;
Athirady Tamil News

முஸ்லிம் சமூகத்தின் அடுத்த நகர்வு? (கட்டுரை)

0

ஜனாதிபதித் தேர்தல் முடிந்த சூடு ஆறுவதற்கிடையில், நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

அதன்பின்னர், புதிய அரசாங்கம், மாகாண சபைத் தேர்தலுக்குச் செல்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் தென்படுகின்றன.

கோட்டாபய ராஜபக்‌ஷ வெற்றிபெற்று, நாட்டின் ஜனாதிபதியாகியுள்ள நிலையில், உடனடியாக நாட்டின் எல்லா விதமான ஆளுகைக் கட்டமைப்பிலும் ‘மொட்டு’வின் ஆட்சியை உருவாக்குவதே, நீண்டகாலம் ஆட்சியில் கோலோச்சுவதற்கு வழிவகுக்கும். இதன் அடிப்படையில், முன்னைய அரசாங்கத்தைப் போலன்றி, துணிந்து தேர்தல்களை நடத்த, புதிய அரசாங்கம் முனைப்புக் காட்டுகின்றது.

அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஏப்ரல் கடைசி வாரத்தில், நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதியும் பிரதமரும் பொதுஜன பெரமுனக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதுமட்டுமன்றி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதுடன், மாகாண சபைகளிலும் ‘மொட்டு’வை மலரச் செய்ய வேண்டும் என்ற வேட்கையும் காணப்படுகின்றது. இதை நிறைவேற்றுவதற்கான வியூகங்களை, ராஜபக்‌ஷ சகோதரர்கள் வகுக்க தொடங்கியிருப்பதாகத் தெரிகின்றது.

எனவே, பிறக்கப் போகின்ற வருடத்தில், முஸ்லிம் சமூகம் இரு தேர்தல்களைச் சந்திக்கும் வாய்ப்பு இருக்கின்றது. இத்தருணத்தில், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் அதற்கு வெளியேயும் வாழ்கின்ற முஸ்லிம்களும் குறிப்பாக, முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் எவ்வாறான முன்னகர்வுகளை மேற்கொள்ளப் போகின்றார்கள்?

தேசிய அரசியல் நீரோட்டத்தில், முஸ்லிம்களின் அடுத்த காலடி, எதை நோக்கியதாக இருக்கப் போகின்றது என்ற கேள்விக்கு, விடைகாண வேண்டியிருக்கின்றது.

பொதுத் தேர்தலொன்று நடைபெறுமாயின், பொதுஜன பெரமுன, தமது கட்சி சார்பான எந்தவொரு வேட்பாளரையும் ‘மொட்டு’ச் சின்னத்திலேயே களமிறக்கும். பெரிய முஸ்லிம் கட்சிக்காரர்கள் என்றாலும், அதிக வாக்குகளைக் கொண்ட ஒரு முஸ்லிம் அரசியல்வாதி என்றாலும், எக்காரணம் கொண்டும், வேறு சின்னங்களில் போட்டியிட அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றே கருத முடிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியானது வழக்கம்போல, யானைச் சின்னத்தில் போட்டியிடுவதுடன், முஸ்லிம் கட்சிகள் மீண்டும் ஐ.தே.கவுக்கு ஆதரவளிக்கும் நிலை வந்தால், (அதற்கான நிகழ்தகவு மிகக் குறைவு) தமது சொந்தச் சின்னத்தில் போட்டியிட இணங்கலாம்.

இதேபோன்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ‘மொட்டு’வுடன் அல்லாமல், தனித்தே போட்டியிடும். அப்படிச் செய்தாலேயே, ‘கொஞ்சம் நஞ்சம்’ மீதமிருக்கின்ற சு.கவையாவது தக்கவைத்துக் கொள்ளலாம்.

இது இவ்வாறிருக்க, ரணில் – சஜித் பனிப்போர் தணிந்து விட்டதாகச் சொல்லப்பட்டாலும், நீண்டகாலத்தில் அது வேறு வடிவம் எடுக்காது இருக்கும் பட்சத்தில், சஜித்துக்கு ஐ.தே.கவில் உரிய அந்தஸ்து கொடுக்கப்படாமல் இழுபறி ஏற்படும் நிலை வந்தால், அவரும் தனியொரு கட்சியில் களமிறங்கலாம். இந்த அனுமானத்தின் அடிப்படையிலேயே, ரணில் சற்று இறங்கி வந்திருப்பதாகவும் கருத, நிறையவே இடமுள்ளது.

பெருந்தேசியக் கட்சிகள் எவ்வாறான நகர்வுகளை எடுக்கின்றன என்பதை விடவும், முஸ்லிம் கட்சிகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் எவ்வாறு மீதிப் பயணத்தைத் தொடரப் போகின்றார்கள் என்ற முக்கியமான விடயம் பற்றி, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் சிந்திக்க வேண்டியுள்ளது.

இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், முஸ்லிம்களும் தமிழர்களும் ஒரு செய்தியை உலகுக்குச் சொன்னார்கள். ஆனால், மறுதலையாக அந்த நிலைப்பாடு, சிறுபான்மைச் சமூகத்துக்குப் பெரும்பான்மைச் சமூகம், ஒரு பாடத்தைப் படிப்பித்துள்ளது என்றும் கூறலாம்.
அதாவது, சிறுபான்மை மக்களின் ஆதரவின்றி, இந்த நாட்டில் ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட முடியாது என்ற இறுமாப்பில் இருந்த முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும், இந்தத் தேர்தல் முடிவுகள், ‘உங்கள் நினைப்புத் தவறு’ என்பதை உணர்த்தியுள்ளது.

சிங்கள மக்களின் வாக்குகள், இரு பெரும் கட்சிகளுக்குக் கிட்டத்தட்ட சரிசமமாகக் கிடைக்கும் என்ற ஒரு சூழ்நிலையிலேயே, சிறுபான்மை மக்களின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாக மாறும் என்பதை, நாம் பெரும்பாலும் விளங்கிக் கொண்டிருக்கவில்லை.

பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன், கோட்டாபய ராஜபக்‌ஷ வெற்றி பெற்றமை, அந்தப் புரிதலை ஏற்படுத்தியிருக்கின்றது எனலாம்.

எவ்வாறிருப்பினும், ஜனாதிபதித் தேர்தலைப் போல, பொதுஜன பெரமுன கட்சியோ, சுதந்திரக் கட்சியோ ‘சிறுபான்மையினரின் வாக்குகள் இல்லையென்றாலும் எமக்குப் பரவாயில்லை’ என்ற மனநிலையில் செயற்பட முடியாது.

அப்படிச் செயற்பட்டால், வடக்கு, கிழக்கில் ‘மொட்டு’க் கட்சிக்கு, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் ஒன்று, இரண்டோடு மட்டுப்படுத்தப்படுமாயின், அது ஓர் அரசாங்கம் என்ற வகையில், பெரும் பின்னடைவாக அமைவதுடன், ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் இல்லை என்பது போன்ற தோற்றப்பாட்டையும் ஏற்படுத்தலாம்.

இப்போது சிறுபான்மை மக்களோடு, குறிப்பாக, முஸ்லிம்களோடு, அரசாங்கம் ஒரு மென்போக்கைக் கடைப்பிடிப்பதற்கு, இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.

ஆனால், ஒரு வருடத்துக்கு முன்னரே, இப்பக்கத்தில் வெளியான பத்தி ஒன்றில் குறிப்பிட்டிருந்ததைப் போல, இரு பிரதான முஸ்லிம் கட்சிகளிலும், ‘மொட்டு’ அணி நம்பிக்கை இழந்திருக்கின்றது என்பது ஊர்ஜிதப்படுத்தப்படுகின்றது.

தேசிய காங்கிரஸ் மட்டுமன்றி, பெரிய முஸ்லிம் கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் போன்றனவும் 2005 முதல் 2015 வரையான மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்கு முண்டுகொடுத்தன.

ஆனால், அதற்குப் பின்னர் மு.காவும் ம.காவும் எடுத்த தீர்மானங்கள், ராஜபக்‌ஷக்களின் கோபப்பார்வையைக் குவியச் செய்திருக்கின்றன. இவ்விரு கட்சிகளையும் இணைத்துக் கொண்டு செயற்படுவது, பெரும் தலையிடி என்ற நிலைக்கு, ஆட்சியாளர்கள் வந்திருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

அத்துடன், தேசிய காங்கிரஸ் கட்சியை, ஓரிரு தனிப்பட்ட அரசியல்வாதிகளை வைத்துக் கொண்டு, வடக்கு, கிழக்கில் உள்ள இலட்சக்கணக்கான முஸ்லிம் வாக்குகளைத் தம்வசப்படுத்துவது சிரமம் என்பதால், தமது நம்பிக்கையை வென்ற ஒரு முஸ்லிம் அரசியல் அணியை, புதிதாகக் கட்டமைக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.

அதேபோல, மேற்குறிப்பிட்ட அடிப்படையில், கோட்டாபயவும் மஹிந்தவும் இரு முஸ்லிம் கட்சிகளைத் தம்மோடு சேர்த்துக் கொள்ளவே மாட்டார்கள் என்று, பரவலாகப் பேசப்படுகின்றது; இது இப்போதைக்கு உண்மைதான்.

ஆனால், எக்காலத்திலும் சேர்த்துக் கொள்ள, ஓர் இம்மியளவும் வாய்ப்பு இல்லை என்று, யாராவது கூறுவார்களாயின் அது, அவர்களது அரசியல் அறிவின்மையின் வெளிப்பாடாகவே அமையும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள முஸ்லிம் கட்சிகளில் இருந்து, ஆளும் கட்சி என்ற வகையில், தனியாக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கவர்ந்து இழுக்கலாம். குறிப்பாக, முஸ்லிம் காங்கிரஸில் இருந்து இரண்டு பேரும், மக்கள் காங்கிரஸில் இருந்து இரண்டு பேரும் கட்சி தாவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஆனால், அவ்வாறு தனியாகப் பலமுள்ள, நம்பிக்கையான எம்.பிகளை வசப்படுத்தவும் அதேபோன்று, பலமான மாற்று அணியை நினைத்த மாதிரி உருவாக்கவும் ‘மொட்டு’வால் முடியாமல் போகுமாயின், அவ்வேளையில், ரவூப் ஹக்கீமும் ரிஷாட் பதியுதீனும் ஜனாதிபதி கோ​ட்டாபயவை அல்லது பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை நோக்கி, நெருங்கி வந்திருப்பார்களாயின், அப்போது தமது கடைசித் தெரிவாக, இக்கட்சிகளை இணைத்துச் செயற்படுவது குறித்து, பொதுஜன பெரமுன சாதகமாகச் சிந்திக்கவும் வாய்ப்பிருக்கின்றது.

இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க ஒதுங்கிக் கொள்ளலாம் என்று கருதப்படுகின்ற சூழ்நிலையில், சஜித் பிரேமதாஸ மீண்டும் களமிறங்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஐ.தே.கட்சியின் வாக்குவங்கியைப் பலப்படுத்துவதுடன், தனக்கு இத்தேர்தலில் கிடைத்த வாக்கை, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தக்க வைக்கின்ற தேவைப்பாடு, சஜித்துக்கு இருக்கின்றது.

சுஜித் பிரேமதாஸ எதிர்க்கட்சித் தலைவராகி, ஐக்கிய தேசியக் கட்சியைத் தலைமையேற்று, மறுசீரமைப்பாராயின், சில நல்ல மாற்றங்கள் ஏற்படலாம் என்பது மறுக்கவியலாது.

அதேபோன்று, ஐ.தே.க ஆட்சியைப் பிடிக்கும் வீரியத்துடன் விஸ்வரூபம் எடுக்கலாம். ஆனால், 14 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், ‘மொட்டு’ அணி வெற்றி பெற்று, ஐந்து மாதங்களுக்குள் நடக்கப் போகின்ற பொதுத் தேர்தலில், அவ்வாறான அபூர்வங்கள் நிகழும் என்று கூற முடியாது.

இதுதான், இன்றைய தேசிய அரசியல் நிலைவரமாகும். இந்தப் பின்னணியில், இலங்கை முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகவும் ஒரு சமூகம் என்ற அடிப்படையிலும் அடுத்த காலடியை, எந்தத் திசையில் எடுத்து வைக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வர வேண்டியுள்ளது. மிக நிதானமாகவும் அவதானமாகவும் முன்னோக்கி நகர வேண்டிய, ஓர் இக்கட்டான காலகட்டமாக இது காணப்படுகின்றது.

இலங்கையில் எல்லாக் காலத்திலும் இனவாதம் இருந்திருக்கின்றது. நாட்டில் முஸ்லிம்களை மய்யமாகக் கொண்டு, அன்றுமுதல் இன்றுவரை, முன்னெடுக்கப்படுகின்ற எல்லா ‘வாதங்களுக்கும்’ பின்னால், சர்வதேச, உள்நாட்டு அரசியல் காரணிகள் இருக்கின்றன என்பதை, முஸ்லிம் சமூகம் விளங்கிச் செயற்படுவது அவசியமாகும்.

பழைய தேர்தல் முறையில் என்றாலும், நாடாளுமன்றத் தேர்தலொன்று நடைபெறுமாயின், பல முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோல்வியடைவார்கள். தோற்கடிக்க வேண்டிய எம்.பிக்களும் உள்ளனர். அத்துடன், முஸ்லிம் பிரதிநிதித்துவங்களும் குறைவடைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

ஆனால், சமூக அக்கறையுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை, முஸ்லிம் சமூகம் உறுதிப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.

முஸ்லிம் அரசியல் தலைவர்கள், இன்றைய காலகட்டத்தில் அளந்து பேசுவதுடன், பொதுத் தேர்தல், அடுத்து எடுத்துவைக்கவுள்ள காலடி தொடர்பில், மிகுந்த பொறுப்புணர்வுடன் தமது முடிவுகளை எடுக்க வேண்டும்.

தேர்தலொன்றைப் பொறுத்தமட்டில், கடந்த காலங்களில் முஸ்லிம்கள் பெற்றுக் கொண்ட பட்டறிவின் பிரகாரம், முஸ்லிம்களின் ஆதரவு, வெற்றி பெறுகின்ற தரப்புக்கானதாக இருக்க வேண்டும்.

அவ்வாறில்லாத, இரு பக்கங்களிலும் உள்ள கூடைகளில், நமது முட்டைகள் கிட்டத்தட்ட சரிசமமாகப் பகிரப்படும் வகையில், வியூகங்களை வகுக்க வேண்டும்.

தமது தலைமைப் பதவிக்காக, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, தாம் இணைந்து செயற்படுகின்ற பெருந்தேசியக் கட்சியை விட்டு, வெளியில் வர முடியாது என்பதற்காக, உணர்ச்சி அரசியலால், பாடல்களால், வீராப்புப் பேச்சுகளால் எதையும் சாதிக்கலாம் என்ற வெற்று இறுமாப்பின் அடிப்படையில், வியூகங்களை வகுக்கக் கூடாது.

மக்களிடத்திலும் பொறுப்புள்ளது. அதாவது, வெறுமனே அரசியல் தலைவர்களின் முடிவுகள், உணர்ச்சிப் பிரவாகங்களுக்குப் பின்னால், ஒரு சமூகம் கண்ணை மூடிக் கொண்டு பயணிக்க முடியாது.

இதன் அடிப்படையில், இது பற்றி இன்றே சிந்திக்கத் தொடங்குவது, தனிப்பட்ட ஒவ்வொரு முஸ்லிமினதும் தார்மீகப் பொறுப்பாகும்.

வெள்ளப் பெருக்குக்கு காரணமானவர்கள்

இப்போது நாட்டில், அடைமழைக் காலம் நிலவுகின்றது. கடந்த சில வருடங்களுக்கு முற்றிலும் மாற்றமாக, நவம்பர் பிற்பகுதியில் ஆரம்பித்த பெரும் மழை, இன்னும் நின்றபாடில்லை.

தலைநகர் கொழும்பு உட்பட, தென்னிலங்கையில் பல இடங்களிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எல்லாப் பகுதிகளிலும் கடந்த பல தினங்களாகத் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன; பல குடும்பங்கள் இவ்வனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளன; இலட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அரசியல் மாற்றங்களுக்கு அப்பால், வானிலையில் ஏற்படும் மாற்றங்களையும் ‘நடப்பு விவகாரம்’ என்ற வகையில், இப்பத்தியினூடாகப் பேச வேண்டியிருக்கின்றது.

மழையையோ, வானிலையையோ கட்டுப்படுத்தும் வல்லமை, நம்மிடம் இல்லை. அதை, அறிவியல் வேறு மாதிரியாகப் பார்த்தாலும், அது இறை சக்தியின்பாற்பட்டதாகும்.

ஆனால், வெள்ளம், பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதை, ஓர் அரசாங்கத்தின் சரியான திட்டத்தால் கட்டுப்படுத்த முடியும்.

தேசிய மட்டத்தில் பார்த்தால், கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்னர், வரட்சி காரணமாகக் குளங்கள் வற்றிவிட்டதாகவும் குடிநீராகச் சுத்திகரிப்பதற்குக் கூட நீரில்லை என்றும் கூறப்பட்டது; அடிக்கடி குடிநீர் விநியோகமும் தடைப்பட்டது. ஆனால், கடந்த இரு வாரங்களுக்குள் பெய்த மழையால், குளங்கள் நிரம்பி வழிகின்றன என்று கூறி, வான்கதவுகள் திறந்து விடப்படுகின்றன.

எனவே, கிடைக்கின்ற நீரைச் சேமித்து வைத்துப் பயன்படுத்துகின்ற பாரிய திட்டம் குறித்து, இலங்கை சிந்திக்க வேண்டும்.

இது ஒருபுறமிருக்க, பிரதேச வாரியாக மழை பெய்யத் தொடங்கி, ஒரு சில மணித்தியாலங்களுக்கு உள்ளேயே, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு விடுவதைத் தொடர்ச்சியாகக் காண்கின்றோம்.

இதற்கு அடிப்படைக் காரணம், முறையற்ற அபிவிருத்தித் திட்டங்களும், வடிகாலமைப்பும் ஆகும். உள்ளூராட்சிச் சபைகளின் வினைதிறனற்ற செயற்பாடுகளும், அரசாங்க அதிகாரிகள், பொது மக்களின் நடவடிக்கைகளும் இந்நிலைமைக்கு இட்டுச் செல்கின்றன.

வடக்கு, கிழக்கில் மட்டுமன்றி நாட்டின் எல்லாப் பிரதேசங்களிலும் குளங்கள், நீரேந்து பகுதிகள், அரசாங்கத்துக்குச் சொந்தமான சதுப்பு நிலங்கள், சட்ட விரோதமான முறையில் நிரப்பப்பட்டுள்ளன.

ஓடிவரும் வெள்ள நீரைக் குளங்களில் சேமிப்பதற்கான திட்டமிடல் எதுவுமின்றி, அரச காணிகள் நிரப்பப்பட்டு, வீடுகள் கட்டப்படுகின்றன. பொது மக்களில், ஒரு சில ‘நிலத்தாசை’ பிடித்தவர்களும், ‘பணத்தாசை’ பிடித்த அதிகாரிகளுமே, இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.

அதேபோன்று, கிராமப் புறங்கள் தொடக்கம் நகர்கள் வரை, எல்லா இடங்களிலும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள், திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படாமை முக்கிய காரணமாகும்.

ஓர் அரசியல்வாதி வீதி போடுவார்; இன்னுமோர் அரசியல்வாதி வடிகான் அமைப்பார். ஆனால், இரண்டுக்கும் தொடர்பிருக்காது. வளவுகளுக்குள் இருக்கின்ற வெள்ளநீர் வடிந்து, வடிகானுக்குள் அல்லது வீதிக்கு வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. அப்படி செய்யப்பட்டிருந்தாலும் அந்த நீர் ஓடிச் சென்று குளங்களில் சேமிக்கப்படுவதற்கான முறையான திட்டங்கள் இல்லை.

இப்படியாக, ஒரு கட்டத்துக்கு மேல் பெய்யும் சிறிய மழைக்கும், வெள்ளத்தில் மூழ்கும் பிரதேசங்கள் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன. எனவே, நீரேந்தும் பகுதிகள், நீர் வடிந்தோடும் இடங்களில் உள்ள சட்ட விரோத குடியேற்றங்கள் உள்ளிட்ட அனைத்து தடைகளும் நீக்கப்படுவதுடன், திட்டமிட்ட அடிப்படையிலான வடிகாலமைப்பு முறைமையை அமைக்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டியுள்ளது. இதில் பொதுமக்களோ, அதிகாரிகளோ யார் சட்டத்தை மீறினாலும், தண்டிக்கப்படுவதே தர்மம் என்றாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 12 =

*