;
Athirady Tamil News

திரு. சுமந்திரன் அவர்களுக்கு பகிரங்க கடிதம் ! (கட்டுரை)

0

எஸ் ஜே வி செல்வநாயகம் அவர்களினது 43 வது நினைவு தினத்தை முன்னிட்டு இந்த மடலை தங்களுக்கு எழுதுவதற்கு என்னை என் மனசாட்சி நிர்ப்பந்தித்து இருக்கின்றது.

தமிழ் இனத்தின் அடிப்படை அபிலாசைகள் எதிர்கால வரலாற்றிலும் எமது இனத்திற்க்கு கிடைக்கப்பெறுமோ? எனும் தமிழ் மக்களுக்கு இருக்ககூடிய ஏக்கம் தான் என்னை இக்கடிதத்தை எழுத தூண்டியது.

ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக துன்பத்தாலும், துயரத்தாலும் அளவு கடந்த பொருள் இழப்புக்களாலும் நீண்ட நெடிய யுத்தத்தின் உயிர் இழப்புக்களினாலும் துவண்டு போயிருக்கும் தமிழ் இனம் ஒரு முக்கியமான அரசியல் அபிலாசைகளை அறவே அடையமுடியாத காலகட்டத்தில் காலகட்டத்தில் வழி தெரியாத சந்தியில் இன்று நின்றுகொண்டு இருக்கின்றது. தமிழினத்தின் அபிலாசைகள் என்று தமிழ் இனமும் நானும் கூறுகின்றபொழுது அவை என்ன என்று நீங்கள் முற்றிலும் அறியாமல் இருக்கக் கூடும் ஆனாலும் நான் விடயத்திற்கு வருகின்றேன்.

இதற்கான வழிதேடலில் நீங்களும் மூத்த தலைவர் இரா சம்பந்தர் அவர்களும் நல்லிணக்கம் எனும் போர்வையில் ரணில் விக்கிரமசிங்க எனும் தனிநபர் மீது வைத்த நம்பிக்கைகளால் இறுதியாக இன்று ஒட்டுமொத்தமாக ஏமாற்றப்பட்டுவிட்டீர்கள். நல்லெண்ண செயற்பாட்டிற்காக தமிழ் இனம் கொடுத்த விலையும் காலமும் அளப்பரியது. இன்றைய நினைவு நாளுக்குரிய எஸ் ஜே வி செல்வநாயகம் அவர்கள் பண்டா – செல்வா, டட்லி – செல்வா, மாவட்ட அபிவிருத்தி சபைகள் என மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்டது போல இன்று அரசியல் குழந்தைகளான நீங்களும் பெருந்தலைவர் சம்பந்தர் ஐயாவும் ஏமாற்றப்பட்டுவிட்டீர்கள். குறை கூறவில்லை சிங்களப் பேரினவாதம் இதைச் செய்யும் என்பதை சேர் பொன் அருணாச்சலம் காலத்திலிருந்தும் குறிப்பாக 1956 ஆம் ஆண்டிற்க்குப் பின்னரும் பூரணமாகப் புரிந்து கொண்ட, சிந்திக்கவல்ல என் போன்ற தமிழர்களும் இந்நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். ஆனாலும் முரண்பாடு கண்டால் முரண்பாடு, அபிவிருத்தி என்றால் பிச்சை எனும் சிங்கள தேசிய வாதத்திற்கு நாங்கள் அடிமைகளாகிவிட்டோம்.

இறுதியாக நான் சொல்ல விளைவது என்னவென்றால தனிநாட்டுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு தனிநாடு என்பது தான் அவர்களுடைய ஒரே நோக்கம் என்ற காரணத்தினால் ஜனநாயக ரீதியான மாற்று அரசியலுக்குள் கொள்கை ரீதியாக பங்களிப்பை அவர்களால் செய்ய முடியாது. அதனால் தான் இராஜதந்திரத்தோடு அமைதியாக செயற்பட்டு அவதானித்துக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தையும் தமிழ் மக்களினது ஏற்புடைமையையும் தேர்தலினூடன மக்கள் தீர்ப்புவரை அவதானிப்பது போல பின்புலமாகவிருந்து அவதானித்துக் கொண்டிருந்தார்கள்.

தமிழ் மக்கள் ஏகோபித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து பாராளுமன்றம் அனுப்பிய போது அந்தப் பதிலுக்காக காத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமதாக்கிக் கொண்டார்கள். இது சிந்தனைத் தெளிவின் அடிப்படையில் { clarity of thinking } நியாயமானது என கூட்டமைப்பின் உருவாக்கத்தின் பங்காளியான அன்றைய அகில தமிழ் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான கலாநிதி குமரகுருபரன் தெரிவித்திருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் பங்கேற்றிருந்த போராளிகளின் தலைமைகளான அரசியல் வல்லுனரும் அர்ப்பணிப்பும் கொண்ட திரு. சுரேஸ் பிரேமச்சந்திரன், தெளிவான, ஸ்திரமான சிந்தனைத் திறன் கொண்ட செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்களும் ஒன்றாக ஜனாநாயக அரசியலில் பங்கேற்றிருந்தார்கள்.
இக்காலகட்டத்தில் கூட தமிழ் இனத்தின் போராட்டத்தின் அர்த்தம் புரியாத, அதன் ஆரம்பம் தெரியாத, என்றும் பங்கு கொள்ளப் பயந்திருந்த, நாதியற்ற சுமந்திரன் ஆகிய நீங்கள்…

தமிழினத்தின் உரிமைப் போராட்டம் சிங்களப் பயங்கரவாதத்தினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னாலில் சொந்த தேவை, நன்மை கருதி அரசியலுக்கு வந்த நீங்கள் ஏற்கனவே ஒருமைப்பாட்டினை ஏற்படுத்திய போராளிகளின் தலைமைகளையும் ஒருமைப்பாட்டை உருவாக்கிய சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் குமரகுருபரன், கஜேந்திரகுமார், தமிழர் விடுதலை கூட்டணியின் ஆனந்தசங்கரி ஆகியோரினது அர்ப்பணிப்பை மறந்து தமிழ் அரசுக் கட்சியுடன் மட்டுமாக, தேசிய ஒருமைப்பாட்டினைத் தகர்த்தெறிந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பயணிக்கச் செய்தவர்களுக்கு பாதகம் செய்த நீங்கள் சுமந்திரனும், இரா சம்பந்தனும் உங்களது அடக்குமுறைகளுக்கு அடிபணியும் மாவை சேனாதிராசாவுமேயாகும். உங்களது நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட பயம் கொள்ளும் தமிழ் அரசுக் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் (உங்கள் முன்) செல்லாக் காசுகள் என்பதை தமிழ் இனம் நன்கறியும்.

முதன்முதலாக விடுதலைப் போராளிக்கான பயிற்ச்சியை மறைந்த நண்பரும் ஈரோஸ் இயக்கத்தின் தலைவர்களிலொருவருமான அருளர் அவர்களோடு பாலஸ்தீனம் சென்று போராளிக்கான தகுதிபெற்ற டக்லஸ் தேவானந்தா அவர்களுக்கு கூட ஒரு தெளிவான அரசியல் பாதை ஒன்று உண்டு. அது எமது இனத்தின் அபிலாசைகளைப் பெற்றுத் தருமா? அல்லது அபிவிருத்தியை பெற்றுத்தருமா? அவர் ஒரு ஜனநாயகம் தெரிவு செய்த தலைவர், அவரால் எதைச் சாதிக்க முடியும்? அவரது அரசியல் பாதையை ஏற்று அந்தச் சக்தியை தமிழ் இனம் அவருக்கு இன்றுவரை கொடுத்திருக்கவில்லை.

தமிழினத்தின் அர்த்தமுள்ள ஒருமைப்பாடு கருதி கூட்டமைப்போடு எமது பலத்த பிரயத்தனத்தின் பின்னர் மீண்டும் இணைந்து கொண்ட ஆனந்தசங்கரி அவர்களைத் தொடர்ந்து தமிழ் இனத்தின் ஒருமைப்பாட்டின் தேவையை புரிந்து ஏற்றுக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இணைந்து கொண்ட போராளிகளின் தலைமையும் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும் DPLF { Plot }இன் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தான் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தலைமை தாங்கவல்ல அரசறிவியல், ஆளுமை, மொழி வல்லமை, சிந்தனை ஆற்றல் கொண்ட பரஸ்பரம் கருத்துக்களை பரிமாறக்கூடிய எவர்மீதும் கால்புணர்வு கொள்ளாத பண்பாளராக நாம் அடையாளம் காண்கின்றோம். ஆனால் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நிலைத்திருக்கவேண்டும் என்கின்ற அமைதி காப்பதும் எந்தவித பலனையும் தமிழ் இனத்திற்கு அளிக்கப்போவதில்லை.

என்னைப் பொறுத்த வரையில் அன்று பண்டாரநாயக்காவாலும், டட்லி சேனநாயக்காவாலும் ஏமாற்றப்பட்ட சா ஜே வே செல்வநாயகம் போல இத்தனை தசாப்தங்களின் பின்னர் நாகரீக அரசியலால் உங்களை ஏமாற்றிய ரணில் விக்கிரமசிங்கா அவர்களால் நீங்களும் ஏமாற்றப்பட்டுவிட்டீர்கள் எனும் யதார்த்தத்தை உண்மையாக சொல்கிறேன்.ஏனைய அரை அவியல் அரசியல் கிழங்குகள் போல் நீங்களும் தோல்வி கண்டு விட்டீர்கள். தமிழ் இனத்தை ஏமாற்றி விட்டீர்கள் எனக் கூற நாக் கூசுகின்றது. ரணில் விக்கிரமசிங்கா அவர்களை இன்று நீங்களும் இரா சம்பந்தரும் மன்னித்து விட்டீர்களா?

எமது இனத்தின் தேவையின் பாத்திரத்தை உணர்ந்து தமிழ்த் தேசிய அரசியலுக்கு தலைமை தாங்க வந்த நீதியரசர் அவர்களையும் நன்கு திட்டமிட்டு ஒதுக்கிவிட்டு அதே வழியில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் உங்களைப் போலவே ஜனாதிபதி சட்டத்தரணியான கே. வி. தவராசா அவர்களையும் உங்களுக்குப் போட்டியாக தமிழ் இனத்தின் அமோக ஆதரவோடு வந்து விடுவாரோ என்ற பயத்தில் தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளின் ஒற்றுமையை குழி தோண்டிப் புதைத்த துரோகம் உங்களையும் இதற்கு உடந்தையாகவிருந்த R. சம்பந்தன் அவர்களையும் சாரும் உங்களுடைய ஆக்கிரமிப்பால் மெளனிக்கப்பட்ட மாவை சேனதிராசா அவர்களும் இந்தப் பழிச்செயலுக்குள் அடக்கம்.

ஓய்வுபெற்று தன்பாட்டில் ஆன்மீக வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்த நீதியரசர் சி.வி. விக்னேசுவரன் அவர்களை அரசியலுக்குள் கொண்டுவந்த தமிழ் பெரியோர்களுக்கும், தமிழ் புத்தியீவிகளுக்கும் நீங்கள் செய்த தூரநோக்கற்ற
தூரோகத்தனங்கள் தான் எத்தனை? அதற்கான காரணங்கள் தான் என்ன?

எனது உள்ளம் புல்லரிக்கின்றது தமிழ் இனத்திற்கு இருக்கக்கூடியதெல்லாம் அடுத்தது என்ன? ஒரு சக்தி வாய்ந்த தமிழ் மக்களுடைய பிரதிநிதித்துவம் உருவாகுமா? மூன்றும், இரண்டும், ஒன்றும், ஒன்றுமாக எப்படி ஒருமைப்பாட்டைக் காட்டுவது? யார் காட்டிக் கொடுப்பது? தமிழ் மக்களின் அபிலாசைகளில் இவர்கள் ஒன்றுபடுவார்களா? எனும் தோல்விக்குரிய கேள்விகள் எம்முள் எழுத்தான் செய்கின்றன.

எமது இனத்தின் இன்றைய துன்ப துயரம் நிறைந்த பட்டினியை போக்க வடமாகாண உள்ளூராட்சி சபைகளினது நிதியை அந்தந்த உள்ளூராட்சி சபைகளினது மக்களுக்கான உணவு பொருட்கள் வழங்குவதற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை மறுத்து தமிழ் மக்களை எதேச்சதிகாரமாக அடக்கி ஆள முற்படும் ஆளுனர் திருமதி சார்ல்ஸ் அவர்களுடைய மனிதநேயமற்ற செயலுக்கு எதிராகச் செயற்பட்டு மக்களுக்கான பசியை, பட்டினியை போக்குவதற்குரிய தார்மீகக் கடமையை மறந்து, இலங்கைத் தேசிய அரசியலில் வழிகாட்டியாக, ஏகப்பட்ட ஆளுமைகள் சிங்களதேசத்தில் இருக்கும்போது சட்டமாதிபர் திணைக்களத்தின் பிரதிநிதியாக நீங்கள் ஆஜராக முனைவது எமது இனத்தின் தெரிவான உங்களுக்கு அது தேவையற்றதொன்றாகும்.

அதேவேளை தமிழ் இனத்தின் அபிலாசைகளை மறந்து உங்களது சில்லறைப் பெருமைகளை வெளிக்காட்ட முனைகின்ற உங்களது கருத்துக்கள் எம்மால் என்றைக்குமே ஏற்றுக்கொள்ளமுடியாதவையே!

உங்களது பணி உங்களுக்கு மாலையிட்ட தமிழினத்திற்குரியதேயன்றி இன்னொருவருக்கு உரியதொன்றல்ல.. எப்படி இதிலிருந்து மீளப் போகின்றோம்.. What is the trump card என்பதை நேர்மையாக, பகிரங்கமாக உண்மையைத் தெரிவியுங்கள்.

தங்களின் தற்துணிவான பதிலை எதிர்பார்த்து ….

தம்பி தம்பிராசா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + ten =

*