;
Athirady Tamil News

நிறமிழக்கும் வண்ணங்கள் !! (கட்டுரை)

0

சரி எங்குதான் போவது, ஒருவாறு சமாளித்துகொண்டு இருந்துவிடும் எம்மில் பலரும், இரண்டு வருடங்களுக்கு ஒருதடவையேனும், மாறிக்கொண்டே இருப்பர். இருப்பதை ஆங்காங்கே மாற்றிமாற்றி அடுக்கிவைப்பதைத் தவிர, புதிதாக வாங்குவதற்குக் கனவு கண்டாலும், அது கனவிலேயே கலைந்துவிடும்.

ஏனெனில், சில வாடகை வீடுகளில், மாடிவீட்டுக்கான ஏறுபடிகளைக் கூட, தங்கள் வீட்டுக்குள்ளே ஒழித்துவைத்துக் கொள்வர். அதனால்தான் என்னவோ, “கல்யாணம் கட்டிப்பார்; வீட்டைக்கட்டிப்பார்” என, முன்னோர் கூறிக்கொண்டிருப்பதை இன்னும் கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.

கல்யாணத்தைக் கட்டிக்கொள்ளும் எம்மில் பலருடைய, வீட்டைக் கட்டுவதற்கான ஆசைகள், நிராசைகளாகவே முடிந்துவிடுகின்றன. இருக்கும் வரையிலும் சொந்த வீடிலில்லாமலே வாழ்க்கையைக் கழித்துவிடும் பலரும், வாடகை வீடுகளிலேயே பாட்டி, தாத்தாவென ஒவ்வொருவரை இழந்து, முழுக்குடும்பத்தையும் தொலைத்துவிடுவர். இன்னும் சிலருக்கு, வாடகை வீட்டிலேயே திருமணமும் நடைபெற்று, ஆரம்பப் புள்ளி இடப்படுகிறது.

“எலி வங்குக்கு ஒப்பான உன்வீட்டில், எத்தனை ஆண்டுகள்தான், தலையை குனிந்துகொண்டே பயணிப்பது” என, வீராப்பாக யோசித்தாலும், அடுத்த தவணைக்கான பணத்தைச் சேமிப்பதில், அதிக கவனத்தையே இன்னும் சிலர் செலுத்துகின்றனர்; இது கொடும் கனவாகும்.

பொதுவானதெனக் கூறி, மின்சாரம், தண்ணீர் மீற்றர்கள் எல்லாவற்றையும் ஒன்றென ஒற்றுமை பேசி, கட்டணத் தொகையைப் பிரிக்கும்போது மட்டும், ஆகக் குறைவாகத் தங்களுக்குப் பிரித்துக்கு கொள்வது, வீட்டு உரிமையாளர்களுக்கு மட்டுமே, கைவந்த கலையாக இருக்கிறது.

இதனால், இரண்டு வருடங்களுக்கான முற்பணத்தில் மாத வாடகையையும் கழித்து, அடுத்த இரண்டு வருடங்களுக்கு யாரிடமாவது கையேந்தும் நிலைமை ஏற்பட்டுகிறது. இதனால்தான் என்னவோ மகாகவி பாரதியார்,

காணி நிலம் வேண்டும் – பராசக்தி

காணி நிலம் வேண்டும் – அங்கு

தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்

துய்ய நிறத்தினதாய் – அந்தக்

காணி நிலத்தினிடையே – ஒருமாளிகை

கட்டித் தரவேண்டும்!

எனப்பாடி வைத்துள்ளார்.

மகாகவி பாரதியாரின் இந்தப் பாடல் வரிகளே, இன்று அநேக இல்லத்தரசர்களின் ஏக்கமாக உள்ளன. தமக்கெனச் சொந்தக் காணி, வீடு இருக்க வேண்டுமென்பதே அவர்களின் இலட்சியமாக உள்ளது. இதற்காகவே இரவு, பகலாக உழைக்கின்றனர்.

ஆனால், அந்த இலட்சியம் நிறைவேறும் வரை, வாடகை வீடுகளில் கூண்டுப் பறவைகளாக, இவர்கள் படும் அவஸ்தைகள் சொல்லிலடங்காதவை. ஆனால், என்ன அவஸ்தைகள் ஏற்பட்டாலும், தமக்கு மாற்று வழியொன்று இல்லாமையால், மீண்டும் மீண்டும் அதே வாடகைக் கூண்டுகளுக்குள்ளேயே சுற்றிவருகின்றனர்.

வேலைவாய்ப்பு, கல்வி எனப் பல தேவைகள் நிமித்தமும் வசதிவாய்ப்பு, நகர மோகம் போன்றவற்றாலும் கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு நகரும் பலரே, வாடகை வீடுகளில் அல்லது, அறைகளில் பெரிதும் அல்லற்படுகின்றனர்.

பத்திரிகை, இணையத்தள விளம்பரங்கள் ஊடாகவே, அனேகமானோர் வாடகை வீடுகளை நாடுகின்றனர். விளம்பரத்தைப் பார்த்துச் செல்லும் பெரும்பாலானோருக்கு, ஏமாற்றமே கிட்டுகின்றது. காரணம், விளம்பரப்படுத்தப்பட்ட வீட்டுக்கும், நேரில் அவர்கள் பார்க்கும் வீட்டுக்கும் சம்பந்தமே இருக்காது. இரண்டு அறைகள் எனக் குறிப்பிட்டிருப்பார்கள். அங்கு சென்றால், ஓர் அறையே இருக்கும். வாகனத் தரிப்பிடம் உள்ளதென, வீடு அமைந்திருக்கும் வீதியோரத்தைக் காட்டுவார்கள்.

விளம்பரப் புகைப்படங்களில், வீடுகளை அழகாகக் காட்டியிருப்பர். ஆனால், அவ்வீட்டுச் சூற்றுச்சூழல் மிக மோசமானதாக இருக்கும். இவ்வாறு, பல்வேறு பிரச்சினைகள் அங்கிருக்கும்.

இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டுதான், வாடகை வீட்டில் பலர் குடியேறுகின்றனர். இந்தச் சகிப்புத் தன்மையும் கால ஓட்டத்தில் பழகிப்போய்விடும்.

கொவிட்-19 தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, முடக்கங்கள் காரணமாக, பல நாடுகளின் அபிவிருத்திகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உலகளாவிய ரீதியில், சுமார் 60 மில்லியன் மக்களைத் தீவிர வறுமைக்குள் இட்டுச் செல்லும் என, உலக வங்கி எச்சரித்துள்ளது.

மில்லியன் கணக்கானோர் தொழில்களை இழந்துள்ளதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வருடம், உலகளாவிய ரீதியில் பொருளாதாரம் மந்த நிலையிலேயே காணப்படும் என்றும், உலக வங்கியின் தலைவர் டேவிட் மெல்பாஸ் தெரிவித்துள்ளார்.

இதுபோன்றதொரு சூழ்நிலையில், வாடகை வீடுகளில் இருப்பவர்கள் குறிப்பாக, கொழும்பு போன்ற பிரதான நகரங்களில் வாழ்பவர்கள், அறைகள், வீடுகள், கடைகள் என்பவற்றை வாடகைக்கு எடுத்திருப்போர், தற்போது பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர். தமது வருமானத்தை இழந்திருக்கும் நிலையில், வாடகையைக் கட்டமுடியாது திணறுகின்றனர்.

அவர்கள் மாத்திரமல்லாது, தமது வீடு, அறை, கடை என்பவற்றை வாடகைக்கு விட்டு, அதில் வரும் வருமானத்தில் மட்டுமே தங்கியிருப்போரின், நிலைமையும் மோசமாகவே உள்ளது.

இதனால், பெரும்பாலானோர் இந்த இடர் காலத்தையும் பொருட்படுத்தாது, வாடகைப் பணத்தை வசூலிப்பதிலேயே குறியாக உள்ளனர். அதிலும், சிலர் வெளிநாடுகளில் இருந்துகொண்டும், மனிதாபிமானம் இல்லாது வாடகைகளை அறவிடுகின்றனர்.

எனவே, வாடகை கட்டுதல், பெறுதலில் பல முரண்பாடுகள் தோன்றியுள்ளன. வீட்டைக் காலி செய்யுமாறும், கடையைத் திருப்பித் தருமாறும் உரிமையாளர்கள் பலர் தகராறிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு இடையிலான முரண்பாடுகள், நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதைக் காண முடிகின்றது.

பலர் தொழில்களை இழந்து, அன்றாட வாழ்க்கையையே பெரும் போராட்டத்துக்கு மத்தியில் கொண்டு செல்கையில், இப்படியான பிரச்சினைகள் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் அபாயம் தோன்றியுள்ளது.

அண்மைக் காலமாக, இந்த வாடகைப் பிரச்சினை குறித்த பல உரையாடல்கள், பேஸ்புக் ஊடாக உலா வருகின்றன.

தனிநபரொருவர் தங்குவதற்கான, குளியலறையுடனான ஓர் அறைக்கு, சுமார் 6,000 முதல் 15,000 ரூபாய் வரை, மாதாந்த வாடகை அறவிடப்படுகின்றது. குளியலறை, சமையல் அறையுடன் கூடிய வீடுகள், 15,000 முதல் 150,000 ரூபாய் வரை அறவிடப்படுகின்றன. அதிலும், ஆரம்பர வீடுகளின் மாத வாடகை பல இலட்சங்கள் வரை செல்கின்றன. இவை, இடத்துக்கிடம் வேறுபடுகின்றன. இங்கு, வாடகைகளுக்கென ஒரு வரையறை நிர்ணயிப்பு கிடையாது.

வீடுகளை வாடகைக்கு விடும் உரிமையாளர்கள், தங்களுக்கு ஏற்றவாறு, வீட்டு வாடகைகளை உயர்த்திக் கூறுவதோடு, உரிமையாளர் பாவிப்பதற்கான மின்சாரக் கட்டணம், நீர்க் கட்டணம், சுத்தம் செய்பவர்களுக்கான கட்டணம், வீட்டுக்காவலர் கட்டணம், பராமரிப்புக் கட்டணம் எனப் பல வகைகளிலும் கட்டணங்களை வசூலிக்கின்றனர். இயலுமானவர்கள் குடியேறுகின்றர்; ஏனையோர் வேறு இடம் தேடுகின்றனர்.

மேலும், முற்பணம், வாடகை ஒப்பந்தம், குத்தகை உள்ளிட்ட பல விடயங்களில் வீட்டு உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் இடையில் பலவேறு சிக்கல்கள் நிலவி வருகின்றன.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளில், வீடொன்றை வாடகைக்கு வழங்கும் போது, அங்குள்ள அறைகளுக்கு ஏற்ப வாடகைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீறும் பட்சத்தில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. எமது நாட்டில், மக்களுக்குத் தெரிந்த வகையில், வாடகை நிர்ணயிப்புத் தொடர்பான சட்டம் நடைமுறையில் இல்லையென்றுதான் கூற வேண்டும்.

ஆனாலும், வாடகை வீடுகளில் வசிப்பவர்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, வீட்டு வாடகை நிர்வாகக் குழுவொன்று இலங்கையில் செயற்படுகின்றது. இது, பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டாலும், அது பற்றி மக்கள் பெரிதாக அறிந்திருக்கவில்லை. எனினும், சில நகர சபைகளின் ஊடாக, இவ்வாறான பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்படுவதும் உண்டு.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில், எல்லோருக்கும் சொந்த வீடுகள் இருக்க வேண்டும். இந்த இடர் காலத்தில், வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு, நிவாரணமே மறுக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில், சொந்த வீடுகளா வழங்கப்படும்?

ஆனால், கொழும்பு மாவட்டத்தில் மூன்று இலட்சம் பேர், வாடகை வீடுகளில் வசிக்கின்றனர் என்றும் இவ்வாறு வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு, நிரந்தர வீடுகளை வழங்கவுள்ளதாக, நல்லாட்சி அரசாங்கத்தில், பெருநகரம், மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராக இருந்த பாட்டலி சம்பிக்க ரணவக்க, கடந்தாண்டு தெரிவித்திருந்தார். எனினும், தற்போது அது குறித்த பேச்சுக்கே இடமில்லாமல் போயுள்ளது.

இந்த வாடகைப் பிரச்சினை குறித்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பிர்கள், ஊடகவியலாளர்கள் சிலர், அரசாங்கத்தின் கவனத்துக்கு அண்மையில் கொண்டுசென்றனர். இதன் தொடராக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சரவைப் பத்திரமொன்றையும் சமர்ப்பித்திருந்தார்.

அத்துடன், “கொழும்பில் வாடகை வீடுகள், அறைகளில் தங்கியிருப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வீடுகளின் உரிமையாளர்கள், வாடகை அறவீட்டில் மனிதாபிமானமாக நடந்துகொள்ள வேண்டும்” என்றும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும், வீடுகள், அறைகள், கடைகளை வாடகைக்கு விடுவோர், மனிதாபிமானமாக நடந்துகொள்ள வேண்டுமென, அரசாங்கமும் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்ததுடன், ஒதுங்கிக்கொண்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த வேண்டுகோளை, மனிதாபிமான முறையில் பரிசீலிப்பவர்கள் யார் என்பது இங்கு கோள்விக்குறியே.

கொரோனா வைரஸ் அனர்த்த வேளையில், வாடகை வீட்டில் தங்கியிருப்போர், வாடகை செலுத்த முடியாத பணநெருக்கடி ஏற்படும் பட்சத்தில், வாடகைக்குத் தங்கி இருப்பவரை வீட்டின் உரிமையாளர், வீட்டிலிருந்து வெளியேற்ற முடியாதளவுக்கு அவுஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகள், தற்போது கட்டுப்பாடுகளை விதித்து சட்டங்களை அமல்படுத்தியுள்ளன.

எமது நாட்டிலும், இந்த நடைமுறையைத் தற்சமயத்தில், எவ்வகையிலாவது கொண்டு வர முனையலாம். வேறுமனே வேண்டுகோளை விடுப்பதைத் தவிர்த்து, இந்த விடயத்தில் இரு தரப்பும் பாதிக்கப்படாதவாறு, அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

குறைந்தது, ஊரடங்குச் சட்டம் அமலில் இருக்கும் கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களில், இரண்டு மாத வாடகையை, உரிமையாளர்கள் அறவிடாமல், இலவசமாக இருக்க அனுமதிக்க வேண்டுமென, கண்டிப்பான அறிவித்தலை அரசாங்கம் விடுத்திருக்கலாம்.

அதேநேரத்தில், அறைகள், வீடுகள், கடைகள் ஆகியவற்றi வாடகைக்கு வழங்கி உள்ளவர்களுக்கு, சிறு நிவாரணத்தை வழங்கி, குடியிருப்பாளர்களிடமிருந்து வாடகையை அறவிடாத நிலையை உறுதிப்படுத்தி இருக்கலாம். எனினும், இவ்விரு தரப்பினரும், அரசாங்கத்தால் கவனிக்கத் தவறிய சமூகத்தினராகவே இன்று வரை உள்ளனர்.

இதனாலேயே, மாடிகளுக்கான எலிவங்குப் படிகளை, தங்கள் வீட்டுக்குள்ளேயே ஒழித்துவைத்துக் கொள்வோரும், மின்சாரம், தண்ணீர் மீற்றர்களைப் பொதுவெனக்கூறி, கட்டணத் தொகைகளைக் கழிப்பதிலும் கூட்டியே கணக்கிடும் வாடகை வீட்டாளர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

அப்படியாயின், அறைகளின் சுவர்களையும் தரையையும் மட்டுமே நாம் பயன்படுத்தலாமென நினைக்கலாம். இல்லையில்லை; அவற்றையும் பயன்படுத்த முடியாது. தவறுதலாக அடித்த ஆணியை சொற்களால் பிடுங்கிவிட்டு, வாடகைக் குடியிருப்பாளர்களையும் தொங்கவிட்டுச் செல்வர். அவ்வளவுக்கு அவர்களுடைய வார்த்தைகள் சுத்தியல் அடியைவிடப் பலமானதாகவும் நிறையுடையதாகவும் இருக்கும்.

இன்னும் சில வீடுகளில், அவர்களின் செல்லக் குழந்தைகளெனக் கூறப்படும் செல்லப்பிராணிகள், வாடகைக் குடியிருப்பாளர்களின் வீட்டுக்கதவை சிறுநீரால் கழுவிச்செல்லும்; அது செல்லமாகும்.

ஆனால், தத்தித் தத்தித் தவழும் எமது செல்வங்கள், சுவரைத் தொட்டு நடக்கத் தொடங்கிவிட்டால், செல்லத்தின் கால்களுக்குக் கொலுசு போட்டு, அழகு பார்ப்பதற்கு யாருக்குதான் ஆசையிருக்காது.

ஆசையிருந்தாலும், ஏதாவது தொட்டு, சுவர்களில் கிறுக்கி விடுவாளோ(னோ) என்ற அச்சம், வாடகைக் குடியிருப்பாளர்களிடத்தில் சூழ்கொண்டுவிடும். இங்கு, எமது செல்வங்களின் எண்ணங்கள் மட்டுமல்ல, வண்ணங்களும் எமது எண்ணங்களும் கனவுகளும்கூட நிறமிழந்துவிடுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + 20 =

*