;
Athirady Tamil News

சமகால அரசியல் சமதளம் !! (கட்டுரை)

0

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அரசியல் சிக்கல் நிலைமைகள் தொடர்பாக பொருளாதார ரீதியில் நாடு எதிர்பாராத சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அரசாங்கம் இந்த சிக்கல் நிலைமைகளில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தேர்தலை உடனடியாக நடத்த வேண்டிய தேவை உள்ளதை உணர்ந்துள்ளது. இதற்குக் காரணம் தனது அரசியல் அதிகார பலத்தின் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட வேண்டியது அதற்கு உள்ளது.

அந்த வகையில் தற்போதைய சூழலில் கொரோனா தொற்றை எதிர்கொண்ட விதம் தொடர்பான மக்களின் வரவேற்பும் கொரோனா நிவாரணம் தொடர்பான மக்களின் அதிருப்தியையும் தற்போதைய அரசு சம்பாதித்திருக்கிறது. இதை விட பொருளாதார ரீதியில் நொந்துபோயுள்ள பாமர மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிப்பு என்பது அரசு மீதான மறுதலை விமர்சனப் பார்வையைத் தோற்றுவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு தேர்தல் தொடர்பாக அடிப்படை உரிமை மனுக்களை நிராகரித்து அரசுக்குச் சார்பாக முடிந்துள்ளது. அரசு தேர்தலுக்குத் தற்போதைய சூழலில் தயாராக உள்ளபோதும் எதிர்க்கட்சிகள் தயாராயில்லை. இதற்கு காரணம் பிரதான எதிர்க்கட்சியான ஐதேக வின் பிளவும், தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமற்ற நிலையும் தம்மை பலப்படுத்திக் கொள்வதற்கான சூழ்நிலையும் கொண்டிருக்கவில்லை.

ஜனாதிபதித் தேர்தலின் பின் ஏனைய கட்சிகளால் முன்னெடுக்க முடியாத கட்சிகளுக்கிடையிலான குழப்பங்களும், உள்முரண்பாடுகளும், குத்துவெட்டுக்களும் அரங்கேறியுள்ளன. இத்தகைய சூழ்நிலையை அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்த முனைந்துள்ளது.

அதன் வெளிப்பாடே உடனடி தேர்தலுக்கான அழைப்பின் பிரதான அரசியல் நோக்கமாக இருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் இதற்கு தயாரில்லாத சூழலில் கொரோனாவைக் காரணம் காட்டித் தேர்தலில் போடுவதுடன் இடைநடுவில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்டுவதன் மூலம் தாங்கள் இழந்த ஆட்சி அதிகாரத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் தக்கவைக்கவும் மேலும் தொடரவும் விரும்பியது. இவற்றை விட 62க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தமது ஓய்வூதியத்தை பெறுவதற்கான வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடியும் என்பதும் பிரதான காரணங்களாக இருந்தன.

எது எப்படியோ நேற்று வெளிடப்பட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய பொறுப்புக்கு வழி வகுக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் தீர்ப்பு வழங்கப்பட்ட பின் மிகக் குறைந்தது 35 நாள்கள் பிரசாரத்திற்கான நாள்களாக வழங்கப்படவண்டும். தேர்தல் ஏற்பாட்டுக்கும் நடைமுறைப்படுத்தலுக்குமாக மேலதிகமாக மூன்று வாரங்களாவது தேர்தல் திணைக்களத்திற்கு தேவை. இந்த வகையில் பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 2 ஆம் வாரத்தில் அல்லது மூன்றாம் வாரத்தில்தான் நடத்த கூடிய சூழல் உள்ளது.

எனவே தேர்தலுக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் இம்முறை கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்களிலும் வைத்தியசாலைகளிலும் வாக்களிப்பு நிலையங்களை ஏற்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இங்கு விசேட தபால் வாக்குகளாகவோ அல்லது விசேட கணினி முறைப்படுத்தப்பட்ட வாக்களிப்பு நடைமுறைகளைளோ அமுல்படுத்தப்படவேண்டியுள்ளது. ஏனெனில் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்களில் இருப்பதால் இதற்கான நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதை தேர்தல் ஆணையகம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளிலேயே தங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு ஆலோசனைகளை பல்வேறு மட்டங்களில் முன்னெடு;த்த வருகிறது.

இத்தகையதொரு சூழலில் எதிர்பாராத வகையில் இலங்கைத் தோட்ட தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் இழப்பு என்பது மலையகத்திற்கும், அரசின் ஆதரவு பலம் என்ற வகையில் அரசிற்கும் தேர்தல் காலத்தில் பேரிழப்பாகும். எனவே அந்த இழப்பின் வெற்றிடத்தை நிரப்புவதற்கும், சரியப்போகும் வாக்கு வங்கியை நிமிர்த்தவும் அவரது இழப்பின் அனுதாப அலையைத் தக்கவைத்துக் கொள்ளவும் அரசு மறைந்த அமைச்சர் ஆறுமுகனின் வேண்டுகோள்களை நிறைவேற்றி வைப்பதாக உறுதியளத்துள்ளது. அதேவேளை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் ஆறுமுகனின் வெற்றிடத்திற்கு உடனடியாக அவரது மகன் ஜீவன் தொண்டமானை தேர்தலுக்கு நுவரெலியா தொகுதி வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இந்த வகையில் ஆறுமுகன் அணியில் ஜீவன் தொண்டமான் வெல்வது உறுதி. அதற்கு அவரது தந்தையின் இழப்பின் அனுதாப அலை பெரும் பலமாக அமையும்.

இத்தகைய சூழலில் வடக்கு கிழக்குப் பகுதியில் கொரோனா இருந்ததோ இல்லையோ தேர்தலில் குதித்துள்ள வேட்பாளர்கள் முகநூல் மூலமான பலத்த பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இன்னும் சிலர் கொரோனா நிவாரண பொதி என்ற போர்வையில் ரூபாய் 1000, 2000 பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்கி தமது அரசியல் வங்குரோத்து தனத்தையும், கொரோனா அபிமானத்தையும் காட்டிவருகின்றனர்.

இவற்றைவிட இப்பொழுதெல்லாம் கொரோனாத் தடை இருக்கிறதோ இல்லையோ மரண வீட்டுக்கு நான் முந்தி நீ முந்தி என்று வேட்பாளர்கள் ஆஜராகின்றனர். மரண வீட்டுக்கு செல்வதிலும் போட்டி நிலவுகிறது. ஒருவர் ஒருவருக்குத் தெரியாமல் பயணிப்பதும் கண்டவுடன் முகஸ்துதி செல்வதும் மரணச்சடங்கு வீட்டில் நிகழும் விரும்பவொண்ணா நாடகங்களாகும்.

மேலும் இறந்த வீட்டுக்காரர் யார், எவர் என்பதுகூட இந்த வேட்பாளர்களுக்குத் தெரியாது. முகமறியா புது நபர்களாகவே மேற்படி மரண வீட்டுக்காரர் இவர்களைப் பார்க்கின்றனர். ஆனால் இந்த அரசியல் வேட்பாளர்களோ தங்கள் நீண்ட நாள் பழகியவர்கள் போல நாடகம் ஆடுகின்றனர். உண்மையில் தமக்கு வாக்களித்த பெருமகனுக்கு வேட்பாளர் என்ற போர்வையில் அவரது இறப்பின் இறுதிக் கிரியையில் கலந்து நன்றியோடு அஞ்சலி செலுத்த வேண்டிய இவர்கள், இவ் மரண வீடுகளை நாடி வருவதோ அவர்கள் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்காக அல்ல. மாறாக தமது வரவைப் பதிவு செய்வதன் மூலம் அம் மரண வீட்டில் தேர்தல் பிரச்சார வாக்கு வேட்டையில் ஈடுபடுவதற்கே என்பது தெளிவான விடையமாக இப்போது திருவாளர் பொதுசனங்களால் முன் வைக்கப்படும் விமர்சனமாகும்.

இது இவ்வாறு இருக்க இம்முறை கிழக்கு நாடாளுமன்ற தேர்தல் களம் என்றுமில்லாதளவு சூடுபிடித்துள்ளது. குறிப்பாக திருமலை, அம்பாறை மாவட்டங்களைவிட மட்டக்களப்பு மாவட்டம் இதில் முன்னணி வகிக்கிறது. இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக, தமிழ் தேசியக் கட்சிதமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி, தமிழ் தேசிய முன்னணி, பொது ஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, முஸ்லிம் கட்சிகள், தமிழர் விடுதலைக் கூட்டணி, சுயேச்சைக் குழுக்கள் எனக் கட்சிகளில் பல பிரபலங்கள் மட்டக்களப்பு தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். மட்டக்களப்பில் தமிழ் வாக்குகளைப் பிரிக்காமல் கிழக்கு தமிழர்கள் ஓரணியில் திரளவேண்டுமென ஊடகப்பிரசாரங்களை மேற்கொண்ட கிழக்குத் தமிழர் ஒன்றியங்களின் முக்கியஸ்தர்கள் காணாமல் போய்விட்டனர். மட்டக்களப்பின் தமிழர் ஒற்றுமையை பல்வேறு கோணங்களில் பல்வேறு கட்சிகாகவும் இருந்து கொண்டு கட்சிகளின் முரண்பாடுகளும் தனிநபர் கோபதாபங்கள் காரணமாகவும் அரசியல் தெரியாத நாடாளுமன்றக் கனவுதாரிகளால் சின்னாபின்னப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான இத்தனை கட்சிகளின் தோற்றம் என்பதும், போட்டியிடும் வேட்பாளர் என்பதும் தமது நாடாளுமன்ற இலட்சியம் ஒன்றை மாத்திரமே கனவாகக் கொண்டது. இந்த வேட்கை காரணமாக இவர்கள் ஒன்றுபடாமல் சிதறுண்டுள்ளதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி என்பது இலகுவாகியுள்ளது.

ஏனெனில் இவர்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மாத்திரமே பொது எதிரியாக கொண்டுள்ளனரர். எனவே பொது எதிரிக்கு எதிராக இவர்கள் ஒன்றிணையாமல் மோதுவதால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான வாக்குகள், அதிருப்தியாளர் வாக்குகள் ஒன்றிணையாமல் சிதறுண்டு போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதில் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான காட்சிகள் எவ்வளவுதான் பிரச்சாரத்தை முன்னெடுத்தாலும் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு ஆசனத்தையே பெற முடியும். இதற்கு 35 ஆயிரம் தொடக்கம் 50 ஆயிரம் வாக்குகளை இக்காட்சிகளில் ஒன்று பெறுநும் பட்சத்திலேயே இது சாத்தியமாகும். கூட்டமைப்புக்கு எதிரான சக்திகள் இந்த 50 ஆயிரம் வாக்குகளையே தமக்குள் பங்கு போட்டுச் சிதறடிக்க போகின்றனர்.

இதேவேளை முஸ்லிம் கட்சிகள் குறைந்தது ஒரு ஆசனத்தை பெறுவது என்பது உறுதியான விடயம். ஏறாவூர், காத்தான்குடி, ஓட்டமாவடி, வாழைச்சேனை, ரிதிதென்னை பிரதேசங்களைப் பொறுத்தவரையில் முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். அவர்களில் 74,000 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். தமிழர்களைப் பொறுத்தவரையில் கல்குடாவில் 94 ஆயிரம், மட்டக்களப்பில் ஒரு லட்சத்து 94 ஆயிரம் வாக்காளர்கள, பட்டிருப்பில்; 99ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த வகையில் அளிக்கப்படும் வாக்குகள் சரித்திரத்தில் கூட்டமைப்பு 1லட்சத்து 12ஆயிரம் தொடக்கம் ஒரு லட்சத்து 25ஆயிரம், 1லட்டத்து 40 ஆயிரம் வாக்குகளை நாடாளுமன்;ற வரலாற்றில் பெற்றுள்ளது. அந்த வகையில் கிழக்கில் இவர்களுக்கு எதிர்ப்பு உருவாகி உள்ளது என்ற கோட்பாட்டில் அவர்கள் குறைந்தது 50 ஆயிரம் வாக்குகளை இருந்தாலும் அக்காட்சி தமிழ் மக்களின் உணர்வு நிலை சார் காட்சி என்பதால் குறைந்தது 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெறக் கூடிய சூழல் உள்ள்து. இந்த வகையில் அக்கட்சி அதிகூடிய வாக்குகள் பெற்ற கட்சி என்ற அடிப்படையில் குறைந்த இரண்டு ஆசனங்களையும் ஒரு போனஸ் ஆசனத்தையும் பெறும்

. இதுவே யதார்த்த நிலை இது தவறினால் முஸ்லிம்கள் இரண்டு ஆசனங்களைப் பெறுவது உறுதியாகும். இந்த வகையில் இன்றைய இலங்கைத் தேர்தல் களம் அதன் அரசியல் சமகாலத்தில் அரசியல், பொருளாதார, கட்சி நிலவரங்களின் சம தளத்தினைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + fifteen =

*