;
Athirady Tamil News

கொரோனாவும் அதிகரிக்கும் தற்கொலைகளும்!! (கட்டுரை)

0

கொரோனா வைரசின் தாக்கம் உலகெங்கும் பாரிய பேரிடராக மாறி மக்களைப் பலி எடுத்து வருகின்றது. சுமார் ஒன்றரை இலட்சம் பேரை காவு கொண்ட கொரோனா வைரஸ் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றது. அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கொரோனாவின் கோரத் தாண்டவம் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகின்றது.

கொரோனா வைரசின் அச்சுறுத்தல் இலங்கையிலும் தனது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் அறுநூறு பேருக்கு மேற்பட்டோர் இவ்வைரசால் பீடிக்கப்பட்டுள்ளனர். ஏழு பேர் இதுவரையில் மரணமடைந்துள்ளனர். அதேவேளை நூற்றுக்கு மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த சில வாரங்களாக பொருளாதார மற்றும் சமூக அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. பயமும் வளர்ந்து இருக்கிறது. கொரோனா வைரசை தடுப்பதற்காக உலக நாடுகள் பலவற்றிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எந்த இடங்கள் மிகுந்த பாதுகாப்பானதாக இருக்க வேண்டுமோ இந்த இடங்களில் அதாவது அவர்களின் சொந்த வீடுகளிலேயே அவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்..

கொரோனா தொற்று நோய் பரவலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறபோது ஒவ்வொருவருடைய பாதுகாப்புக்கு முதல் இடம் கொடுக்க வேண்டும் சமீப காலங்களாக இயற்கை மரணங்களுக்கு நிகராகத் தற்கொலை மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. தற்கொலைக்கு முயற்சிக்கும் நபர்களில் மூன்றில் ஒருபங்கினர் இளம் பருவத்தினர் என்பது நாம் காணக்கூடியதாகவுள்ளது

புள்ளி விபரங்களின்படி தற்கொலை மூலம் உயிரை மாய்த்துக்கொள்வதில் ஆண்களைவிட தற்கொலை முயற்சியில் பெண்களும் முதலிடம் பெறுகின்றனர்.

முல்லைத்தீவு – சிலாவத்தை பாடசாலை மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைக் குறிப்பிடலாம். சந்திரன் கம்ஷிகா எனும் பாடசாலை மாணவி மிகச் சுட்டியான விறுவிறுப்பான எதற்கும் அஞ்சாத ஓர் மாணவி… தனது தந்தையுடன் ஓர் மகனை போன்று விவசாயம் தொடக்கம் அனைத்திலும் தோள் கொடுக்கும் மகளாகவே இருந்து வந்தவள்…

அவளது குடும்பத்தில் நான்கு பெண்குழந்தைகள்.

ஆதலால் இவள் தன்னை ஓர் மகனாக எண்ணியே படிப்பிலும் சரி பாடசாலை விளையாட்டுக்களிலும் சரி கெட்டிக்காரியாகவே வலம் வந்தாள்.. அவளை பலர் கூட குழப்படி என்றுதான் கூப்பிடுவார்கள்…

ஆனால் அவள் தற்கொலைக்கு முன் வைத்த காரணம் தான் அதிர்ச்சியாக உள்ளது…

க.பொ.தா சாதாரண தரத்தில் அனைத்து பாடங்களிலும் சித்தி பெற்று சிலாவத்தை பாடசாலையில் 3வது நிலையில் உள்ளாள்..

ஆனால் தான் 9 பாடங்களிலும் A தர சித்தி பெறுவேன் என்று ஆசிரியர்களுக்கும் சக மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் கூறி வந்துள்ளாள்…

இந்த நிலையில் அவள் எதிர் பார்த்த பெறுபேறு வரவில்லை… ஆனால் அனைத்து பாடமும் சித்தியடைந்துவிட்டாள்.. ஆசிரியர்கள் அவளை தொலைபேசியில் வாழ்த்துவதற்கு தொடர்பு கொண்ட போது கூட யாருடனும் பேச மறுத்துள்ளாள்.. அவளது வீட்டில் தந்தை தாய் சகோதரர்கள் கூட அவளை வாழ்த்திய வண்ணம் தான் இருந்தனர்…

ஆனால் அவள் தன்னால் 9A சித்தி பெற முடியவில்லை என்ற மனவுளைச்சலுடன் இருந்து அன்று காலை (28.04.20) வீட்டில் அனைவரும் தமது காலை கடமைகளை செய்து கொண்டிருந்த போது சாமி அறையை பூட்டி விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள்..

அவ்வளவு திறமை இருந்தும் அவ்வளவு சிறப்பாக பெறுபேறு பெற்றும் இவ்வாறு ஒரு முடிவை எடுத்து குடும்பத்தையும் ஆசிரியர்கள் சக மாணவர்கள் கிராம மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி விட்டாள்..

அவள் அந்த பெறுபேற்றுடன் உயர்தரம் கற்று சாதித்திருக்க வேண்டும்.. அவசரப்பட்டு விட்டாள்.

ஆகவே 9A எடுத்து தான் உயர்த்தரம் கற்க வேண்டும் என்ற மனநிலையை முதலில் மாற்ற வேண்டும்… அப்படி 9A எடுக்க வேண்டும் என்று யாராவது கட்டாய படுத்தாதீர்கள்… அவர்களால் என்ன முடியுமோ அதை மட்டுமே அவர்கள் செய்ய ஊக்குவியுங்கள் அது மட்டும் போதும்..

தற்கொலைகள் எதற்கும் தீர்வல்ல…தற்கொலை செய்து கொண்டார் என்பது பலரது மனங்களையும் பாதித்துள்ளது. கல்வி என்பது வாழ்வில் ஒழுக்கநெறியைப் போதிக்கின்றது.

9A பெற்றுக் கொண்டால்தான் வாழ்க்கை என்பதல்ல. தோமஸ் அல்வா எடிசன் கற்பதற்கே லாயக்கற்றவர் என துரத்தப்பட்டவர். அவர்தான் பலருக்கும் படிப்பதற்கு வெளிச்சத்தைக் கொடுத்தவர்

எனவே மாணவர்களே இந்த பரந்த உலகில் வாழ்வில் உயர்வதற்கு பல மார்க்கங்கள் உள்ளன. இதுதான் ஒரேயொரு பாதையென்று எதுவுமில்லை.

விதி என்பது ஆயிரம் கதவுகளை மூடியிருக்கலாம். ஆனால் உங்களது முயற்சி என்பது ஒரு யன்னலையாவது உங்களுக்காகத் திறந்து வைத்திருக்கும்.

தற்கொலை என்பது கோழைகள் எடுக்கின்ற ஆயுதம். ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். உங்களை பெற்று வளர்த்த தாய் தந்தையர் உங்கள் ஒவ்வொரு உயர்விலும் தான் மகிழ்வடைகிறார்கள். இந்த சமுதாயமும் உங்களின் வாழ்வில் தான் தங்கியிருக்கிறது. தோல்விகள் வரும்போது அதனை படிப்பினையாகவும் மூலதனமாகவும் கொள்ளுங்கள். உங்களது வயதில் சவால்களை எதிர்கொண்டு சரித்திரமாக்குங்கள். இந்த உலகில் தோல்விகள் என்பது ஒருவருக்கென்று வரையறுக்கப்பட்டதல்ல.

கவிஞர் வாலி வாய்ப்புத் தேடி சென்னைக்கு வந்தபோது வாய்ப்புக் கிடைக்காமல் ஊருக்கு திரும்ப நினைத்தபோது கண்ணதாசன் அவர்களது பாடலைக் கேட்டுத்தான் மனம் மாறி தனது முயற்சியில் வெற்றி பெற்றார்.

அந்தப் பாடல்

மயக்கமா கலக்கமா

மனதிலே குழப்பமா

வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கையென்றால்

ஆயிரம் இருக்கும்

வாசல் தோறும்

வேதனையிருக்கும்

வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை

எதையும் தாங்கும்

இதயம் இருந்தால்

இறுதி வரையில்

அமைதி இருக்கும்

எனவே இந்த பிறப்பிற்குப் இறப்பிற்குமான காலத்தில் எந்த சவால்களையும் சாதனையாக மாற்றுவதற்காக உழையுங்கள். 9A என்ற பிரமையிலிருந்து வெளியே வாருங்கள். உங்களுக்காக இன்னும் பெரியதொரு வெற்றிகரமான உலகம் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.

இதேபோல் இன்னொருசம்பவம் பதிவாகியுள்ளது. கிழக்கு லண்டன் இல்போர்டில் கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலைத் தொடர்ந்து மூன்று வயதுடைய ஆண் குழந்தை மற்றும் ஒருவயதுடைய பெண் குழந்தை தந்தையால் தாக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர்.

எனினும் சிறப்பு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் இதேவேளை குறித்த நிதின்குமார், நிஷா தம்பதிகள் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனையை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் நிதின்குமார் நிகீஸ் – வயது 3 மற்றும் நிதின்குமார் பவின்யா – வயது 1 ஆகிய பாலகர்களே பரிதாபமாக பலியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிதின்குமார் தமது குடியிருப்பின் அருகாமையில் அமைந்துள்ள 54 வயதான சண்முகதேவதுரை என்பவரது கடையிலேயே பணியாற்றி வந்துள்ளார்.

நித்தி ஒரு அற்புதமான மனிதர் விசுவாசமான தொழிலாளி. அவர் காலை- 09 மணிக்கு கடையைத் திறந்தார். மிகவும் சாதாரணமாகவே வேலை செய்தார் அவர் வீட்டுக்குப் புறப்படுவதற்கு சற்று முன்பு எனக்குத் தேநீர் தயாரித்து தந்தார். ஊரடங்கு நாட்களில் வேலைக்கு செல்வது தமது மனைவிக்குப் பிடிக்கவில்லை என்று நித்தி கூறி வந்ததாகவும் சண்முகதேவதுரை குறிப்பிட்டுள்ளார். குடும்பப் பிரச்சினை காரணமாகவே நிதின்குமார் இந்தக் கோர முடிவை எடுத்திருக்கலாம் என தேவதுரை தெரிவித்துள்ளார்.3 வயது மகன் மற்றும் ஒரு வயதுப் பெண் குழந்தை தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பதறிய தாயார் தெருவுக்கு வந்து உதவி கோரியதை நேரில் பார்த்தவர்கள் பொலிசாரிடம் விளக்கமளித்துள்ளதாக கூறப்படுகிறது.

நிதின்குமாரின் மகள் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக கூறப்படுகிறது. மகன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்ததாக தெரியவந்துள்ளது. நிதின்குமாரின் குடியிருப்பில் இருந்து அலறல் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்களில் பலர் தெரிவித்துள்ளனர். தற்போது தற்கொலைக்கு முயன்ற நிதின்குமார் ஆபத்துக் கட்டத்தைத் தாண்டியுள்ளதாகவும், குணமடைந்து வருவதாகவும் மருத்துவமனை தரப்புத் தகவல் வெளியிட்டுள்ளது.இது தொடர்பில் பிரித்தானியப் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

அத்துடன் தந்தையும் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இக் கொடூர சம்பவத்தின் பின்னணியில் மேலும் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.’

கொலை-, தற்கொலை முயற்சி என்ற கோணத்தில் சம்பவம் குறித்த ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ள லண்டன் பொலிஸார் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். சம்பவதினத்தன்று குழந்தைகளின் தாய் குறித்த வீட்டில் தன்னை சித்திரவதை செய்வது போல் கத்தியதாகவும் வீதியில் ஓடிவந்ததாகவும் நேரில் பார்த்தவர்களும் அயலவர்களும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வேறு எவரையும் சந்தேகிக்கவில்லை. அறுபதாயிரம் மரணத்தை எட்டியுள்ள அமெரிக்காவின் நியூயோர்க் மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய டாக்டர் பிரீன் என்ற பெண் மருத்துவர் தன் கண்ணெதிரே கொரோனா பாதிப்பால் காப்பாற்ற முடியாமல் நோயாளிகள் மரணமடைவதைத் தாங்க முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க கொரோனா பலி எண்ணிக்கை 60000 எட்டியுள்ள நிலையில் நியூயோர்க்கில் மட்டும் 17>500 பேர் பலியாகியுள்ளனர்.

டாக்டர் பிரீன் கொரோனாவினால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு குணமடைந்து மீண்டும் மருத்துவப் பணிக்கே திரும்பியவர். தானும் பிற மருத்துவர்களும் எப்படிப் போராடியும் நோயாளிகளைக் காப்பாற்ற முடியாமல் கண்ணெதிரே அவர்கள் உயிர்பிரிவதை தன்னால் தாங்க முடியவில்லை என்று அவர் பல முறை கூறியதாக அவரது தந்தை வேதனையுடன் தெரிவித்திருந்தார்.

நியூயோர்க்கில் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர் உள்ளிட்ட ஊழியர்கள் கடும் அவதிக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி வருவதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட டாக்டர் பிரீனை ‘ஹீரோ’ஆகக் கொண்டாடுமாறு அவரது தந்தை கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு தற்கொலைகள். தொடர்கின்றன இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாக வேண்டும்

ஆண்டுக்கு 8 லட்சம் தற்கொலைகள் என உலக நாடுகளில் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. அதாவது ஒவ்வொரு 40 நொடிகளுக்கும் ஒரு தற்கொலை நடக்கிறது. அதில் 12.5 சதவீத தற்கொலைகள் தமிழகத்தில் நடக்கின்றன.

படிப்பறிவிலும் பொருளாதாரத்திலும் வளர்ச்சி பெற்றவர்களே தற்கொலையில் முதல் இடத்திலிருப்பது கவலை தரும் செய்தி. பொதுவாகக் குடும்பப் பிரச்சினை, நோய், வரதட்சணை பரீட்சையில் தோல்வி, காதல் பிரச்சினை போன்ற பிரச்சினைகள் தற்கொலை முடிவுக்குக் காரணமாக இருக்கும். சமீபகாலமாக தந்தை அடித்தார் ஆசிரியர் வகுப்பறையில் சக மாணவர்கள் இருக்கும் போது திட்டினார் என்பது போன்ற அற்ப காரணங்களுக்காகத் தற்கொலை செய்து கொள்வதிலிருந்து இக்கால மாணவர்களின் மனப்போக்கை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது.

இளம் பருவத்தினரின் தற்கொலை எண்ணங்களை உருவாக்குவதில் மன அழுத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. மன அழுத்தத்தின் முக்கிய அறிகுறி காரணமே இல்லாமல் தற்கொலை எண்ணங்கள் உருவாவதுதான். ஆனால் ஒருவர் தற்கொலைக்கு முயற்சிக்கும்வரை இந்த மன அழுத்தம் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவதே உண்மை. தற்கொலை முயற்சி மனநோயின் முதல் அறிகுறியாகக்கூட இருக்கலாம் அல்லது மனநோய் பாதிப்பாலும் நிகழலாம்.

தற்கொலை எண்ணங்களைக் கையாள்வதற்கு அளவுக்கு அதிகமான மன தைரியம் தேவைப்படும். இக்கால இளம் பருவதினருக்கு மன தைரியம், சகிப்புத் தன்மை, கூடி வாழ்தல் போன்றவற்றை கற்றுத் தர எந்தப் பெற்றோருக்கும் நேரமும் இல்லை நாட்டமும் இல்லை. இதனால் அவர்கள் சிறு வயதில் இருந்தே மேற்கண்ட நற்குணங்களைப் பெறாமல் ஒரு பொம்மைக் குழந்தைகளைப் போலத்தான் சமுதாயத்தில் வலம் வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு சிறு பிரச்சினை ஏற்படும்போது மன உளைச்சல் ஏற்பட்டுத் தற்கொலை செய்து கொள்வதற்குத் தயாராகிறார்கள்.

எல்லாப் பிரச்சினைகளுக்கும் தற்கொலைதான் தீர்வு என்ற முடிவைத் தற்கால இளைஞர்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. எந்தப் பிரச்சினையையும் மன தைரியத்துடன் போராடினால் எளிதில் அப்பிரச்சினை தீர்ந்து விடும் என்பதை இவர்களுக்கு யார் புரியவைப்பது?

மிகவும் தனிப்பட்ட விஷயம் புரிந்துகொள்ளவே முடியாதது. பயங்கர கலக்கம் என தற்கொலை செய்துகொள்கிற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது. ஆனால் தற்கொலை செய்துகொண்ட பின்பு அவர்களின் பிரிவை அந்த குடும்பம் தாங்கிக் கொள்கிறது? என்பதை எவருமே சிந்தித்து பார்க்காமல் இருப்பது இறப்பிற்கும் மேலான ஒரு வலி.

திவியா சிவகுமார்

விதி என்பது ஆயிரம் கதவுகளை

மூடியிருக்கலாம். ஆனால் உங்களது முயற்சி என்பது ஒரு யன்னலையாவது உங்களுக்காகத் திறந்து

வைத்திருக்கும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 1 =

*