;
Athirady Tamil News

கொரோனா அச்சமும் தேர்தல் மிச்சமும் !! (கட்டுரை)

0

இன்று இலங்கை ஒரு மாபெரும் அபாயத்தை எதிர்நோக்கி நிற்கிறது. உலகம் முழுவதும் பயத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொற்று, இலங்கையிலும் மெதுமெதுவாகத் தனது விஷக் கால்களைப் பரப்பத் தொடங்கியுள்ளது.

வளர்ச்சியடைந்த நாடுகளே, இந்தத் தொற்றில் இருந்து, தமது நாட்டு மக்களைக் காப்பாற்றப் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்தத் தொற்றுக்கான தடுப்பு மருந்து, இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. குறைந்தது ஜூலை, ஓகஸ்ட் மாதம் வரை, இந்தத் தொற்றின் அபாயம் இருக்கும் என, இதுகுறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். நாங்களோ, தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்.

இலங்கையில், அடுத்த மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தல்களைப் பிற்போடுவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. ஒரு பொறுப்பு வாய்ந்த அரசாங்கமாகத் தன்னைத் தற்போதைய அரசாங்கம் காட்டிக் கொள்ள வேண்டுமாயின், தேர்தல்களைப் பிற்போட வேண்டும். நாட்டு மக்களின் இன்றைய தேவை, தேர்தல் பிரசாரங்களோ, தேர்தல் வாக்குறுதிகளோ அல்ல.

அரசாங்கத்துக்குத் தேர்தல்களை நடத்துவதற்கான அவா இருந்தால், அது நடத்தி விட்டுப் போகட்டும். ஏனெனில், இலங்கை அரசாங்கங்கள் என்றும் மக்களுக்கானவையாக இருந்ததில்லை. ஆனால், தேர்தல்களை நடத்துவதற்கான ஆணையை உடைய தேர்தல்கள் ஆணைக்குழுவோ, தேர்தல்களைப் பிற்போடுவதற்கான எந்தத் தேவையும் இல்லை.

ஏனெனில், சுகாதார அதிகாரிகள், “கொரோனா ஆபத்து இல்லை” என்று தெரிவித்துள்ளார்கள். கொரோனா மிகமோசமாகப் பரவாவிடின், தேர்தல்கள் நடத்தப்படுவது உறுதி.

தேர்தல்கள் யாருக்குத் தேவை என்பதே, இப்போதிருக்கின்ற முக்கியமான கேள்வி. நிச்சயமாக, சாதாரண இலங்கையர்களுக்கு அல்ல. கொரோனா அச்சத்தில் இருப்பவர்களின் கவலை, உயிர் பற்றியதேயன்றி, தேர்தலில் யார் வெற்றி பெறுவது என்பது பற்றியல்ல. தேர்தலைப் பிற்போடக் கேட்ட கட்சிகளும் கேட்காத கட்சிகளுமாய் தேர்தலில் போட்டியிடத் தயாராகி விட்டன.

தேர்தலைத் தள்ளிப்போட அரசாங்கமும் தேர்தல் திணைக்களமும் மறுத்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சிகளும் சிறுபான்மைக் கட்சிகளும் இணைந்து, தேர்தலைப் புறக்கணிக்கவியலும். ஏனெனில், இந்த விடயத்தில் சஜித் பிரேமதாஸ, ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மனோ கணேசன், ஞானசார தேரர், அத்துரலியே ரத்தின தேரர் என எல்லோரும் சந்திக்கும் புள்ளி இதுவாகும். ஆனால், இதைச் செய்ய இவர்கள் யாரும் விரும்பமாட்டார்கள்.

ஏனெனில், நாடாளுமன்றக் கதிரைகளுக்கான விருப்பமும் அதிகாரத்துக்கான அவாவும் மக்களின் உயிர்களை விட முக்கியமானவை.

இந்த நெருக்கடியிலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் யோக்கியவான்கள்தான் நாளை நாடாளுமன்றத்தில் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த போகிறார்கள்.

இன்று இலங்கையர்கள் மத்தியில், கொரோனா வைரஸ் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது; இது நியாயமானது. ஏனெனில், இது தொடர்பில் நம்பிக்கையூட்டும் வகையிலான நடவடிக்கைகள் எதையும் அரசாங்கம் எடுக்கவில்லை. முதலில் பாடசாலைகள் மூடப்பட்டன. பிறகு ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, அது இருநாள் ஆனது. இறுதியில் முழுமையாக மூடப்படாது என்ற அறிவிப்பு. இவ்வாறு ஒன்றுக்கு ஒன்று, முரண்பட்ட கொள்கை முடிவுகள் நடைமுறையாகின்றன. எனவே எம்மிடம் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டம் இல்லை. ஆனால், தேர்தல்களை நடத்தலாம் என்று சுகாதாரத் துறையினரால் உறுதிபடச் சொல்ல முடிகிறது.

இன்று, இரண்டு கேள்விகள் நம் முன்னே நிற்கின்றன. ஒன்று, மக்களின் நலன்களை மதியாது நடத்தப்படவுள்ள தேர்தலை, முழுமையாகப் புறக்கணிக்க, இலங்கையர்கள் தயாராக இருக்கிறார்களா? இரண்டு, மக்களின் நலன்களை முன்னிறுத்தி, தேர்தலை நடத்துவதற்கு எதிராக, ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்ப நாம் தயாராக இருக்கிறோமா?

இவை வெறுமனே சிறுபான்மையினருக்கான கேள்விகள் அல்ல. இவை அனைத்து இலங்கையர்களுக்குமான கேள்விகள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − 9 =

*