;
Athirady Tamil News

`செக்கு மாடு ஊர் போய்ச் சேராது’ (கட்டுரை)

0

சமஷ்டி ஆட்சிமுறைமை உள்ளடங்காதவாறு, அரசமைப்பில் திருத்தம் செய்யப்பட்டு, அதனூடாகத் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படும். சமஷ்டி ஆட்சி முறைமையின் கொள்கைகளை உள்ளடக்காத வகையிலும் எத்தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலும், அரசமைப்பில் திருத்தம் செய்யப்படும். தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வு, அரசியல் நோக்கங்களைப் பின்னணியாகக் கொண்டிராத வகையில் வழங்கப்படும். பொருளாதாரத்தை மேம்படுத்தினால், இனங்களுக்கிடையே எவ்வித முரண்பாடுகளும் தோற்றம் பெறாது என்பதே, அரசாங்கத்தின் கொள்கை ஆகும். இவ்வாறு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்து உள்ளார்.

இவ்வாறாகக் கருத்துத் தெரிவிப்பவர்கள், முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில், தமிழ் இனம் நீண்ட கால வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட, ஒரு தேசிய இனம் ஆகும். அதற்கெனத் தொடர்ச்சியான நிலப்பரப்பு, தனியான மொழி, தனித்துவமான பண்பாடு, வலுவானதும் நிலையானதுமான பொருளாதாரம் என எல்லாமே இருந்தன.

1948ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலங்களில், மாறி மாறி நாட்டை ஆண்ட அரசாங்கங்களால் இவற்றுக்கு (நிலம், மொழி, பண்பாடு, பொருளாதாரம்) கேடு விளைவிக்கப்பட்டன. அதாவது, இலங்கை சுதந்திரம் பெற்றது என்று கூறப்படும் காலப்பகுதிக்குப் பின்னர், தமிழினத்தின் சுதந்திரம் பறிக்கப்பட்டது. வடக்கு, கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள், சிங்கள மொழி மட்டும் சட்டம் எனப் பிற காரணங்களால் அச்சுறுத்தல் ஏற்பட ஆரம்பித்தன.

தமிழ் மக்கள், தங்களது நிலம், மொழி, பண்பாடு, பொருளாதாரம் போன்றவற்றைப் பாதுகாப்பதற்கான ஓர் ஏற்பாடாகவே சமஷ்டி ஆட்சிமுறையைக் கோரினர். அத்துடன், சமஷ்டி தொடர்பான எண்ணக்கரு, சுதந்திரத்துக்கு முன்னரான காலங்களிலேயே ஆரம்பித்தும் விட்டது.

இவ்வாறான நிலையில், 1948 – 1983 வரையிலான 35 ஆண்டு காலப் பகுதிகளில், பெரியதும் சிறியதுமாக அவ்வப் போது, தமிழ் மக்களுக்கு எதிராக ஏவி விடப்பட்ட இனக்கலவரங்களும் வன்முறைகளும், ‘சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ முடியாது’ என்ற நியாயமான முடிவுக்கு வர, தமிழ் மக்களைத் தூண்டியது.

இதுவே, தமிழருக்குத் தனிநாடு தேவை என்ற பாதைக்குத் தமிழ் மக்களை இட்டுச் சென்றது. இவை, தமிழ் மக்கள் தாமாக எடுத்த முடிவல்ல; பல்வேறு தொடர் திணிப்புகளால், மாற்று வழிகள் ஏதுமின்றி எடுத்த தீர்மானம் ஆகும்.

அதற்குப் பின்னராக, 2009ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான அனைத்து நிகழ்வுகளும் உலகம் அறிந்தவையே. தற்போது, சமஷ்டியா, ஒற்றை ஆட்சியா என விவாதம் நடத்தி, மீண்டும் காலம் கடத்த அரசாங்கம் தயாராக உள்ள நிலையில், இனியும் காத்திருக்க முடியாது என்ற நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர்.

மோதகமோ கொழுக்கட்டையோ, அதனது உள்ளடக்கமே முக்கியம் என்பது போல, தங்களது நிலத்தில் தங்களது வாழ்வும் வளமும் அடுத்தடுத்த பரம்பரைகளின் இருப்பும் முக்கியம் என்பதே, தமிழ் மக்களின் முக்கியமான நிலைப்பாடாகும். ஆகவே, இவற்றைத் தக்கவைத்துக் கொள்வதற்குப் போதுமானளவு அதிகாரங்கள் தேவை என்பதே யதார்த்தமாகும்.

உதாரணத்துக்குத் தமிழ்ப் பிரதேச கடற்கரைகளில், இப்பிரதேசங்களுடன் எந்தவிதத் தொடர்பும் அற்ற, வெளி மாவட்ட மீனவர்கள், ‘கொழும்பு’ வழங்கும் அனுமதியைக் கொண்டு வந்து, தங்கியிருந்து தொழில் புரிகின்றனர்; இலட்சக் கணக்கில் சம்பாதிக்கின்றனர். இதைத் தடுக்க முடியாதவாறு, தமிழ் மக்கள் உள்ளனர். ஆர்ப்பாட்டம் செய்யவும் மகஜர் கொடுக்கவும் மட்டுமே அவர்களால் முடிகின்றது.

பண்டிகைக் காலங்களின் போது, தமிழ்ப் பிரதேசங்களின் வியாபாரம் செய்யப் படையெடுக்கும் தென்னிலங்கை வியாபாரிகளைக் கட்டுப்படுத்த முடியாது, அந்தப் பகுதி உள்ளூராட்சி சபைகள், திக்குமுக்காடிய சம்பவங்கள் கடந்த காலங்களில் நிறையவே நடந்தேறியுள்ளன.

வடக்கு, கிழக்கு பகுதிகளில், நில அளவைத் திணைக்களம், வனபரிபாலனத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் என்பன, தமிழ் மக்களது காணி அபகரிப்பு, வயல் அபகரிப்பு என, உள்ளூர் மக்களுடன் அவ்வப்போது முரண்பட்டு வருகின்றன. அதாவது, இதுபோன்ற சிறிய விடயங்களைக் கையாளவும் கட்டுப்படுத்தவும் முடியாத கையறு நிலையிலேயே, தமிழ் மக்களது அரசியல் அதிகாரங்கள், பல தசாப்தங்களாக உள்ளன.

இவ்வாறாகத் தமிழ்ப் பிரதேசங்களில், 70 ஆண்டு காலமாக நடைபெற்று வருகின்ற அனைத்து விடயங்களும், அரசியல் பின்னணியைக் கொண்டிருக்கும் வேளை, தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு, அரசியல் நோக்கங்களைப் பின்னணியாகக் கொண்டிராத வகையில் வழங்கப்படும் என, லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்து உள்ளமை, பெரும் குழப்பகரமானதாகவவே காணப்படுகின்றது.

அடுத்து, “பொருளாதாரத்தை மேம்படுத்தினால், இனங்களுக்கிடையே எவ்வித முரண்பாடுகளும் தோற்றம் பெறாது என்பதே, அரசாங்கத்தின் கொள்கை” என, லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்து உள்ளார்.

அதாவது, தமிழ் மக்களுக்கான தேவை, அரசியல் அதிகாரமின்றி, அபிவிருத்தி மேம்பாடே என, அரசாங்கம் கூறிக்கொண்டு இருப்பதால், எவ்விதமான ஆக்கபூர்வமான விளைவுகளையும் தரப் போவதில்லை.

ஏனெனில், தமிழ் மக்கள் கடந்த 70 ஆண்டுகளாக, வெறும் பொருளாதார மேம்பாட்டுக்காகப் போராடவும் இல்லை; உயிர் துறக்கவும் இல்லை.

“இலங்கையின் இறைமையைப் பாதிக்கின்ற வகையில், தமிழ் மக்களுக்கான தீர்வை அரசாங்கம் வழங்காது” என, பெரும்பான்மையின அரசியல்வாதிகள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், இணக்கப்பாட்டுடன் வாழ விரும்புகின்ற தமிழினத்தை, இறைமையைப் பாதிக்கும் வகையில் அதிகாரம் கேட்கின்றனர் எனச் சிங்கள மக்களுக்குப் பிழையான கற்பிதங்களைப் பெரும்பான்மையின அரசியல்வாதிகள் பிரசாரம் செய்கின்றார்கள்.

இவ்வாறானதொரு நிலையில், உலகில் எத்தகைய நிகழ்வுகளோ, அம்சங்களோ, சாதனைகளோ, தீர்வுகளோ, சிறப்புகளோ பெருவிருப்பின்றி ஈடேறியது கிடையாது; சாத்தியம் ஆகியதும் கிடையாது. எனவே, கடந்தகாலங்களில் பெரும்பான்மையின அரசியல்வாதிகளின் பெருவிருப்பம் அல்ல; மாறாக, எள்ளளவு விருப்பமே இல்லாது, அரசியல் தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையாலேயே, இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்ட அனைத்துத் தீர்வு முயற்சிகளும் பாதிக் கிணற்றையே தாண்டாது, ‘சாண் ஏற முழம் சறுக்கி’ செல்கின்றது.

ஆனால், ‘நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியது சாட்டு’ என்பது போல, “தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறு; தமிழ் அரசியல்வாதிகளின் பிரச்சினைகள் வேறு; தமிழ் அரசியல்வாதிகளே, தீர்வுக்குத் தடையாகவும் உள்ளனர்” எனத் தென்னிலங்கை சிங்கள அரசியல்வாதிகள், அடிக்கடி கூறி வருகின்றனர்.

அதாவது, தமிழ் மக்கள் ஒருபோதும் அரசியல் அதிகாரங்களைக் கோரவில்லை. மாறாக, வெறும் பொருளாதார மேம்பாடுகளையே வேண்டி நிற்கின்றனர். தமிழ் அரசியல்வாதிகளே, மக்களைக் குழப்பி, தங்கள் அரசியல் இருப்பைத் தக்கவைத்தும் அரசியல் இலாபம் அடைந்தும் வருவதாகக் கூறப்பட்டு வருகின்றது.

உண்மையில், கணிசமான அரசியல் அதிகாரங்களைத் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கின்ற முயற்சிகளில், அவ்வப் போது ஏற்படுகின்ற சறுக்கல்களாலும் ஏமாற்றங்களாலும், தமிழ் அரசியல்வாதிகளோடு தமிழ் மக்கள் முரண்பட்டுள்ளனர்; முரண்பட்டும் வருகின்றனர்.

இன்று, நாட்டின் ஆட்சி, இராணுவ மயமாக்கப்பட்டு வருவதாகச் சிங்கள மக்கள் எண்ணத் தலைப்பட்டுள்ளனர். ‘மொட்டு’ கட்சிக்கு எதிரான கட்சிகள், இவ்வாறு கூறி வருகின்றார்கள். ஆனால், கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் இவ்வாறான ஓர் இராணுவ மயமாக்கப்பட்ட சூழலுக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனர்.

உண்மையில், இலங்கையில் புரையோடிப் போயிருக்கும் இனப்பிணக்குத் தீர வேண்டுமானால், பெரும்பான்மை மக்களில் பெரும்பான்மையினர், அழுத்தம் கொடுக்கக் கூடிய வகையில், எப்போது பெருவிருப்புக் கொள்கின்றார்களோ, அன்றே நாட்டுக்கு விடிவு வரும்.

ஒரு வழிபாட்டுத் தலத்தில், யானை ஒன்றை நீண்ட காலமாகக் கட்டி வைத்து வளர்த்து வந்தார்களாம். ஒரு நாள் அந்த யானை, சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடி விட்டதாம். ‘மதம் பிடித்த யானை, சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடி விட்டது’ என, உள்ளூர் செய்தித்தாள் அறிக்கையிட்டது. ஆனால், ‘மதம் பிடிக்காமையாலேயே, யானை சங்கிலியை அறுத்துக் கொண்டு வழிபாட்டுத்தலத்தை விட்டு ஓடியது’ என, அந்தச் செய்தித்தாளின் ஆசிரியர், குறிப்பு ஒன்றையும் எழுதியிருந்தார்.

அது போலவே, நாமும் எங்களது இல்லங்களில் பௌத்தனாகவோ, இந்துவாகவோ, இஸ்லாமியனாகவோ கிறிஸ்தவனாகவோ வாழலாம். ஆனால், தெருவுக்கு மனிதனாக எப்போது வருகின்றோமோ, அப்போதே நாட்டுக்கு விடிவு வரும்.

ஆசைக்கு எதிர்க்கருத்து நிராசை ஆகும். தமிழ் மக்கள், தங்கள் மண்ணில், அடுத்தவர் தலையீடு இன்றி, மகிழ்ச்சியாக வாழ ஆசைப்படுகின்றார்கள். ஆனால், அந்த ஆசையைத் தென்னிலங்கை, அரசமைப்பு என்றும் யாப்பு என்றும் இறைமை என்றும் கூறி, நிராகரித்து, நிராசையாக்கி, அலட்சியம் செய்து வருகின்றது.

ஓரினத்தின் ஆசையை இன்னோர் இனம் நிராசையாக்கி வருவதே, இலங்கையில் இனப்பிணக்குத் தொடர்வதற்கு அடிப்படைக் காரணமாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + ten =

*