;
Athirady Tamil News

புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கி..!! (கட்டுரை)

0

நமது நாட்டை காலனித்துவ ஆட்சியின் கீழ் வெள்ளையர்கள் ஆட்சி செய்த சமயத்தில் நாடு கொண்டிருந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் அடிப்படை நிர்வாகக் கட்டமைப்பு ஆகியன நமது நாட்டை நம்மவர்களே ஆள ஆரம்பித்து 70வருடங்களின் பின்னரும் பாரிய முன்னேற்றமும் அபிவிருத்தியும் காண்பதற்கு பதிலாக நாடு பெரும்பாலும் பின்னோக்கியே சென்றிருக்கின்றது என்பதே பெரும்பாலானோரின் ஆதங்கமாகும்.

அவ்வாறு ஆதங்கப்படும் நாட்டுப்பற்றாளர்கள் இந்த நாட்டில் நீண்ட காலமாக வேரூன்றியிருக்கின்ற மாசடைந்த அரசியல் கலாசாரமே அதற்கு முதன்மை காரணமாகும் எனச் சுட்டிக்காட்டுகிளார்கள். சிங்கப்பூர் போலன்றி பெருமளவு இயற்கை வளங்களையும் ஆற்றல்மிக்க மனித வளத்தையும் நம் நாடு கொண்டிருந்த போதிலும் அவற்றை உரிய முறையில் வழிநடத்தத்தக்க தலைமைத்துவம் கிடைக்காமையே நம் நாடு நீண்டகாலமாக பின்தங்கிய நிலையில் இருக்க காரணம்.

அந்தவகையில் தூரநோக்கும் அரசியல் சாணக்கியமும் அற்ற அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டு ஒட்டுமொத்த நாட்டையும் முப்பது வருடங்களுக்கும் மேலாக அழிவுப்பாதையில் இட்டுச் சென்ற உள்நாட்டு யுத்தத்தினை வெற்றிகொள்ள முடியாமைக்கு காரணம் தகுந்த அரசியல் தலைமைத்துவம் கிடைக்காமல் போனதேயாகும். 2005ஆம் ஆண்டு நாட்டின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்று 2009ஆம் ஆண்டு யுத்தத்தை வெற்றிகரமாக முடித்து வைத்ததன் மூலம் முன்னாள் ஜனாதிபதி தன் தலைமைத்துவத்திறனை நிரூபித்துக் காட்டியிருக்கின்றார். அத்தோடு இலங்கை போன்ற வறிய நாடொன்றிற்கு சாத்தியமற்றதாக கருதப்பட்டுவந்த கண்ணுக்குப் புலப்படும் பெளதீக அபிவிருத்தி என்பதும் அதற்கான தலைமைத்துவம் கிடைக்கும் பட்சத்தில் சாத்தியமே என்பதை அவர் செயற்பாட்டு ரீதியாகவே நிரூபித்திருக்கிறார்.

அவரின் ஆட்சி காலத்தை அடுத்து ஏற்பட்ட அரசியல் மாற்றம் என்பது இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாகவே அமைந்தது. அவ்வாட்சி காலத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அரசின் இரு தலைமைத்துவங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக இருந்துவந்த ஒவ்வாமையும் முரண்பாடுகளும் வேறுபட்ட ஓர் அரசியல் கலாசாரத்தை வேண்டி நின்றதன் விளைவாகவே தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியை மக்களின் அமோக ஆதரவுடன் ஏற்றார்.

வல்லரசுகள் உள்ளிட்ட உலக நாடுகளால் வெற்றிகொள்ள முடியாத ஒரு யுத்தமாக எடுத்துரைக்கப்பட்ட இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் செயற்பாட்டில் முன்னிலை வகித்தவரே இன்றைய ஜனாதிபதி. காத்திரமான தலைமைத்துவத்தை வெளிப்படுத்த முடியுமாயின் முடியாதது ஏதுமில்லை என்பதை செயற்பாட்டு ரீதியாக நிரூபித்துக்காட்டிய ஒரு அரசாங்க அதிகாரி என்ற நிலையை மட்டுமே எய்திருந்த கோட்டாபய ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசம், இதுவரை காலமும் இந்நாடு எதிர்பார்த்து காத்திருந்த பல முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த காரணமாக அமைந்திருக்கின்றது.

ஒரு சம்பிரதாய அரசியல்வாதியால் மாத்திரமே இந்நாட்டின் ஜனாதிபதி பதவியை வெற்றிகொள்ள முடியும் என்றிருந்த அரசியல் யதார்த்தத்தை கோட்டாபய ராஜபக்ஷவினால் மாற்றியமைக்க முடிந்தமைக்கு அவர் கையாண்ட புதிய அரசியல் சிந்தனைகளே காரணம்.

நீண்ட காலமாகவே நம் நாட்டில் அரசியல் என்றால் அது எதிர்த்தரப்பு மீது வகைதொகையின்றி வசைபாடுவதும் சேறுபூசுவதுமே என்றிருந்த நிலைமையை ஜனாதிபதி வேட்பாளர் என்ற வகையில் கோட்டாபய ராஜபக்ஷ மாற்றியமைத்தார். எதிர்த்தரப்பு வேட்பாளரை இழிவுபடுத்துவதற்குப் பதிலாக தமது கொள்கைத்திட்டத்தை மக்களுக்கு தெளிவுபடுத்துவதிலேயே அவர் குறியாக இருந்தார்.

அரச தலைவராக வரவேண்டுமாயின் நாட்டின் சிறுபான்மை இனங்களின் வாக்குகளை வெல்ல வேண்டியது அவசியம் என்றிருந்த சிந்தனையை மாற்றியமைத்த அவர், பெரும்பான்மை சிங்கள வாக்காளர்களின் வாக்குகளைப் பெறுவதன் மூலமும் ஜனாதிபதி பதவியினை அடைய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

தேர்தல் பிரசாரம் என்றால் வாக்காளர்களைக் கவர்வதற்கு பதிலாக வேட்பாளர்கள் மீது வாக்காளர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் எல்லை மீறி பிரசாரம் செய்வதே தேர்தல் வெற்றியின் மிக முக்கியமான அங்கம் என்றிருந்த தேர்தல் கலாசாரத்தையும் அவர் மாற்றியமைத்திருக்கிறார்.

அரசியல்வாதிகள் என்றாலே ஆரவாரமும் ஆடம்பர தோற்றமும் அடக்கமற்ற பேச்சும் கட்டாயத் தேவைகளாகும் என இருந்துவந்த இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தினை தலைகீழாக மாற்றிய கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரான காலத்திலும் ஜனாதிபதி பதவியை ஏற்றது முதல் இதுவரையான காலகட்டத்திலும் ஆரவாரமற்ற செயற்பாடுகளையும் அடக்கமான பேச்சையும் இந்நாட்டு அரசியல் கலாசாரத்திற்கு அறிமுகம் செய்து வைத்திருக்கின்றார்.

அரசியல்வாதிகளின் அனைத்து செயற்பாடுகளிலும் நிழலாக நின்று இச்சமூகத்தின் மீது மறைமுகமான அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தும் அதேவேளை, வாக்காளர் பெருமக்களே வெறுக்கத்தக்க வகையில் அரசியல்வாதிகளின் குடும்ப அங்கத்தவர்கள் நடந்து கொள்வது நம்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத விடயமாகும் என்றிருந்த நிலையை மாற்றி தமது குடும்ப அங்கத்தவர்களின் தலையீடு மட்டுமின்றி அவர்களின் பிரசன்னமே தேவையற்ற ஒன்றாகும் என்பதை செயற்பாட்டு ரீதியாக பின்பற்றிவரும் ஜனாதிபதி, அதன் மூலமும் ஓர் புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்தியிருக்கின்றார்.

நாட்டின் தலைமைப் பதவியை ஏற்ற சொற்ப நாட்களுக்குள் முகங்கொடுக்க நேர்ந்த கொரோனா நோய் எதிர்ப்பு செயற்பாட்டிற்கு உகந்த வியூகமொன்றை அமைத்து அதற்கான அரசியல் தலைமைத்துவத்தைப் பெற்றுக்கொடுத்ததன் மூலம் வெட்டிப்பேச்சுக்களுக்கு பதிலாக காத்திரமான செயல்களும் நேர்த்தியான வழிகாட்டலுமே நம் நாட்டின் அரசியலின் இன்றைய தேவையாகும் என்பதை செயற்பாட்டு ரீதியாக நிரூபித்திருப்பதன் மூலம் அரசியல்வாதிகள் தமது பொறுப்புக்களை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு ஒரு முன்னுதாரணத்தையும் பெற்றுக் கொடுத்திருக்கின்றார்.

அரசியல் தலைமைத்துவம் என்பது தமது கொள்கைகளை உரிய முறையில் நிறைவேற்றத்தக்க, இலஞ்ச, ஊழலுக்கு அடிபணியாத, திறமையும் தகைமையும் மிக்கவர்களைக் கொண்டு நாட்டு மக்களுக்கு நல்லதை செய்வதேயாகும் என்பதை உணர்த்தும் வகையிலான ஜனாதிபதியின் செயற்பாடுகளும் நம் நாட்டு அரசியலிலும் நிர்வாகத்திலும் ஓர் பாரிய மாற்றத்தினை இன்று ஏற்படுத்தியிருக்கின்றது.

பிரிவினைவாதத்தினால் புடம்போடப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத அதேநேரம், பாதுகாப்பு நடவடிக்கைகளும் மிக நேர்த்தியாக இருத்தல் வேண்டும் என்பதற்காகவே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் போர்முனையில் மிகுந்த அனுபவசாலியான ஒருவரை நியமித்ததன் மூலம் நாட்டின் பாதுகாப்பு செயற்பாடுகளை மிக நேர்த்தியாக முன்னெடுக்க முடிந்திருக்கின்றது.

இறுதி யுத்தத்தின் பின்னரான காலத்தில் 12,000இற்கும் அதிகமான முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கும் செயற்திட்டத்தில் பெரும்பங்கினை ஆற்றிய இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஒருவரிடம் நாட்டின் பொருளாதார செயற்பாடுகளில் கேந்திர நிலையமாக விளங்கும் துறைமுக செயற்பாடுகளை கையளித்திருப்பதன் மூலம் தொற்று நோயினால் ஒட்டுமொத்த நாடும் செயலிழக்கும் பின்னணியிலும் துறைமுக செயற்பாடுகளை மிக நேர்த்தியாக முன்னெடுக்க முடிந்திருக்கின்றது.

இறுதி யுத்தத்தின்போது யுத்தமுனையில் மிகுந்த சுறுசுறுப்புடன் செயற்பட்டுவந்த தற்போதைய இராணுவ தளபதியை கொரோனா நோய்த்தடுப்பு தேசிய செயலணியின் தலைவர் பதவியில் அமர்த்தியதன் மூலம் அந்நோய்த்தடுப்பு பணிகளை இதுவரை மிக நேர்த்தியாக முன்னெடுக்க முடிந்திருக்கின்றது.

மேற்குறிப்பிட்ட இம்மூன்று பதவிகளும், ஒரு அரசியல் தலைவர் தமக்கு கிடைக்கப்பெறும் பொறுப்புக்களை நேர்த்தியாக நிறைவேற்ற திறமைசாலிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக அமைந்திருக்கின்றது.

இந்நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத்தேர்தலில் மக்களின் எதிர்பார்ப்புக்களை காத்திரமாக நிறைவேற்றத்தக்க மக்கள் பிரதிநிதிகளை மக்களே தெரிவு செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்திருக்கின்றார்.

ஆகையால் நாட்டின் தலைவர் என்றவகையில் நீண்டகாலமாக இந்த நாட்டில் இருந்துவந்த அரசியல் கலாசாரத்தை நாட்டின் தேவைக்கு ஏற்ப மாற்றியமைக்கும் ஜனாதிபதிக்கு உதவும் வாய்ப்பாக இந்த பொதுத்தேர்தலை உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டியது வாக்காளர்களின் பொறுப்பாகவே அமைகின்றது.

ரவி ரத்னவேல்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + seven =

*