;
Athirady Tamil News

திறக்குமா மாற்றத்துக்கான மூன்றாவது வழி!! (கட்டுரை)

0

கொரோனாவை எதிர்கொள்வது எப்படி? இன்னும் எத்தனை நாளைக்கு ஊரடங்கி – வீட்டுக்குள் முடங்கி – இருப்பது? இன்னும் எவ்வளவு காலம் தனிமைப்படுத்தல்கள் தொடரும்? இன்னும் எத்தனை நாட்கள் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டிருக்கும்? உலகம் வழமைக்குத் திரும்புவது எப்போது?

இவைதான் இன்று உலகம் முழுவதிலும் உள்ளோரின் கேள்விகள். உலகளாவிய பிரச்சினை என்றால் கேள்விகளும் உலகளாவிய அளவில்தானே இருக்கும்!

ஆனால் இந்தக் கேள்விகளுக்கு எவரிடத்திலும் தீர்க்கமான பதில் இல்லை. அப்படிப் பதில் கிடைக்குமாக இருந்தால் அது கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டு பிடிப்பதிலிருந்தே கிடைக்கும். தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்து விட்டால் அம்மைத் தடுப்பு போலியோ தடுப்பு போல இதையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்குப் பிறகு எல்லாத் தடைக்கதவுகளும் தானாகவே திறக்கப்பட்டு விடும்.

இதனால் கொரோனாவை முறியடிப்பதற்கான மருந்தைக் கண்டு பிடிப்பதற்காக ஒவ்வொரு நாடும் கடுமையாக முயற்சிக்கின்றன. உண்மையில் வெற்றிகரமாக பொருத்தமான மருந்தைக் கண்டு பிடித்தால் அது அந்த நாட்டுக்கு மதிப்பையும் புகழையும் மட்டுமல்ல லாபத்தையும் குவிக்கும்.

இப்பொழுது நடைமுறையிலிருப்பது தொற்றுப் பரவாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளும் வழிமுறைகளும். இதனால்தான் சமூக விலக்கமாகி தனித்திருந்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறோம். இந்த சமூக விலக்கமும் தனிமைப்படுத்தலும் உள்ளடங்கியிருத்தலும் ஒரு வகையில் நிர்ப்பந்தமே. ஆனால் வேறு வழியில்லை என்பதால் இதைச் சகித்துத்தான் ஆக வேண்டும். ஏற்றுக் கொள்ளத்தான் வேணும். அரசுகள் அத்தனையும் காலவரையின்றிச் சமூக முடக்கத்தை அறிவித்திருப்பதும் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதும் சனங்களுடைய சகிப்புத்தன்மையை ஒரு வகையில் பரீட்சித்துப் பார்க்கும் வகையிலும் அமைகிறது. வேறொரு சந்தர்ப்பத்தில் இப்படித் தொடர்ச்சியாக ஊரடங்கை நடைமுறைப்படுத்த முடியுமா? என்பது கேள்வியே. இப்படி நீண்ட ஊரடங்குக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்திருப்பார்கள். இது ஒரு சட்டப்பிரச்சினை அரசியல் விவகாரம் மனித உரிமை மீறல் என ஏராளம் வாதப்பிரதிவாதங்கள் கிளம்பியிருக்கும். பெரும் எதிர்ப்புப் போராட்டங்களே வெடித்திருக்கும். சட்ட விவகாரம் அரசியல் சாசனப் பிரச்சினை என நீதி மன்றப்படிகளில் பலர் ஏறியிருப்பார்கள்.

ஆனால் இதொன்றும் இல்லாமலே மக்களின் முழுச் சம்மதத்தோடு ஊரடங்கு – உலகடங்கு – வீடடங்கு – நடந்து கொண்டிருக்கிறது என்றால் அது ஒவ்வொருவருடைய உயிர் வாழ்தல் குறித்த எண்ணத்தின்பாற்பட்டே உள்ளது என்றே பொருளாகும்.

அரசியல் பிரச்சினை அல்லது போர்க்காலமொன்றின் ஊரடங்குக்கும் இப்போதுள்ள கொரோனா கால ஊரடங்குக்கும் இடையிலான வித்தியாசம் – வேறுபாடு இதுதான்.

எல்லாம் சரிதான். ஆனால் இந்த இடர் நிலையை எப்படி மாற்றியமைப்பது? கொரோனா தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்பட்டு அது வெற்றிகரமாக மக்களுக்கு கொடுக்கப்படும் வரையிலும் இப்படியே ஒடுங்கி மறைந்து பயந்து தனிமைப்பட்டு சிறையிருக்கத்தான் வேண்டுமா?

இல்லை. நிச்சயமாகவே இல்லை.

கால எல்லை அறியாமல் எவரும் வெளியே வரவும் முடியாது. வீட்டுக்குள் முடங்கியிருக்கவும் முடியாது என்றால் மூன்றாவது வழியொன்றைக் கண்டு பிடிப்பதே சாத்தியமானது. அதுவே அவசியமானதும் ஆகும். அதைத் தவிர இப்போதைக்கு வேறு வழியே இல்லை.

அந்த மூன்றாவது வழி என்பது கொரோனா தொற்று அபாயத்துக்குள்ளும் வாழ்வது இயங்குவது என்பதாகவே இருக்கும்.

அதெப்படிச் சாத்தியம் என்று நீங்கள் கேட்கலாம். அப்படி அது சாத்தியம் என்றால் எதற்காக நாம் வீட்டுக்குள் இன்னும் முடங்கிக் கிடக்க வேண்டும்? என்ற கேள்வி உங்களுக்குள் எழும்.

இந்தக் கேள்விக்கான பதிலும் இந்த மூன்றாவது வழியில் உண்டு. ஆகவே அந்த மூன்றாவது வழி என்ன? அது எப்படியானது என்று பார்க்கலாம்.

கொரோனா தொற்று அபாயத்திலிருந்து தப்புவதற்காக வீடடங்கி ஊரடங்கி உலகடங்கி இருந்து கொண்டிருப்பது இந்த மூன்றாவது வழிக்கான கற்கைக்காலமும் பயிற்சிக் காலமும் ஆகும்.

இந்தக் காலகட்டத்தில் நாம் ஒவ்வொருவரும் நம்மை மிக ஆழமாக படித்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது. முக்கியமாக இந்த ஊரடங்கு வாழ்க்கையின் நாட்கள் பலவிதமாக யோசிக்க வைத்திருக்கிறது. பல கோணங்களிலான புரிதல்களை உண்டாக்கியுள்ளது. தேவையில்லாமல் வெளியே செல்வது நேரத்தைப் பயனற்ற வகையில் வீணாக்குவது செலவுகளைக் கட்டுப்படுத்துவது அதிகமான கொண்டாட்டங்கள் கூடல்களைத் தவிர்க்கலாம் என்பது வீட்டிலும் வெளியிலும் சுகாதாரத்தைப் பேணுவது சத்தாகச் சாப்பிடுவது நோய் எதிர்ப்புச் சக்தியுள்ளதாக உடல் நிலையை வைத்துக்கொள்வது தவறாத உடற்பயிற்சி வாசிப்பு குடும்பத்தினரோடு நேரத்தை அதிகமாகச் செலவிடுவது வீட்டிலிருந்து கொண்டே அலுவலகப் பணிகள் உட்பட பல வேலைகளை ஒழுங்காகச் செய்ய முடியும் என்பது நெருக்கடியின்போது மற்றவர்களைக் குறித்துச் சிந்திப்பது மட்டுமல்ல எப்போதும் பிறர் மீது கரிசனை கொள்ள வேண்டும் என்பது அவர்களுக்கு உதவுவது நமது பொறுப்புமாகும் என்பது மனித ஆற்றலை தகர்க்கக் கூடிய நெருக்கடிகள் எந்த ரூபத்திலும் வரும் என்பது அவ்வாறான நெருக்கடிகள் அனைவரையும் பீடிக்கும் என்பது பிறர் மீதான நேசத்தின் அழகு அரசினால் முடியக் கூடியது என்ன? அதன் எல்லைகள் எவ்வளவு? சமூகமாக கூட்டாக கருத்தொருமித்து இருப்பதன் வழியாக எதையெல்லாம் சாதிக்க முடியும் என ஏராளம் விசயங்கள்.

இதை அடிப்படையாக வைத்துக் கொண்டு மெல்ல நாம் நம்முடைய வாழ்க்கையை நகர்த்துவதற்கு ஆரம்பிக்க வேண்டும்.

எப்படி ஒரு சமூகப் பொறுப்போடு கொரோனா அபாயத்தின்போது நடந்து கொண்டிருக்கிறோமோ இதே பொறுப்போடு இனி வரும் நாட்களையும் எதிர் கொண்டே ஆக வேண்டும்.

இல்லையென்றால் இயல்பு வாழ்க்கை முற்றாகவே முடங்கி விடும். அப்படி முடங்கி விட்டால் கையிலிருக்கும் சேமிப்பெல்லாம் கரைந்து விடும். வீட்டில் அரிசியும் பருப்பும் கூடத்தீர்ந்து போகும். உற்பத்திகள் நிகழாது. வணிகள் நடக்காது. நிர்வாகம் படுத்து விடும். இப்படியே தொடர்ந்தால் சனங்கள் பட்டினியாலும் பிற நோய்களாலும் செத்து மடிந்து விடுவார்கள்.

அப்படி முன்பும் பல தடவை மனித வரலாற்றில் நடந்திருக்கிறது. அதிகம் ஏன் கடந்த நூற்றாண்டில் கொலரா பன்றிக் காய்ச்சல் பறவைக் காய்ச்சல் ஸ்பெயின் ஃபுலு என எத்தனையோ கொள்ளை நோய்களால் சனங்கள் செத்து மடிந்திருக்கிறார்கள். அந்தச் சூழலிலிருந்து மீண்டுதான் மனித குலம் நகர்ந்து வந்தது.

எனவே இதெல்லாவற்றையும் படிப்பினையாகக் கொண்டு நாமும் நம்மைத் தகவமைத்துக் கொள்ளவும் இயங்கவும் வேண்டும்.

இப்பொழுது நாம் சீன தேசம் நடைமுறைப்படுத்திய மூடுண்டு அணுகுமுறையையே பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சீனா அதற்குள்ளே மிக வேகமாக இயங்கும் தன்மையைக் கொண்டுள்ளது. அதனுடைய உற்பத்தி முறைகளையும் நிர்வாக இயந்திரத்தையும் அது அதற்கேற்றவாறு உருவமைத்திருக்கிறது. நாமே ஊரடங்கி இருப்பதன் வழியாகச் சில வாரங்களில் இந்த நிலையைக் கடந்து விடலாம் என்று எண்ணினோம். நோய்த்தொற்றாளர்களை அல்லது அவ்வாறு சந்தேகிக்கப்படுவோரைத் தனிமைப்படுத்துவதன் மூலமாக இதைக் கட்டுப்படுத்தலாம். நாமும் தப்பித்துக் கொள்ளலாம் என்று கணக்கிட்டோம். ஆனால் தொற்றாளர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டு செல்கிறதே தவிரக் குறைந்ததாகத் தெரியவில்லை. அப்படியென்றால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்றே அர்த்தமாகிறது. அப்படியென்றால் ஆண்டுக்கணக்கில் வீட்டுக்குள் முடங்கியிருக்கப்போகிறோமா? அது சாத்தியமாகுமா?

இப்பொழுது நாம் வீட்டுக்குள் இருக்கும்போதே வெளியே சிலர் நமக்காக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். தங்களைப் பாதுகாத்துக் கொண்டு நம்மையும் பாதுகாப்பதற்காக நமது பசியைப் போக்குவதற்காக உணவுப் பொருட்களைக் கொண்டு வருகிறார்கள். அரச உத்தியோகத்தர்களுக்குச் சம்பளம் கொடுக்கப்படுகிறது. வங்கிகள் இயக்கப்படுகின்றன. பொலிஸ் இராணுவம் எல்லாம் இயங்கிக் கொண்டிருக்கிறது. மருத்துவத்துறை முன்னையும் விட சிறப்பாகச் செயற்படுகிறது. அரசாங்கத்தின் உதவிப்பணம் வழங்கப்படுகிறது. அதாவது மொத்தத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான சூழல் தக்கவைக்கப்பட்டுள்ளது. இதைச் சற்று மேம்படுத்துவதே நமது பொறுப்பு. கொரோனா தொற்று அபாயம் குறித்த விழிப்புணர்வோடு மிக நிதானமாகச் செயற்படுவது. அப்படிச் செயற்படும்போது அநாவசியாக திரள்வதைத் தடுக்க முடியும். விரைவாகச் செயற்பட முடியும். செலவற்று வாழ முடியும். உணவுப் பொருள் உட்பட பல சுய உற்பத்திக்கு திரும்பலாம். நமது வாழ்க்கை முறையும் பண்பாடும் பொருளாதாரமும் உற்பத்தி முறையும் கூட மாறலாம். மாற்றலாம். மாற்ற வேண்டும்.

கருணாகரன்..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 10 =

*