;
Athirady Tamil News

தமிழர்களின் மாற்றுத் தலைமை: தோ‌ற்றவர்களின் வெற்றிக்கு வித்திடலாமா? (கட்டுரை)

0

தேசிய இனங்களின் பாதுகாப்பான இருப்பு, அவர்களின் பொருளாதார வளர்ச்சி என்பவற்றைச் சமாந்தரமான பாதையில் முன்னோக்கிக் கொண்டு செல்லும் அரசாங்கங்களே, நீடித்து நிலைக்கும் தன்மை கொண்டவையாகக் காணப்படுகின்றன.

இந்நிலையில், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களும் அதைத் தொடர்ந்து நடக்கப்போகும் தேர்தல்களும் அமையப்போகும் ஆட்சியும் அதன் நிலைப்பாடுகளும் ‘தேசிய இனங்கள்’ என்ற வகைகளில் எவ்வாறு அமையப்போகின்றன. தேசிய இனங்கள் அனைத்தையும், ஓரே பார்வையில் பார்க்குமா என்ற சந்தேகம் பெருகியுள்ளது.

தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவையும் அதனோடிணைந்த ஆளுநர், செயலாளர்கள் நியமனங்கள் ஆகியவை ஒரு குழப்பகரமான நிலைமையையே, சிறுபான்மையாக உள்ள தேசிய இனங்களுக்கு ஏற்படுத்தியுள்ளன.

எனினும், விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றிவாதத்தை விரும்பியிருந்த சிங்கள பௌத்தவாதம், கடந்த நான்கரை ஆண்டுகளாக, ஜனநாயக நீரோட்டத்தில் தன்னைப் பயணிக்கச் செய்திருந்தது. ஆனால், மீண்டும் யுத்த வெற்றிவாத சிந்தனைக்குள், சிங்கள பௌத்தவாதம் தன்னை அகப்படுத்திக் கொண்டுள்ளது.

தற்போயை ஆட்சியாளர்கள், நாடாளுமன்றத் தேர்தலையும் மாகாண சபைத் தேர்தல்களையும் எதிர்கொள்ளவுள்ளனர். அதனால், பௌத்த மேலாதிக்க மனோபாவம் முன்னிலைப் பட்டுள்ள, தற்போதைய சூழ்நிலையிலேயே மேற்குறிப்பிட்ட தேர்தல்களில் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்ற மனோபாவம் ஆட்சியாளர்களிடம் காணப்படுகின்றது. தற்போதைய ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில், சிங்கள பௌத்த மேலாதிக்க அரசியல் நிலைப்பாடு, தமது வெற்றிக்கு மிகவும் முக்கியமாகத் தேவையான ஒன்று என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கின்றார்கள். நடந்து முடிந்த, ஜனாதிபதித் தேர்தலில் இத்தகைய அணுகுமுறைகளைப் பயன்படுத்தி வெற்றிபெற்றதன் பலனாக, அடுத்தடுத்த தேர்தல்களிலும் இதே காய்நகர்த்தல்களுக்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இந்தச் சூழலில், சிறுபான்மையினரான தேசிய இனங்கள், எடுக்கவேண்டிய அரசியல் நகர்வுகள் குறித்து, அக்கறை செலுத்தப்பட வேண்டிய தேவை எழுகின்றது. வெறுமனே ‘வாய்ச்சாடல்’ அரசியல் என்பதும், அதனூடாகப் பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக்கொள்வதென்பதும், இனிவரும் காலங்களில், தமிழர் அரசியல் பரப்பில் சாத்தியமற்ற ஒன்றாகி விடும் சூழல் உருவாகிவருகின்றது.

வட மாகாண சபையில் வெறுப்புணர்வு கொண்ட தமிழ் மக்கள், தமிழ் பிரதிநிதிகளால் எதையும் சாதித்து விட முடியாது என்ற மனோபாவத்தில் இருந்து விடுபடுவதற்குள், ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வேறுபல தமிழ்க் கட்சிகளும் எடுத்த முடிவுகள் அல்லது, வழிநடத்திய விதங்கள் மொத்தத்தில், நட்டாற்றில் விட்டதாகவே தமிழ் மக்கள் உணரத்தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், அடுத்து வரப்போகும் தேர்தல்களில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் தொடர்பிலான சந்தேகம், தமிழ்க் கட்சிகள் மத்தியில் வியாபித்துள்ளது. இதன் ஒரு வெளிப்பாடாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ‘ஒரணி’ என்ற அறைகூவலையும் பார்க்கப்படுகின்றது.

கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாட்டிலும் அதற்குள் உள்ள கட்சிகள், அதற்குள் இருந்து வெளியேறிய கட்சிகள் ஆகியவற்றில் நிலைப்பாடுகளை ஆராயப்போகும் ஏனைய தமிழ்க் கட்சிகள், ‘ஓரணி’ கோரிக்கையை ஏற்றுக்கொள்வார்களா என்பதைப் பார்க்கவேண்டும்.

பலமான அணியாகத் தமிழர் தரப்பு இல்லாதவரை, தமிழர் அரசியல் தலைமைகளின் கோரிக்கைகள், இனிவரப்போகும் காலங்களில், கொழும்பைப் பொறுத்தவரையில், செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கப்போகின்றது.

எனினும், முஸ்லிம்களைப் பொறுத்தவரையில், தமது இருப்புத் தொடர்பில், அவர்களின் மனோபாவமும் சமூகத்தின் முக்கியமான தேவை குறித்து, ஒற்றுமையுடன், வினைதிறனுடன் அழுத்தத்தைப் பிரயோகிப்பதில் தீர்க்கமான முடிவெடுத்து செயற்படப் போகின்றமையும் தவிர்க்க முடியாதது. அதனூடாகவே, அடுத்து வரப்போகும் அரசாங்கத்தில் அவர்கள் அங்கம் வகிக்க முயற்சிப்பர்.

ஆனால், தமிழ் மக்களைப் பிரதிநிதிப்படுத்தும் அரசியல்வாதிகள், எடுக்கப்போகும் நிலைப்பாட்டிலேயே தமிழர்களின் இருப்பும் அவர்களின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான விடயங்களும் தங்கியிருக்கின்றன.

கடந்த ஆட்சிக்காலத்தில், நான்கரை ஆண்டுகளாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதையும் தமது மக்களுக்காகச் செய்துகொள்ளவில்லை. ஒவ்வொரு முறையும் ஐ.தே.கஇன் ஆட்சியைக் காப்பாற்றுவதற்காகக் கைகளை உயர்த்துகின்றபோது, குறைந்தது அரசியல் கைதிகளையாவது விடுவித்திருக்க வேண்டும்; புதிய அரசமைப்பின் உருவாக்கத்தையாவது கொண்டு வந்திருக்கவேண்டும் என்ற குற்றச்சாட்டை, தற்போது அதிகளவில் தமிழ் மக்கள், முன்வைத்து வருகின்றார்கள்.

இந்நிலையில், மத்தியில் ஏற்பட்டுள்ள ஆட்சியும் எதிர்வரும் தேர்தல்களில் தேசியக் கட்சிகளின்பால், குறிப்பாக, பொதுஜன பெரமுனவின் ஆதிக்க சுழலுக்குள், தமிழ் மக்கள் செல்லக்கூடிய அல்லது சிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

இந்நிலையில், தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் புதிய புயலாக வெளிவரும் மாற்றுத்தலைமை என்ற நிலைப்பாடு, தோல்வியடைந்த கட்சிகளின் கூட்டா, வெற்றிக்கான வித்திடலா என்பது, அவர்களின் மாற்று அணியின் உள்ளடக்கத்திலேயே உள்ளது.

ஏனெனில், வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சுரேஷ் பிரேமசந்திரன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பலவீனமான நிலையில், அதிலும் இரண்டரைக் கட்சிகளுடன் அங்கம் வகிக்கும் நிலையில் உள்ளது. ஆகவே, இவை எல்லாவற்றையும் நாங்கள் கவனத்தில் எடுத்து, மாற்றுத் தலைமை அவசியம் தொடர்பில், தீர்மானத்துக்கு வந்துள்ளோம்” எனத் தெரிவித்திருந்ததுடன், முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில், புதிய கூட்டுத் தொடர்பிலும் வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே, தமிழ் மக்கள் மத்தியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக, ஒரு புதிய அரசியல் சக்தி விரைவில் உருவாகவுள்ளது தவிர்க்க முடியாததாகும். ஆனால், அந்தக் கூட்டு, யாரை உள்ளடக்கி வரப்போகின்றது என்பதும் தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்காது என்பதற்கும் என்ன உத்தரவாதம் காணப்படுகின்றது என்பது தற்போதுள்ள கேள்வியாகும்.

ஏனெனில், முன்னாள் முதலமைச்சருக்கும் சுரேஷ் பிரேமசந்திரன் அணிக்கும் யாழ்ப்பாணத்தில் ஓரளவு வாக்கு உள்ள நிலையில், வன்னியைப் பொறுத்தவரையில், சிவசக்தி ஆனந்தனை நம்பி மாத்திரமே களத்தில் இறங்க வேண்டிய தேவையுள்ளது.

எனினும், சிவசக்தி ஆனந்தனைப் பொறுத்தவரையில், வன்னியில் பல புதிய அரசியல்வாதிகளைத் தமிழ் அரசியல் பரப்புக்குள் அறிமுகப்படுத்திய ஆளுமை உள்ளது. எனினும், அவர்கள் தொடர்ந்தும் அவருடன் இல்லாத நிலையும் உள்ளது. இவ்வாறான சூழலில், புதிய கூட்டு, அதற்கான புதிய முகங்கள் என்பது, கல்லில் நார் உரிப்பதைப் போன்றே வன்னிக்கான வெற்றிவாய்ப்பை நோக்கக் கூடியதாகக் காணப்படுகின்றது.

இதற்குமப்பால், வன்னிப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில், இம்முறை சிங்களவர் ஒருவரை, நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற தேவையை, சிங்களவர்கள் உணர்ந்துள்ளனர். அவர்கள், 25,000 வாக்குகளைக் கொண்டுள்ள நிலையில், அவர்களுக்குள் சிதறடிக்கப்படும் வாக்குகளுக்கப்பால், ஒரு பிரதிநிதித்துவத்தை பெறுவதென்பது கடினமான விடயமாக உள்ளபோதிலும், அவர்களும் தமிழ் வாக்குகளையும் நம்பியே இருக்கின்றனர்.

அதுபோலவே, முஸ்லிம் தரப்பும் சுமார் 20,000 வாக்குகளைக் கொண்டுள்ள போதிலும் ஓர் ஆசனத்தைப் பெறுவதற்கே பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டிய நிலையில், கடந்த முறை இரண்டு பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருந்தனர். அவர்களுக்கும் தமிழ் வாக்குகளே தேவையாகவுள்ளது.

எனவே, 282,911 வாக்குகளைக் கொண்ட வன்னித் தேர்தல் தொகுதியில், சுமார் 250,000 வாக்குகளைக் கொண்ட தமிழ் வாக்காளர்கள், ஏனைய சமூகங்களுக்காகத் தங்கள் வாக்குகளைப் பிரயோகிக்கும் நிலையில் இருந்து, ஒதுங்கி, தாம் ஒன்றிணைந்து, தமக்கான பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக்கொள்ள முனைப்பு காட்டாத நிலை காணப்படுகின்றது.

இதற்குமப்பால், தற்போது அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் சிறிடெலோ, ஈரோஸ், பிரபா கணேசனின் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் என்பன, ஓரணியில் செயற்படுவதற்காகக் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளன. அதற்கான முதற்கட்ட பேச்சும் இடம்பெற்றிருக்கின்றது.

எனவே, வன்னித்தேர்தல் தொகுதி என்பது, தமிழர் தரப்பைப் பொறுத்தவரையில், நான்கு, ஐந்து முனைப்போட்டியைத் தமிழ்த் தரப்புக்குள் உள்ளடக்கி காணப்பட போகின்றது. இந்நிலையில்தான், தமிழ் மக்கள், தமக்கான பேரம் பேசும் சக்தியாக, தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டில் காணப்படுகின்றனர்.

எனவே, தற்போதைய மத்தியின் நிலைப்பாட்டை அறிந்து, அதை எமக்கேற்றாற்போல் செயற்பட தூண்டும் வழிவகைகளை மேற்கொள்ள ஆவண செய்ய வேண்டும். ஆகவே, தமிழர் தரப்பு அரசியல் என்பது, பலமானதாகவும் அதனூடான பிரதிநிதித்துவம் சக்தி வாய்ந்தாகவும் அமைக்கப்படவேண்டும் என்பதே காலத்தின் தேவையாகவுள்ளது. அது உள்ள கூட்டுகளைப் பலப்படுத்துவதால் ஏற்படுத்தலாமா, புதிய கூட்டுகளைப் பலரும் உருவாக்கி வாக்கை சிதறடித்து, எதையும் சாத்திக்க முடியாத தேசிய இனமாக இருக்கப்போகின்றோமா என்பதைத் தமிழ் அரசியல் தலைமைகளே உணரத் தலைப்பட வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 2 =

*