;
Athirady Tamil News

வீணான பீதியை பரப்பும் ஊடகங்கள்!! (கட்டுரை)

0

கொரோனா வைரஸ் உலகத்தையே முடக்கியுள்ளது. உலகின் வல்லரசு நாடுகள் கூட கொரோனா வைரஸை சமாளிக்க முடியாமல் தங்கள் மக்களின் உயிரை பறிகொடுத்து வருகின்றன.

கொரோனாவின் முடிவுக்காக உலகமே காத்திருக்கும் நிலையில், அதனைத் தடுக்கும் தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்காக உலகம் முழுவதும் பல நாடுகள் தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான மைக்கேல் லெவிட், ‘கொரோனா வைரஸ் விரைவில் முடிவுக்கு வரப் போகிறது’ என்று உலக மக்களுக்கு ஒரு நல்ல செய்தியைக் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் சரியான தடுப்பூசி இன்னும் கண்டறியப்படவில்லை. தற்சமயம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவரவர் நோயெதிர்ப்பு திறனைப் பொறுத்து ரெம்டெசிவர், குளோரோகுயின், லோபினாவிர் மற்றும் ரிடோனாவிர் போன்ற மருந்துகள் உலக நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

பல்வேறு உலக நாடுகள் இதற்கான தடுப்பு மருந்தைக் கண்டறிய சுமார் 800மில்லியன் டொலர் செலவழித்து வருகின்றன.

இந்த வைரஸ் அழிய வேறு சில வழிகளும் உள்ளன. எந்தவொரு வைரஸும் நீண்ட காலத்திற்கு ஒரே மாதிரியான அமைப்பில் இருக்க முடியாது, அவற்றின் மரபணுக்கள் மாற்றங்களுக்கு உள்ளாகும். இதுதான் வைரஸ் பிறழ்வு என்று அழைக்கப்படுகிறது. இதனால் அந்த வைரஸ் பலவீனமடைய வாய்ப்புள்ளது. கொரோனா வைரஸும் சில காலங்களுக்குப் பிறகு இந்த மாற்றத்திற்கு உள்ளாகும். ஆனால் எப்பொழுது என்று இன்னும் கணிக்க முடியவில்லை.

இரசாயன அமைப்புகளின் சிக்கலான மாதிரிகளை உருவாக்குவதற்கான இரசாயனவியலுக்கான 2013நோபல் பரிசைப் பெற்ற அமெரிக்க-பிரிட்டிஷ்-இஸ்ரேலிய உயிர் பௌதிகவியலாளர் மைக்கேல் லெவிட், கொரோனா வைரஸ் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

அவரது கருத்துப்படி வேகமாகப் பரவும் இந்த நோயின் வேகம் படிப்படியாக நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. சீனாவில் இவ்வாறுதான் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளதாக லெவிட் கூறியுள்ளார். டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸைப் பற்றி லெவிட் ஜனவரி மாதம் முதலே தீவிரமாகக் கவனித்து வருகிறார். அவர் கண்டறிந்த வரை முதலில் உலக மக்களின் covid-19குறித்த பீதியை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அடிப்படையாக சமூகத்தில் இருந்து விலகி தனிமைப்படுத்துதலை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

லெவிட்டின் கணிப்பின்படி பெப்ரவரியில் சீனாவில் சுமார் 3,250இறப்புகளுடன் 80,000எண்ணிக்கையிலான உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பெப்ரவரி நடுப் பகுதியில் மொத்தம் 80,298தோற்றுகள் மற்றும் 3,245இறப்புகளுடன் அவரது கணிப்பு கிட்டத்தட்ட சரியாகி விட்டது.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவியுள்ள போதிலும், மார்ச் 16முதல் புதிதாகக் கண்டறியப்பட்ட நோயாளிகளை சீனா கண்டிருக்காது. ஒவ்வொரு நாளும் 50க்கும் மேல் புதிதாக பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட 78நாடுகளின் தரவை ஆராய்ந்த பின்னர், மைக்கேல் லெவிட் சில ‘மீட்பு அறிகுறிகளை’ கண்டறிந்தார்.

அவரது முக்கிய கவனம் ஒட்டுமொத்த புள்ளிவிபரத்தில் அல்ல, ஆனால் ஒவ்வொரு நாளும் அடையாளம் காணப்பட்ட புதிய தொற்றுகளின் எண்ணிக்கை மற்றும் அந்த எண்ணிக்கையில் ஒரு நாளிலிருந்து அடுத்த நாளுக்கு ஏற்பட்ட மாற்றம் ஆகியவற்றைக் கவனித்து வருகிறார்.

சமீபத்தில் லெவிட் அளித்த பேட்டி ஒன்றில், ‘விரைவில் உலகம் கொரோனாவில் இருந்து தப்பிக்கப் போகிறது’ என்று கூறியுள்ளார்.

மேலும் ‘நோய் பரவும் எண்ணிக்கைகள் கவலை அளிப்பதாக இருக்கின்றன. ஆனால் நோயின் வளர்ச்சி வீதம் குறைவதன் தெளிவான அறிகுறிகள் உள்ளன’ என்று அவர் கூறியுள்ளார்.

சமூக விலகல் மற்றும் காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போடுவது இரண்டுமே பரவலைக் கட்டுப்படுத்த மிகவும் முக்கியமானவை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஊடகங்கள் தேவையற்ற பீதியைப் பரப்புவதாக லெவிட் வருத்தப்பட்டுள்ளார். இத்தாலியில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் அவர்கள் சமூக வாழ்க்கையில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பதும் அங்கு பெரிய அளவில் இழப்புகளை ஏற்படுத்தும் என்று லெவிட் முன்கூட்டியே கணித்திருந்தார். மேலும் இத்தாலியர்களின் கலாசாரம் வேடிக்கை நிறைந்ததாகவும், வளமான சமூக வாழ்க்கையை கொண்டுள்ளதாலும் அவர்களை தனிமைப்படுத்துதல் கடினமானது என்று அவர் கூறியுள்ளார்.

இத்தாலியின் வலுவான தடுப்பூசி எதிர்ப்பு இயக்கம் அதிக பாதிப்பு ஏற்படுத்துவதற்கு ஒரு காரணியாக இருக்கலாம் என்று அவர் விளக்கியுள்ளார்.

Covid-19 வைரஸை தடுக்கும் மருந்து கண்டுபிடிக்க முடியாத சூழலில் கொரோனா பரவுதலில் இருந்து தப்பிக்கவும், தடுக்கவும் சமூகத்தில் இருந்து விலகி இருப்பதே இப்போதைக்கு ஒரே வழி என்று லெவிட் கூறியுள்ளார்.

தனிமைப்படுத்தலை தவிர இதிலிருந்து தப்பிக்க தற்போது வேறு வழியில்லை, அதேசமயம் நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 9 =

*