;
Athirady Tamil News

உருப்படியான தலைமைகள் இல்லாத முஸ்லிம் சமூகத்தின் கையறுநிலை !! (கட்டுரை)

0

பேரினவாதம், தவிர்க்க முடியாத வகிபாகத்தைக் கொண்டுள்ள ஒரு நாட்டில், விவேகமற்ற அரசியல் நகர்வுகளின் காரணமாக, வலுவிழந்து போயிருக்கின்ற அரசியல் கட்சிகளையும் அரசியல் தலைமைகளையும் கொண்டாடுகின்ற ஒரு சமூகத்தின் கையறுநிலையும், வாழ்வும் எப்படி இருக்கும் என்பதையே, நிகழ்காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்று, தங்களது எந்த உரிமைகளையும் கேட்பதற்குத் தார்மீக உரிமையற்ற சமூகம் போல, முஸ்லிம்கள் பார்க்கப்படுகின்றனர். தங்களுக்கு என்ன நடந்தாலும், அதற்காகத் தட்டிக் கேட்கத் தைரியமும் புத்திக்கூர்மையும் மிக்க அரசியல்வாதிகளைக் கொண்டிராத, கைவிடப்பட்ட சமூகமாக ஆக்கப்பட்டிக்கக் காண்கின்றோம்.

தங்களது அரசியல் நலனுக்கு, முன்னுரிமை அளித்துச் செயற்பட்ட மூன்று, நான்கு முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், இந்த நிலைக்கு முக்கியக் காரணமாகி இருக்கின்றார்கள். அத்துடன், முன்னாள் மற்றும் அதற்கு முந்திய முஸ்லிம் அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரை அமைச்சார்கள் என, முஸ்லிம் அரசியல் பெருவெளியை நிரப்பியிருந்த, சமூகம் சார்ந்த அரசியலுக்குக் கொஞ்சம் கூடப் பொருத்தமற்ற, அறிவிலித்தனமான, சோம்பேறியான, சுயநலம்மிக்க, பணத்தாசை பிடித்தல் போன்ற குணாம்சங்களைக் கொண்ட எல்லா அரசியல் புள்ளிகளும் இதற்குக் காரணமானவர்களே.

தனித்துவ அடையாள சிந்தனையோடு, முஸ்லிம் கட்சியொன்று பயணித்துக் கொண்டிருந்த பாதையை மாற்றியமைத்த மு.காவின் இரண்டாவது தலைவர் ரவூப் ஹக்கீம், அதே பாணியிலான அரசியலை, வேறுவேறு முகாம்களில் இருந்து செய்யப் பழகியிருக்கின்ற மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியூதீன், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ் உள்ளடங்கலாக, ஏனைய சிறு முஸ்லிம் கட்சிகளும் தலைவர்களும் இணக்க அரசியலுக்குள் மூழ்கி அடையாளமிழந்து போனமையே, இத்தனைக்கும் காரணமாகி இருக்கின்றது.

தனித்துவ அடையாளத்துடன் நின்று, ஆளும் கட்சியில் இருந்தாலும் எதிரணியில் இருந்தாலும், பதவிசார்ந்த அரசியல் அதிகாரம் இருந்தாலும் தன்னிடம் இல்லாவிட்டாலும், முஸ்லிம் சமூகத்துக்காக நெஞ்சுறுதியுடன் குரல் கொடுக்கின்ற உருப்படியான ஒரு தலைமைத்துவமாவது கடந்த 20 வருடங்களில் முஸ்லிம் சமூகத்துக்குக் கிடைக்கவில்லை.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழர்கள் எதிர்பார்த்ததைப் பெற்றுக் கொடுக்கவில்லை என்பதுடன், இந்த இரு தசாப்த காலத்தில், இமாலய சாதனைகள் எதையும் நிகழ்த்தவும் இல்லை என்பதே நிதர்சனம். என்றாலும், யார் ஆட்சிக்கு வந்தாலும், நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு, சென்று அந்தச் சமூகத்தின், அடிப்படைப் பிரச்சினைகள், எதிர்பார்ப்புகள் பற்றிப் பேசுவதற்கான ஓர் அரசியல் அடையாளத்தைக் கூட்டமைப்பு, கட்டமைத்து வைத்திருக்கின்றது.

இந்த நிலைமை, முஸ்லிம் கட்சிகளிடத்தில் இல்லை. மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக்காலத்திலோ, ரணில் விக்கிரமசிங்க ஆட்சியிலோ, அவ்வாட்சிகளின் செல்லப் பிள்ளைகளாக இருந்த முஸ்லிம் கட்சித் தலைவர்கள் செய்த சிறு அபிவிருத்திப் பணிகளைத் தவிர்த்துப் பார்த்தால், இந்தச் சமூகத்தின் உரிமை சார் விடயங்களில் சிறிதாகக் கூட எதையும் சாதிக்கவில்லை. அதிகமான எம்.பிக்களைப் பெறுதல், ஓர் அமைச்சும், இரண்டு பிரதியமைச்சும் பெறுதல் என்ற எல்லைகளோடுதான், அவர்கள் சொல்கின்ற உரிமைப் போராட்டங்கள் எல்லாம் முடிந்து போகின்றன.

இந்தப் பின்னணியில், இணக்க அரசியல் என்ற தோரணையில், ராஜபக்‌ஷ மய்ய, ரணில் மய்ய, சஜித் மய்ய அரசியல் என, பெருந்தேசிய கட்சிகளின் கிளைக் கட்சிகள் போல, மேற்படி கட்சிகள் செயற்பட்டமையாலேயே, முஸ்லிம் சமூகம் இன்று எது குறித்தும் பேசமூடியாத, எந்தப் பாதையில் பயணிப்பதெனத் தெரியாத ஒரு கும்மிருட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருக்கின்றது.
இந்த வரிசையில், இன்றைய காலகட்டத்தில் இலங்கை முஸ்லிம் சமூகம், தங்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடிய ஒரு தலைவர், அரசியல்வாதி இருக்கின்றாரா எனத் தேடிக் கொண்டிருக்கின்றது. அதற்கு முக்கியக் காரணம், கொவிட்-19 வைரஸால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்கள், எரிக்கப்படுகின்ற மன வேதனையாகும்.

இதுவே தேர்தல் காலமாக இருந்திருந்தால், “எங்க வீட்டுப் பிள்ளை, எம்.ஜி.ஆர்” போல முஸ்லிம் கட்சித் தலைவர்கள் தொடக்கம் கிராமத்து அரசியல்வாதி வரை எல்லோரும் மக்களைத் தேடி வந்திருப்பார்கள்; மக்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டு, ஒரு பெரிய முழுநீளப் படமே ஓட்டியிருப்பார்கள். ஆனால், தேர்தல் தள்ளிப்போனமையாலும், ஊரடங்கில் எப்படி வெளியே செல்வது என்ற பதில் தயாராக இருந்தமையாலும், கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிய வேளையில், முஸ்லிம் அரசியல்வாதிகளில் 99 சதவீதமானோரை, செயற்பாட்டுக் களத்தில் காணவே முடியவில்லை.

மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடவில்லை என்றாலும் கூட, கொரோனா வைரஸால் மரணித்த முஸ்லிம்களின் உடல்களைத் தகனம் செய்யும் விடயத்தில், ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை ஆரம்பத்திலிருந்தே எடுத்திருக்க வேண்டும். முன்னைய அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காக நீதிமன்றத்தை நாடியவர்கள், முஸ்லிம்களின் உரிமையை உறுதி செய்வதற்காக, இன்னும் தமது சட்டத்தரணிக்கான கறுப்புக் கோட்டுகளை அணியவில்லை.

“கொவிட்-19 தொற்றால் உயிரிழக்கின்ற நபர்களின் உடல்களை, எரிக்கவோ, ஆழமாகப் புதைக்கவோ முடியும்” என்று உலக சுகாதார ஸ்தாபனம் தமது வழிகாட்டல் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளது. இதை ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்டு, புதைக்கவும் முடியும் என்ற அடிப்படையில், சுகாதார அமைச்சு வழிகாட்டல்களை வெளியிட்டிருந்த நிலையில், மரணித்த முதலாவது முஸ்லிம் நபரின் ஜனாஸாவை எரித்தமை, ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
இதையடுத்து, முஸ்லிம் தலைமைகள், அரசியல்வாதிகள் சற்று உஷாரடைந்தனர்.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஹக்கீம், ரிஷாட் போன்ற கட்சித் தலைவர்கள் மட்டுமன்றி, ராஜபக்‌ஷவுக்கு எப்போதும் தோள்கொடுக்கும் தே.கா தலைவர் அதாவுல்லாஹ்வும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். ஆனால், சூடான அக்கூட்டத்தில் ஆளும் தரப்பு மற்றும் அதிகாரிகளால் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு முகத்தில் அறைந்தால் போல், பதில்கள் வழங்கப்பட்டதாகவும் தனியான சந்திப்பு நேரம் ஒதுக்கித் தரப்படவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், சுகாதார அமைச்சு தனது விதிமுறையைத் திருத்தியமைத்தது.

உண்மையில், உலக சுகாதார ஸ்தாபனம், மிகப் பெரிய அமைப்பாகும். கொவிட்-19 காரணமாக மரணிப்போரின் உடல்களைப் புதைத்தால், நிலத்தின் கீழ் வைரஸ் பரவுமா, இல்லையா என்பதை ஆய்வு செய்த அது, தன் வழிகாட்டல் குறிப்புகளை வெளியிட்டுள்ளது. முஸ்லிம் விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கும் நாடுகள் உட்பட, 175க்கும் மேற்பட்ட நாடுகளில், கொரோனா வைரஸால் இறக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படுகின்றன.

ஆனால், உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தல்களை இலங்கை சுகாதார அமைச்சு மறுத்துரைப்பதாயின், அவ்வமைப்பில் உள்ள வைத்திய, விஞ்ஞான நிபுணர்களை விட, தலை சிறந்த விஞ்ஞானிகளும் நிபுணர்களும் இலங்கையில் இருக்க வேண்டும். நிலத்தில் புதைத்தால் வைரஸ் பரவாது என நிரூபிக்கும் அறிக்கையைத் தருமாறு முஸ்லிம் தரப்பிடம் கோரிய அதிகாரிகளால், எட்டு அடி ஆழத்தில் புதைக்கப்படும் இறந்த உடலில் இருந்து, வைரஸ் பரவும் என்பதை நிரூபிப்பதற்காக, ஆதார ஆவணம் முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி இடம்பெறவில்லை.

ஆனால், அதற்கு மாறாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் எரிக்கலாம் அல்லது புதைக்கலாம் என்பதையே, மீண்டும் மீண்டும் அறிவித்திருந்தது. இலங்கையின் மிகப் பெரிய தொற்றுநோயியல் நிபுணரான பபா பலிகவதன கூட, நிலத்தின் கீழ் வைரஸ் பரவும் என்று உறுதியாகக் கூறவில்லை.
இப்படியிருக்க, முஸ்லிம்களின் சடலங்களையும் எரிப்பது என்று எடுக்கப்பட்ட முடிவு, நோய் பற்றிய அச்சத்தாலும் நோய் பரவக் கூடாது என்ற காரணத்துக்காகவும் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று எடுத்துக் கொண்டாலும், உலக நடைமுறைகளுக்குப் புறம்பாக, இலங்கை அரசாங்கம் எடுத்த தீர்மானம், அரசியல் சார்ந்தது என்ற சந்தேகங்கள், முஸ்லிம்கள் மத்தியில் எழுந்துள்ளன. அரசாங்கம் நினைத்திருந்தால், இவ்விடயத்தை முஸ்லிம்களுக்கு நோகாமல் கையாண்டு இருக்கலாம்.

முஸ்லிம்களின் ஆதரவு, தமக்கு இம்முறையும் பெரிதாகக் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என்பது போல, சில விடயங்கள் கையாளப்பட்டதாக அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் அரசியல்வாதிகளே, தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர். இருந்த போதும், எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு, சாதாரண முஸ்லிம் மக்கள், அரசாங்கத்தின் சட்ட விதிகளை மதித்து, ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட வேளையில், அமைதியாக இருந்தனர் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

ஆனால், முஸ்லிம் அரசியல் தலைவர்களும், மிகப் பெரும் பொறுப்பைச் சுமந்துள்ள ஜம்மியத்துல் உலமா சபையும், பொறுப்பு வாய்ந்தவர்களும் சாதாரண மக்களைப் போல சும்மா இருக்க முடியாது. இருப்பினும், இடைப்பட்ட காலத்தில் மேற்சொன்ன தரப்பினர் செயலிழந்து வாழாவிருந்தனர் என்பதைக் கண்கூடாகக் கண்டோம். குறிப்பாக, காதலிலே தோல்வியுற்றவர்கள் போல, முஸ்லிம் அரசியல்வாதிகள் முடங்கிக் கிடந்தனர்.

உண்மையில், ஜனாஸாவை எரிக்கும் தீர்மானத்தில், அரசியல் என்பது பெரும் செல்வாக்குச் செலுத்தியிருக்கின்றது என்றால், முஸ்லிம் அரசியல் பலமிழந்து போனமையே, அதனை எதிர்கொள்ள முடியாமல் போனமைக்கான காரணம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஆளும் தரப்பில் இருக்கின்ற அதாவுல்லாஹ், எதிரணியில் இருக்கின்ற ஹக்கீம், ரிஷாட் உள்ளடங்கலாக, முஸ்லிம் தலைவர்கள், அரசியல்வாதிகள் பலமாக இருந்திருந்தால், அதாவது “இவர்களைப் பகைக்க முடியாதளவுக்கு இவர்கள் கனதியானவர்கள்” என்று, ஆட்சியாளர்கள் கருதியிருந்தால், ஜனாஸா விடயத்தில் மட்டுமன்றி, முன்னைய ஆட்சிகளில் கூட பலவற்றைச் சாதித்திருக்கலாம்.

ஆனால், கடந்த வாரம் வரை, முஸ்லிம் கட்சித் தலைவர்கள் கிட்டத்தட்ட ஒருவித மெத்தனப் போக்கையே கடைப்பிடித்தார்கள். இப்போதுதான் அதாவுல்லாஹ், ஜனாஸா எரிப்புக்கு எதிராகப் பேராடுவோம் என்கின்றார். ரிஷாட் கடிதம் எழுகின்றார்; ஹக்கீம் முகநூலில் பேசுகின்றார். அதாவது, எப்போதெனில், கொவிட்-19 வைரஸ் தாக்கியதாகக் கிடைக்கப் பெற்ற தவறான அறிக்கை ஒன்றின் அடிப்படையில், முஸ்லிம் பெண் ஒருவரின் உடல் அநியாயமாக எரிக்கப்பட்ட பின்னராகும்.

இன்னும் சொல்லப் போனால், ஜனாஸா எரிப்பு விவகாரத்துக்கு எதிராக, முஸ்லிம் சிவில் அமைப்புகள் மட்டுமன்றி, கத்தோலிக்கர் இருவரும் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்து, அதில் ஒரு வழக்கில், சட்டத்தரணி சுமந்திரன், முஸ்லிம்களுக்காக வாதாடுவதற்காக இலவசமாக முன்வந்த பிறகுதான், முஸ்லிம் அரசியல்வாதிகள் விழித்தெழுந்து இருக்கின்றார்கள். இதற்காக உண்மையில் வெட்கப்பட வேண்டும்.

எது எப்படியிருந்தாலும், இன்னும் காலம் கடந்து விடவில்லை என்ற அடிப்படையில் பார்த்தால் இப்போது எடுக்கப்படுகின்ற முயற்சிகள், பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவையாகும். அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் தமக்குக் கைகொடுக்காத நிலையில், முஸ்லிம் சமூகத்தின் சார்பில் நீதி தேவதையை நாடிச் செல்வது, தவிர்க்க முடியாதது ஆகும்.

சமகாலத்தில், இந்த விடயத்தில் அரசியல் ரீதியான அணுகுமுறைகளும் கையாளப்பட வேண்டும். ஐ.ஓ.சியில் அங்கம் வகிக்கும், சில முஸ்லிம் நாடுகள் உள்ளடங்கலாகப் பல தரப்பில் இருந்தும் அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் எழுந்துள்ளன. விரைவில் நடத்துவதற்கு எதிர்பார்க்கும் பொதுத் தேர்தலில், முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆதரவின்றி, நேரடியாக முஸ்லிம்களின் வாக்குகளை ஆளும்தரப்புப் பெறுவதும் சிரமமாகும்.

எனவே, ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம்களின் உரிமை சார்ந்த எதிர்கால விடயங்களில் காத்திரமான அரசியல் நகர்வுகளும் அவசியமாகின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இலங்கை முஸ்லிம்களுக்கு ஏக தலைவர் என்று ஒருவர் உருவாகவில்லை என்பதுடன், முஸ்லிம் கட்சிகளும் தமது அரசியல் பலத்தை, இரண்டு பெருந்தேசியக் கட்சிகளிடம் அடகுவைத்திருக்கின்றன.

ஆகவே, ராஜபக்‌ஷ ஆட்சியில்தான் இந்த நிலைமை என்று சொல்வதற்கில்லை. ரணில், சஜித் அல்லது “எக்ஸ்”, “வை” என, யார் ஆட்சிக்கு வந்தாலும், முஸ்லிம் கட்சிகள் மாறாத வரை இந்த நிலைமை மாறப் போவதில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 2 =

*