;
Athirady Tamil News

உலக நாடுகள் அனைத்திலும் பெருகும் குடும்ப வன்முறைகள்! (கட்டுரை)

0

உலகெங்கும் கொரோனாவை விடப் பெரும் கொடுமையாக இருக்கிறது வீட்டிற்குள் இருக்கும் மக்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம். இதனால் அடிதடிகளும் குடும்ப வன்முறைகளும் அதிகரித்து வருவதாக உலக நாடுகள் பலவற்றில் இருந்து கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

சிலர் இந்த வேளையில் ஊரடங்கு உத்தரவை சாதகமாகப் பயன்படுத்தி ஆளுக்கு ஒரு வேலை செய்து நேரத்தைக் கடத்தினாலும் உலகம் முழுவதும் குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருகிறது என்ற தகவல் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.

கணவன் மனைவி தகராறுகள், குடும்ப உறவினர்களிடையே மனக்கசப்புகள் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான நாடுகளை ஆக்கிரமித்திருக்கிறது.இதனால் உலகின் பல நாடுகளில் மக்களை தனிமைப்படுத்தி வைத்திருப்பதற்காக உரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா தாக்கத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் ஏப்ரல் 30வரை லொக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. லொக் டவுன் அறிவிப்பால் பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இது கொரோனாவை விட கொடுமையாக இருக்கிறது. தனிமையில் உள்ள பலருக்கு பசி பட்டினி. அதனால் பாதிப்பு ஏற்படுகிறது.

குடும்பத்தில் இருப்பவர்கள் ஒரே வீட்டிற்குள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு இருப்பதால் சில நேரங்களில் சந்தோஷமாக இருந்தாலும் எதிர்காலம் பற்றிய பயம் பல நேரங்களில் சண்டையை உருவாக்குகிறது.

மது போதைக்கு அடிமையானவர்கள் பாடுதான் பெரும் திண்டாட்டமாக உள்ளது. அடிதடிகள் உருவாகி அதோடு சண்டைகளும் அதிகரித்து வருகின்றன.

வைரஸ் பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. சமூக விலகலை கடைப்பிடிக்க இலங்கை, இந்தியா, இத்தாலி, சீனா, தென்கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஈரான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் குடும்பச் சண்டை தொடர்பான வழக்குகள் தொடர்பான தொலைபேசி அழைப்புகள் அதிகரித்து வருவதாக சட்டத்தரணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

குடும்பத்தில் அடிதடி, சண்டைகள், மனரீதியான காயங்கள், குடும்ப உறுப்பினர்களிடையே கசப்புகள், உடல்ரீதியான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த குடும்ப வன்முறைகள் சீனா, இத்தாலி, ஈரான், ஜெர்மனியிலும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடும்பத்திற்குள் அனைவரும் சேர்ந்திருப்பதே இதுபோன்ற சண்டைகள் அதிகரிக்கக் காரணமாவதாக உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். எதிர்காலம் பற்றிய பயமும் அதனால் ஏற்படும் மனஅழுத்தமும் வார்த்தைகளில் சூட்டினை அதிகரிக்கச் செய்கின்றன. இந்த தகராறினால் அதிகம் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர். இந்த ஊரடங்கு முடிந்த பின்னரும் இந்த சண்டைகள் நீடிக்கும் பட்சத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை விட குடும்பங்களில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + seven =

*