;
Athirady Tamil News

உலக பொருளாதாரத்தை பாரிசவாதமாக்கியுள்ள லொக்டவுன்!! (கட்டுரை)

0

உலகம் கொரோனாவோடு வாழப் பழகிக் கொண்டுவிட்டது போலத் தோன்றுகிறது. உயிர்க்கொல்லி நோய் பரவிய வேகம் கண்டு பயந்துபோன நாடுகள் ‘லொக் டவுன்’ என்னும் பொருளாதார முடக்கலைச் செய்து நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் அந்நாடுகளின் பொருளாதாரங்களின் மர்மநிலைகளை மோசமாகத் தாக்கி அவற்றைப் பாரிசவாத நிலைக்கு இட்டுச் சென்றுள்ளன.

கொரோனாவுக்கு ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத வரையில் உலகப் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்புவது சாத்தியமில்லை எனத்தோன்றுகிறது. ஆனால், அதுவரையில் பொருளாதாரங்களை மூடி வைத்திருப்பதும் நடைமுறைச் சாத்தியமில்லை. உலகின் முன்னணிப் பொருளாதாரமும் கொரோனாவால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுமாகிய அமெரிக்கா, தனது மாநிலங்களை படிப்படியாகத் திறந்து வருகிறது. அந்நாட்டில் 24மில்லியன் பேர் தமது வேலைகளை இழந்து அரசாங்கம் வழங்கும் வேலையின்மை உதவிப்பணம் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் மற்றும் வர்த்தக முயற்சிகள் தொடக்கம் மிகப்பெரிய அமெரிக்கப் பல்தேசிய நிறுவனங்களும் பொருளாதார முடக்கநிலை காரணமாக கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. பொருளாதாரத்தை மூடி வைப்பதனால் ஏற்படும் பாதிப்புகளை ஒரு கட்டத்திற்கு அப்பால் மீளச் சீர்திருத்த முடியாத நிலைக்கு இட்டுச் சென்றுவிடும் நிலை உருவாவதைத் தவிர்க்க மீண்டும் பொருளாதாரத்தைத் திறந்துவிட வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது. அமெரிக்கா மட்டுமன்றி உலகின் ஏனைய முன்னணி நாடுகளிலும் இதே நிலைதான். கொரோனாவால் முதலில் பாதிக்கப்பட்ட சீனாவும் மீண்டும் தனது பொருளாதாரத்தை படிப்படியாகத் திறந்து வருகிறது.

இலங்கையும் சுமார் இரண்டு மாதகால முடக்கத்தின் பின்னர் பொருளாதாரத்தை திறக்க முயற்சித்து வருகிறது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு இன்னும் நீக்கப்படாத போதிலும் அம்மாவட்;டங்களிலும் மக்கள் நடமாட்டங்களும் வாகனப் போக்குவரத்தும் கடந்த சில நாட்களில் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிந்தது. சுருக்கமாகச் சொன்னால் கொரோனா ஒருபக்கத்தில் இருந்துவிட்டுப் போகட்டும் அதோடு வாழப்பழகிக் கொள்ள வேண்டியதுதான்.

சுகாதாரத் தரப்பினர் ஒரு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணுவதும் முகக் கவசங்களை அணிவதும் கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டுக் கழுவுவதும் கட்டாயம் என அறிவுறுத்தியுள்ள போதிலும் அவை முறையாகப் பின்பற்றப் படுகின்றனவா என்பது கேள்விக்குறியாகவுள்ளது. குறிப்பாக முகத்துக்கு மேல் ஏதாவதொரு துணித்துண்டு இருந்தால் சரி என்று நினைக்கிறது சனம். சிலர் மூக்குக்குக் கீழே வாயை மட்டும் மூடுகின்றனர். சிலர் மூக்கை மட்டும் மூடுகின்றனர். வேறுசிலர் முகக்கவசங்களை கீழே இறக்கிவிட்டு மற்றவர்களுடன் பேசுகின்றனர். இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் அவ்வாறு முகக் கவசங்களை சரியாகப் பயன்படுத்தாதவர்கள் கல்வியறிவில்லாத பஞ்சப்பரதேசிகள் அல்லர். பேராசிரியர்கள் சிலரும் அதில் உள்ளடக்கம்!

கொரோனா நோய் காரணமாக சுடுநீரில் வீழ்ந்துள்ள சர்வதேச நிறுவனம் என்றால் அது உலக சுகாதார தாபனம் தான். நோய்ப்பரவல் தொடர்பான சரியான தகவல்களை உலக சுகாதார நிறுவனம் உரியகாலத்தில் உலகிற்கு வழங்கவில்லை எனவும் நோய்த்தொற்று உருவாகிய சீனாவில் முதலில் மிருகங்களிலிருந்து மனிதனுக்கு நோய் பரவும் என்றே கூறப்பட்டதாகவும் மனிதனிலிருந்து மனிதருக்கு நோய் பரவுவது பற்றி முறையாக அறிவிக்கப்படவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு சார்பாக அதன் கைப்பாவையாக செயற்படுகிறது என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

அமெரிக்கா நோய்த்தொற்றைக் கையாண்ட விதம் தொடர்பில் தனது கையாலாகாத்தனத்தை மறைக்க உலக சுகாதார நிறுவனத்தை குற்றஞ்சுமத்துவதன் மூலம் சீனாவின் மீது வீண்பழி சுமத்தப்படுகிறது என்று சீனா பதிலடி கொடுத்தது. பக்கச்சார்பான ஒரு நிறுவனத்திற்கு மக்களின் வரிப்பணத்தை கொடுக்கப் போவதில்லை என காரணம் கூறிய ட்ரம்ப், அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கும் நிதிப்பங்களிப்பைத் தற்காலிகமாகத் தடுத்து வைத்திருக்கும் நிலையில் அதனை நிரந்தரமாகவே நிறுத்தப் போவதாக அச்சுறுத்தி உலக சுகாதார நிறுவனம் தன்னைத் திருத்திக்கொள்ள ஒருமாத காலக்கெடு விதித்திருந்தார்.

அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத்திற்கு வருடாந்தம் சுமார் 450மில்லியன் டொலர்களை தனது பங்களிப்பாக வழங்குகிறது. அதேவேளை சீனாவின் பங்களிப்பு 38மில்லியன் டொலர்கள் மாத்திரமேயாகும். அமெரிக்கா தனது சர்வதேச பொறுப்புகளிலிருந்து விடுபட முயற்சிக்கிறதெனவும் முழு உலகமே நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்போது சர்வதேச நாடுகள் ஒற்றுமையாக அதனை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் தவித்த முயல் அடிக்கும் ட்ரம்பின் போக்கைக் கண்டிப்பதாகவும் சீனா அறிக்கை விட்டது.

சீனாவைத் தண்டிக்க மேலும் புதிய வர்த்தகத் தடைகளை விதிக்க உத்தேசிப்பதாக அமெரிக்க அதிபர் அறிவித்த நிலையில் நிலைமை மேலும் மோசமாவதை உணர்ந்த ஐரோப்பிய ஒன்றியமும் நியூசிலாந்து போன்ற நாடுகளும் தலையிட்டு தற்போது பதற்றத்தைத் தணிக்கும் ஒரு முயற்சியாக உலக சுகாதார நிறுவனம் மீது முழு அளவிலான ஒரு நடுநிலையான சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை அமெரிக்காவும் சீனாவும் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

ஏற்கெனவே வர்த்தகப் போட்டா போட்டியில் சிக்கிக் கண்ணுக்குக்கண் பல்லுக்குப்பல் என்று பரஸ்பரம் வர்த்தகத் தடைகளை (Trade Barriers) மாறிமாறி விதித்துவரும் அமெரிக்காவும் சீனாவும் மற்றுமொரு ஆட்டத்திற்கு தயாராவதையே இப்போதைய போக்குகள் காட்டுகின்றன. அமெரிக்க அதிபரின் அண்மைக்கால நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு உள்ளேயே கடும் எதிர்ப்புகளுக்கு உள்ளாகியுள்ளதையும் அவதானிக்கலாம். தேர்தலொன்று வரவுள்ள நிலையில் ஏதாவது செய்து அமெரிக்க வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கவேண்டிய நெருக்கடி ஒருபுறம்.

சரிந்துவரும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் இன்னொருபுறம் என்று பிரச்சினைகள் இருக்கும் சுழலில் ஊடகங்களை எதிர்கொண்டு கையாள்வதில் ட்ரம்ப் மிகப் பலவீனமாக உள்ளமை தெரிகிறது. ஒரு அபிவிருத்தியடைந்துவரும் நாட்டின் அதிபர் ஊடகங்களை எதிர்கொள்வதைவிட இப்போதைய அமெரிக்க அதிபரின் செயற்பாடுகள் மோசமாக உள்ளதாக அவர்மீது விமர்சனங்கள் எழுந்தவண்ணமுள்ளன. அண்மையில் ஒரு ஊடக சந்திப்பின்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளால் கடுப்பாகிய அவர் இடைநடுவில் சொல்லிக் கொள்ளாமலேயே அதிலிருந்து வெளியேறியதையும் உலகத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.

1929தொடக்கம் 1937வரையிலான உலகப்பெருமந்தம் மற்றும் இரண்டாம் உலகப்போர் ஆகியவனற்றைத் தொடர்ந்து சிதைந்து போயிருந்த உலகப் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப ஒரு தலைமைத்துவம் தேவைப்பட்டபோது அதனை வழங்க அமெரிக்கா முன்வந்தது. உலகின் கதாநாயக அந்தஸ்தைப் பெற்று உலகில் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியம் என்று போற்றப்பட்ட பெரிய பிரித்தானியா அதனை அமெரிக்காவுக்கு தாரைவார்க்க நேர்ந்தமை வரலாறாகும். வரலாறு மீண்டும் திரும்புவது (History repeats itself ) போல கொரோனாவுக்குப் பிந்திய உலகில் சர்வதேச பொலிஸ்காரனாக எதிலும் மூக்கை நுழைக்கும் அமெரிக்காவின் தலைமைத்துவம் மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது.

அமெரிக்காவை முன்னுரிமைப்படுத்தி (America first) என்னும் மகுடவாசகத்தின் கீழ் ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொள்ளும் வர்த்தகப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தற்போது உலக சுகாதார நிறுவனம் போன்ற சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதிப் பங்களிப்பிலிருந்து விலகுவதாக அச்சுறுத்தும் நடவடிக்கைகளும் சர்வதேச அரங்கில் அமெரிக்க தலைமைத்துவம் படிப்படியாகக் கைநழுவிப் போவதைக் கோடிட்டுக் காட்டுவதாக அமையலாம்.

குறிப்பாக இருபத்தோராம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு (Asian Century) ஆக இருக்குமென எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில் உலக தலைமைத்துவத்தை இரு பெரும் ஆசியப் பொருளாதாரங்களாகிய சீனாவும் இந்தியாவும் பொறுப்பேற்கக்; கூடுமென ஹேஸ்யம் கூறப்படுகிறது. எவ்வாறான முறுகல் நிலை இருந்தாலும் அமெரிக்காவுக்கு அதிகளவில் கடன் வழங்கியுள்ள நாடு சீனாதான் என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தம்.

சீனா தனது ஏற்றுமதிகள் மூலம் திரட்டப்படும் மிகை நிதியினை வணிக ரீதியிலான கடன்களாகவோ அல்லது சர்வதேச முதலீடுகளாகவோ மாற்றி வருகிறது. சீனாவின் பிரசன்னம் இல்லாத எந்தவொரு நாடும் உலகில் இல்லை என்னும் அளவுக்கு அதன் ஒக்டோபஸ் கரங்கள் உலகப் பந்தைப் பின்னியுள்ளன. ஆனால் சர்வதேச நிறுவனங்களுக்கு அதன் நிதிப்பங்களிப்பு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளது. அதேவேளை, அப்பங்களிப்பைத் தீர்மானிப்பதுவும் மேற்குலக நாடுகளே என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும். தற்போது கிடைத்துள்ள இடைவெளியைப் பயன்படுத்தி சீனா சர்வதேச ரீதியில் தனது நிதிப்பங்களிப்பை அதிகரிக்குமாயின் அமெரிக்காவின் முக்கியத்துவம் படிப்படியாகக் குறைந்து போகலாம்.

சீனாவுக்கு பாடம் புகட்ட அந்நாட்டிலுள்ள அமெரிக்க நிறுவனங்களை மீள நாட்டுக்கு அழைக்கும் நோக்கில் அமெரிக்கா ஊக்குவிப்புகளை வழங்கி வருகிறது. அவை அமெரிக்காவுக்குள் வருகின்றனவோ இல்லையோ சீனாவில் இருந்து அவை வெளியேற வேண்டும் என்பதே அடிப்படை நோக்கமாக உள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமன்றி ஏலவே பல்வேறு நாடுகளின் நிறுவனங்களும்; சீனாவிலிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளன.

இவ்வாறு சீனாவிலிருந்து வெளியேறும் கம்பனிகளைக் கவரும் நோக்கில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

முதற்கட்டமாக 461,589ஹெக்டெயர் நிலப்பரப்பினை இந்தியா முழுவதும் சர்வதேச நேரடி முதலீட்டுத் தேவைகளுக்காக ஒதுக்கியுள்ளது.

இது உலகிலுள்ள லக்ஸம்பேர்க் நாட்டின் பரப்பளவைவிட இரு மடங்கு பெரியளவானதாகும்.

ஏற்கெனவே குஜராத், மகாராஷ்ரா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் 115,131ஹெக்டெயர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கைத்தொழிற் பேட்டைகளையும் உள்ளடக்கியதாக இந்நிலப் பிரதேசம் அமைந்துள்ளது.

இந்தியாவில் முதலீடுசெய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை நிலத்தைப் பெற்றுக் கொள்வதாகும். நிலத்தைப் பெற்றுக் கொள்வதில் நிலவும் நீண்டகாலத் தாமதங்கள் காரணமாக இந்தியாவில் முதலிட விரும்பிய சவூதி அரேபியாவின் அரம்கோ போன்ற நிறுவனங்கள் பொறுமையிழந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

மின்சாரம் நீர் மற்றும் பாதை வசதிகளோடு நிலங்களை முதலீட்டுத் தேவைக்காக வழங்குவதன் மூலம் சீனாவிலிருந்து வெளியேறும் முதலீடுகளைக் கவர எதிர்பார்க்கப்படுகிறது.

மின்னியல், மருத்துவம், மருந்தாக்கல், இலத்திரனியல், கனரக எந்திரவியல், சூரியவலு உபகரணங்கள், இரசாயனம், உணவு பதனிடல் உள்ளிட்ட பத்துத் துறைகளை வெளிநாட்டு முதலீட்டுக்கான முன்னுரிமைத் துறைகளாக இந்தியா அறிவித்துள்ளது.

ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா போன்ற நாடுகளில் இருந்து மட்டுமன்றி சீனாவிடமிருந்தும் முதலீட்டுக்கான கோரல்கள் வந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்தியா போன்ற நாடுகள் மாறிவரும் உலகப்பாங்குகளுக்கேற்ப துலங்கல்களை ஏற்படுத்துவதன் மூலம் தமது பொருளாதாரங்களை மீளமைத்து முன்னேற விரும்புகின்றன.

2500 வருடகால மகோன்னத வரலாறு என்று கட்டிப்பிடித்துப் புரளும் இலங்கை இவற்றிலிருந்து எப்போது பாடங்கற்றுக் கொள்ளும்?

கலாநிதி எம். கணேசமூர்த்தி,
பொருளியல்துறை, கொழும்பு பல்கலைக்கழகம்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × one =

*