;
Athirady Tamil News

சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருப்பதே நலம்!! (கட்டுரை)

0

கொரோனா வைரஸ் உலகையே அச்சம் நிறைந்த நிலைக்குத் தள்ளியுள்ளது. கொரோனா தொற்று பரவும் செய்திகள் நம்மிடம் இடைவெளி இல்லாமல் வந்து சேர்கின்றன.

இதனால் இயல்பாகவே பதற்றம் அடைபவர்கள் மற்றும் ஒரே செயலை பலமுறை செய்யத் தூண்டும் ஓ.சி.டி (Obsessive-compulsive disorder) எனப்படும் மனநோய் உள்ளவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாவதாக BBC செய்திச் சேவை நேற்று கவலை தரும் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் குறித்து தினமும் கேட்கும் செய்திகள் நமக்கு கவலை அளிப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஏற்கனவே மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை இந்த செய்திகள் இன்னும் அதிகம் பாதிப்படையச் செய்யும் என்று அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் பரவத் தொடங்கிய போது உலக சுகாதார நிறுவனம் மனநிலையைப் பாதுகாப்பது குறித்த ஆலோசனைகளை வழங்கியது. இந்த ஆலோசனைகள் சமூக வலைத்தளத்தில் அதிகம் வரவேற்கப்பட்டன. பதற்றம் அடைபவர்கள் குறித்து பிரிட்டனின் நிக்கி லிட்பெட்டர் என்ற நிபுணர் கூறுகையில் ”கட்டுப்பாட்டை மீறி நிலைமை மோசமடையும் போது ஏற்படும் அச்சம், நிச்சயமற்ற தன்மையை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஏற்படும் கவலை ஆகிய இரண்டும்தான் நாம் பதற்றம் அடைய காரணமாக உள்ளன” என்கிறார்.

‘எனவே இயல்பாகவே பதற்றத்துடன் இருக்கும் நபர்களுக்கு இந்த சூழ்நிலையை எதிர்கொள்வது மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது” என்கிறார் அவர்.

”நாம் அறியாத பல விஷயங்கள் குறித்துத்தான் பொதுவாகப் பதற்றம் ஏற்படும். ஏதாவது நடந்து விடுமோ என்ற உணர்வில்தான் பதற்றம் வேரூன்றி இருக்கிறது” என்கிறார் மனநிலைக்கான அறக்கட்டளை ஒன்றின் செயற்பாட்டாளர் ரோஸி.

செய்திகளைப் படிக்கும் போது கவனம் தேவை. வெளிநாடு ஒன்றில் வசிக்கும் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான நிக் என்பவர், ‘கொரோனா வைரஸ் குறித்து அதிக செய்திகளைப் படிப்பதே கவலை அளிக்கிறது’ என்கிறார்.

”நான் கவலை அடையும் போது, என் எண்ணங்கள் கட்டுப்பாட்டை மீறி, பேரழிவின் விளைவுகள் மீது செல்லத் தொடங்கின ” எனக் கூறுகிறார் அவர். மேலும் தனது பெற்றோர் மற்றும் தனக்குத் தெரிந்த முதியவர்களின் நிலை குறித்தும் கவலையாக இருக்கிறது என்கிறார் அவர்.

”பொதுவாக கவலையில் இருந்தால், அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்வேன். ஆனால் தற்போது அப்படி செய்ய முடியவில்லை” என்கிறார் அவர்.

இணையத்தில் செய்திகளைப் படிப்பது மற்றும் சமூக ஊடகம் ஆகியவற்றில் இருந்து விலகி இருப்பது உள்ளிட்ட சில அறிவுரைகளை கடைப்பிடித்ததால், அவர் தற்போது நல்ல மனநிலையில் இருக்கிறார்.

‘உங்களைப் பாதிக்கக் கூடிய செய்திகளை காண்பதையும் படிப்பதையும் தவிருங்கள். மாறாக அடிப்படைச் செய்திகளை அறிய குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அந்த நேரத்தில் மட்டும் செய்திகளைக் கவனியுங்கள்.

நிறைய தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவி வருகின்றன. எனவே சரியான செய்திகளை ஒளிப்பரப்பும் ஊடகம் அல்லது அரசாங்கம் வெளியிடும் தகவல்களை மட்டும் நம்புங்கள்.

சமூக ஊடகத்தில் இருந்து விலகி இருங்கள். சமூக வலைத்தளம் அதிகம் வேண்டாம்’ என்கிறார்கள் மனநல நிபுணர்கள்.

மான்செஸ்டரில் வசிக்கும் அலிசன், ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் குறித்த அனைத்து செய்திகளையும் படித்து தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக இருந்த எல்லா ஹாஷ்டேக்குகளையும் பின் தொடர்ந்துள்ளார். ஆனால் நாளடைவில் இதனால் மனம் வருந்தி பல முறை அழுததாகக் கூறுகிறார்.

எனவே தற்போது சமூக ஊடகத்தில் அதிக நேரம் செலவிடாமல், விலகி இருப்பதாகவும், தமக்கு கவலை அளிக்கும் எந்த செய்திகளையும் பார்ப்பதில்லை என்றும் அவர் கூறுகிறார்.

‘கொரோனா வைரஸ் குறித்து அடிக்கடி தகவல்களை வெளியிடும் ‘வட்ஸ் அப்’ குறுப்களை மியூட் செய்யவும். Face Book இல் உங்கள் மனதை காயப்படுத்தும் பதிவுகளை ‘ஹைட்’ செய்யுங்கள்.

கைகளைக் கழுவுங்கள், ஆனால் அதீதமாக அல்ல. ஓ.சி.டி எனப்படும் ஒரு செயலை பலமுறை செய்யத் தூண்டும் மனநோய்க்கு ஆளாகி, தேவையான ஆலோசனைகள் பெற்று தங்களை மாற்றிக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தவர்களுக்கு தற்போது குழப்பம் நிலவுகிறது.

குறிப்பாக ஓ.சி.டி யால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு வகையினர் அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை மேற்கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் அடிக்கடி கை கழுவும் பழக்கத்தைத் தவிர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள். ஆனால் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் அவர்களுக்குள் தற்போது குழப்பம் நிலவும்.

மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க தற்போது அவர்கள் மீண்டும் சவர்க்காரம் மற்றும் ‘சனிடைசர்’ பயன்படுத்த ஆரம்பித்தால், பிறகு மீண்டும் அந்தப் பழக்கத்தில் இருந்து விடுபடுவது சவாலாக இருக்கும்.

எந்த வகையான ஓ.சி.டி யால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் தங்களை திசைதிருப்பிக் கொள்ள வெளியில் செல்வார்கள். ஆனால் தற்போது அவர்களை திசைதிருப்பிக் கொள்ளவும் வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிறைந்த இந்தச் சூழலில் பலர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் நேரலாம். எனவே இந்த நேரத்தில் நீங்கள் அக்கறை கொள்ளும் அனைத்து நண்பர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் மின் அஞ்சல் முகவரியை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். அவர்களுடன் உரையாட நேரம் ஒதுக்குங்கள்.

நீங்கள் தனிமைப்பட்டிருந்தால் உங்களுக்கென சில வேலைகளை பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நாளும் வௌ;வேறு பணிகளில் ஈடுபடுங்கள். இதனால் இறுதியில் உங்கள் தனிமையான நாட்களை நீங்கள் சரியாகப் பயன்படுத்தினீர்கள் என்ற நிறைவு ஏற்படும்.

உங்கள் மனம் இயற்கையை அணுகட்டும். இயற்கையையும் சூரிய ஒளியையும் முடிந்தவரை உங்கள் மனம் அணுகட்டும். நல்ல உணவு உண்ணுங்கள். நிறைய தண்ணீர் குடிங்கள், நல்ல உடற்பயிற்சி செய்யுங்கள்.

அமைதி காக்கவும். நீங்கள் நினைக்கும் அனைத்தும் சரிதான் என்று நம்பாதீர்கள். அது வெறும் உணர்வோ, யோசனையோ மட்டும்தான்.

இந்த தருணத்தை பற்றி மட்டும் சிந்தியுங்கள். ஏனென்றால் இந்தத் தருணம் நன்றாகத்தான் உள்ளது.

இவ்வாறு மனநல நிபுணர்கள் மக்களுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளதாக BBC குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × five =

*