;
Athirady Tamil News

மலையக தேர்தல் அரசியலில் மாற்றங்கள் வருமா? (கட்டுரை)

0

அண்மைக் காலமாக மலையக அரசியலில் ஒரு மாற்றம் ஏற்பட்டு வருவதை கவனிக்க முடிகிறது. மலையக அரசியல் தலைமைகள் விரும்பியோ, விரும்பாமலோ புதுமுகங்களை உருவாக்க வேண்டிய நிலையும், அறிமுகப்படுத்த வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.

அதேபோல முதிர்ந்த அனுபவசாலிகளான அரசியல்வாதிகள் தமது வழக்கமான வழிமுறைகளை மாற்றிக்கொண்டு புதிய வழிகளை கையாள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இக்கால மாற்றத்திற்கு முகநூல், ஸ்மார்ட் ஃபோன்கள், கையடக்க தொலைபேசியின் கெமராக்கள், வீடியோக்கள், குரல்பதிவுகள் போன்றனவும் காரணமாயிருக்கலாம். இவற்றுக்கு அரசியல் வாதிகள் பயப்பட வேண்டியுள்ளது.

மலையக அரசியலில் மாற்றங்களுக்கு இவையுடன் புதிய வாக்காளர் தொகை அதிகரிப்பும், இளம் வாக்காளர்களின் எதிர்பார்ப்பும், இளம் வாக்காளர்களின் கல்வி நிலையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும் கூட காரணங்களாக இருக்கலாம். இதனை புரிந்து கொண்டிருக்கும் அரசியல் வாதிகள் தத்தமது நிலைப்பாடுகளை மாற்ற முயற்சிப்பதை காணக்கூடியதாகவுள்ளது. கட்சி தலைமைகளின் அணுகு முறைகளில் மாற்றத்தை அவதானிக்க முடிகிறது. இதனை நாம் அண்மைக்கால உதாரணங்களோடும், கால நகர்த்தல்களோடும் ஒப்பிட்டு நோக்க வேண்டும்.

இம் மாற்றங்களோடு சிறப்பிடம் பெறுகிறார் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்.

கண்டி மகாவலி ரீச் ஹோட்டலில் இந்திய உதவித் தூதரகத்தின் அனுசரணையோடு இந்திய வம்சாவளி தினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மகாத்மா காந்தி தென் ஆபிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு திரும்பி வந்து இந்திய கலாசாரத்தையும் அதன் தனித்தன்மையையும் மீள நிறுவுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தார். அத்தோடு காலனித்துவ நாடுகளுக்கு எதிரான போராட்டத்தில் ஆயுதங்களை தவிர்த்து சத்தியாகிரகம், அஹிம்சாவழி போராட்டங்களை ஆரம்பித்தார். தேசிய உடைக்காக நூல் நூற்றல், நெசவு கைத்தொழில், கதர் ஆடை அணிதல் போன்றவற்றை மீள் அறிமுகம் செய்து, சுதந்திர போராட்டத்தில் வெற்றிபெற்றார். எனவே ஜனவரி 09ம் திகதியை இந்திய வம்சாவளி தினமாக கொண்டாடுகின்றனர். இவ் வைபவமே மகாவலி ரீச் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இந்திய உதவித் தூதுவர் திரேந்திரசிங் வரவேற்புரையாற்றியதோடு நிகழ்வுக்கான காரணம், இன்றைய இந்திய நிலை, இந்திய வம்சாவளி மக்களை இந்தியா கவனிக்கும் முறை, இலங்கைக்கு செய்த உதவிகள், இலங்கையுடனான நட்பு பற்றியெல்லாம் குறிப்பிட்டு பேசினார்.

இவ் வைபவத்தில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், இ.தொ.கா பொதுச் செயலாளர் அனுசியா சிவராஜா, உதவிச் செயலாளர் ஜீவன் ஆறுமுகம் தொண்டமான், உபதலைவரும், முன்னாள் மத்திய மாகாணசபை முதல்வருமான துரை மதியுகராஜா, ஆகியோருடன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பிலிப் குமார், பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் (ட்ரஸ்ட்) தற்போதைய தலைவரான முன்னாள் அமைச்சர் அருள்சாமியின் மகன் பாரத் அருள்சாமி, மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன், பதுளை நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தொ.தே.ச செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும், இலக்கியவாதியுமான திலகர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எஸ். இராஜரட்னம், மத்திய மாகாண இந்துமாமன்ற தலைவர் துரைசாமி சிவ சுப்பிரமணியம், கண்டி ஆலய அறங்காவலர் ஜி. கிருஷ்ணமூர்த்தி, வர்த்தக பெருமக்கள், இலங்கை இந்திய கலாசார சங்கத் தலைவர் பீ.டி. ராஜன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு வாழ்வுரிமை, பிரஜாவுரிமை, வாக்குரிமை ஆகியவற்றை தமது பாட்டனாரான செளமியமூர்த்தி தொண்டமானே பெற்று கொடுத்தார் என்று இங்கு உரையாற்றிய ஆறுமுகன் குறிப்பிட்டார்.

பின்னர் ஊடகவியலாளர்களை அழைத்து மகாவலி ரீச் ஹோட்டலில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டினை நடத்தினார் எங்கள் அனுபவத்தின்படி ஆறுமுகனை ஊடகவியலாளர் அணுகுவது பிரம்மப் பிரயத்தனமாகவே இருக்கும். சிங்கள, ஆங்கில ஊடகவியலாளருடனும் அவ்வளவு நெருக்கம் காட்ட மாட்டார்.

ஆனால் தற்போது ஒரு மாற்றம் தெரிகிறது. தற்போது ஊடகவியலாளர்களை அரவணைத்து, நட்புடன் பழகத் தொடங்கியுள்ளார். இது அரசியலில் ஒரு மாற்றத்திற்கு வழி வகுக்கும் என நம்பலாம்.

“தை பிறந்தால் வழி பிறக்கும் நல்ல செய்தி ஒன்றிணை பொங்கலுக்கு சொல்கிறேன்” என்று பீடிகையுடன் ஆரம்பித்தார் அமைச்சர். ஊடகவியலாளர்கள் சம்பளமா? எனக் கேட்டனர். பதிலுக்கு ஆம் பொறுத்திருங்கள் பெற்றுத் தருவோம் என்றார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் “மலையக பல்கலைக்கழகம் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பி.பி. தேவராஜ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு ஆரம்ப கூட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மலையகத்தில் தோட்டங்களிலுள்ள மதுபான கடைகள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும். மலையக பாடசாலைக்கு தேவையான கணித, விஞ்ஞான, ஆங்கில ஆசிரியர்களை ஓய்வு பெற்றோரிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் தெரிவு செய்து சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அனுமதி கேட்டுள்ளோம்.

ஜனாதிபதி கோட்டாபாய ஒரு சிறந்த நிர்வாகி அவர் அரசியல்வாதியல்ல. எனவே அவரை முழுமையாக நம்பலாம். அவர் எமது குறைகளைத்தீர்ப்பார்” என்று நம்பிக்கையோடு பேசினார். அமைச்சர் தொண்டமான் இங்கு ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் “உத்தேச அரசியலமைப்பு மாற்றங்கள் சிறுபான்மையினருக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக இருக்குமானால் நிச்சயமாக அதனை நாம் எதிர்போம்” என்றார். ஜனாதிபதி ஆட்சியே சிறுபான்மையினருக்கு சிறந்தது என்பது தொண்டமானின் கருத்து. ஊடகவியலாளரது கேள்விக்களுக்கு ஆறுமுகன் முகம் சுளிக்காமல் பதிலளித்தார் என்பது முக்கியமானது. ஓடி ஓடி கதைக்காமல் நின்று பேசுகிறார். முன்னாள் மத்திய மாகாண அமைச்சர் ரமேஷை அருகில் வைத்துக் கொண்டு மொழி பெயர்ப்பு செய்து விளங்கிக் கொள்கிறார். இளைஞரான சட்டத்தரணி அருள்சாமியின் மகனை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவராக்கியுள்ளார்.

இளைஞர்களையும், ஒரு இளம் யுவதியையும் இணைப்பாளர்களாக வைத்துள்ளார். இவை அனைத்தும் புதிய வாக்காளர்களை கவரக் கூடும்.

மலையகத்தில் ஏற்பட்டுள்ள அடுத்த மாற்றமாக மலையக மக்கள் முன்னணியில் ஏற்பட்டிருக்கும் சலசலப்பை சொல்லலாம். கட்சியின் ஸ்தாபகரது மகள், கட்சியின் பிரதி செயலாளர் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் அடுத்த தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். இவரது அறிவிப்பு கட்சி முடிவல்ல அவரது தனிப்பட்ட முடிவு என கட்சித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது இப்போது முகநூல்களிலும், வலைத்தளங்களிலும் பெரும் பிரச்சினையாக காட்டப்படுகிறது. அனுஷாவும் விடாப்பிடியாக, யார் என்ன சொன்னாலும் இக் கட்சியின் உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும், இளைஞர்களின் மற்றும் பொதுமக்களின் வேண்டு கோளுக்கிணங்கவும் தான் போட்டியிடவுள்ளதாக நேர்காணல்களில் கூறிவருகிறார், சந்திரசேகரனின் மகள். “மலையக இளைஞர்கள் எனது பக்கம் நிற்கின்றனர். அதனால் எதற்கும் அஞ்சவில்லை”, “யார் என்ன சொன்னாலும் எனது கட்சியை காப்பாற்ற வேண்டிய பொறுப்புள்ளது”, “எனது தந்தை என்ன நோக்கத்தோடு கட்சியை ஆரம்பித்தாரோ அதே நோக்கத்தோடு மக்களுக்கு சேவை செய்யவே அரசியல் செய்கிறேன்.”

போன்ற அவரது நேர்காணல்கள் வே. இராதாகிருஷ்ணனை சற்று குழப்பமடையச் செய்துள்ளது. பதிலுக்கு வே இராதாகிருஷ்ணனோ, “நாம் தமிழ் முற்போக்கு முன்னணியில் ஒரு அங்கமாக உள்ளோம். நுவரெலியா மாவட்டத்தில் மூன்று பேர் மட்டுமே த.மு.மு. போட்டியிடலாம். எனவே யாரும் எந்த முடிவு எடுத்தாலும் அது அவரது சொந்த விருப்பு” என எதிர் வினையாற்றியுள்ளார். எனவே பிரச்சினை கட்சிக்குள் முகிழ்ந்துள்ளது என்பது சர்வநிச்சயம். எனவே ம.ம.மு. மத்திய குழு உடனடியாக ஒரு தீர்வு எடுக்க வேண்டிய நிலையிலுள்ளது.

அத்தோடு ம.ம.மு.வின் தொழிற்சங்க தலைவர்களுக்கு, முகவர்களுக்கு, காரியாலய உத்தியோகஸ்தர்களுக்கு சம்பளம் குறித்த திகதியில் வழங்கப்படாமல் தாமதம் செய்யப்படுவதால் அவர்களும் குழம்பிப் போய்யுள்ளனர். இதனால் மலையகத்தில் ஒரு மாற்று தலைமைதேவை என்போர் அனுஷாவை நாடக்கூடும் என்பது எமது கணிப்பு.

ஐ.தே.கவுடன் இணைந்துள்ள த.மு.மு. கட்சியின் கண்டி கொழும்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன் வேலுகுமார் ஆகியோரும் பல புதிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர். பதுளையில், அரவிந்தகுமார், வடிவேல் சுரேஷ் ஆகியோருக்கும் இந்த இவ்வாறான சிக்கல்கள் உண்டு. மொட்டு சின்னத்தில் வேட்பாளரை நிறுத்துவதற்கு நல்ல தமிழ் வேட்பாளர்களைத் தேடி அக்கட்சியினர் வலை விரித்துள்ளனர்.

கண்டியில் முரளிதரனின் சகோதரர் நிறுத்தப்படலாம் எனத் தெரியவருகிறது. இதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இம்முறை தமிழ்பிரதேசங்களுடன் கொழும்பு, கம்பஹா ஆகிய இடங்களிலும் போட்டியிடப்போவதாக தகவல் உள்ளது. இதுவும் மனோகணேசனின் இருப்புக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.

இதேசமயம் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இளைஞர்களும், வர்த்தகர்களும், தமது விருப்பத்தைத் தெரிவித்து வருகின்றனர். பல தமிழர்கள் மாவட்ட அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வர்த்தகர்கள் தாராளமான நிதியை செலவிட்டு வருகின்றனர். இது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு சவாலாக அமையலாம். இது தவிர மலையகத்தில் இளைஞர் அணி ஒன்று தனித்து போட்டியிட ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் தெரிகிறது. இதுவும் பாராளுமன்ற வாக்களிப்பில் சில தாக்கங்களை செலுத்தும் வாய்ப்பு உள்ளது.

கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா மாவட்டங்களில் இ.தொ.கா போட்டியிடப் போவது மொட்டுச் சின்னத்திலா அல்லது தனியாகவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இ.தொ.காவின் தேசிய பட்டியல் இம்முறை கொழும்பு, கண்டி, மாத்தளை மாவட்டத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்ற ஒரு கோரிக்கை இ.தொ.காவில் வலுப்பெற்று வருகிறது.

நுவரெலியாவுக்கு தொடர்ந்தும் தேசியப் பட்டியல் வாய்ப்பு வழங்கப்படுவது தவறு என்ற கோரிக்கை எழுந்துள்ளது. முத்து சிவலிங்கத்தின் முதுமையால் அவருக்குப் பதிலாக நிறுத்தப்படவுள்ள மாற்று வேட்பாளர் யார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

நுவரெலியாவில் தமிழ் வாக்காளர் அதிகம். ஆனால் மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி பகுதியில் மொட்டுச்சின்ன முஸ்லிம் வேட்பாளரோடு இ.தொ.க வேட்பாளர் இணைந்து ஒரு புதிய வியூகத்தினை அமைத்து இரு சாராரும் வெற்றி பெறும்வகையில் ஒரு ஆலோசனைமுன் வைக்கப்பட்டிருப்பதாகவும் அறிய முடிகிறது.

எது எப்படியானாலும் மலையக அரசியலில் ஒரு மாற்றம் ஏற்படவுள்ளது. இந்த மாற்றம் பிரதிநிதித்துவத்தினை குறைக்காத மாற்றமாக திகழவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − seventeen =

*