;
Athirady Tamil News

அமெரிக்கா உருவாக்கும் இலங்கையின் அடுத்த ஹீரோ !! (கட்டுரை)

0

ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட நாளிலிருந்து, நாட்டில் அதிரடி அறிவிப்புகளை விடுத்துக்கொண்டிருந்த கோட்டாபய ராஜபக்‌ஷவின் நடவடிக்கைகளால், பலரும் அதிர்ச்சியடைந்து இருந்தார்கள். நாட்டின் நிர்வாகத்தைச் சீர்தூக்கி வைப்பதற்கும் களைகளைப் பிடுங்கி எறிவதற்கும், உரியவர் வந்துவிட்டார் என்று உச்சிமோந்து கொண்டார்கள்.

அறிவிப்புகளைத் தாண்டி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, களத்தில் அதிரடி விஜயங்களை மேற்கொண்டு, அரச நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு, அவர்களது பணிதொடர்பான கலக்கத்தைக் கொடுத்தார். முதலில், மோட்டார்ப் பதிவுத் திணைக்களத்துக்கு விஜயம் செய்தது முதல், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு விஜயம் செய்தது வரை, மக்கள் சேவை தொடர்பான தனது கரிசனையை, வித்தியாசமான முறையில் வெளிப்படுத்திக் கொண்டார்.

அவருக்கு வாக்களித்த தென்னிலங்கைச் சிங்கள மக்கள், கோட்டாபயவின் இந்த நடவடிக்கைகள் குறித்து மனம் குளிர்ந்தார்கள். நாட்டை முற்றுமுழுதாக ‘சுத்தம்’ செய்வதற்கு, சரியானவரைத்தான் தெரிவு செய்திருக்கிறோம் என்று திருப்திபட்டுக் கொண்டார்கள்.

மக்களுக்கான சேவைகள் தொடர்பில், தான் புதிய அணுகுமுறையைக் காண்பிப்பதாக வெளிக்காட்டிக் கொண்ட அதேவேளை, உயர் பதவிகளுக்கு, முன்னாள் படைத்துறையினரை நியமிக்கத் தொடங்கினார். நடந்து முடிந்த இலங்கையின் சுதந்திரதின நிகழ்வில், தனது இராணுவ இலச்சினைகளை உடையில் அணிந்தபடியே படத்துக்கு போஸ் கொடுத்திருந்தார்.

கோட்டாபய ராஜபக்‌ஷ, முன்னர் இராணுவத்தில் பணியாற்றியவர் என்ற போதிலும், மக்களாட்சியுடைய நாடொன்றுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பவர் என்ற வகையில், தனது இராணுவ அடையாளங்களை இவ்வாறு காண்பிப்பது சரியா, தவறா என்பது பற்றியெல்லாம் அவர் சிந்திக்கவில்லை.

இன்னொரு வகையில் பார்க்கப்போனால், ‘இலங்கையை இனி இராணுவ ஒழுங்கின் கீழான ஒரு தேசமான வைத்திருக்கப் போகிறேன்’ என்ற செய்தியை, மறைமுகமாகக் கூறுவதற்குக்கூட அவர் அவ்வாறு அந்த இலச்சினைகளை அணிந்திருக்கலாம்.

எது எப்படியோ, மக்கள் சேவையை உறுதிப்படுத்தும் தனது அணுகுமுறைக்குச் சமாந்தரமாக, இராணுவ அணுகுமுறையை வேறு தளங்களில் வலுப்படுத்திக் கொண்டு வந்தார். இவ்வாறு, கடந்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடிந்து பதவியேற்ற நாள் முதல், உள்நாட்டுக்குள் நட்சத்திர அந்தஸ்தைக் கட்டியெழுப்பிக்கொண்டு வந்த கோட்டாபய பீடத்தை, முதல் தடவையாக சர்வதேசச் சமூகம் தற்போது சந்திக்கு இழுத்து வந்திருக்கிறது.

அதாவது, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், அமெரிக்காவுக்கு விசா வழங்காததன் மூலம், இலங்கைத் தரப்பைச் சீண்டியதை அடுத்து, ஜெனீவா தீர்மானத்தில் இணை அனுசரணையாளராக அங்கம் வகித்த பொறுப்பிலிருந்து இலங்கை விலகிக்கொண்டுள்ளது. இதன்மூலம், ஆட்சிக்கு வந்துள்ள கோட்டாபய அரசாங்கம், முதல் தடவையாக, அதுவும் மிகவும் சீரியஸாக, சர்வதேச சமூகத்துடன் முரண்பட்டிருக்கிறது.

இதற்கு முன்னர், இந்தியாவுக்குப் பயணம் செய்த கோட்டாபயவிடம், இந்தியப் பிரதமர் மோடி, தமிழர்கள் நல்வாழ்வு குறித்த விடயத்தைப் பேசியிருந்தார். கோட்டாபயவின் இந்த விஜயத்தின் போது, இந்தியத் தரப்பு எந்தவிதமான கேள்வியை, அழுத்தத்தைக் கொடுக்கப்போகிறது என்று தாம் அவதானித்துக் கொண்டிருப்பதாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் அப்போது தெரிவித்திருந்தார்கள்.

கோட்டாபயவுடனான சந்திப்பின்போது, அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் கீழ் தமிழர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய மோடி, இது விடயத்தில், இலங்கை அரசாங்கம் துரிதமாகச் ​செயற்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், சந்திப்பு முடிந்த பின்னர், இந்தியாவில் வைத்தே அதனை நிராகரித்த கோட்டாபய, ‘தி இந்து’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின்போது, “பெரும்பான்மைச் சிங்கள மக்களின் ஆணையின் கீழ் ஆட்சிக்கு வந்துள்ள தற்போதைய அரசாங்கம், அவர்களது விருப்பத்துக்கு மாறாக எந்த விடயத்தையும் செய்யாது” என்றும் “தீர்வுப் பொதி என்று எதையும் தமிழர்களுக்கு வழங்குவது குறித்து தமக்கு உடன்பாடில்லை, அவர்களை நாட்டின் சம பிரஜைகளாக ஏற்றுக்கொள்வதும் அவர்களது பிரதேச அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை கொடுப்பதும்தான் தங்களது அரசாங்கத்தின் முன்னுரிமை” என்றும் கூறியிருந்தார்.

“தமிழர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக்கி, அவர்களது பிரதேசங்களின் முன்னேற்றங்களை அழித்து ஒழித்ததும் ஆட்சிக்கு வந்துபோன இலங்கை அரசாங்கங்கள்தானே, அதனை மீண்டும் அவர்களுக்குக் கொடுப்பதில் என்ன புதுமை இருக்கிறது? அது உங்களது கடமையல்லவா, முப்பது ஆண்டுகளாக உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் அந்த மக்களின் குரலுக்கு என்ன பதில்?” என்று ‘த இந்து’ பத்திரிகையாளர் பதில் கேள்வியை கேட்கவுமில்லை; வசதியாக அதற்கான பதிலை கோட்டாபய வழங்கவுமில்லை.

ஆனால் இந்தச் செவ்வியின் மூலம், இந்திய ஆட்சித்தரப்பு தன்னிடம் முன்வைத்த கோரிக்கையை, அந்த நாட்டிலேயே வைத்து நிராகரித்துவிட்டு வந்தார். இந்தப் பின்னணியில்தான், தற்போது ஷவேந்திர சில்வா விவகாரம் எழுந்துள்ளது. ஷவேந்திர சில்வா விவகாரம் என்பது, வல்லரசுகளுக்கு இடையில் வாலாட்டுவதற்கு முயற்சிக்கும் சிறிலங்காவுக்கு எதிராக பிரம்பெடுத்திருக்கும் ஒரு நடவடிக்கையாகவே தெரிகிறது. இதன் பின்னணியில் இடம்பெறும் திரைமறைவு நாடகங்கள், பலருக்கு தெரியவராதவையாக இருப்பதற்குத்தான் அதிக சாத்தியங்கள் உண்டு.

ஆனால், அமெரிக்கா போட்ட விசா தடைக்கு, தாங்கள்தான் காரணம் என்றும் தாங்கள் மேற்கொண்ட பிரசாரத்துக்குக் கிடைத்த வெற்றி என்றும், சில புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள், நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு ‘டான்ஸ்’ ஆடுவது நகைச்சுவைக்குரியது.

தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரை, இப்போதிருக்கும் நிலையில், அதனைப் பேசக்கூடிய ஒரே தரப்பு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே ஆகும். புலம்பெயர்ந்த அமைப்புகளை, எதாவது ஒரு விடயத்தில் வெளிநாடுகள் அழைத்துப் பேசுகின்றன அல்லது கரிசனையாக அவர்கள் கேட்டதற்கிணங்க ஓர் அறிக்கையை விடுகிறார்கள் என்றால், அது அவர்களது உள்நாட்டு அரசியல் இலாபத்துக்கானதே தவிர, இலங்கையிலுள்ள தமிழர் உரிமை குறித்துப் பேசுவதற்கு, அவர்கள் காண்பித்த அவசரங்கள், தேவைகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. இனிமேல், அதற்குரிய தேவை எதுவுமே வெளிநாடுகளின் பக்கத்தில் இல்லை.

ஆனால், தற்போது எழுந்துள்ள இந்த ஷவேந்திர சில்வா விகாரத்தின் விளைவாக உருவாகக்கூடியதொரு புதிய சூழ்நிலையை, இங்கு வலுதெளிவாக விளங்கிக் கொள்ளலாம். அதாவது, ஜெனீவா தீர்மானத்திலிருந்து இலங்கை அரசாங்கம் விலகிக்கொள்வது, சர்வதேசத்தை பகைத்துக்கொள்வது என்பதற்கு அப்பால், ஷவேந்திர சில்வாவை இந்த விடயத்தில் அமெரிக்கா ஹீரோவாக்கியிருக்கிறது. அதுவும், சிங்கள மக்கள் மத்தியில் மிக்பெரிய ஹீரோவாக்கியிருக்கிறது. அவருக்கான விம்பம், வரும் காலங்களில் இன்னும் பெரிதாகப்போகிறது.

தமது நாட்டின் விடிவுக்காகப் போராடிய தளபதி ஒருவரை, அந்தக் காரணத்துக்காக வெளிநாடு ஒன்று தடை செய்திருக்கிறது என்ற அரசியல் சித்திரம், தற்போது அவர் மீது அழகாக விழுந்திருக்கிறது. ஆக, எதிர்காலத்தில் படைத்துறைப் பதிவிக்காலம் முடியும்போது, அவருக்கான அரசியல் எதிர்காலம், தற்போது கோட்டாபயவின் ஆட்சிக் காலத்திலேயே உறுதி செய்யப்பட்டுவிட்டது என்ற எடுகோளுக்கு வரலாம்.

இவை அனைத்தும் இப்படியிருக்க, இலங்கை அரசாங்கம், இனி வரப்போகும் சர்வதேச சூழ்நிலையை எவ்வாறு கையாளப்போகிறது என்பதுதான் புதிய கேள்வியாக எழுந்திருக்கிறது. உண்மையில், தற்போது எழுந்துள்ள சூழல், கோட்டாபய அரசாங்கத்துக்கு, தென்னிலங்கையில் இன்னும் இன்னும் ஆதரவுத் தளத்தை வலுப்படுத்தியிருக்கிறது. இன்னொரு வகையில், இந்த ஆதரவானது, வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொடுக்குமளவுக்கு உதவி செய்யப்போகிறது என்றும் குறிப்பிடலாம்.

ஆனால், உள்நாட்டு ஆதரவை வைத்துக்கொண்டு சர்வதேசத்தை எவ்வாறு சமாளிக்கப்போகிறது? 2015இல் மஹிந்த அரசாங்கம் கவிழ்ந்ததற்கு முக்கியக“ காரணமே, இந்தியாவுடனும் அமெரிக்காவுடனும் முரண்பட்டுக் கொண்டதுதான் என்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம்.

அப்படியிருக்கும் போது, இனியொரு ராஜபக்‌ஷ இராச்சியத்தைக் கட்டியெழுப்பும் கனவோடும் பலத்த போராட்டத்தோடும் ஆட்சியைப் பிடித்த மஹிந்த – கோட்டா – பஸில் தரப்பு, திரும்பவும் அதே தவறை விடுமா? மீண்டும் சீனாவை நம்பிக்கொண்டு மேற்குலகக் கடலில் காலை விடுவதற்கு ராஜபக்‌ஷர்களின் தரப்பு தயாரா?

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − thirteen =

*