;
Athirady Tamil News

தமிழ்த் தேசியவாதி !! (கட்டுரை)

0

இலங்கைத் தமிழ் அரசியல் பரப்பில், கடந்த வாரத்தின் மிகச்சூடானதும், பரபரப்பானதுமான விடயமாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன், சமுதித்த சமரவிக்ரமவுக்கு வழங்கிய பேட்டி அமைந்திருந்தது. அதில் குறிப்பாக, ஒரு கேள்வியும் ஒரு பதிலும், சுமந்திரனைத் ‘துரோகி’ என்று, பொதுவில் விளிக்குமளவுக்கு, அவரது உருவப்பொம்மைக்கு செருப்புமாலை அணிவிக்கும் அளவுக்குத் தம்மை, ‘தமிழ்த் தேசியவாதிகள்’ என்று உரிமைகொண்டாடுபவர்களிடையே கடும் விசனத்தையும் சினத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

அந்தப் பேட்டியில் சமுதித்த, ”நீங்கள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா” என்று கேட்கிறார். அதற்குச் சுமந்திரன், ”இல்லை, நான் ஏற்றுக் கொள்ளவில்லை” என்று பதிலளிக்கிறார். ”ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை(யா)” என்று, சமுதித்த மீண்டும் அழுத்தமாகக் கேட்க, ”நான் இதை யாழ்ப்பாணத்திலும் சொல்லுகிறேன்; ஏனைய பிரதேசங்களிலும் இதையே சொல்கிறேன். அதனால், எனக்கு எதிர்ப்புகள் இருக்கின்றன. அவர் எங்களுக்காகத்தானே போராடினார்; ஏன் ஏற்றுக் கொள்கிறீர்கள் இல்லை என்று, என்னோடு முரண்படுகிறார்கள். அதற்குக் காரணம் நான், ஆயுதப்போராட்டம் ஒன்றை ஒருபோதும் ஆதரிப்பவன் அல்ல” என்று சுமந்திரன் பதில் அளிக்கிறார்.

பேட்டியின் கடைசிப்பகுதியில், சமுதித்த, ”இறுதியாக உங்கள் இதயத்தைத் தட்டி, ஒரு கேள்வியைக் கேட்கப் போகிறேன். நேரடியான பதிலொன்று தேவை. சிங்கள மக்களை, நீங்கள் வெறுக்கிறீர்களா” எனக் கேட்க, அதற்குச் சுமந்திரன், ”இல்லை ஒருபோதும் இல்லை; நான் ஐந்து வயதிலிருந்தே கொழும்பில்தான் வாழ்கிறேன். எனது நண்பர்கள் பலர், சிங்களவர்களாக இருக்கிறார்கள். சிங்கள மக்களோடு சேர்ந்து வாழ்வது, மகிழ்வானது என்றே நினைக்கிறேன்” என்று பதிலளிக்கிறார்.

இந்த இரண்டு பதில்களும் தமிழ்த் தேசியவாதிகள் என்று அடையாளப்படுத்தப்படுவோரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

அடிப்படையில், இந்தப் பதில்களின் இரத்தினச் சுருக்க உள்ளடக்கம் இதுதான். முதலாவது, சுமந்திரன், தான் ஆயுதப் போராட்டத்தை ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்கிறார். இரண்டாவது, எனக்கு சிங்கள நண்பர்கள் இருக்கிறார்கள்’ சிங்கள மக்களோடு சேர்ந்து வாழ்வது, மகிழ்வானது என்கிறார். ஆகவே, இந்த இரண்டு கருத்துகளும்தான், தமிழ்த் தேசியவாதிகள் என்று அடையாளப்படுத்திக் கொள்வோரை, அதிருப்திப்படுத்தி இருக்கிறது.

ஆனால், இந்த அதிருப்திக்கும் வெறுப்புக்கும் ஆன காரணங்கள் வேறுபட்டவை. ஒருதரப்பின் அதிருப்திக்குக் காரணம், சுமந்திரன் கூறிய கருத்து அல்ல; மாறாக, அவர் எந்த இடத்தில் இருந்துகொண்டு, அதைச் சொல்கிறார் என்பதுதான். இவர்களைப் பொறுத்தவரையில், தனிப்பட்ட ஒரு தாராளவாத ஜனநாயகவாதியாகச் சுமந்திரன் இந்தக் கருத்தைச் சொல்லியிருந்தால், அதில் எந்தத் தவறும் இல்லை. அது அவருடைய தனிப்பட்ட சித்தாந்தம், நம்பிக்கை. ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்துகொண்டு, தமிழ்த் தேசியத்தின் பெயரால் வாக்குச் சேகரிக்கும் கட்சி ஒன்றிலிருந்து, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதியாக இருந்துகொண்டு, சுமந்திரன் இதைச் சொல்வது முறையல்ல என்பதே அவர்களது வாதமாக இருக்கிறது.
மறுதரப்பினரைப் பொறுத்தவரை, தமிழனாகப் பிறந்தவன், ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்காமல் இருக்கமுடியாது. அப்படி, ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்காதவன், தமிழனாக இருக்கமுடியாது. அப்படி ஆதரிக்காதவன் தமிழினத் துரோகி, என்ற மனப்பாங்கு ஆகும். சுருங்கக்கூறின், முதற்றரப்பின் நிலைப்பாடானது, தமிழ்த் தேசியவாதக் கட்சியிலிருந்துகொண்டு, ஆயுதப் போராட்டத்தை மறுக்கவோ, எதிர்க்கவோ கூடாது என்பதாகும். இரண்டாவது தரப்பின் நிலைப்பாடு, தமிழனாக இருந்துகொண்டு, ஆயுதப் போராட்டத்தை மறுக்கவோ, எதிர்க்கவோ கூடாது என்பதாகும். ஆக ஒட்டுமொத்தத்தில், தமிழர்களாகப் பிறந்துவிட்டால், போராட்டத்தை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்பதே, இந்த இரண்டாவது தரப்பின் நிலைப்பாடாகும். இது ஆரோக்கியமானதொரு மனப்பாங்கு அல்ல என்பதைவிட, மிக ஆபத்தானதொரு மனப்பாங்காகும். ஆயினும், இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றில், இது ஒன்றும் புதியதொன்றல்ல.

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், ராஜனி திரணாகம, நீலன் திருச்செல்வம் என, தமிழ்த் தேசியத்தின் பெயரால், ‘துரோகி’ முத்திரை குத்தப்பட்டு, ‘போட்டுத்தள்ளப்பட்டவர்களின்’ பட்டியல் நீளமானது. இதில், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், தமிழ் மக்களினதும் தமிழ்த் தேசியத்தினதும் தன்னிகரில்லாத் தலைவராக இருந்தவர். ராஜனியும் நீலனும், ஆயுதப்போராட்டத்தை விரும்பியிராத மாற்றுத்தீர்வை வேண்டிய சமாதானவாதிகள் (pacifists).

தமிழ்த் தேசியத்தின் மய்யவோட்டத்திலிருந்து சிந்திக்காத, மாற்றுச் சிந்தனையுடையவர்களை எல்லாம், ‘துரோகி’ முத்திரை குத்தி, ‘போட்டுத்தள்ளிவிடுகிற’ மனநிலையின் தொடர்ச்சியாகத்தான், சுமந்திரனுக்கு இன்று ஏற்பட்டிருக்கிற நிலை. யோசித்துப் பார்த்தால் இது, ‘தமிழ்த் தேசியவாதிகள்’ என்று அறிவித்துக்கொண்டு, மாற்றுக் கருத்தாளர்களுக்குத் ‘துரோகி’ முத்திரை குத்திச் செல்பவர்களின் முரண்பாசாங்குத்தனத்தை (hypocrisy) சுட்டிநிற்கிறது. தமது உரிமையை, சுயநிர்ணயத்தை, பெரும்பான்மையினர் மறுக்கிறார்கள்; தாம் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறோம் என்று பாதிக்கப்பட்டவராக (victim) தம்மை முன்னிறுத்தும் அதேவேளை, தம்மினத்துக்குள் தம்முடைய கருத்துடன் உடன்படாதவர்கள், ‘துரோகி’ என்றும் ‘போட்டுத்தள்ளப்பட வேண்டும்’ என்ற, அடக்குமுறை மனநிலையில் நின்று இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெரும்பான்மை, தமிழ்த் தேசியவாதிகளிடமிருந்து, சிறுபான்மையான மாற்றுக்கருத்தாளர்களைக் காப்பாற்றப்போவது யார்?

9ஃ11 தாக்குதலுக்குப் பிறகு, தனது பயங்கரவாதத்துக்கு எதிரான போர்முழக்கத்தைச் செய்த அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ், அனைத்து நாடுகளுக்கு விடுத்த அறைகூவலில், ”நீங்கள் எங்களோடு இருக்கிறீர்கள்; இல்லையென்றால், பயங்கரவாதிகளோடு இருக்கிறீர்கள்” என்று கூறியிருந்தார்.

அதைப்போலவே, தமிழ்த் தேசியவாத முத்திரை தாங்கியவர்கள், ‘தமிழ்த் தேசியவாதி’ என்பவர், ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்கவேண்டும்; இல்லையென்றால் அவர், தமிழ்த் தேசியவாதியாக இருக்கவே முடியாது என்று உரைக்கிறார்கள். தர்க்க ரீதியாகப் பார்த்தால், ”நீ எங்களோடு இருக்கிறாய்; இல்லையென்றால், எங்ளுக்கு எதிராக இருக்கிறாய்” என்பது, தவறானதொரு தர்க்கமாகும். இதை false dilemma அல்லது, false dichotomy என்பார்கள். இதில், என்ன தவறென்றால், இது ஒருவருக்கு, இரண்டு தெரிவுகள் மட்டுமே இருப்பதான ஒரு பொய்த்தோற்றத்தை கட்டமைக்கிறது.

ஜனாதிபதி புஷ்ஷின் கருத்து, ஒரு நாடு அமெரிக்காவுக்கு ஆதரவானதாக இருக்கமுடியும்; அல்லது, பயங்கரவாதிகளுக்கு ஆதரவானதாக இருக்கமுடியும் என்ற இரண்டு கட்டாயத் தெரிவு மாயை உருவாக்குகிறது. ஆனால், யதார்த்தம் அதுவல்ல; ஒருவர், பயங்கரவாதத்துக்கு எதிராகவும் அதேவேளை, அமெரிக்க மேலாதிக்கத்தை மறுப்பவராகவும் அமெரிக்காவின் யுத்தத்தை எதிர்ப்பவராகவும் இருக்கமுடியும். ஆனால், அந்த மாற்றுத் தெரிவுகளுக்கு, மேற்சொன்ன false dichotomy இடம் கொடுப்பதில்லை. ‘என்னுடைய நண்பன் இல்லாதவன் எல்லாம், என்னுடைய எதிரி’ என்ற தவறான சிந்தனை இது. தமிழ்த் தேசியவாதி என்ற முத்திரையைச் சூடிய பலரும், இன்று இந்தத் தவறைச் செய்து வருகிறார்கள்.

தமிழ்த் தேசியவாதி, ஆயுதப் போராட்டத்தை மறுக்கவோ, எதிர்க்கவோ முடியாதா?

தமிழ்த் தேசியவாதத்தின் அடிப்படை அபிலாஷைகள் என, தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற மூன்றையும் தமிழ்த் தேசிய ஜனநாயகக் கட்சிகளும் சரி, ஆயுதக் குழுக்களும் சரி ஏற்றுக்கொண்டுள்ளன. இலங்கைத் தமிழர், ஒரு தேசமாக அங்கிகரிக்கப்படுதல், இலங்கைத் தமிழருக்கென்ற அடையாளம் காணப்பட்ட தாயகமொன்றின் இருப்பை அங்கிகரித்தல், தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரித்தல் ஆகிய, தமிழ்த் தேசியத்தின் அடிப்படையை, அபிலாஷைகளை ஏற்றுக்கொண்ட எவருமே, தமிழ்த் தேசியவாதிகள்தான்.

அப்படியானால், ஆயுதப் போராட்டம் என்பதன் வகிபாகம் என்ன? தமிழத் தேசியத்தின் இந்த அபிலாஷைகளை அடைந்துகொள்ள, ஜனநாயகக் கட்சிகள், ஜனநாயக ரீதியான மார்க்கங்களை அணுகிய அதேவேளை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் ஆயுத வழியில் அதை அடைந்துகொள்ள முனைந்தன. ஆகவே, ஆயுதப் போராட்டம் என்பது, தமிழ் மக்களின் இலட்சியமோ, அபிலாஷையோ அல்ல; மாறாக, தமிழ் மக்களின் அபிலாஷைகளை அடைந்துகொள்வதற்கான ஒரு மார்க்கமாகச் சிலர் சுவீகரித்துக்கொண்ட கருவி. அது ஒரு பலமான, வலுவான கருவியாக இருந்தது என்பதைச் சிங்களவர்கள் கூட மறுக்கமாட்டார்கள். ஆயுதப் போராட்டம் என்பது, பலருக்கும் உணர்வுபூர்வமானதொன்று என்பதும், இங்கு மறுக்கப்பட முடியாதது. ஆயுதப் போராட்டத்துக்காக தமிழ் இனம் நிறையவே இழந்திருக்கிறது; தியாகம் செய்திருக்கிறது.

ஆனால், இந்த உணர்வுகளெல்லாம், ஆயுதப்போராட்டம் என்பது இலட்சியமல்ல; அது இலட்சியத்தை அடைவதற்கான ஒரு பாதை மட்டுமே என்ற உண்மையை, மறைத்துவிடக்கூடாது. அந்தப் பாதையின் மேல், நம்பிக்கை கொள்ளாதவர்களும் தமிழ்த் தேசிய இலட்சியத்தில் நம்பிக்கை கொண்டு, மாற்று வழிகளில் அதை அடைய முயற்சிக்க முடியும் என்ற யதார்த்தத்தையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படியில்லாவிட்டால், அது ஒரு வகையாக பாசிஸவாதம் போலாகிவிடும்.

தமிழ்த் தேசியவாத கட்சியில் இருந்துகொண்டு, ஆயுதப் போராட்டத்தை மறுக்கவோ, எதிர்க்கவோ முடியாதா?

இலங்கையில், தமிழ்த் தேசியத்தின் பிறப்பு என்பது, ஆயதப்போராட்டத்தோடு ஏற்பட்டதொன்றல்ல. அது, ஜனநாயக அரசியலிலிருந்தே பிறந்தது. இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழில் ‘தமிழ் அரசுக் கட்சி’ என்ற பெயரைச் சூடிக்கொண்டாலும், ஆங்கிலத்தில் தன்னை ‘ஃபெடறல் பார்ட்டி’ (சமஷ்டிக் கட்சி) என்றே விளித்துக்கொண்டது. இன்று: இலங்கைத் தமிழ்த் தேசியத்தின் பிதாமகராக சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகமே கருதப்படுகிறார். 1978இல் வட்டுக்கோட்டையில் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்த சா.ஜே.வே. செல்வநாயகம், அவரது சமாதானவாத அணுகுமுறையால் (pacifist approach) ‘ஈழத்துக் காந்தி’ என்று இன்றும் அறியப்படுகிறார். அந்த ‘ஈழத்துக் காந்தி’யினுடைய’ கட்சியிலிருந்து ஒருவர், ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்காததால், ‘துரோகி’ முத்திரை குத்தப்படுவதுதான் மிகப் பெரிய முரண்நகை.

ஓர் இனமாக, இலங்கைத் தமிழர்கள் நிறையவே இழந்துவிட்டார்கள். தமது அரசியல் அபிலாஷைகளுக்காக சலுகை அரசியலை விட்டொழித்த தன்மானம் மிக்க மக்கள் என்பது பெருமையே. ஆயுதப் போராட்டமும், அதற்கென தமிழ் மக்கள் செய்த தியாகமும் இழப்புகளும் வார்த்தைகளுள் அடக்கிவிட முடியாதவை. மூன்று தசாப்தகால வலி அது. அதனால்தான் பெரும்பான்மையாக இலங்கைத் தமிழருக்குப் போராட்டம் என்பது உன்னதமானதொன்று; சிலர் கடவுளைப் போல என்றுகூடச் சொல்வார்கள்.

ஆனால், உணர்வுப்பிளம்பின் எழுச்சிக்குள் தமிழர்கள் மறந்துவிடக் கூடாத ஒரு விஷயம், இங்கு, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் இருக்கிறார்கள். அதனால், அவர்கள் கெட்டவர்களோ, துரோகிகளோ அல்ல. உங்கள் இலட்சியமே, அவர்களுடையதும்; உங்கள் அபிலாஷையே, அவர்களுடையதும். ஆனால் என்ன, நீங்கள் கடவுளை நம்பகிறீர்கள்; அவர்கள் கடவுளை நம்பவில்லை. அதற்காகவெல்லாம் அவர்களைத் துரோகிகள் ஆக்கிவிடாதீர்கள். ஏனென்றால், இங்கு இலட்சியம் கடவுள் அல்ல; இலட்சியத்தை அடைவதற்கான ஒரு மார்க்கமே கடவுள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + eighteen =

*