;
Athirady Tamil News

தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக்குரல் முழங்கும் விடுதலை நாள் இன்றாகும்.!! (கட்டுரை)

0

அடிமைகளாக வலம் வந்து வீழ்ந்தே வாழ்ந்து மடிவதை விட, தலை நிமிர்ந்து வாழவேண்டுமென்ற இலட்சியத் தீயை தொழிலாளர்கள் மனங்களில் மூட்டிவிடும் புரட்சி நாளே மே தினமாகும். முதலாளி வர்க்கத்தின் அடக்குமுறை பிடிக்குள்ளிலிருந்து விடுதலைபெற வேண்டுமென 18 ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்தனர். உலகம் முழுவதிலும் போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்தன. இதில் 1886 இல் சிக்காக்கே போராட்டத்தை மறந்துவிட முடியாது. அந்த போராட்டமே இன்றைய நாளுக்கு வித்திட்டது.

இலங்கையில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அன்று கொத்தடிமைகளாகவே அடக்கி ஆளப்பட்டனர். அடிமைச் சங்கிலியை உடைத்தெறிவதற்கு பலவழிகளில் அவர்கள் முயற்சித்தும், பெரும்பாலான நடவடிக்கைகள் கைகூடவில்லை. காரணம், பலமானதொரு தொழிற்சங்க கட்டமைப்பு இருக்கவில்லை.

கவ்வாத்து வெட்டப்படுவது போல் இலங்கையின் வரலாற்றிலிருந்து வெட்டப்பட்டு, வஞ்சிக்கப்பட்ட – பெருந்தோட்டப்பகுதி மக்களுக்காக ஆரம்பத்தில் தொழிற்சங்கங்கள் சிறப்பாக செயற்பட்டாலும், காலப்போக்கில் அவை அரசியல் மயப்படுத்தப்பட்டு மக்களிடம் சுரண்டி பிழைப்பதையே பணியாக கருதி செயற்பட்டன.

இதன்காரணமாகவே இன்றளவிலும் தொழில் உரிமைகள் அப்பட்டமாக மறுக்கப்படும் ஒரு வர்க்கமாக தோட்டத் தொழிலாளர்கள், பல இன்னல்களுக்கு மத்தியிலும் பணியாற்றி வருகின்றனர்.

1815 ஆம் ஆண்டு கண்டி இராஜ்ஜியத்தை பிரித்தானியர் கைப்பற்றிய பின்னர் 1820 ஆம் ஆண்டில் கோப்பி பயிர்ச்செய்கை அறிமுகப்படுத்தப்பட்டது.

1867இல் ஒரு வகையான நோய்காரணமாக கோப்பி பயிர்செய்கை பெரும் பாதிப்புக்குள்ளானது. இதையடுத்து ஜேம்ஸ் டெய்லர் என்பவரால் நூல் கந்துர எனும் இடத்தில் தேயிலை பயிர்செய்கை ஆரம்பிக்கப்பட்டது. மலையக பிரதேசங்களில் பெருந்தோட்ட வர்த்தக பயிர்ச் செய்கையை (தேயிலை, ரப்பர்) மேற்கொள்ள மனித வளம் கிடைக்காததால், தென் இந்தியாவில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டனர்.

வரும் வழியும், வந்துகுடியேறிய பின்னரும் அவர்கள் அதிகமான இன்னல்களை எதிர்கொண்டனர்.

இவ்வாறு வலிசுமந்த பயணம் மேற்கொண்டவர்கள் மலைப்பாங்கான பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டதால் – மலையகத் தமிழர் என்றும், இந்திய வம்சாவளித் தமிழர் என்றும் அடையாளப்படுத்தப்பட்டனர்.

காடுமேடாகவும், கல்லுமுல்லாகவும் காட்சியளித்த மலைநாட்டை – தமது கடின உழைப்பால் எழில்கொஞ்சும் பூமியாக மாற்றியதுடன், இலங்கையின் பொருளாதாரத்தையும் தோளில் சுமந்தனர். ஆனாலும், அவர்கள் வசிப்பதற்கு அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையில் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட லயன் அறைகளிலேயே பல தசாப்தங்களை கடந்தனர். இன்றைய 21ஆம் நூற்றாண்டிலும் இந்நிலைமை முழுமையாக மாறவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

குடியுரிமை பறிப்பு, வாக்குரிமை மறுப்பு, இலவச கல்வியில் காலதாமதம் என மலையகத் தமிழர்களுக்கு ஆளுந்தரப்பால் இழைக்கப்பட்ட அநீதிகளையும் பட்டியலிட்டுக்காட்டலாம். ஆடை கைத்தொழிலுக்கு முன்னர் பெருந்தோட்டத்துறையே இலங்கை பொருளாதாரத்தை தாங்கியது.

உலகளவில் கொரோனா வைரஸ் இன்று ஊழித்தாண்டவமாடி வருகின்றது. நாடுகள் முடக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் எல்லாம் வீட்டுகள் இருந்து வேலை செய்கின்றனர். ஆனால், இலங்கையில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்கின்றனர். ஆரம்பத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தாலும் தற்போது அவர்களுக்கு எதவுமே செய்து கொடுக்கப்படுவதில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.

அரசியல் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதித்துவம் இருந்தும் அன்று முதல் இன்று வரை அற்ப சம்பளத்தைக்கூட போராடி பெறவேண்டியவர்களாகவே இவர்கள் இருக்கின்றனர். ஆயிரம் ரூபா வழங்கப்படும், ஐயாயிரம் ரூபா கொடுக்கப்படும் என பிரமாண்ட அறிவிப்புகள் வந்தாலும் இறுதியில் இலவுகாத்த கிளியின் கதைதான்.

” 5 வருடங்களாக ஆயிரம் ரூபா கதை கூறப்பட்டு வருகின்றது. ஆனால், இன்னும் கிடைக்கவில்லை. 140 ரூபா என்றார்கள், இறுதியில் 50 ரூபா என்றார்கள். ஒன்றுமே நடக்கவில்லை. ஏமாற்றமே தொடர்கின்றது.” என எம்மிடம் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தினார் தொழிலாளர் ஒருவர்.

‘கொரோனா’வால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களும், 5000 ரூபா கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றன. ஆனால், இந்த விடயத்திலும் பெருந்தோட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஆள் பார்த்தே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டினர்.

அதுமட்டுமல்ல தொழிலாளர்களுக்கான தினத்தில்கூட, அரசியல் லாபம் தேடும் வகையிலேயே தொழிற்சங்கங்கள் செயற்பட்டு வருகின்றன என்பதே கசப்பான உண்மையாகும் என்பதை தொழிலாளர்கள் வெளிப்படுத்திய கருத்துகள்மூலம் அறியக்கிடைத்தது.

கடந்த வருடம் 4ம் மாதம் 21ம் திகதி தாக்குதலால் மேதின கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தமுடியாத நிலை ஏற்பட்டது. இம்முறை கொரோனா வைரஸ் தாக்கத்தால் எல்லாம் முடங்கியுள்ளன. மே தினத்தன்று மாத்திரமே தொழிலாளர்களின் பிரச்சினைகள் பேசப்படுகின்றன. அதன்பின்னர் எவரும் கண்டகொள்வதில்லை என சில தொழிலாளர்கள் எம்மிடம் எடுத்துரைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 9 =

*