;
Athirady Tamil News

சட்ட அதிகாரத்தை முழுமையாக கையில் எடுப்பேன் : மஹிந்த தேசப்பிரிய!! (கட்டுரை)

0

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் பொலிஸ் மற்றும் சட்ட அதிகாரம் நேரடியாக தனக்குக் கீழ் வருவதால் தேர்தல் சட்ட விதிகளை கடுமையாக பின்பற்றப்போவதாகவும் தேர்தல் விதிகளை மீறுவோர் யாராக இருப்பினும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுத்தலைவர் மஹிந்த தேசப்பிரிய இந்தத் தேர்தலை சவால் மிக்க தேர்தலாகவே நோக்க வேண்டியுள்ளதாகவும் தினகரன் வாரமஞ்சரிக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலின் போது சுட்டிக்காட்டினார். தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் யாராக இருப்பினும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பின் நிற்கப்போவதில்லை எனவும் அவர் வலியுறுத்திக் கூறினார்.

2015 ஆகஸ்ட் மாதத்தில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் 4 1/2 வருடங்கள் நேற்றைய தினத்துடன் முடிவடைந்திருப்பதால் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இருப்பதால் நாளை திங்கட்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் எந்த வேளையிலும் பாராளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி பிரகடனப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுவதால் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதும் சட்ட அதிகார ஆயுதத்தை கையில் எடுக்கப்போவதாகவும் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுத்தலைவர் மஹிந்த தேசப்பிரிய பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் பிரத்தியேக பேட்டியொன்றை வழங்கிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவரது நேர்காணல் விபரம் வருமாறு:-

கேள்வி: ஜனாதிபதி தேர்தல் நடந்து நூறு நாட்கள் கடந்த நிலையில் இன்றோ நாளையோ பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்தேர்தலை நடத்துவதற்குத் தயாராகிவிட்டீர்களா?

பதில்: உண்மையிலேயே ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் கலைக்கப்பட்டிருக்கும் அனைத்து மாகாண சபைகளுக்கான தேர்தல்களையும் நடத்துவதற்கே எதிர்பார்த்தோம். ஆனால் அது மீண்டும் தள்ளிப் போய்விட்டது. இது விடயத்தில் நான் பெரும் அதிருப்தியடைந்த நிலையிலேயே இருக்கின்றேன். மாகாண சபைகள் இன்று நிறைவேற்று அதிகாரத்துக்குள் தொடர்கின்றன. மாகாணசபைகள் மக்கள் பிரதிநிதிகளிடம் இல்லை.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட 9 அதிகாரிகளிடமே காணப்படுகிறது. இதனை ஜனநாயக அரசியலுக்கு சவாலாகவே நோக்க வேண்டியுள்ளது.

எவ்வாறாயினும் அரசியலமைப்பின் படியும் தேர்தல் சட்ட விதிகளுக்கமையவும் ஒரு பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தில் 4 ½ வருடங்கள் நிறைவடைந்துவிட்டால்,

அதனைக் கலைத்து தேர்தலுக்குச் செல்லும் அறிவிப்பை விடுப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. அதனடிப்படையில் பாராளுமன்றம் இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் எந்த வேளையிலும் கலைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அந்த தேர்தலை நடத்துவதற்கு நாம் தயாராகியுள்ளோம்.

தேர்தல் திணைக்களம் எந்தத் தேர்தலையும், எப்போது வேண்டுமானாலும் நடத்துவதற்கு தயார் நிலையிலேயே உள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் இந்த பாராளுமன்றத் தேர்தல் எதிர்பார்க்கப்பட்டதொன்றுதான். ஆனால் நான் இதற்குமுன்னதாக மாகாண சபைகளுக்கான தேர்தலையே நடத்திமுடிக்க எதிர்பார்த்திருந்தேன். இதில் சில சட்டச் சிக்கல்களும், அரசியல் சித்து விளையாட்டுகளும் தலைதூக்கியதால் பின்தள்ளப்பட்டு விட்டது. எந்தத் தேர்தலையும் நடத்தும் அதிகாரம் என்னிடம் உள்ள போதும் அதற்கான பிரகடனத்தை என்னால் வெளியிடமுடியாது. பிரகடனம் வெளியானதன் பின்னரே அதிகாரம் என்கைகளுக்கு வருகின்றது. அதன்படியே நானும் தேர்தல்கள் ஆணைக்குழுவும் செயற்படவேண்டியுள்ளது. அதனடிப்படையில் பொதுத்தேர்தலுக்கு நாம் தயாராகி விட்டோம்.

கேள்வி: குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து தேர்தல்களை நடத்துவதால் அதனால் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை எவ்வாறு எதிர் கொள்வீர்கள்?

பதில்: உண்மையிலே இது பிரச்சினைக்குரியது தான். குறுகிய கால இடைவெளியில் தேர்தல்களை நடத்த முற்படுவதால் பல்வேறுபட்ட நெருக்கடிகளை எதிர்கொள்ளவே செய்கின்றோம். ஜனநாயக அரசியலில் இந்தச் சவால்களுக்கு நாம் முகம் கொடுத்தாக வேண்டியுள்ளது. இவ்விடயத்தில் மிக முக்கியமான பிரச்சினை என்னவெனில் தேர்தலொன்றை நடத்தி முடிப்பதற்கு பெரும் தொகை நிதியை செலவிடவேண்டியுள்ளதாகும்.

ஜனாதிபதி தேர்தலின் போது 500 கோடி ரூபாவுக்கும் கூடுதலான நிதி செலவு செய்யப்பட்டது. அதன் கொடுப்பனவுகள் கூட இன்னமும் முழுமையாக செலுத்தி முடிக்கப்படவில்லை. அதற்கிடையில் பொதுத்தேர்தலை நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தலுக்கு குறைந்த பட்சம் 550 கோடி ரூபா தேவைப்படுகின்றது. அதுவும் இத் தேர்தலில் 15 கட்சிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டு வேட்பாளர்கள் காணப்படவேண்டும். அதற்குக் கூடுதலான கட்சிகள் களமிறங்கினால் இந்தத் தொகை 700 கோடி ரூபாவரை அதிகரிக்கலாம். நிதியை ஒதுக்கிக் கொள்வது தொடர்பில் ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளோம்.

அடுத்த விடயம் இப்படி அடிக்கடி தேர்தல்கள் நடத்தப்படுவதால் மக்களும் நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொள்கின்றனர். கட்சிகளுக்கும் பெரிய பிரச்சினைதான். அரசியல் கட்சிகள் பெருமளவு நிதியை செலவிடும் நிலைமையும் காணப்படுகின்றது. அநாவசியமான செலவுகளைக் கட்டுப்படுத்துமாறு நான் பல தடவைகள் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன். பிரசார செலவுகள் தொடர்பில் அறிவுத்தல்களை பின்பற்றுமாறு கடுமையாக வலியுறுத்தியுள்ளேன். சில பிரதான கட்சிகள் எனது அறிவுறுத்தல்களை காதில் வாங்கிக் கொள்வதாகத் தெரியவில்லை. இது கவலையளிக்கக் கூடிய தொன்றாகும்.

எனவேதான் இம்முறை தேர்தல் சட்டவிதிகளை கடுமையாக கையாளத் தீர்மானித்திருக்கின்றேன். இது குறித்து, கடந்த வாரம் கூட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள், பிரதிநிதிகளுக்கு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன். எம்மால் சொல்லத்தான் முடியும் நடைமுறைப்படுத்துவது அவர்களது கைகளில் தான் தாங்கியுள்ளது.

கேள்வி: தேர்தலுக்கு உரிய நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு, புதியவழி என்னவெனக் கருதுகின்றீர்கள்.

பதில்: தற்போதைய நிலையில் தேர்தல் செலவுகளை 550 கோடி ரூபாவுக்குள் மட்டுப்படுத்தவே எண்ணியுள்ளோம். இதுவரையில் பொதுத் தேர்தலுக்கான நிதி ஒதுக்கப்படவில்லை. ஆனால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களுக்கமைய கூட்டு நிதியத்திலிருந்து நிதியை பெற்றுக் கொள்ளமுடியும். இதில் சிக்கல் எதுவும் இருக்காது என்றே நம்புகின்றேன்.

ஜனாதிபதி தேர்தலின் போதைய கொடுப்பனவுகளை தீர்ப்பதற்கும் நிதியொதுக்கீட்டை பெற்றுக் கொள்ளவேண்டியுள்ளது.

தேர்தலின் போது கேட்கப்பட்ட நிதி வழங்கப்படவில்லை என்பதற்காக நாம் கடந்த அரசாங்கத்தையோ தற்போதைய அரசாங்கத்தையோ குறை கூறப்போவதில்லை. எனினும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருந்திருந்தால் இவ்வளவு நிதி செலவாகியிருக்காது.

10, -15 வேட்பாளர்கள் தான் போட்டியிடுவார்கள் என்ற கணிப்பீட்டிலே குறைந்தளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலிலும் 10, -15 கட்சிகள் போட்டியிட்டால் தேர்தல் செலவுகளை 550 கோடிக்குள் மட்டுப்படுத்த முடியும். ஆனால் போட்டியிடும் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் செலவுகள் 650- முதல் 700 கோடி வரை அதிகரிக்கலாம். காரணம் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சிகளுக்கு கட்டுப் பணம் அறிவிடப்படுவதில்லை. சுயாதீனமாகப் போட்டியிடும் குழுக்களுக்கு மாத்திரமே 44 ஆயிரம் ரூபா அறவிடப்படும்.

கேள்வி: புதிதாக கட்சிகளை பதிவு செய்வது தொடர்பில் எத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன?

பதில்: இது வரையில் பதிவு செய்வதற்காக 156 அரசியல் கட்சிகள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளன. இவற்றில் குறைந்தது 100 கட்சிகளேனும் போட்டியிடக் கூடிய வாய்ப்பிருக்கிறது. பதிவு செய்வதற்காக விண்ணப்பித்துள்ள கட்சிகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது. எனினும் தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரிகள் மூவரும் இணைந்தே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.

உண்மையில் 154 கட்சிகளே விண்ணப்பித்துள்ளன. ஒரு கட்சி இரு விண்ணப்பங்களையும் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி ஏற்றுக் கொள்ளப்பட்ட கூட்டணியாக பதிவு செய்வதற்கும் விண்ணப்பித்துள்ளது.

இதுவரையில் பிரதான அரசியல் கட்சிகள் 70 காணப்படுகின்றன. அவற்றில் 64கட்சிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாகும். ஏனையவை சில குறைபாடுகள் காரணமாக ஏற்றுக் கொள்ளப்படாமலிருக்கின்றன.

இதேவேளை புதிய பதிவுக்காக விண்ணப்பித்திருக்கும் கட்சிகளை பதிவு செய்வதில் உடனடியாக செயற்பட முடியாதுள்ளது. நாளைய தினத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் வேட்புமனுக்கோரல் உடனடியாக அறிவிக்கப்படும் இந்த நிலையில் புதிய விண்ணப்பங்களை பரிசீலிக்க காலஅவகாசம் தேவைப்படுகின்றது. இதில் எம்மால் அவசரப்படமுடியாது.

எனவே இந்தப் பொதுத்தேர்தலில் புதிய கட்சிகளுக்கு வாய்ப்பளிக்கமுடியாது போகலாம். ஆனால் அந்தக் கட்சிகள் சுயேச்சைக்குழுக்களாகப் போட்டியிடுவதற்கு எந்தத் தடையும் கிடையாது.

கேள்வி: பாராளுமன்றத் தேர்தலை எந்தத் திகதியில் நடத்துவதற்கு உத்தேசித்துள்ளீர்கள்?

பதில்: குறிப்பிட்ட தினத்தில் தேர்தலை நடத்துமாறு எம்மால் உத்தரவு பிறப்பிக்க முடியாது. அந்த அதிகாரம் ஜனாதிபதியின் கைகளிலேயே உள்ளது. கடந்த முறை 2015ல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 52 நாட்களில் தேர்தலை நடத்தக்கூடியதாக இருந்தது. இம்முறை குறைந்தது 60 நாட்களாவது தேவைப்படும் என்றே கருதுகின்றேன்.

இந்த பாராளுமன்றத்தேர்தல் வரக்கூடிய காலம் சற்றுச் சிக்கலானதாகவே உள்ளது. ஒரு பக்கம் வெசாக் பண்டிகை, மறுபுறம் முஸ்லிம்களின் ரமழான் நோன்பு காலம் இந்த இரண்டு பண்டிகைகளுக்கும் இடையூறு ஏற்படாதவாறு ஒருதினத்தில் தேர்தலை நடத்த வேண்டியுள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டுதான் ஏப்ரல் 25, 27, 28 அல்லது மே மாதம் 4 ஆகிய நாட்களில் ஒரு தினத்தில் தேர்தலை நடத்தலாம் என ஆலோசனை வழங்கியுள்ளோம். மே மாதம் 4 உசிதமானதாகக் கருதப்படவில்லை ஆனால் இறுதிவாய்ப்பு அதுவாகத் தான் இருக்கும்.

கேள்வி: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் எத்தகைய விதிமுறைகள் பேணப்படவிருக்கின்றது?

பதில்: பொதுத் தேர்தலின் போது குற்றச் செயல்களில் தொடர்பு பட்டவர்கள், நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டவர்கள் எவருக்கும் வேட்பாளர்பட்டியலில் இடமளிக்க வேண்டாமென புதிவு செய்யப்பட்ட அனைத்துக்கட்சிகளையும் அறிவுறுத்தியுள்ளோம். சுயேச்சைக் குழுக்களுக்கும் இது பொருந்துவதாக அமையும்.

ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை ஒருநபரின் குடியுரிமையைப் பறிக்காது என்பதால் அவர்கள் தேர்தலில் போட்டியிடமுடியும். கடந்த காலத் தேர்தல்களின் போது வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பெட்டிகளை பறித்தெடுத்து நிலத்தில் அடித்து உடைத்தவர்களுக்குக் கூட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையே வழங்கப்பட்டிருப்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ள வேண்டியுள்ளது.

இவர்களில் சிலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். ஜனநாயக விழுமியங்களை மீறுவோரை மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுப்பதை ஆரோக்கியமானதாக எம்மால் நோக்கமுடியாதுள்ளது. இது குறித்து அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்பதை கட்சிகளின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியிருக்கின்றேன்.

கேள்வி: பொதுத் தேர்தல் வாக்குச் சீட்டு தொடர்பில் என்ன கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள்?

பதில்: இம்முறை தேர்தலில் 2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புக்கமையவே வாக்களிப்பு இடம்பெறும் .ஒருகோடி 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கையானது ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கத்தகுதி பெற்றவர்களை விட இரண்டு இலட்சத்து70 ஆயிரம் பேரால் கூடியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்படும்போது குறைந்தது இரண்டு இலட்சம் வாக்குச் சீட்டுக்கள் மேலதிகமாக அச்சிட வேண்டியநிலை காணப்படுகின்றது. பழுதடைந்த தவறாகப் பயன்படுத்தப் பட்டதை ஒரு வாக்காளர் முறைப்பாடு செய்தால் அவருக்கு பிறிதொருவாக்குச் சீட்டு வழங்க வேண்டிய தேவையும் ஏற்படலாம். வாக்களிப்பு நிலையங்களில் முறைகேடுகள் நடந்தாலும், மறு வாக்குப்பதிவுக்கு மேலதிக வாக்குச்சீட்டுக்களை பயன்படுத்த வேண்டும்.

கேள்வி: அரச அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பில் எத்தகைய அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளன?

பதில்: புதிதாக எதுவும் கிடையாது. தேர்தல் விதிமுறைகளைப் பேணிக்கொள்ள வேண்டியது கட்டாயமானதாகும். அரச அதிகாரிகள் எவரேனும் தேர்தலில் போட்டியிட விரும்பினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டவுடனேயே அவர்கள் விடுமுறையில் செல்ல வேண்டும். அதே போன்று அதிகாரிகள் தமது கடமையை ஒழுங்காகச் செய்ய வேண்டும். உயர் மட்டத்தில் யார் கட்டளையிட்டாலும், தேர்தல் விதிகளை மீறிச் செயற்பட முனையக் கூடாது. அதேபோன்று ஊடகங்கள் பக்கச் சார்பின்றிச் செயற்பட வேண்டும். எந்தத் தரப்புக்கும் சார்பாக கூடுதல் ஆதரவை வெளிப்படுத்த முனையக் கூடாது.

இந்தத் தேர்தலின் போது ஊடகங்கள் மிக உன்னிப்பாக அவதானிக்கப்படும். மத வழிபாட்டுத்தலங்களிலும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்படக் கூடாது. மீறுவோர் மீது சட்ட ரீதியான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் நிலை ஏற்படலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − three =

*