;
Athirady Tamil News

நல்லிணக்கத்தையும் அபிவிருத்தியையும் இலக்காகக் கொண்ட நகர்வுகள்!! (கட்டுரை)

0

வெளிநாட்டு முதலீடு

இலங்கையை வெளிநாட்டு முதலீடுகளுக்கு மிகவும் பொருத்தமான ஒரு நாடாக மாற்ற வேண்டுமென்பதே தமது முக்கிய நோக்கம் என தெரிவித்திருக்கும் ஜனாதிபதி, அப்பயணத்தின்போது நம்நாட்டு சுற்றாடலை பாதுகாப்பதற்கு மிகுந்த முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டுமெனவும் தெரிவித்திருக்கின்றார். எமது நாட்டைப் போன்ற அந்நிய செலாவணியை பெருமளவில் பெற்றுக்கொள்ளத்தக்க பாரிய இயற்கை வளங்கள் அற்ற ஒரு நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் அதற்கு வெளிநாட்டு முதலீடு என்பது இன்றியமையாததாகும்.

உதாரணமாக, இயற்கை வளங்கள் அற்ற சிங்கப்பூர் பெரும்பாலும் பாரிய வெளிநாட்டு முதலீட்டைக் கொண்டே அந்நாட்டை பொருளாதார ரீதியில் உலகில் முதல்தர முன்னேற்றம் கண்ட நாடுகளுக்கு இணையான நாடாக உயர்த்திக் கொண்டிருக்கின்றது. அவ்வாறு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் அவ்வாறு ஈர்க்கப்படும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சேவையை பெற்றுக்கொடுப்பதற்கும் தமது தாய்மொழி மூலம் கற்ற மனித வளத்தை விட சர்வதேச மொழியாகிய ஆங்கில மொழியில் கற்றுத் தேர்ந்தவர்களை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியான கொள்கையை பின்பற்றியதன் விளைவாகவே சிங்கப்பூரால் தனது பயணத்தை எளிதில் முன்னெடுக்கக்கூடியதாக இருந்தது.

நமது நாட்டைப் பொறுத்தவரையில் வெளிநாட்டு முதலீட்டை பெருமளவில் பெற்றுக்கொள்வதில் அரசியல்வாதிகளின் தலையீடு, போதுமான ஆங்கில மொழிஅறிவின்மை மற்றும் தொழில்நுட்பத்துறை பயிற்சி ஆகியவை இதுவரை காலமும் பாரிய தடைகளாக இருந்துவருகின்றன. முதலீட்டுக்கென நமது நாட்டை நாடிவரும் வெளிநாட்டவரிடம் அரசியல்வாதிகள் பெருமளவு லஞ்சத்தை கோருவதனால் எத்தனையோ முதலீடுகள் கைநழுவிப் போனதாக பல தசாப்தங்களாகவே ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டு வந்துள்ளன. மறுபுறத்தில் வெளிநாட்டு முதலீடுகளைக்கொண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களிலிருந்தும் பெருமளவு இலஞ்சத்தை அரசியல்வாதிகள் பெற்றுக்கொள்கின்றனர் என்ற தகவல் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன. ஆகையால் நமது நாட்டை பிறரின் முதலீடு மூலம் உயர்த்த வேண்டுமாயின் அரசியல்வாதிகளின் இலஞ்ச செயற்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது கட்டாயத் தேவையாகியிருக்கின்றது.

வெளிநாட்டு முதலீடுகளின் மூலம் நம்நாட்டை முன்னேற்றுவதில் சுற்றுலாத்துறை முக்கிய பங்கை வகிக்கக்கூடிய வல்லமையை பெற்றிருக்கின்றது. அதற்கு செழுமையான சுற்றாடலே முக்கிய காரணமாகும். இருப்பினும் காடழிப்புகள், மணல் அகழ்வு கருங்கற்கள் உடைத்தல் ஆகிய செயற்பாடுகள் அரசியல்வாதிகளின் செல்வாக்குடன் கண்மூடித்தனமாக மேற்கொண்டு வருவதால் அது நாட்டின் சுற்றாடலை வெகுவாக பாதித்து வருகின்றது. இதனை தடுத்து நிறுத்தாவிடின் வெளிநாட்டவர்களின் முதலீட்டைப் பெற்றுக்கொள்வது கடினமாக அமையும். அத்தோடு நாட்டுக்கு பெருமளவு அந்நிய செலாவனியை பெற்றுத்தரக்கூடிய சுற்றுலாத்துறையையும் சுற்றாடலின் அழிவானது பாரியளவில் பாதிக்கும். காரணம் நமது நாட்டின் சுற்றுலாத்துறையானது பெரும்பாலும் இயற்கையுடன் இணைந்ததாகவே அமைந்திருக்கின்றது. ஆகையால் நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் இவ்விடயங்கள் மீது கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.

மாணவர்களை மயக்கும் போதை

நாளைய நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெலுத்த வேண்டிய பொறுப்பை ஏற்க வேண்டியவர்களாக இருக்கும் மாணவ சமுதாயமானது முன்பு ஒருபோதுமில்லாத வகையில் தற்போது பெருமளவு போதைப்பொருள் பாவனையை நோக்கி ஈர்க்கப்பட்டு வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. ஆகையால் போதைப் பொருள் வியாபாரிகளின் இலகுவான இலக்காக மாறிவரும் பாடசாலை மாணவர்களை அதிலிருந்து காப்பாற்ற வேண்டிய கட்டாயத் தேவை இன்று ஏற்பட்டிருக்கின்றது.

போதைப்பொருள் உபயோகத்திற்கு அடிமையான மாணவர்கள் ஏனைய மாணவர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் அதேவேளை அவர்களை ஆசிரியர்களால் மாத்திரம் தடுத்து நிறுத்த முடியாதளவிற்கு நிைலமை மோசமாகியிருக்கின்றது. காரணம் போதைப்பொருள் வியாபாரிகளின் பணத்துக்கு அடிமையாகிய அடியாட்களின் அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் பாடசாலையினுள் போதைப்பொருள் உபயோகத்தை தடுக்க முயலும் ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் இந்த அடியாட்களின் நேரடி அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க நேரிடுகிறது. இதனாலேயே பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் உபயோகம் வியாபிப்பதையும் போதைப் பொருள் பாடசாலைகளுக்குள் கொண்டுவரப்படுவதையும் தடுக்கும் புதிய வியூகம் வகுக்கும் வகையில் பாடசாலைகளில் பொலிசாரை கடமையில் அமர்த்த அரசு நடவடிக்கை எடுத்திருக்கின்றது. இச்செயற்பாட்டுக்கு பாடசாலை சமூகமும் பெற்றோரும் பழைய மாணவர்கள் அமைப்புகளும் பூரண ஒத்துழைப்பை வழங்கும்பட்சத்தில் பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் உபயோகத்திலிருந்து காப்பாற்றக்கூடிய வாய்ப்பு கிட்டும்.

தேசிய பாதுகாப்பு

நாட்டு மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக பிளவை ஏற்படுத்துவதற்கு நாட்டின் கல்வி மற்றும் பாடசாலை நிர்வாகக் கட்டமைப்பு ஆகியனவும் கணிசமான பங்களிப்பினை செய்து வந்திருக்கின்றது. ஆரம்ப காலம் முதலே இன, மத அடிப்படையிலான பாடசாலைகளை நிறுவி அதன்மூலம் மாணவர் சமுதாயத்தின் மத்தியில் இன மற்றும் மத ரீதியிலான பிரிவினையை மறைமுகமாக கற்பிப்பதற்கு எமது பாடசாலைகளின் செயற்பாடுகள் காரணமாக அமைந்திருக்கின்றது என்பதையும் அதற்கான தீர்வு யோசனைகளையும் தேசிய பாதுகாப்பு துறைசார் குழு பரிந்துரைத்திருக்கின்றது. அதற்கமைய இன மற்றும் மத அடையாளங்களைக்கொண்ட பாடசாலை பெயர்களை மாற்ற வேண்டும் என்ற பரிந்துரையானது முக்கியமானதொன்றாக அமைந்திருக்கின்றது.

இலங்கையர் என்ற வகையில் ஒரே கற்கைநெறியை கற்கும் மாணவர்களே இன, மத மற்றும் மொழி ரீதியாக பிரிக்கப்பட்டிருப்பதன் மூலம் அவர்களால் சமூகத்தில் ஒற்றுமையை ஏற்படுத்துவதென்பது இயலாத காரியமாக அமைகின்றது. இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டுமாயின் மேற்குறிப்பிட்ட பிரிவினை வாதத்தை தொடர்வதற்கு பதிலாக இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தக்கூடிய கல்வி முறையை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை இன்று ஏற்பட்டிருக்கின்றது. அதற்கான முதல் சமிக்ஞையாக இதுவரை காலமும் பாடசாலைகளில் இருந்துவரும் இன, மத ரீதியிலான பிரிவை ஏற்படுத்தக்கூடிய அடையாளங்கள் மற்றும் பெயர்களை அகற்ற வேண்டும் என்ற பரிந்துரை வரவேற்கத்தக்கதாகும்.

அத்தோடு இலங்கை சமூகத்தை தமது சுயநலத்திற்காக பிரித்தாளும் முறையை கையாள்வதில் முதலிடத்தில் இருந்துவரும் அரசியல் கட்சிகளுக்கும் அச்செயற்பாட்டை மேலும் தொடரமுடியாத வகையிலான ஒரு பரிந்துரையை மேற்குறிப்பிட்ட குழு முன்வைத்திருக்கின்றது. அதற்கமைய இன மற்றும் மத அடிப்படையிலான அரசியல் கட்சிகளை பதிவு செய்வதை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி இருக்கின்றது. இதனை செயற்படுத்தும் பட்சத்தில் இன ரீதியாக வாக்கு கோருவதையும் அதன்மூலம் நாட்டின் ஐக்கியத்துக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதையும் தடுத்து நிறுத்துவதோடு நாட்டு மக்களை அரசியல் கொள்கையடிப்படையில் ஒன்றுதிரட்டும் புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தலாம். அப்படிச் செய்வதன் மூலம் நாட்டின் இன, மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தலாம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து பாதுகாப்பு கருதி முன்னெடுக்கப்பட்ட முகத்திரை அணிதல் மற்றும் முகக்கவச பாவனை தொடர்பிலான தடைகளை அமுல்படுத்த வேண்டுமெனவும் அடையாளத்தை உறுதிப்படுத்தவதற்கு முதலிடம் கொடுக்க வேண்டுமெனவும் இக்குழு மேலும் சிபாரிசுகளை முன்வைத்துள்ளது. கடந்தகாலங்களில் பயங்கரவாத செயற்பாடுகளையடுத்து குறிப்பிட்ட இனத்தை இலக்குவைத்து முன்னெடுக்கப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சமூக ஒடுக்குமுறை ஆகியவற்றைத் தவிர்த்து பயங்கரவாதத்துடன் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களை துல்லியமாக இனங்காண்பதற்கு இத்தகைய செயற்பாடுகள் துணையாக அமையும் என்பதே இப்பரிந்துரைக்கு காரணமென தேசிய பாதுகாப்பு துறைசார் குழு தெரிவித்திருக்கின்றது.

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் நாட்டை முன்னேற்றுவதற்கான வேலைத்திட்டத்தின் ஓரங்கமாகவே இத்தகைய செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. நமது நாட்டில் வெளிநாட்டு முதலீடுகளுக்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமாயின் இன, மத கலவரமற்ற சமாதான சூழ்நிலையை நாட்டில் ஏற்படுத்துவதுடன் நாட்டு மக்களிடையே நல்லொழுக்கத்தை ஏற்படுத்துவது அவசியமாகிறது. இந்த நடவடிக்கைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறுமாயின் அது அரசின் இந்த அபிவிருத்தி இலக்கை இலகுவாக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + six =

*