”உள்ளக விசாரணை என்பது இலங்கை அரசாங்கத்தின் ஏமாற்று வேலைத்திட்டம்”!! (கட்டுரை)

உள்ளக விசாரணை எனபது இலங்கை அரசாங்கத்தின் நீண்டகால ஏமாற்றுத்திட்டமாகும். முள்ளிவாய்க்காலின் பின்னர் உள்ளக விசாரணைகள், உள்ளக விசாரணைகள் என்று 11 வருடங்கள் சென்று விட்டன. அதன் பின்னர் இராணுவ வீரர்கள் மன்னிக்கப்பட்டுள்ளார்கள். மரண தண்டனை பெற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.இவைதான் இலங்கை அரசாங்கத்தின் வேலைத்திட்டம். எனவே உள்ளக விசார ணைகளில் சர்வதேசத்துக்கும் நம்பிக்கையில்லை. இனிவரும் காலங்களில் அது இறுக்கமான தீர்மானத்துக்கு வழி வகுக்கும் என தமிழர் மனித உரிமைகள் மையத்தின் தலைவர் ச.வெ.கிருபாகரன் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடருக்கு வருகை தந்திருந்த நிலையில் பேரவை வளாகத்தில் வீரகேசரிக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இதனைத் தெரிவித்தார்.
செவ்வியின் விபரம் வருமாறு,
கேள்வி: மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைக்கான இணை அனுசரணை வழங்குவதிலிருந்து இலங்கை அரசானது விலகியுள்ளது. இதனை உங்கள் அமைப்பானது எவ்வாறு பார்க்கிறது?
பதில்: இதைப் பற்றி நாங்கள் நீண்ட காலமாகவே சொல்லி வருகின்றோம். உண்மையில் இந்த இணை அனுசரணை என்பதில் எந்தப் பயனும் இல்லை. ஆனால் இதன் மூலம் இந்தத் தீர்மானத்தை வலிந்ததாக ஏற்படுத்த இலங்கையின் முன்னைய அரசாங்கம் இதனைப் பயன்படுத்தியது. தற்போதைய அரசாங்கம் அரசியல் இலாபங்களுக்காக இந்த இணை அனுசரணை வழங்குவதிலிருந்து விலகுகிறது. இதிலிருந்து விலகுவதால் இவர்களுக்குத்தான் ஆபத்து. இவ்வாறு விலகுவதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இதில் வேலை செய்யும் செயற்பாட்டாளர்களுக்கும் வேலை என்பது மிகவும் இலகுவாகும். காரணம் சர்வதே சத்தின் முன் இதனை விட்டு விலகிச் செல்கிறோம் என்று இலங்கை தெரிவித்ததானது உங்களுக்குத் தெரியும். சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் பல ஏற்கனவே இதனைக் கண்டித்துள்ளன. எனவே இதே பார்வையில்தான பல நாடுகளும் இதனைக் கவனிக்கும் எனபது எமது கருத்து.
கேள்வி: இணை அனுசரணையிலிருந்து விலகியிருக்கின்றோம். ஆனால் மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையிலிருந்து விலகவில்லை. எனவே உள்ளக விசாரணைகளை உரிய முறையில் முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக என்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இதனை நீங்கள் எவ்வாறு கருதுகிறீர்கள். உள்ளக விசாரணைகள் உரிய முறையில் நடைபெறுமா?
பதில்: உள்ளக விசாரணைகள் எனபது இலங்கை அரசாங்கத்தின் நீண்டகால ஏமாற்றுத்திட்டம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். 83 மற்றும் அதற்கு முன்னர் கூட பல உள்நாட்டு ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன் அறிக்கைகளும் வெளிவரவில்லை. முறையான எதுவும் நடைபெறவுமில்லை. விசேடமாக முள்ளிவாய்க்காலின் பின்னர் உள்ளக விசாரணைகள், உள்ளக விசாரணைகள் என்று 11 வருடங்கள் சென்று விட்டன. அதன் பின்னர் இராணுவ வீரர்கள் மன்னிக்கப்பட்டுள்ளார்கள். மரண தண்டனை பெற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இவைதான் இலங்கை அரசாங்கத்தின் வேலைத்திட்டம். எனவே உள்ளக விசார ணைகளில் சர்வதேசத்துக்கும் நம்பிக்கையில்லை. எனவே இனிவரும் காலங்களில் அது இறுக்கமான தீர்மானத்துக்கு வழி வகுக்கும்.
கேள்வி: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு ஓர் எல்லையுண்டு. அதைத் தாண்டி அசாங்கத்தின் ஒத்துழைப்பின்றிச் செயற்பட முடியாது. இவ்வாறான நிலையில் இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்போவதாக சில தரப்பி னர் கூறி வருகின்றனர். இது சாத்தியமா அல்லது அதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்?
பதில்: உண்மையில் சர்வதேச மனித உரிமைகள் சபையின் வேலைத்திட்டங்களைப் பார்த்தால் இலங்கை அரசானது இனியும் தொடர்ந்து மறுத்து வந்தால் மனித உரிமைகள் சபையின் இந்த விடயத்தை பாதுகாப்புச் சபைக்கு அல்லது பொதுச்சபைக்குக் கொண்டு செல்ல முடியும். அப்படி கொண்டுசெல்லப்பட்டால் அது தொடர்பில் ஆராயப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம். இது போன்ற விடயங்கள் சில நாடுகளுக்கு இடம்பெற்றும் உள்ளன.
கேள்வி: இந்தப் பிரேரணைக்கு நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. தற்போது இணை அனுசரணையில் இருந்து விலகியுள்ளது. இந்தச் சமயத்தில் இந்தியா, பிரித்தானியா போன்ற நாடுகள் எத்தகைய நிலைபாட்டை எடுக்க வேண்டும் என உங்களது அமைப்பு எதிர்பார்க்கிறது?
பதில்: உண்மையில் எங்களைப் பெறுத்தவரை அரசியல் மற்றும் பொறுப்புக் கூறல் விடயங்களில் இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் மேல் மட்டத்தில் வேலைத்திட்டங்கள் எடுக்கப்பட வேண்டும். அரசியல் தீர்வு பிரச்சினையைப் பெறுத்த வரை இந்தியாவை கடந்து யாரும் எமக்கு எதனையும் செய்யப்போவதில்லை. எனவே எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் நாம் இந்தியா மூலம்தான் அரசியல் தீர்வுத் திட்ட வேலைத்திட்டங்களில் இறங்க வேண்டும்.
கேள்வி: மனித உரிமைகள் பேரவையால் 2012 முதல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் இலங்கை அரசாங்கமானது அவற்றைப் பூரணப் படுத்தாமல் காரணம் கூறி வருகின்றது. எனவே புலம்பெயர் அமைப்புகள் இதற்கு எவ்வாறான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் புலம்பெயர் அமைப்புகளிடையே இன்று ஒற்றுமை இல்லாத ஒரு நிலை காணப்படுகிறது.
பதில்: நீங்கள் கூறுவது சரிதான். இன்று புலம்பெயர் அமைப்புகள் இடையே ஒற்றுமையில்லாத ஒரு நிலைதான் காணப்படுகிறது. இந்த அமைப்புகள் தம்மிடையே போட்டி போட்டுக்கொள்ளாமல் உரிய முறையிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். ஐ.நா. வுக்கு வருவது என்பது ஒரு சாதாரண விடயமாகியுள்ளது.
முன்பு தொழில்சார் வல்லுனர்கள், பேராசிரியர்கள், சட்டவல்லுனர்கள் போன்ற நிபுணர்களை நாம் அழைத்து வந்தோம்.ஆனால் இன்று சிலர் அரசியல் தேவைகளுக்காகவும் பணம் சேர்ப்பதற்காகவும் வருகின்றனர். அரசாங்கம் எப்பொழுதும் அவர்கள் சார்பாக சிறந்த ராஜதந்திரியைத்தான் ஐ.நா.வுக்கு அனுப்பும். எனவே நாமும் அதற்கேற்ப திறமையான நபர்களை இவ்விடயத்தில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். இங்கு நடைபெறுகின்ற விடயங்களை ஆராய்ந்து ஐ.நா. பிரதி நிதிகளைச் சந்தித்து ராஜதந்திர ரீதியாக செயற்பட்டு ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும்.