;
Athirady Tamil News

நஞ்சே உணவாக ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’!! (கட்டுரை)

0

உலகளாவிய ரீதியில் இன்று மக்களைப் பீடித்திருக்கின்ற தொற்றுநோயான கொவிட்19 எனப்பெயர் சூட்டப்பட்டுள்ள கொரோனா வைரசினால் ஏற்படுகின்ற நோயானது கடந்த 4 மாதங்களுக்கு மேலாக உலகை உலுக்கிவருகின்றது. தொற்றாளர்களின் எண்ணிக்கை முப்பத்திரண்டு இலட்சத்தினை தாண்டியும் 227,000 இற்கும் மேற்பட்டோர் இறந்தும் உள்ள நிலையில் இலங்கையிலும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அன்றாடம் அதிகரித்துச் செல்வதனை கவலையுடன் நோக்கவேண்டியுள்ளது.

குறிப்பாக கொவிட் வைரஸ் கிருமியின் தொற்றினை கண்டுபிடிக்கின்ற இரசாயனப் பரிசோதனை இலங்கையின் பலபகுதிகளிலும் நடாத்தப்படுவதனால் நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் அதிகமானோரை பரிசோதிக்கும் வசதி ஏற்பட்டுள்ளது. தவிரவும் கொவிட் நோயாளருக்கான சிகிச்சை நிலையங்களும் அதிகரிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றார்கள். இற்றைவரை 154 பேர் குணமடைந்துள்ளதுடன் ஒன்பது பேர் மரணமடைந்துள்ளனர். தொற்றாளர்கள் எண்ணிக்கையின் அதிகரிப்பின் காரணமாக அவர்கள் சென்றுவந்த பிரதேசங்களில் வசிப்போர், உறவினர்கள், கூடப் பணிபுரிந்தோர் என அனேகமானோர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்படுவதினால் முகாம்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது. தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த பொதுமக்களின் நடமாட்டம் மற்றும் ஒன்றுகூடல் போன்றவற்றில் கடுமையான கட்டுப்பாடுகள் கடந்த பல வாரங்களாக நடைமுறையில் உள்ளன. இவ்வாறான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அவசியமானவையாக இருக்கின்றபோதிலும் இந் நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார, கல்வி மற்றும் அரசியல் துறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் எமது நாட்டில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.

இவ்வாறாக பல்வகையிலும் மனித வாழ்வைப் பாதித்துள்ள வைரசானது மனிதரில் சாதாரண சளிச்சுரத்தினை ஏற்படுத்துகின்ற பல்வகை வைரசுக் குடும்பங்களில் ஒன்றான ‘coronaviridae’ எனும் வைரசுக் குடும்பத்தை சேர்ந்ததாகும்.

இலத்திரன் நுணுக்குக்காட்டி ஊடாக அவதானிக்கும் போதும் குடம்போன்ற அல்லது ஒளிவட்டம் போன்ற அமைப்புடன் காணப்படுவதால் கொரோனா (corona) எனப்பெயர் சூட்டப்பெற்றது. கடந்த 2012ம் ஆண்டில் மத்திய கிழக்கு நாடுகளில் தொற்றை ஏற்படுத்திய மேர்ஸ் வைரசு (‘MERS CoV’) இக்குடும்பத்தை சேர்ந்ததாகும். உலக சுகாதார தாபனத்தின் (WHO) அறிக்கைகளின்படி 2019 ஆண்டு இறுதிவரை 27 நாடுகளில் 2494 பேரைத்தாக்கி 858 பேரைப் பலிகொண்டுள்ளது. இவ்வாறே 2003ம் ஆண்டில் வியட்நாமில் ஒருவருக்கு ஏற்பட்ட நியூமோனியா காய்ச்சல் மூலம் ஆரம்பித்து விரைவில் அந்நாட்டில் பலருக்கும் பரவியதும் சீனா உள்ளிட்ட பல ஆசியநாடுகள் மற்றும் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் பரவி 2004ஆம் ஆண்டுவரை 8098 மக்களை பாதித்தும் 774 பேரின் இறப்பிற்கும் காரணமானதுமானச வைரஸ் நோய்க்கு காரணமானதும் இக்கோரோனா வைரசு குடும்பத்தை சேர்ந்ததாகும். இவ் வைரசிற்கு (‘(‘SARS CoV-1’) எனபெயரிடப்பட்டுள்ளது. இவ்வரிசையில் தற்போது உலகளாவிய நோய்த்தாக்கத்தை ஏற்படுத்துகின்ற கொரோனா SARS CoV-2 என வகைப்படுத்தப்பட்டு கொவிட்19 (COVID 19) என பெயர் பிரபல்யமடைந்துள்ளது.

இவ்வைரஸ் தொற்றிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்வது குறித்து தொடர்ந்தும் அக்கறையுடனும் அவதானத்துடனும் செயற்படுவது எமது சமுகப்பொறுப்பாக தற்போது உருவெடுத்துள்ளது. ஏனெனில் எமது நாட்டில் இவ்வைரசுத் தொற்று சமுகத்தொற்றாக பரிணாமமெடுக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

இந்நிலைமையே அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகரித்த நோய்த்தாக்கத்தினை ஏற்படுத்தியதுடன் அதிக இறப்புக்களுக்கும் காரணமாக அமைந்தது. குறிப்பாக சுகாதாரத்துறையில் மிகப்பாரிய பொறுப்பு ஒரே தடவையில் சுமத்தப்படுவதனை பொதுமக்கள் அவதானித்திருப்பர்.

இந்நிலை ஏற்படுத்துகின்ற அழுத்தமும் மிகப் பாரியது. எமதுநாட்டிற்கு இது பாரிய சவாலாகவே அமையும். அத்துடன் இறந்த உடல்களை அடக்கம் செய்வதிலும் அனைத்து நாடுகளுமே பாரிய சிக்கல்களுக்கு முகம்கொடுத்ததை பல்வேறு ஊடகங்கள் வாயிலாகவும் அறியவந்துள்ளோம். இறுதிக் கிரியைகளைக் கூடச்செய்ய முடியாத துர்ப்பாக்கிய சூழல் அமைந்துவிடும்.

தனிமைப்படுத்தலுக்கு ஆளாவதும் தவிர்க்கமுடியாத தொன்றாக அமைந்துவிடும்.
ஆகவே பொதுமக்களாக நாம் இப்போதும் கடைப்பிடிக்கின்ற நடைமுறைகளை தொடர்ந்தும் கைக்கொள்வது அவசியமான தாகின்றது. இது எமதுமுக்கிய சமூகப்பொறுப்புமாக தற்போது வியாபித்திருக்கின்றது.

விசேடமாக ஆட்களுக்கிடையே சமூக இடைவெளி பேணுதல், முகக்கவசம் அணிதல் மற்றும் கைகளை சவர்க்காரமிட்டு கழுவுதல் போன்றவை நடைமுறைப்படுத்தப்படல் அவசியமானது. கைகளைக்கழுவும்போது குறைந்தது 20 வினாடிகள் எடுத்துக்கொள்ளவேண்டும். துணியினாலான முகக்கவசம் அணியமுடியும். இதனைமுறையாக கழுவி வெயிலில் காயவைத்து மீளப் பயன்படுத்தலாம். அத்தோடு பின்வரும் நடைமுறைகளையும் கைக்கொள்வது சிறந்தது:

 முழங்கைக்குள் தும்முதல்
 முறையாக கழுவாத கைகளால் முகம் மற்றும் கண்களை தொடாதிருத்தல்
 பாவித்த முகக்கவசம், மென்கடதாசி (tissue) ஆகியவற்றை முறையாக அகற்றுதல் அல்லது எரித்தல்
 காய்ச்சல், இருமல், மூச்சுக்கஷ்டம், தொண்டை அரிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படுமிடத்து தங்கள் பகுதி பொதுசுகாதார அதிகாரிகளுக்கு அறிவிப்பதுடன் கொரோனா வைத்திய நிலையங்களாக அடையாளப்படுத்தப்பட்ட வைத்தியசாலையை நாடுதல்
 தொற்றுநீக்கிகளைக் கொண்டு கைகளையும் மற்றும் கதவுப்பிடி போன்ற நாம் அதிகம் தொடும் மேற்பரப்புகளை சுத்தப்படுத்துதல்.
 நோய் அறிகுறி உள்ளவருடன் நெருங்கிய தொடர்பை தவிர்த்தல் மற்றும் அவரது சிகிச்சைக்கான ஓழுங்குகளை மேற்கொள்ளல்
 தனிமைப்படுத்தப்படுவோரின் உடல் உஷ்ணத்தினை வெப்பமானி கொண்டு பரிசோதித்தல், அவர்கள் பாவிக்கும் பொருட்களை முறையாக தொற்றுநீக்கம் செய்தல்.
மேற்குறிப்பிட்ட விடயங்களை முறையாக கைக் கொள்வதன் மூலம் பயங்கரத் தொற்றுநோயாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கின்ற, ஒவ்வொரு கணமும் நோய்த்தொற்றையோ இறப்பையோ ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற கொரோனா வைரசுக்கிருமியில் இருந்து எம்மை பாதுகாத்துக் கொள்வோம். ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’

Dr. K E கருணாகரன்
சிரேஷ்ட விரிவுரையாளர்
மகப்பேற்றியல் பெண்நோயியல் நிபுணர்
போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + eight =

*