;
Athirady Tamil News

ஓயும் குரலால் ஓங்கும் பேரினவாதம் !! (கட்டுரை)

0

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகிக் கொள்ள எடுத்துள்ள முடிவை, சிங்கள, பௌத்த தேசியவாத சக்திகளுக்குக் கிடைத்துள்ள ஒரு வெற்றியாகவே குறிப்பிடலாம்.

ஏனைய, சிங்களத் தலைவர்களை விட, ஒப்பீட்டளவில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அதிகளவில் புரிந்து கொண்டவர் என்பதும், பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருந்தவர் என்பதும், மங்கள சமரவீர தொடர்பாக, முக்கியமாகக் குறிப்பிடக் கூடிய விடயங்கள்.

சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தில், விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை, அரசியல் ரீதியாகத் தோற்கடிப்பதற்கான செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்திய மூவரணியில் முக்கியமானவர் மங்கள சமரவீர.

‘வெண்தாமரை இயக்கம்’ என்ற பெயரில், முன்னெடுத்த அரசியல் நடவடிக்கையின் மூலம், விடுதலைப் புலிகளிடம் இருந்து, தமிழர்களைப் பிரித்தெடுக்கும் சந்திரிகாவின் திட்டத்தை, பலப்படுத்தியவர் மங்கள சமரவீர.

எரிக்கப்பட்ட நிலையில் இருந்த, யாழ். பொது நூலகத்தைத் திருத்துவதற்காக, ‘ஒரு செங்கல்லும் புத்தகமும்’ என்ற திட்டத்தையும் இவரே அக்காலத்தில் அறிமுகப்படுத்தினார்.

வெளிவிவகார அமைச்சராக இருந்த லக்ஸ்மன் கதிர்காமரும் அரசமைப்பு ரீதியாக நிபுணத்துவம் பெற்றிருந்த பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் ஆகியோர், சந்திரிகாவின் அரசியல் நிகழ்ச்சி நிரலைப் பலப்படுத்திய ஏனைய இருவராவார்.

இவர்களில், கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டு விட்டார். பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், தடம்மாறி, மொட்டு அணியில் சங்கமித்து, இப்போது தனது சுயத்தையும் இழந்து போயிருக்கிறார்.

சந்திரிகாவுடன் இருந்தவர்களில், மங்கள சமரவீர மட்டுமே ஜனநாயக அரசியலையும் பன்மைத்துவ சமூகக் கட்டமைப்பையும் வெளிப்படையாக ஆதரிப்பவராக இருந்து வந்தார். அவர், சிங்கள பௌத்த பேரினவாதத்தைக் கடுமையாக எதிர்த்தார். அரசியலில், பௌத்த பீடங்கள் ஆதிக்கம் செலுத்துதையும் வெறுத்தார்.

இதனால் அவர், எதிர்த் தரப்பினரால் மாத்திரமன்றி, ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளக மட்டத்திலும் கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்து வந்தார். குறிப்பாக, ரவி கருணாநாயக்க போன்றவர்களால் அதிகளவில் வெறுக்கப்பட்டார்.

சஜித் பிரேமாதாஸவைப் பலப்படுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியை அவரின் கீழ் ஒன்றிணைப்பதில் மங்கள சமரவீர தீவிரமாக ஈடுபட்டார். அந்த முயற்சியில் அவர் எந்தளவுக்கு வெற்றியைப் பெற்றிருக்கிறார் என்ற கேள்விகள் உள்ளன.

ஆனால், சிறுபான்மையினரை மட்டுமே ஆதரிப்பவர்களும் சிங்கள பௌத்தத்துக்கு எதிராகக் கருத்து வெளியிட்டவர்களும், இப்போது கட்சியை விட்டு நீங்கி விட்டனர் என்று ரவி கருணாநாயக்க, வெளியிட்ட கருத்தின் இலக்காக இருந்தது மங்கள சமரவீர தான். இது, மங்கள மீதான ரவி கருணாநாயக்கவின் தனிப்பட்ட அரசியல் வன்மத்தை மட்டும் காட்டவில்லை. ஐக்கிய தேசிய கட்சிக்குள் பலம்பெற்றிருந்த, மங்கள சமரவீர போன்ற ஜனநாயகவாதிகள் ஓரம்கட்டப்பட்டு விட்டனர் என்பதையும் தான் வெளிப்படுத்தியது.

சிறுபான்மையினரின் நலன்களில் அக்கறை கொள்ளும் போக்கில் இருந்து, ஐக்கிய தேசிய கட்சி விலகி விட்டது என்பதையும் சிங்கள பௌத்த மேலாதிக்கச் சிந்தனைக்குள் கட்சி வந்து விட்டது என்பதையும் தான், அவரது கருத்து எடுத்துக் காட்டியது.

மங்கள சமரவீர போன்றவர்கள் தான், கடந்த அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய கட்சியையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும் ஒன்றிணைத்து, அரசமைப்புச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்குக் காரணமாக இருந்தனர்.

கடந்த அரசாங்கத்தில், அவர்கள் பலம் பெற்றிருந்ததால்த்தான், 19ஆவது திருத்தச் சட்டம் கூடச் சாத்தியமானது. இல்லாவிட்டால், முற்றிலும் தோல்வி கண்ட ஒரு கூட்டு அரசாங்கமாக அது, வரலாற்றில் பதிவைப் பெற்றிருக்கும்.

மங்கள சமரவீர, தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்குச் சார்பாகச் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும், சர்வதேச அரங்கில், இலங்கை அரசாங்கத்தை நெருக்கடியில் இருந்து அவரே காப்பாற்றினார் என்பது, முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

2015இல், நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், வெளிவிவகார அமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர், அமெரிக்காவுடனும் சர்வதேச சமூகத்துடனும் இணைந்து, ஜெனீவாவில் இலங்கையைப் பிணையெடுக்கப் பெரும் பாடுபட்டார்.

அவரது முயற்சியால் தான், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்த கட்ட நடவடிக்கையில் இருந்து, இலங்கை காப்பாற்றப்பட்டது. அதுவே, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களை, இன்றுவரை காப்பாற்றி வருகிறது என்று, தமிழர் தரப்பு இப்போதும் குற்றம்சாட்டி வருகிறது.

மங்கள சமரவீரவின் முயற்சியால், கடந்த அரசாங்கம், ஜெனீவாத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க முன்வந்தது. அதன் மூலம், ஐ.நாவின் கடுமையான நடவடிக்கைகளில் இருந்து இலங்கை அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டியவர்களும் தப்பித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.

இது தமிழர்கள் மத்தியில், மங்கள சமரவீர தொடர்பாகக் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்த போதும், சிறுபான்மையின மக்களின் நியாயமான உரிமைகளைப் பகர்ந்தளிக்க வேண்டும் என்ற கருத்துடன் இருந்த, விரல் விட்டு எண்ணக் கூடிய சிங்களத் தலைவர்களில் மங்களவும் ஒருவராக இருந்தார் என்பதில் சந்தேகம் இல்லை.

மங்கள சமரவீர, அமெரிக்காவின் முகவர் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்ட ஒருவர். அமெரிக்காவின் தேவைகளை, இலங்கையில் நிறைவேற்றிக் கொடுக்கும் ஒருவராக, அவர் எதிர்த் தரப்பால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

எம்.சி.சி உடன்பாட்டை, இலங்கைக்குக் கொண்டு வருவதிலும் மங்களவுக்கு அதிக பங்கு இருந்தது. ஆனாலும் அவரால், அந்த முயற்சியில் வெற்றிபெற முடியாமல் போனது.

அதுபோலவே, இலங்கையில் அனைத்துச் சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு ஒன்றை உருவாக்கும் விடயத்திலும், மங்கள தனது உறுதியான கருத்துகளை வெளிப்படுத்தி வந்தார். அந்த முயற்சியில், அவரால் பெரியளவில் முன்னேற முடியவில்லை. அதற்கு எதிர்த்தரப்பினர் மாத்திரம் காரணமல்ல; சொந்தக் கட்சிக்குள் காணப்பட்ட எதிர்ப்புகளும் காழ்ப்புகளும் கூட, அதற்குக் காரணமாக இருந்தது, என்பதை மறுப்பதற்கில்லை.

இடதுசாரிப் பரம்பரையில் வந்த மங்கள சமரவீர, அமெரிக்கச் சார்பாளர் என்ற விமர்சனங்கள் இருந்தாலும், அவர் இலங்கையில் நீதியான, நியாயமான, சமத்துவமான சமூகக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதில் ஆர்வம் காட்டியிருந்தார்.

மங்கள சமரவீர போன்ற தாராளவாத அரசியல் தலைவர்களால், சிங்கள பௌத்த பேரினவாதம் கோலோச்சும் இந்த நாட்டில், ஒரு கட்டத்துக்கு மேல் வளர முடியாது. அதை மங்கள சமரவீரவின், நாடாளுமன்ற அரசியலுக்கு இடப்பட்டுள்ள முற்றுப்புள்ளியும் உறுதி செய்திருக்கிறது.

வாசுதேவ நாணயக்கார போன்றவர்கள், இடதுசாரியாக இருந்து அரசியலை முன்னெடுத்திருந்தனர். ஆனால், அதில் அவர்களால் வெற்றி பெற முடியாமல் போன போது, சிங்கள பௌத்த பேரினவாத அரசியலுக்குள் மூழ்கி, அதற்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர்.

அவ்வாறான ஒரு நிலைக்குச் செல்லாமல், மங்கள சமரவீர நாடாளுன்ற அரசியலுக்கு முழுக்குப் போட்டிருப்பது, வரவேற்கத்தக்க ஒன்று தான்.

மங்கள சமரவீரவின் நாடாளுமன்ற அரசியல் துறவறம், எதிர்பார்க்கப்படாத ஒன்று அல்ல. தனது நாடாளுமன்ற அரசியல் வாழ்வின் 30 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடந்த ஆண்டு மாத்தறையில் நடந்த, ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவரும் பங்கேற்றிருந்த நூல் வெளியீட்டு விழாவிலேயே, 2020 பொதுத் தேர்தலுக்குப் பின்னர், நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகப் போவதாக மங்கள சமரவீர அறிவித்திருந்தார்.

ஆனால், இந்தத் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர், அவர் நாடாளுமன்ற அரசியலைத் துறந்திருப்பது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கோட்டாபய ராஜபக்ஷவின் அதிகாரத்துவ ஆட்சியைக் கடுமையாக எதிர்த்து வந்தவர்களில், மங்கள சமரவீர முக்கியமானவர். எதிர்க்கட்சியில் உள்ள பெரும்பாலானவர்கள், வாயை மூடிக் கொண்டிருந்த போது, மங்கள சமரவீர, தற்போதைய அரசாங்கத்துடன் பலவேளைகளில் தனித்து மோதினார்.

தெளிவான புள்ளி விவரங்கள், ஆதாரங்களோடு, பொருளாதாரம் சார்ந்த, அரசியல் சார்ந்த விடயங்களை முன்வைத்து, அரசாங்கத்தைக் கண்டித்தார். இவ்வாறான ஒருவர், நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகியுள்ளதை, அரசாங்கத் தரப்பு, வெகுவாகக் கொண்டாடும் என்பதில் சந்தேகமில்லை.

அதேவேளை, இலங்கைத் தீவில் நியாயமானதும் கௌரவமானதும் சமத்துவமானதுமான அரசியல் தீர்வு ஒன்றை எதிர்பார்க்கும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு, இவரது விலகல், பலவீனத்தையே ஏற்படுத்தும். ஏனென்றால், சிறுபான்மையினரின் பிரச்சினைகளை ஒப்பீட்டளவில் புரிந்து கொண்ட ஒரு சிங்களத் தலைவராக இவர் இருந்தார்.

இவரது குரல், நாடாளுமன்றத்தில் ஓய்ந்து போவது, பேரினவாதிகளை இன்னும் பலப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × four =

*