ற கேள்வி வரு­கி­றது.

சீனா­வுக்கு இப்­போது அம்­பாந்­தோட்டை துறை­முகம் ஒரு பொன் முட்­டை­யிடும் வாத்து. இந்­தியப் பெருங்­க­டலில் அதன் ஆதிக்­கத்தை விரி­வு­ப­டுத்­து­வ­தற்­கான திற­வுகோல் இது.

இந்­தியப் பெருங்­கடல் கப்பல் பாதை சுதந்­தி­ர­மா­ன­தாக இருக்க வேண்டும் ,யாரும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்­பதை கோத்­தா­பய ராஜபக் ஷ வலி­யு­றுத்­தி­னாலும், சீனாவோ, அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை ஒரு வணிக ரீதி­யான முத­லீ­டாகத் தான் கூறு­கி­றதே தவிர, அதனை இரா­ணுவ நிலை­யாக வெளிக்­காட்டிக் கொள்­ள­வில்லை.

இந்­த­நி­லையில், அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை இந்­தியப் பெருங்­கடல் கப்பல் பாதைக்கு இடை­யூ­றா­னது என்று, சீனா­விடம் இலங்கை அர­சினால் நிறுவ முடி­யாது.

அதே­வேளை, சீனா­வுக்கு மஹிந்த – கோத்­தா­பய ராஜபக் ஷ ஆட்­சியின் உறு­தியும் முக்­கி­ய­மா­னது. இந்த ஆட்சி நிலை­யா­ன­தாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு இடை­யூ­றாக உள்ள விட­யங்­களில் சீனா சம­ரசம் செய்து கொள்ள வேண்­டி­யி­ருக்கும்.

அந்த சம­ர­சத்தை அம்­பாந்­தோட்டை துறை­முக விட­யத்தில் செய்து கொள்ள சீனா இணங்­குமா என்று பார்க்க வேண்­டி­யி­ருக்­கி­றது.

மஹிந்த- கோத்தா ஆட்­சியை இன்னும் 20 ஆண்­டு­க­ளுக்கு அசைக்க முடி­யாது என்­றொரு கருத்து அவர்­களின் அர­சாங்­கத்தில் உள்­ள­வர்­க­ளிடம் இருக்­கி­றது,

ஐ.தே.க.வின­ருக்குக் கூட இனி ஆட்­சியைப் பிடிப்­பது சுல­ப­மில்லை என்­பது நன்­றா­கவே தெரியும். ஐ.தே.க ஆட்­சியில் சீனா விட்­டுக்­கொ­டுப்­புடன் நடந்து கொள்­ள­வில்லை.

ஏனென்றால், அது தமக்கு சார்­பி்ல்­லாத ஒரு அர­சாங்கம் என்­பது சீனா­வுக்குத் தெரியும். ஆனால், மஹிந்த – கோத்தா அர­சாங்கம் அவ்­வா­றா­னது அல்ல.

அது சீன சார்பு நிலை கொண்­டது. சீனாவின் தேவைகள், நலன்­களை அனு­ச­ரித்துச் செல்லக் கூடி­யது. இவ்­வா­றான ஒரு அர­சாங்கம் அடுத்த 20 ஆண்­டு­க­ளுக்கு ஆட்­சியில் இருக்கப் போவது உறு­தி­யானால், அதற்­கான சீனா சில விட்­டுக்­கொ­டுப்­பு­களை செய்­யவும் தயா­ராக இருக்கும்.

சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்­பது போன்ற யுக்தி தான் இது.

இதற்­காக அம்­பாந்­தோட்டை விட­யத்தில் சீனா சில தளர்­வு­க­ளுக்கு இணங்­கினால் ஆச்­ச­ரி­ய­மில்லை.

அதே­வேளை, அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தின் மீது அதற்கு 99 ஆண்டு கால உரிமை இருக்கப் போகி­றது என்­ப­தையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

குறு­கி­ய­கால நலன்­களின் அடிப்­ப­டை­யிலா – நீண்­ட­கால நலன்­களின் அடிப்­ப­டை­யிலா சீனா முடி­வு­களை எடுக்கப் போகிறது என்பது இங்கு முக்கியமானது,

அமெரிக்கா தனது பாதுகாப்பு கொள்கைகளை வகுத்துக் கொள்ளும்போது, 500 ஆண்டுகளுக்குப் பிற்பட்ட அமெரிக்க நலன்களையும் கருத்தில் கொள்கிறது.

சீனாவும் அவ்வாறானதொரு தூர நோக்கில் முடிவுகளை எடுக்க முனைந்தால், அது கோத்தாபய ராஜபக் ஷவுக்கு சாதகமானதாக இருக்காது.

அதேவேளை, குறுகியகால நலன்களை அடைவதற்காக, சீனா முடிவுகளை எடுத்தால், அது கோத்தாபய ராஜபக் ஷவுக்கு சாதகமாக அமையும்.

சர்வதேச சக்திகளின் மோதல்களுக்குள் அகப்பட்டுக் கொள்ளாமல், எல்லோருக்கும் நண்பனாக இருக்கப் போவதாக கோத்தாபய ராஜபக் ஷ கூறினாலும், அதனை செயலளவில் நிரூபிக்க வேண்டியவராக அவர் இருக்கிறார்.

அவ்வாறு நிரூபிப்பதற்கான ஒரு களமாக, அம்பாந்தோட்டை துறைமுக விவகாரத்தை அவர் கையில் எடுத்துக் கொள்ளக் கூடும். அப்போது, தான் அம்பாந்தோட்டை விவகாரத்தில் சீனாவின் உண்மையான சுயரூபமும் வெளிப்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × four =

*