;
Athirady Tamil News

ஐ.நா தீர்மானமும் ஆறிப்போன ரீயும் !! (கட்டுரை)

0

கடந்த பத்தாண்டுகளில் எத்தனையோ ஜெனீவாக்களை நாம் கண்டுள்ளோம். அந்த வரிசையில் இப்போது இன்னொரு ஜெனீவா, அவ்வளவேதான்!

இதை நாம் புரிந்து கொள்ளாமல், நம்பிக்கை வளர்ப்பதில் அர்த்தம் ஏதும் இல்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட பிரேரணை, எதையும் சாதிக்காது என்பது கொஞ்சம் பகுத்தறிவுள்ள எந்தவொரு மனிதனுக்கும் விளங்கியிருக்கும். ஆனால், அதை வைத்து நடக்கும் அரசியல் ஆட்டம் இன்னமும் தொடர்கிறது.
இலங்கை அரசாங்கம், தானே முன்வந்து ஒத்துழைத்த பிரேரணையில் இருந்து வெளியேறிவிட்டதாக அறிவித்துவிட்டது. இந்தப் பிரேரணைக்கு ஆதரவு கொடுத்த முன்னைய இலங்கை அரசாங்கமே, அந்தப் பிரேரணையில் உள்ளவற்றை இலங்கையில் செய்யவில்லை. அந்த அரசாங்கத்துக்குத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முட்டுக் கொடுத்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இப்போது, இலங்கை விலகினாலும் மாற்று வழிகளைச் சர்வதேசம் பயன்படுத்துகிறது. அதன்படி, இலங்கை இராணுவத் தளபதிக்கு, அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளது என்று ‘கரடி’ விடுகிறார்கள். அமெரிக்காவே, இன்று மனித உரிமைகள் பேரவையில் இல்லை. அது விலகி சில ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஜெனீவாத் தீர்மானம், இதுவரை எதைச் சாதித்திருக்கிறது என்று பார்த்தால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு உதவியிருக்கிறது. சர்வதேசம் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்படுகிறது என்று, சிங்களத் தேசியவாதத்தைத் தூண்டி, ராஜபக்‌ஷக்கள் ஆட்சிக்கு மீள்வதற்கு வழி செய்துள்ளது. இதைத் தவிர, எதையும் செய்யவில்லை. ஆனால், கடந்த பத்தாண்டுகளாகத் தமிழ்த் தேசியவாத அரசியல், அதே ரீயை ஆத்தி வந்துள்ளது.

இன்னமும் காணாமல் போனவர்களின் கதி, என்னவென்று தெரியாது. அதற்கான எந்தவொரு பதிலையும் இலங்கை அரசாங்கம் இன்றுவரை வழங்கவில்லை. அரசியல் கைதிகளின் விடுதலை, எட்டாக் கனியாக உள்ளது. ஆனால், தமிழ் மக்களின் பெயரால், அதிகாரத்தில் உள்ளவர்கள் உய்வடைந்து இருக்கிறார்கள்.

ஜெனீவா, இன்னொரு வகையில் காணிகளை வளைத்துப் போடவும் தனியார் மருத்துவமனைகள் கட்டவும் அரச சலுகைகள், அரச உத்தியோகங்கள், அரச வீடுகள் என்பவற்றைப் பெறவும் உதவியுள்ளது.

ஜெனீவா மீண்டும் மீண்டும் வரவேண்டும் என்று விரும்புவது, அதிகாரத்தில் உள்ளவர்களும் அவர்தம் அடிவருடிகளுமே ஆவார். அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு, அதுவொரு விற்பனைச் சரக்கு; அடிவருடிகளுக்கு ஜெனீவாப் பயணம்.

இவர்கள்தான், இலங்கைக்கு எதிராக மாற்றுவழியைப் பிரயோகித்து, மியன்மாருக்கு எதிராக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது போல, இலங்கையை நிறுத்த முடியும் என்று ஆலோசனை சொல்லி, தலைப்புச் செய்தி வரைபவர்கள்.

இவர்களுக்கு, சர்வதேச நீதிமன்றத்துக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கும் வித்தியாசம் தெரியாது. இரண்டின் நியாயாதிக்கங்களின் தன்மை தெரியாது.

கடந்தவாரம், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை, முன்கூட்டியே வெளியிடப்பட்டது. இதை வாசித்தவர்கள் எத்தனை பேர்? அதில் சொல்லப்பட்ட விடயங்கள் மேலும் மேலும் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்கின்றன என்ற செய்தியை அவதானித்தவர்கள் எத்தனை பேர்? இலங்கை அரசுடன் கெஞ்சியும் கொஞ்சியும் பேசுகின்ற தொனி, எதைக் குறிக்கிறது? இவற்றைப் பற்றிப் பேசுவாரில்லை.

இதன் பின்னணியில், நாம் விளங்கிக்கொள்ள வேண்டிய இரண்டு செய்திகள் உண்டு. ஒன்று, தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் அன்றிலிருந்து இன்றுவரை, சிங்கள ஆளும் வர்க்கப் பேரினவாத சக்திகளுடன் வைத்து வந்த வர்க்க உறவானது, இன நலன்களை விட மிக வலிமையானதாகும்.

தமிழ்த் தேசியவாத அரசியலின் சீரழிவைக் கடந்த சில ஆண்டுகளில் நடந்த நிகழ்வுகள், எமக்குக் காட்டி நிற்கின்றன. இந்தச் சீரழிவானது, உண்மையில் தமிழ்த் தேசியவாதிகளது நாடாளுமன்றத் தரகு அரசியல் வறுமையின் இழிநிலையின் வெளிப்பாடே ஒழிய வேறேதுவுமில்லை. இன்றும் அடித்துக் கொள்வதும் அங்கலாய்ப்பதும் அதிகாரக் கதிரைகளுக்காகவே அன்றி, மக்கள் நலன்களுக்கானவை அல்ல.

அதிகாரக் கதிரைக்கான பயனுள்ள குதிரை சர்வதேச சமூகம். அதில், முடியும் மட்டும் பயணிக்க அவர்கள் தயார்; நாம் தயாரா? ஜெனீவா என்ற ரீ ஆறி, ஆண்டுகள் பலவாகி விட்டன. ஆனால், இன்றும் இனியும் அதை ஆத்த, அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × one =

*