;
Athirady Tamil News

ஹைதராபாத் வன்புணர்வும் பொலிஸ் என்கவுன்டரும் !! (கட்டுரை)

0

ஹைதாராபத் கால்நடை பெண் மருத்துவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரைச் சுட்டுக் கொன்ற பொலிஸாருக்கு, நாடு முழுவதும் இருந்து பாராட்டுகள், பூத்தூவி வரவேற்புகள் கிடைத்திருக்கின்றன. பெண் மருத்துவர் மிருகத்தனமாகக் கொல்லப்பட்ட விதம், பெண் பிள்ளைகளைப் பெற்றோரையும் வேலைக்குச் செல்லும் பெண்களையும் பேரதிர்ச்சிக்கு உட்படுத்தியது.

இந்திய நாடாளுமன்றத்தில், பெண் எம்.பிக்கள் ஆவேசமாகக் குரல் எழுப்பி, “பெண்களுக்கு இந்த நாட்டில் என்ன பாதுகாப்பு” என்ற கேள்வியை முன் வைத்தார்கள். நாட்டின் தலைநகரான டெல்லியில் நிருபையா வன்புணர்வு, கொலைக்குப் பிறகு, பெண்கள் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வை, ஹைதராபாத் விவகாரம் நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விழிப்புணர்வால் ஏற்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், ‘பொலிஸ் என்கவுன்டர்’ நடந்திருக்கிறதோ என்று ஒரு சில மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினாலும், இந்தியாவில் தூக்குத்தண்டனை நிறைவேற்றுவதில் உள்ள சட்ட சிக்கல்களையும் கருணை மனு என்ற அடிப்படையில் காலம் கடத்தப்படுவதையும் மறைக்க முடியாது.

தூக்குத்தண்டனை விவகாரத்தில் ஒவ்வொரு குடியரசுத் தலைவரும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். ‘கடவுள் கொடுத்த உயிரை எடுக்க, எனக்கு ஏது அதிகாரம்’ என்று சில குடியரசுத் தலைவர்கள் கருணை மனுக்களைக் காலம் கடத்தியது உண்டு. சில குடியரசுத் தலைவர்கள் கருணை மனுக்கள் மீது உடனுக்குடன் முடிவு எடுத்ததும் உண்டு.

ஆகவே, குற்றம் நிரூபிக்கப்பட்டு, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்படுவதில் உள்ள காலதாமதம், சட்டத்தின் ஆட்சி மீதான நம்பிக்கையைக் குறைத்து விடுகிறது.

உச்சநீதிமன்றம் பல்வேறு காலகட்டங்களில், கருணை மனுக்கள் மீதான தாமதத்தைக் கண்டித்திருக்கிறது.

‘சத்ருகன் சவுகன்’ என்ற வழக்கில், கருணை மனுக்கள் தாமதத்தால், தூக்குத்தண்டனை பெற்ற 15 பேருக்கு ஆயுள் தண்டனையாக குறைத்த உச்சநீதிமன்றம், கருணை மனுக்கள் மீதான விசாரணை விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியது.

அந்தத் தீர்ப்பில், அப்போது தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம், “குடியரசுத் தலைவரும், ஆளுநரும் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்தவர்கள். உயர்ந்த பதவியில் இருப்பதால், இத்தனை நாள்களுக்குள் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க வேண்டும் என்று அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் கால நிர்ணயம் செய்யவில்லை. ஆனால் அதற்காகக் கருணை மனுக்கள் மீது, காலதாமதம் ஏற்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் சட்டத்தின் கீழ், வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைக் காலத்தே பயன்படுத்த வேண்டும். குடியரசுத் தலைவரும், ஆளுநர்களும் தூக்குத்தண்டனை பெற்றவர்களின் கருணை மனுக்கள் மீது, குறித்த காலத்தில் முடிவு எடுக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்தார்.

ஆனாலும், கருணை மனுக்கள் மீதான முடிவுகளில், தாமதம் ஏற்படுகின்றன என்பதாலும், அதற்கு முன்பு வழக்கு விசாரணைகளிலேயே தாமதம் ஏற்பட்டு நீதிவழங்குவதற்குக் காலதாமதம் என்பதாலும் இப்போதெல்லாம் ‘உடனடி நீதி வேண்டும்’ என்ற கோரிக்கை, இது மாதிரி வன்புணர்வு, கொடூரமான கொலைகள் நடைபெறும் போது, மக்களிடமிருந்து கோரிக்கையாக மாறி வருகிறது. அப்படியொரு கோரிக்கைதான், ஹைதராபாத் வன்புணர்வு வழக்கிலும் பொதுமக்களால் முன் வைக்கப்பட்டது.

இது மாதிரித் தமிழகத்திலும் நடைபெற்றுள்ளது. கோவை மாநகர எல்லைக்குள் பள்ளிக்கூடத்துக்குச் சென்ற பத்துவயதுச் சிறுமியும் அவரது ஏழு வயதுச் சகோதரனும் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, இருவரும் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இந்தக் கொலைச் சம்பவம், தமிழகத்தை 2010களில் உலுக்கி எடுத்தது. பத்து வயதுப் பெண் குழந்தையை வன்புணர்வு புரிந்த வழக்கில், “குற்றவாளிகளுக்கு உடனடித் தண்டனை கொடுக்க வேண்டும்” என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. “என்கவுன்டர் செய்யுங்கள்” என்று பொதுமக்கள் வெளிப்படையாகப் போராட்டமே நடத்தினார்கள்.

இதுபோன்ற சூழ்நிலையில், அந்த வழக்கில் இருவர், குற்றவாளிகளாகக் கைது செய்யப்பட்டு, அதில் மோகனகிருஷ்ணன் என்ற குற்றவாளி, கோவை மாநகர ஆணையாளராக இருந்த சைலேந்திரபாபு தலைமையிலான பொலிஸாரின் என்கவுன்டரில் கொல்லப்பட்டான்.

இன்னொரு குற்றவாளியான மனோகரனுக்கு உச்சநீதிமன்றம் தூக்குத்தண்டனையை உறுதி செய்து, அந்தத் தண்டனை இன்னும் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. இது மட்டுமல்ல, சென்னை மாநகரில் 2012 வாக்கில், முக்கிய வங்கிகளில் கொள்ளை நடந்தது. அந்தக் கொள்ளைகள், மக்களைப் பீதியில் ஆழ்த்தியது.

அப்போதும், “பொலிஸ் என்ன ஆனது”? என்ற கேள்வியை எழுப்பிய மக்கள், “வங்கி கொள்ளையர்களுக்கு உடனடி தண்டனை” என்ற கோரிக்கையை முன் வைத்தார்கள். அப்போதும் சென்னை மாநகர பொலிஸ் ஆணையாளராக இருந்த திரிபாதி தலைமையிலான பொலிஸார், வங்கி கொள்ளையில் ஈடுபட்ட ஐந்து கொள்ளையர்களை என்கவுன்டரில் கூண்டோடு கொன்றார்கள்.

ஆகவே, என்கவுன்டர்கள் மனித உரிமைகளுக்கு எதிரானது என்று இருந்த கருத்துருவாக்கம், இப்போது மாறி வருகிறது. அதற்குக் காரணம், இளம் பெண்கள், குழந்தைகள் மீதான வன்புணர்வுகள் வெட்ட வெளியில் நடக்கும் பயங்கரமான கொலைகள் போன்றவையே ஆகும்.

சட்டம் அளித்துள்ள பாதுகாப்புகளைக் குற்றவாளிகள் மிகவும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில்லை என்ற தாக்கம் அதிகரித்து வருகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, அரசாங்கங்கள் கடும் நடவடிக்கைகள் எடுக்கின்றன. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வர்மா பரிந்துரையின் அடிப்படையில், கடுமையான தண்டனைகளுடன் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க, ‘பொஸ்கோ’ சட்டங்கள், பணியிலிருக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளைத் தடுக்கும் சட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இது போன்ற வழக்குகளில், பிணை வழங்குவதற்கு உச்சநீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளை விதிக்கின்றன.

இது போன்ற குற்ற வழக்குகளில், சம்பந்தப்பட்டவர்கள் சமரசம் செய்து கொண்டு, வழக்குகளை வாபஸ் பெறவும் தடை விதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், குற்ற வழக்குகள், குறிப்பாக, வன்புணர்வு வழக்குகள், மிகக் கொடூரமான கொலை வழக்குகள் போன்றவற்றில், நீதி பரிபாலன நடைமுறையில் மேலும் சீர்திருத்தங்கள் மட்டுமே, “என்கவுன்டர் வேண்டும்” என்று கோரிக்கை வைக்கும் பொதுமக்களின் உணர்வுகளை மழுங்கடிக்க முடியும். தவிர, மனித உரிமைகள் பேசி அந்தக் கோரிக்கையை எதிர்க்க முடியாது என்ற நிலை, சமுதாயத்தில் உருவாகி வருகிறது. இது ஆரோக்கியமான, சட்டத்தின் ஆட்சியின்படி நடக்கும் சமுதாயத்துக்கு நல்லது.

தனியொரு பெண்ணின் கண்ணியத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தி விட்டு, மனித உரிமைகள் பேசுவது ஏன் என்ற கேள்வி இப்போது சமுதாயத்தில் ஒரு பகுதியினர் மத்தியில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. வன்புணர்வு நடந்தால், உடனே என்கவுன்டர் வேண்டும் என்று எதிர்பார்க்கும் சமுதாயத்தை பிழை சொல்வதில் பயனில்லை. அதற்குப் பதில் பெண்களின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும்.

அந்த வரிசையில், “பணிபுரியும் பெண்கள், தங்கள் வீட்டுக்கு நள்ளிரவில் திரும்ப வேண்டும் என்றால், அவர்களுக்கு பொலிஸாரின் உதவி அளிக்கப்படும்” என்று அறிவித்திருக்கும் பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் பாராட்டுக்குரியவர்.

அதே நேரத்தில், ‘விரைந்த நீதி’ என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றம், ஏற்கெனவே பல வழிமுறைகளை உருவாக்கிப் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவான தீர்ப்புக்கு வழி அமைத்திருக்கின்றன. அதில் மேலும் சீர்திருத்தங்கள் தேவை என்பதே இன்றைய நிலை.

குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் பிணை கொடுப்பதை அறவே நிறுத்தி, அந்த வழக்குத் தீர்ப்புகளை உடனுக்குடன் வழங்கினால், பெண்களின் பாதுகாப்பில் மிகப்பெரிய சாதனையை அடைந்ததாகக் கருத முடியும்.

தற்போது மத்திய அரசு, “இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வரத் தயார்” என்று அறிவித்திருக்கிறது. இந்த சட்டத் திருத்தமும், கருணை மனுக்கள் விடயத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கறாராகக் கடைப்பிடிப்பதன் ஊடாக, பெண்களின் பாதுகாப்பில் உள்ள எஞ்சியிருக்கின்ற குறைகளை நிவர்த்தி செய்வதற்கு வழி பிறக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × five =

*