;
Athirady Tamil News

கொரோனா வைரஸைத் தடுக்க இந்திய மக்களின் ஒத்துழைப்பு !! (கட்டுரை)

0

நான்கு பிரிவுகளைக் கொண்ட 1897 ஆம் வருட ‘தொற்று நோய்ச் சட்டம்’ தற்போது இந்தியாவின் ‘பாதுகாப்புக் கவசமாக’ மாறியிருக்கிறது.

மனித குலத்துக்கு மாபெரும் பேரிடராக, மறக்க முடியாத பேரிடராக மாறியிருக்கும் கொரோனா வைர​ஸால் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இந்த இரண்டாவது சுற்றில் தாக்கத்துக்கு உள்ளாகி இருக்கின்றன.

முத‌ற்சுற்றில், தாக்குதலுக்கு உள்ளான சீனா, மெல்ல மெல்ல சகஜ வாழ்க்கையை நோக்கி நகருகின்றது. இந்தியா சகஜ வாழ்க்கையை ஒத்தி வைத்து விட்டு, 21 நாள் ஊரடங்கில் இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி விடுத்த ‘மார்ச் 22 ஆம் திகதி ‘சுய ஊரடங்கு’ ஜனநாயக நாடான இந்தியா என்பதை பறைசாற்றியது. ‘உயிர்ப் பயம்’ மக்களை வீட்டுக்குள் இருக்க வைத்தது என்றாலும், பிரதமரின் வெறும் வேண்டுகோளுக்கே வீட்டுக்குள் அமர்ந்து, வெற்றி கரமாக ஒத்துழைத்தது வரலாறாக மாறியிருக்கிறது.

இதுவரை, இந்தியாவில் இருந்த பிரதமர்கள் விடுத்த வேண்டுகோளை, இவ்வளவு கட்டுப்பாட்டுடன் இந்திய மக்கள் நிறைவேற்றி இருக்கிறார்களா என்று கேட்டால், அதில் முதலிடத்தில் இருப்பது மோடியின் ‘சுய ஊரடங்கு’ வேண்டுகோள்தான்.

மக்களின் இந்த ஒத்துழைப்பை விமர்சிக்க, அரசியல்வாதிகளுக்குக் கிடைத்த வாய்ப்பாக, ஒரு சிலரின் மீறல்களை எடுத்துக் கொண்டார்களே தவிர, ஒட்டு மொத்த இந்தியாவும் பிரதமர் மோடியின் பின்னால் நின்றது. டிசெம்பர் மாதத்திலேயே, சீனாவில் கொரோனா வைரஸ் வந்து விட்டது. ஜனவரி மாதத்தில் அது, இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் மூன்று பேரைத்தாக்கி விட்டது. அப்படி இருக்கும்போது, ஏன் சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு, மார்ச் 22 ஆம் திகதி வரை காத்திருந்தார்கள் என்ற கேள்வி, அரசியல் வட்டாரத்தில் எழுப்பப்பட்டது.

இருந்தபோதிலும், இந்தியா போன்ற பெரிய ஜனநாயக நாட்டில், ‘மிக முன்பாகவே’ கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தால், மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்பது இன்னமும் கூட, விடை தெரியாத கேள்விதான். இவ்வளவு நெருக்கடிகளுக்குப் பிறகு, விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையே வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய இந்தியர்கள், முழுமையாகக் கடைப்பிடிக்கவில்லை. விமான நிலையத்தில் சோதனைக்கே மறுத்தவர்கள் ஏராளம். அதில், சிரேஷ்ட அதிகாரிகளின் பிள்ளைகள் கூட, கொரோனா சோதனைக்கு மறுத்த செய்திகள் வெளிவந்தன.

ஆகவே, முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், நாடாளுமன்றக் கூட்டத் தொடரை முன் கூட்டியே நிறைவு செய்திருக்க வேண்டும் என்பதெல்லாம் எளிமையான கேள்விகளாக இருக்கிறதே தவிர, ஆட்சியில் இருப்பவர்கள் அது மாதிரி முடிவுகளை எடுக்கும் முன்பு, பல்வேறு பரிசீலனைகளைச் செய்ய வேண்டி இருக்கிறது.

ஏனென்றால், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அவசரமாக அறிவித்து, பொருளாதார வளர்ச்சிக்கு ஊறு விளைவித்து விட்டது என்ற பழியை, ஏற்கெனவே மத்தியில் உள்ள பா.ஜ.க அரசாங்கம் சுமந்து கொண்டிருக்கின்ற நிலையில், கொரோனா வைரஸிலும் அப்படியொரு பழியை எடுத்துக் கொள்ள அரசாங்கம் தயங்கியிருக்கலாம்.

ஆனால், கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பில், இப்போது ஏப்ரல் 14 ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம், இந்தியாவின் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் முக்கிய பங்காற்றும் என்பதில் சந்தேகமில்லை.

‘தனிமைப்படுத்துதல்’ என்ற ஒன்றே இந்த நோயின் பரவலைத் தடுக்கும் என்பதால், ‘சமூகத் தொற்று’ கட்டத்தை அடையாத இந்தியா, இது போன்ற ஊரடங்கு மூலம் நிச்சயம் தற்காத்துக் கொள்ள முடியும் என்று பிரதமரும் மற்ற மாநில முதலமைச்சர்களும் முடிவு செய்தது, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சரியான பாதையிலேயே செல்கின்றனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளன.

ஊரடங்கு பிறப்பித்த கையோடு 1.70 இலட்சம் கோடி, நிவாரண நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். அதில், ஊரடங்குச் சட்டத்தை சமாளிப்பதற்கு, அமைப்புசாரா தொழிலாளர்கள், இல்லத்தரசிகள், ஏழை எளியவர்கள் ஆகியோருக்கு நிதியுதவி அறிவித்திருக்கிறார்.

இன்னொரு பக்கம், இந்திய ரிசர்வ் வங்கி, ஊரடங்குச் சட்டம் அமலில் இருக்கும்போது, வருமான இழப்பு ஏற்படும் என்பதால், வங்கிக் கடன் தவணைகளை மூன்று மாதம் கட்டத் தேவையில்லை என்று கட்டளை பிறப்பித்திருக்கிறது. 24 மணி நேரமும் அத்தியாவசியப் பொருள்கள், அத்தியாவசிய சேவைகள் கிடைப்பதற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வீடியோ கலந்துரையாடல்கள் மூலம் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

ஆகவே, ஒரு புறம் ‘சுகாதாரப் பேரிடர்’; இன்னொரு பக்கம், ‘பொருளாதாரப் பேரிடர்’. இந்த இரண்டையும் சம அளவில் கையாண்டு, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் இந்திய அரசாங்கம் வேகமாகச் செயற்பட்டு வருகிறது.

இந்தக் கட்டுப்பாட்டின் பலன் தற்போது தெரியத் தொடங்கியிருக்கிறது. கொரோனா வைரஸ் நோய் தொற்றின் எண்ணிக்கை, மள மளவென என்று உயராமல், மிகவும் மெல்லவே நகருகிறது. 21 நாள் ஊரடங்கு முடிவில் உலக நாடுகளோ, உலக சுகாதார நிறுவனமோ எதிர்பார்த்த பாதிப்பு ஏதும் இந்தியாவில் நடக்காமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே தென்படுகின்றன.

மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஒரு புறமிருக்க, மாநில முதலமைச்சர்கள் மிகவும் உத்வேகத்துடன் செயற்படுகிறார்கள் என்பதே கள நிலைவரம். கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயன், நாட்டில் உள்ள மற்ற முதலமைச்சர்களுக்கு எல்லாம் முன்னோடியாகக் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். நோய்க்கு உள்ளானோரைக் கண்டுபிடித்து தனிமைப்படுத்துவதில், கேரள அரசாங்கம் மகத்தான சாதனை நிகழ்த்தியிருக்கிறது. அதேபோல், பாதிப்படைந்துள்ள மக்களின் வாழ்வாதாரத்தைக் கைதூக்கி விடுவதற்கும் உரிய சலுகைகளை அறிவித்து, மத்திய அரசாங்கத்திடம் மட்டும், புதிதாக 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கேட்டிருக்கிறார்.

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் நான்கு மாதச் சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்து, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார்.

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, காலை ஆறு மணிக்கெல்லாம் மருத்துவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, கொரோனா வைரஸ் தடுப்பு அறிவுரைகளைக் கர்நாடக மாநிலத்தில் செயல்படுத்தி வருகிறார்.

‘தனிமைப்படுத்தலைப் பொருட்படுத்தாமல் வெளியே வந்தால், கண்டதும் சுட உத்தரவிடுவேன்’ என்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை விடுத்து, மக்களை ஒருமுகப்படுத்தி, கொரோனா வைரஸின் ‘சமூகத் தொற்றை’த் தடுக்க முனைகிறார். சமயல் பொருள்களை, வீட்டுக்கே கொண்டு சேர்த்து, மக்கள் வீட்டிலேயே இருப்பதை உறுதி செய்கிறார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். தனிமைப்படுத்துதலை முதலில் அமல்படுத்தி, மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன் மாதிரியாக அதிகம் பாதிப்புக்குள்ளான மஹாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே செயல்படுகிறார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘அனைத்து அரிசி ‘ரேசன்’ அட்டை தாரர்களுக்கும் 1,000 ரூபாய்’,‘அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய்’, ‘நடை வியாபாரிகளுக்கு 2,000 ரூபாய்’ என்று நிதியுதவித் திட்டத்தை அறிவித்துச் செயல்படுகிறார்.

ஆகவே, பிரதமரின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில், பா.ஜ.க முதலமைச்சர்ளும் எதிர்க்கட்சிகளின் முதலமைச்சர்களும் ஒத்துழைப்புக் கொடுத்து, கொரோனா வைரஸ் தடுப்பில் மும்முரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தங்கது பங்குக்கு எதிர்க்கட்சிகளும் போதிய ஒத்துழைப்பை அரசாங்கத்துக்கு வழங்கி வருகின்றன. மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை, ஈடுகட்ட நிதியுதவி, நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று நாட்டில் முதலில் குரல் கொடுத்தவர் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆவார். இதை, காங்கிரஸ் தலைவர்கள் பின் தொடர்ந்தனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதேபோல், தமிழக அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை எடுத்த எடுப்பில், “வரவேற்கிறேன்” என்று அறிவித்து, “தமிழகச் சட்டமன்றத்தை ஒத்தி வையுங்கள்” என்று குரல் கொடுத்தவரும் ஸ்டாலின் தான். ஒவ்வொரு மாநிலத்திலும், இந்த ஒத்துவைப்பு எதிர்க்கட்சிகளிடமிருந்தும் ஆளுகின்ற முதலமைச்சருக்கு கிடைத்துள்ளது என்பது, இந்தப் பேரிடரின் மிகப்பெரிய அனுபவம். காங்கிரஸ் கட்சியின் சார்பில் கூட, முதலில் பிரதமர் மோடியைக் குறை கூறியவர்கள், பிறகு, “உங்கள் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருகிறோம்” என்று கூறியதைக் காண முடிந்தது. குறிப்பாக, காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பிரதமருக்குக் கடிதம் எழுதி, அந்த ஆதரவை நல்கினார். நிவாரணத் திட்டங்களையும் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கொம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ராஜ்ய சபை எம்.பி சீத்தாராம் எச்சூரி, “45 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்களின் கதி என்னவாகும்” என்று கேள்வி எழுப்பினார். அனைத்துக்கும் பதிலளிக்கும் வகையில் தான், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் ‘1.70 இலட்சம் கோடி’ நிவாரண அறிவிப்பு வெளியானது.

பிரதமர் முதல் முதலமைச்சர் வரை, ஆளுங்கட்சி முதல் எதிர்க்கட்சிகள் வரை, அனைவரும் ஒரே முகமாக நின்று, கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கையில், இந்திய மக்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவ ஊழியர்கள் பணி போற்றத்தக்கது. ஊரடங்குச் சட்டத்தை மீறும் ஒரு சிலரைக் கூடப் பிடித்து வைத்து, நூதன தண்டனைகளை வழங்கிப் பொலிஸார் ஊரடங்குச் சட்டதைதைக் கடைப்பிடிக்க வலியுறுத்துகிறார்கள்.

தனிமைப்படுத்துதல், சமூக விலக்கு என்ற மக்களின் மகத்தான ஒத்துழைப்பு மூலம், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை, இந்தியா தனிமைப்படுத்தி விடும் என்ற நம்பிக்கை, 21 நாள் ஊரடங்குச் சட்டத்தின் மூலம் அதிகரித்திருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − 6 =

*